செவ்வாய், 13 ஏப்ரல், 2010

இதிகாசங்களை பாமரனுக்கு கொண்டு சேர்த்தது வில்லுபாட்டு!

இதிகாசங்களை பாமரனுக்கு கொண்டு சேர்த்தது வில்லுபாட்டு!
வில்லிசை கலைஞர் சுப்பு. ஆறுமுகம்
பேட்டி : ச. தேவராஜன்

"காஞ்சி பெரியவர், கலைவாணர் என்.எஸ்.கே., பெரியார், ஓமந்துõரார், ராஜாஜி,காமராஜர், அண்ணாதுரை, கல்கி, சிவாஜி... இப்படி பட்டியலிட்டு, இவர்கள் என் வில்லுபாட்டின் ரசிகர்கள்' என்று பிரமிப்பூட்டுகிறார், வில்லிசை கலைஞர் கவிஞர் சுப்பு. ஆறுமுகம். வில்லிசையில்அவர் 60 ஆண்டுகால பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டதில் சில...
* வில்லு பாட்டு கதை எப்படி வந்தது?
முன்னொரு காலத்தில் ஒரு குறுநில மன்னன் காட்டில் வேட்டையாடி வந்தான். ஒரு நாள் திடீரென்று கடவுளே நம்மால் இத்தனை விலங்குகள் செத்துவிட்டதே என்று வருந்தியவன், தன் மந்திரியிடம்,"இதற்கு என்ன பரிகாரம்' என்றான். அதற்கு மந்திரி,"பாவம் தீர பாடணும்' என்றார். "சரி பாடுவதற்கு இசை கருவி வேண்டுமே' என்றதும், "வில்லையே இசைக்கருவியாக்கிக்கொண்டு பாடுங்கள்.' என்றார் மந்திரி. மன்னனும்வில்லை தலைக்கீழாக வைத்துக்கொண்டு, அம்பறத்துணியிலிருந்து அம்பை எடுத்து மீட்டிக்கொண்டே கடவுளைப் போற்றி, அஹிம்சையின் பெருமையைப் பாடினான். ஆக வில்லு பாட்டு என்பதே அஹிம்சை பாட்டுத்தான்.
* வில்லுபாட்டில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?
நெல்லை மக்களின் வாழ்வோடு பின்னி பிணைந்திருப்பது வில்லுபாட்டு. அது நெல்லை மண்ணின் கலை. நானும் நெல்லை மண்ணில் பிறந்தவன் தானே! அது மட்டுமல்ல; சிறுவயதிலிருந்தே கோயில்களில் கிராமத்தேவதை கதை, நீலிகதை, இசக்கி அம்மன் கதை, சுடலைமாடன் கதை, பூதக்கதைகள், ஐந்து ராசாக்கதை இப்படி பல வில்லுபாட்டு கதைக் கேட்டு, கேட்டு எனக்கும் வில்லுபாட்டின் மீது பிரியம் ஏற்பட்டுவிட்டது.
* உங்களில் முதல் வில்லுபாட்டு அனுபவத்தைச் சொல்லுங்களேன்?
14 வயதிலேயே பாரதி எழுதிய கண்ணன்பாட்டுமாதிரி நானும் குமரன் பாட்டு எழுதினேன். ஒரு முறை நெல்லைக்கு கலைவாணர் என்.எஸ்.கே வந்திருந்தார். அப்போது இந்து கல்லுõரியின் நான் பாடிய பாட்டைக் கேட்டு ரசித்தவர், என்னை சென்னைக்கு அழைத்து வந்து விட்டார். மாம்பலத்தில் எனக்கு தங்க வசதி செய்து, காந்தி கதையை வில்லுபாட்டாக எழுதச்சொன்னார். அது தான் என் முதல்வில்லுபாட்டு. பிறகு, என்.எஸ்.கேவுக்கு திரைப்படத்துக்கு தேவையான பாடல்களை எழுதிக்கொடுத்து வந்தேன்.
காந்தி கதை வில்லு பாட்டிற்கு என். எஸ்.கே., ராஜாஜி, காமராஜர், ஓமந்துரார், கல்கி, அண்ணா, பெரியார் இவர்கள் எல்லாம் ரசித்து என்னை பாராட்டினார்கள்.
*எத்தனை மேடைகள், எத்தனை வில்லுபாட்டு கதைகள் செய்திருக்கிறீர்கள்?
பத்தாயிரம் மேடைகளுக்குமேல் இருக்கும். எல்லாதுறையிலும் வில்லுபாட்டு செய்திருக்கிறேன். இதிகாசங்கள், பகவத்கீதை, திருக்குறள், தொல்க்காப்பியம், மீனாட்சி கல்யாணம், காந்தி கதை, தேசத்தலைவர் இப்படி பல. அறிவியல், தொழில், விழிப்புணர்வு கதை இப்படி நுõற்றுக்கு மேலான வில்லுபாட்டு செய்திருக்கிறேன்.
* உங்களுக்கு பெருமை சேர்த்த வில்லுபாட்டுகள்?
எல்லாமே பெருமை சேர்த்தனைதான். சென்னை வானொலியில் 2 ஆண்டுகளுக்கு மேலாக காந்தி கதை ஒலிப்பரப்பானது. அண்ணா இருந்த போது தி.மு.க. மாநாட்டில் வள்ளுவம் பற்றிய வில்லுபாட்டு, மீனாட்சி கல்யாணம் இதை காஞ்சி பெரியவரும், பெரியாரும் கேட்டு, ரசித்து, பாராட்டினாங்க. மேலும் இலங்கை, சிங்கபூர், மஸ்கட் ஆகிய வெளிநாடுகளில் பல முறை சென்று செய்த வில்லுபாட்டும் எனக்குப் பெருமை சேர்த்தவை.
*வில்லு பாட்டு கற்றுக்கொள்ள என்ன தகுதி வேண்டும்?
வில்லுபாட்டு என்பது மிக ஆற்றல் வாய்ந்த கலை. படிப்பறிவில்லாதவர் இதிகாசங்களை, இலக்கியங்களை, புராணங்களை புத்தகங்களில் படித்து தெரிந்துகொள்ள இயலாது. அப்படிப்பட்ட பாமரன்களுக்கு செவிவழியாக இலக்கியங்களை, புராணங்களை, இதிகாசங்களைக் கொண்டு சேர்த்ததில் வில்லுபாட்டுக்குத்தான் முதல்இடம். இத்தகைய பெருமை மிகுந்த இந்த கலையை பயில நல்லொழுக்கம், நகைச்சுவை உணர்வு, நாட்டுபற்று, இயல் தமிழ், இசைஞானம், நாடக அறிவு, மேடை நாகரீகம் இவை எல்லாம்அடிப்படை தகுதிகள். மேலும், கற்பனை, படைப்பாற்றல் இருந்தால் நல்லது.
*வில்லு பாட்டு பற்றிய நுõல்கள் எழுதியிருக்கிறீர்களா?
எழுதியிருக்கிறேன். "உண்மையுள்ள ஒரு கவிஞனின் வாழ்க்கை வரலாறு' என்ற தலைப்பில் என் மனைவி எஸ். எ. மகாலவ்சுமி என் வாழ்க்கை கதையை எழுதியிருக்கிறார்.நான் 12 நுõல்களும், 3 நாவல்களும் எழுதியிருக்கேன். "மனிதனைக்காணோம்' என்ற என் நாவலின் மூலக்கதையை வைத்து கே.எஸ். கோபாகிருஷ்ணன் "சின்னஞ்சிறு உலகம்' என்று படமாக எடுத்திருக்கிறார். என் மகள் சுப்புலட்சுமி "எஜிகேஷன் த்ரோ வில்லுபாட்டு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். என்மருமகன், "சுப்பு ஆறுமுகத்தின் வில்லுபாட்டில் தேசபக்தி' என்ற தலைப்பில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். என் மகன் காந்தி, "கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் வில்லிசையில் நகைச்சுவை' என்ற தலைப்பில் எம்பில் பட்டமும் பெற்றிருக்கிறார். இவை எல்லாம் வில்லுபாட்டு குறித்த நுõல்கள் தான்.
* நீங்கள் பெற்ற விருதுகள், பாராட்டுகள்?
ஏராளம். எதைச் சொல்ல. குறிப்பாக சொல்லணும் என்றால், கலைமாமணி, வில்லிசை வேந்தர், கலாசேவாசரத்னா,பீஷ்மா விருது, அப்துல்கலாம் வழங்கிய சங்கீத நாடக அகடாமி விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருது, ஆர்.எம். வீரப்பன் வழங்கிய எம்ஜிஆர் விருது, மக்கள் கவிஞர் விருதுகள் இப்படி நிறைய பெற்றிருக்கிறேன்.
* மறக்கமுடியாத அனுபவம்?
காஞ்சி பெரியவரும், பெரியாரும், அப்பதுல்கலாமும் என்னைப்பாராட்டியதை மறக்கமுடியாது. என் வில்லிசையின் மீது பிரியம் கொண்ட சிவாஜிகணேசன் தனக்காக வில்லிசை பண்ணச் சொல்லி தன் குடும்பத்தோடு கேட்டு, ரசித்து என்னை பாராட்டியது மறத்தற்கரியது. திருத்தணியில் வள்ளலார் கதையை வில்லுபாட்டு இசைத்துக்கொண்டிருந்தபோது, கதையில் ராமலிங்கத்தின் தாயார் மறைவுக்குப் பிறகு, அவரது அண்ணியார் அம்மா போல இருந்து பார்த்துக்கொண்டதை சொல்லிக்கொண்டிருந்த போது ஒரு இளைஞன் கண்ணீர் விட்டு அழுதுகொண்டே இருந்தான். ஏன் என்று புரியாமல் இருந்தேன். நிகழ்ச்சி முடிந்து கிளம்பியபோது, தன்னை ஆசிரியர் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் ஒரு காகிதத்தை என் கையில் கொடுத்து, இதை ஊர் எல்லைத்தாண்டியதும் பாருங்கள்என்று கூறி சென்றார். ஊர் தாண்டியதும் அந்த தாளைபடித்தேன். "ஐயா, தன் தாயை நாயாக எண்ணி கொடுமைபடுதியவன் உங்கள் பாட்டு கேட்டு கண்ணீர் விட்டு அழுவதைப் பார்த்தேன். அவன் கண்ணீர் அவன் திருந்திவிட்டதைதான் காட்டுகிறது. அவன் யாருமல்ல என் மகன் தான். இனி, எங்குச் சென்றாலும் தாயின் பெருமையை சொல்லுங்கள். இது தான் ஒரு ரசிகரின் அன்பு கட்டளை' என்று எழுதியிருந்து. அதைப்படித்த எனக்கு பிரமிப்புதான் ஏற்பட்டது.
ச. தேவராஜன்
படங்கள்: செல்வகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக