புதன், 28 ஏப்ரல், 2010

9. கடவுளை கட்டிப்போடலாம்! தேவராஜன்

9. கடவுளை கட்டிப்போடலாம்! தேவராஜன்
மனிதன் கடவுளை சரணடைந்ததற்கும், கடவுள் மனிதனின் அன்புக்கும், பக்திக்கும் மெச்சி கடவுள் மனிதனிடம் தஞ்சைமடைந்ததற்கு ம் அநேக உதாரணங்கள் இதிகாசங்களிலும், புராணங்களிலும் நிரம்ப காணக்கிடைக்கின்றன. அவற்றுள் மனிதன் கடவுளை தன்னுள் இருத்திக்கொள்ள என்ன வழிமுறை என்று இந்த வார ஆன்மிக சிந்தனையாக பார்ப்போம்!
மனம், நெஞ்சம்,புத்தி, சித்தம் இவை எல்லாம் மேலோட்டமாக ஒரு பொருளைக் குறிக்கும் சொல்போலவே தெரியும். ஆனால், இவை செய்யும் தொழிலில் வேறுபாடுகளைக்கொண்டது. உதாரணமாக,
மனம் தினம் தினம் புதிது புதிதாக ஆசைப்பட்டுக்கொண்டே இருக்கும்.
நெஞ்சம் எப்போதும் பழைய நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைத்துகொண்டே இருக்கும். புத்தி என்பது எதையாவது ஆராய்ந்து கொண்டே இருக்கும். சித்தம் அதாவது உள்ளம் என்பது சிந்தித்துக்கொண்டே இருக்கும்.
இதில் சித்தம் செய்யும் தொழிலான சிந்தனை என்பது உயர்வான ஒரு விஷயம். சிந்திப்பது என்றால் ஒன்றைப்பற்றி ஆழ்ந்து, மெய்மறந்து சிந்தித்து அதன் இயல்பை தெளிவாக காண்பதாகும். பொதுவாக ஆழ்ந்து, தன்னைமறந்த சிந்தனை எந்தச் செயலில் ஈடுபடும் போதும் இறையுணர்வை அடிப்படையாக கொண்டே ஈடுபடும். இதனாலேயே கடவுள் சித்தம் இருக்கும் இடத்தில் வந்து புகுந்துகொள்கிறான். தன்னை மறந்து சிந்தித்தல் நிகழ்ந்தால் அது அவனது சிந்தனையாக இல்லாமல் கடவுளின் சிந்தனையாகவே மாறிவிடும். இன்று உலகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஆயிரமாயிரம் கண்டுப்பிடிப்புகள் எல்லாம் விஞ்ஞானிகள் ஆழ்ந்து, அதிலேயே தோய்ந்து ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையில் இருந்தப்போதுதான் புதிதாக ஒன்றை கண்டுப்பிடித்ததாக சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பார்த்தால் ஆக்கப்பூர்வமான செயல்கள் எல்லாம் கடவுள் சிந்தனையாக இருந்தப்போதுதான் நிகழ்ந்து இருக்கின்றன!
சரி, இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், கடவுளைக் கட்டிப்போட தயாராகும் போது, கட்டிப்போடக்கூடிய இடத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? அதனால் கடவுள் நம் உடம்பில் எங்கே இருக்க முடியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இப்படி ஒரு விளக்கம். மனம் என்பதன் மறுபகுதி நெஞ்சம்.சித்தம் என்பதன் அடிப்பகுதி உள்ளம். இதில் கடவுள் சித்தத்திற்கும் உள்ளத்திற்கும் இடையேதான் வந்து அமர்கிறான்.
"சிக்கெனப்பிடித்தேன். எங்கு எழுந்து அருளுவது இனி?' என்று ஈஸ்வரனைப்பார்த்து கேட்பார் மாணிக்கவாசகர். மாணிக்கவாசகர் ஈசனை தம் உள்ளத்தில் கட்டிப்போட்டுவிட்டதால்தானே அவ்வாறு கூறமுடிந்தது?
மகாபாரதத்தில் ஒரு சம்பவம்.
யமுனை ஆற்றங்கரையில் பஞ்சபாண்டவர்களுடன் பகவான் கண்ணன் உரையாடிக்கொண்டிருக்கும் போது ஒருசமயத்தில் கண்ணன் சகாதேவனிடம்,""சகாதேவா, நீ தான் ஆருடத்தில் ஞானியாச்சே! நடக்கப்போறதை மிக துல்லியமாக கணிப்பவனாச்சே! எங்கே சொல்லு பார்ப்போம். எப்படி மகாபாரத யுத்தத்தை நிறுத்துவது?'' கண்ணன் சொல்லிவிட்டு சகாதேவனைத் தீர்க்கமாய் பார்த்தான்.
கண்ணன் விஷமக்காரன் மட்டுமல்ல; விவகாரமானவன் என்பது சகாதேவனுக்குத் தெரியாதா என்ன? கண்ணன் தன்னை வம்புக்கிழுக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டு,""ஓ, மகாபாரத யுத்தத்தை நிறுத்தமுடியுமே!'" என்று சகாதேவன் சொன்னதும், "" அதெப்படி முடியும்?'' என்று மறுத்தலித்தான், கண்ணன்.
""ஏன் முடியாது? '' என்றதற்கு, கண்ணன், ""எப்படி முடியும்? என்னவழியிருக்கு சொல்!''என்றான்.
"பாராள வேண்டுமானால் கர்ணனுக்கு முடிசூட்டு
அவனைக்கொல்வேன் என்று சபதமிட்டுத்
திரியும் அருச்சுனனை முன்னதாகவே கொன்று விடு
காரார் குழலை விரித்துத் துரியோதனன்
ரத்தத்தால்தான் முடிப்பேன் என்னும் திரவுபதியின்
தலையை மழுங்கக் குழல் களைந்து விடு... '
இப்படி சகாதேவன் காரணங்களை அடிக்கி வைத்தான்.
""அட, இது செய்துவிட்டால் போதுமா? யுத்தம் வராது தானே, சகாதேவா?'' என்று கண்ணன் கேட்டு முடிக்கும் முன்பாகவே, " நேராக உன்னையும் நான் கட்ட முடிந்தால் யுத்தம் வராமல் காக்கலாம்'' என்றான் சகாதேவன்.
இதைக்கேட்டு ஆச்சரியமடைந்த கண்னன், "" என்னை நீ எப்படி கட்ட முடியும்? எங்கே என்னை முடிந்தால் கட்டிப்பார்!'' என்று கண்னன் மண்ணுக்கும் விண்ணுக்கும் விசுவரூபம் எடுத்தான்.
சகாதேவன் கண்னனின் திருவடியை நினைந்து, அவன் நாமத்தை தியானம் பண்ணிக்கொண்டிருந்தான். அவனின் அன்பெனும் பிடியில் கட்டுண்ட கண்ணன்,""சகாதேவா, போதும்! என்னை கட்டியது போதும்.விட்டுவிடு!'' என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டான்.
சகாதேவன் போல நீங்களும் கடவுளைக்கட்டிப்போட மிக எளிமையான வழி இருக்கிறது. கீழேயுள்ள கட்டத்தை உற்று கவனித்து, மனதில் பதியுங்கள்...
********
படுக்கை வசமாக 6 கோடுகளும், அவைகளின் மேல் நேர்க்கோடுவசமாக 6 கோடுகளும் சம அளவில் கிழித்தால் 25 அறைகள் கொண்ட ஒரு சதுரம் கிடைக்கும். இந்த சதுரத்தைச்சுற்றி ஒரு வட்டம் போடவேண்டும். இதற்கு திருவம்பல சக்கரம் என்றுபெயர். இந்த திருவம்பல சக்கரத்தை மனதில் கற்பனையாக வரைந்து கொண்டு ஒவ்வொரு கட்டத்திலும் படத்தில் உள்ளது போல 1சி, 2வா, 3ய, 4ந, 5ம, இரண்டாவது அடுக்கில்
1ம, 2சி, 3வா, 4ய, 5ந; என்றும் மூன்றாவது அடுக்கில் 1ந, 2ம, 3சி, 4வா, 5ய; என்றும் நான்காவது அடுக்கில் 1ய, 2ந, 3ம, 4சி, 5வா; என்றும் ஐந்தாவது அடுக்கில் 1வா, 2ய, 3ந, 4ம, 5சி என்று மனதுள் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். ஒவ்வொரு அடுக்குக்கும் ஓம் என்று சொல்லி சதுரத்தை சுற்றி வருமாறு சொல்லிவரவேண்டும்.
இவ்வாறு மனதில் ஐந்தெழுத்தையும் அதைச் சொல்லும் முறையை மட்டுமே திரும்பத்திரும்பச் செய்துவந்தால், மனம் நினைக்கும் செயலை இழந்துவிடும். மனம் இப்படி ஒரு நிலைக்கு வரும்போது மனம் சிவத்தன்மையால் நிறையும். சிவத்தன்மை ஏற, ஏற,சித்தத்தில் ஈசன் வந்து அமர்ந்து விடுவான்.
இதை எப்படி நம்புவது என்று சந்தேகம் எழுந்தால், ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் இருக்கிறது. இருளில் கூட்டத்தில் இருக்கும் ஒருவரை குறிப்பிட்ட பெயர் சொல்லி கூப்பிட்டால் அந்தப்பெயரை உடையவர் உங்களை நோக்கி வருவார் இல்லையா? அது போலதான் கடவுள் எங்கே இருக்கிறான்? எப்படி இருக்கிறான்? அவனை மறைக்கும் கோடிக்கணக்கான பொருள்கள் இருந்தாலும், "நமசிவாய' என்று அவன் நாமம் சொல்லி அழைப்பதை அவன் அறிவான். உங்களில் வந்து குடிபுகுவான் என்று நம்புங்கள்!
தேவராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக