செவ்வாய், 13 ஏப்ரல், 2010

துப்பு தந்த ஒரு மருந்து சீட்டு! தேவராஜன்

துப்பு தந்த ஒரு மருந்து சீட்டு! தேவராஜன்



அப்போது தான் ஸ்டேஷனுக்கு வந்தார், இன்ஸ்பெக்டர் துப்புராஜ். டேபிளில்
இருந்த போன் பெல் அடித்தது.
கான்சிடபிள் கண்ணாயிரம் ரிஸிவரை எடுத்து காதில் வைத்ததும், மறுமுனையில் வந்த
தகவல் கேட்டு அதிர்ந்தார்.
"" சார், பிஸ்னஸ் சாம்ராட் சாம்பசிவம் மகள்... வீட்ல கொலை செய்யப்பட்டிருக்காங்களாம்...''
கண்ணாயிரம் சொல்லி முடிப்பதற்குள், "" கண்ணாயிரம், வாங்க உடனே ஸ்பாட்டுக்குப்
போகலாம்'' என்றவர் ,கிடு கிடு வென நடந்து போய் ஜீப்பில் ஏறினார். பின்னால் ஓட்டமும்
நடையுமாய் சென்று கண்ணாயிரம் நகர்ந்த ஜீப்பில் தொற்றிக் கொண்டார்.
ஜீப் வேகமெடுத்தது. டி.டி.கே சாலை கடந்து, வீனஸ் கார்டனில் நின்றது.
5 வது பிளாக்கில் 4 வது மாடிக்கு லிப்டில் துப்புராஜியும், கண்ணாயிரமும் சென்றனர்.
வீட்டின் முகப்பில் பெரிய விஐபிகள் கூடியிருந்தனர்.
கதவு இன்சைடு லாக் செய்யப்பட்டிருந்தது. துப்புராஜ் கதவை உடைக்க சொன்னார்.
சில நிமிடங்களில் ...
கதவு உடைக்கப்பட்டு, கண்ணாயிரம் உள்ளே நுழைந்தார். ஹாலில் சாம்பசிவத்தின் மகள்
திவ்யா நெற்றிப்பரப்பில் சுடுப்பட்டு சோபாவில் சரிந்து கிடந்தாள். அதைக்கண்டு அந்த
கணம் அதிர்ச்சியுற்ற கண்ணாயிரத்திடம், துப்புராஜ், ஏதோ கையால் ஜாடை காட்டினார்.
அடுத்தடுத்து... ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. உடல் பிரேத பரிசோதனைக்காக
மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
பின்னர் விசாரணையில் இறங்கினார், இன்ஸ்பெக்டர் துப்புராஜ். வீட்டை முழுவதும்
சுற்றி வந்து, கழுகு பார்வையில் நோட்டமிட்டார். ஏதாவது தடயம் கிடைக்காதா என்று
ரொம்பவும் மெனக்கட்டார்.
எதுவும் துப்புராஜ் கண்ணில் சிக்காததால், தற்காலிக கதவடைத்து விட்டு,யாரும்
உள்ளே பிரவேசிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தவர், காவலுக்கு இரண்டு
கான்ஸிடபிளை அமர்த்தினார்.
துப்புராஜ் புறப்பட்டுப்போனதும், கண்ணாயிரம் வீட்டை சல்லடை சலிப்பது போல
கண்ணால் சலித்தார். ஹாலில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்தார்.
கிச்சனுக்கு சென்றவர், அங்கே சில மாத்திரை சாப்பிட்ட உறைகள், பக்கத்தில் கசங்கிய
பேப்பர் துண்டு கிடந்ததையும் எடுத்துக்கொண்டார்.
இரண்டு நாட்கள் ஓடின.
துப்புராஜ் சாம்பசிவம் வீட்டுக்கு சென்றார்.
சாம்பசிவம் சித்தசுவாதீனம் பிடித்தவர் போல இருந்தார்.
இன்ஸ்பெக்டர் துப்புராஜியை பார்த்ததும்,"" வாங்க, சார்! நான் யாருக்கு என்ன துரோகம் பண்ணேன்?
எனக்கு யாருமே எதிரி இல்லையே... அப்படி இருக்கும் போது... என் ஒரே மகளை அதுவும் என் செல்ல
மகளை இப்படி ஈவு, இரக்கம் இல்லாம சுட்டுக்கொல்ல யாருக்கு மனசு வந்ததோ!'' என்று
தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.
கொஞ்ச நேரம் சாம்பசிவம் அழுது ஓயட்டும் என்று காத்திருந்தார்.
"" சாம்பசிவம் சார், உங்க மகள் திவ்யாவுக்கு யாராவது எதிரிகள் இருக்காங்களா? காலேஜ் படிக்கறப்போ
ஏதாவது காதல் கீதல் இருந்து, அப்படி எதாவது மோட்டிவ்ல எனிமிஸ் இருக்குமா?''
"" என் மகள் அப்படி எதுவும் செய்யல. அவள் படிச்சது வுமன் காலேஜ்''
"" சரி, உங்க மகளுக்கு எப்போ மேரேஜ் ஆச்சு? உங்க மருமகன் எப்படி பட்டவர்?''
"" ஆறுமாசம்தான் ஆச்சு. மருமகன் தங்கமானவர்.''
"" அப்படியா? மர்டர் நடந்த சமயம் அவர் எங்கே போயிருந்தார்?''
"" பிஸ்னஸ் விசயமா பாம்பே போயிருந்தார்''
"" இப்போதைக்கு இந்த விவரம் போதும். பிறகு தேவைப்பட்டா வர்றேன்'' என்று சாம்பசிவத்திடம்
விடைப்பெற்றார், துப்புராஜ்.
ஸ்டேஷனில் கேஸ் பைல் எடுத்து திரும்ப, திரும்ப படித்தார். கொலை நடந்த இடத்தில் கைப்பற்றிய
தடயங்களை நோட்டமிட்டார். அந்த துண்டு சீட்டு அவரை உறுத்தியது. எடுத்துப் பார்த்தார். கசங்கி இருந்தது.
பொறுமையாக விரித்துப் பார்த்தப்போது.... அவர் முகத்தில் பிரகாசம் கொப்பளித்தது. மனசுக்குள்
"தடயம் கிடைச்சுடுச்சு...' என்று டேபிளில் தன்னை மறந்து தாளம் போட்டார், துப்புராஜ்.
அப்போது கண்ணாயிரம் லன்ஞ் பேக்குடன் உள்ளே நுழைந்தார்.
"" என்ன, கண்ணாயிரம். ஏதாவது விசாரித்ததில் பலன் உண்டா ?'' என்றார், துப்புராஜ்.
"" இருக்கு சார். ஆனால், அதை எப்படி நம்பறதுன்னுதான் குழப்பமாக இருக்கு''
"" நீ சொல்லு. நான் அந்த குழப்பத்தை தீர்க்கிறேன்''
"" சாம்பசிவத்திற்கு இப்போதைக்கு சொத்து கோடிக்கு மேல இருக்கும். அதுக்கெல்லாம் ஒரே வாரிசு
திவ்யா தான். சொத்துக்கு ஆசைப்பட்டு தான் திவாகர், திவ்யாவை கல்யாணம் பண்ணியிருக்காரு
போஅதுமட்டுமல்ல,சார்.திவ்யா மர்டர் ஆன முதல் நாள்கூட மகாபலிபுரம்
காட்டேஜ்ல இருந்ததா அவரு கம்பெனி சூப்பர்வைசர் சொல்றாரு.
உண்மையோ, அது ரூமரோ என் காதில் விழுந்தது'' என்றார், கண்ணாயிரம்.
இதை கேட்டதும் துப்புராஜ், "" வெல்டன் கண்ணாயிரம்! மிக சரியாக தான் புலன்விசாரணை
பண்ணியிருக்கீங்க. இப்பதான் நீங்க என் சிஷ்யன்னு நிரூபிச்சு இருக்கீங்க.'' என்றார்.
"" என்ன சார் சொல்றீங்க?'' என்று கேட்ட கண்ணாயிரத்திடம், "" கோடம்பாக்கம் நவோதியா கிளினிக்குக்கு
போறோம். அங்க எல்லாத்துக்கும் ரிசல்டு கிடைச்சுடும். கிட்டத்தட்ட கொலையாளி யார் என்பது கூட,
தெரிஞ்சுடும்'' என்றவரை புரியாமல் பார்த்து, துப்புராஜியை தொடர்ந்தார் கண்ணாயிரம்.
கோடம்பாக்கம் நவோதியா கிளினிக்.
டாக்டர். பிரகாஷ் முன்பு ஆஜராகி இருந்தனர் துப்புராஜிம், கண்ணாயிரமும்.
"" சொல்லுங்க, சார். என்ன பிராப்ளம் உங்க உடம்புக்கு'' என்ற டாக்டரிடம்,
"" டாக்டர் ,இந்த பேப்பரை கொஞ்சம் பாருங்களேன் '' என்று அந்த துண்டு காகிதத்தை நீட்டினார்
துப்புராஜ்.
"" அட, இது திவாகருக்கு எழுதி தந்ததாச்சே! அவருக்கு பயங்கர காய்ச்சல் இருந்துச்சு. நான்தான்
டிரிட்மென்ட் எடுத்தேன்.''
'' அப்படின்னா... போனவாரம் திவாகர் சென்னையில உங்கள பார்த்திருக்காரு அப்படிதானே?''
"" நிச்சயமா!''
"" அதுவும் இந்த மருந்து சீட்டில் உள்ள 6ம் தேதி உங்கள பார்த்திருக்கார் திவாகர். ஆர் யூ சுயூர்?''
"" எஸ்!''
டாக்டருக்கு நன்றி சொல்லி விட்டு, திவாகரைப் பார்க்கப் புறப்பட்டார்கள் இருவரும்.
அலுவலகத்தில் போலீசார் வந்திருப்பது இன்டர்காமில் தெரிவிக்கப்பட, திவாகர் அவர்களை
உள்ளே அனுப்ப சொன்னான்.
"" வாங்க, இன்ஸ்பெக்டர். கொலை செஞ்சவனைக் கண்டுபிடிச்சிட்டீங்களா?'' என்றதும்,
"" கண்டும்பிடிச்சாச்சு. இப்ப கைதும் பண்ணப்போறோம்.ஆமாம், மிஸ்டர் திவாகர்,
பணத்துக்காகத் தானே திவ்யாவை கொலை பண்ணீங்க. உங்க மாமனார் சொத்தை அபகரித்து,
பாம்பேயில செட்டிலாக தானே?''
"" என்ன உளறீங்க'' என்று எரிச்சலடைந்தான், திவாகர்.
"" திவ்யா கொலை நடந்தப்போ நீங்க பாம்பேயில இல்ல. இருந்த மாதிரி செட்டப்
பண்ணியிருக்கீங்க. அன்னைக்கு நீங்க சென்னையில தான் இருந்தீங்க.
திவ்யாவை நீங்க கொலை செய்ததுக்கான ஆதாரம் எங்களுக்கு கிடைச்சுட்டு... ''
"" நோ... நோ...'' கத்தினான், திவாகர்.
"" உண்மையைச் சொல்லிவிட்டால் போலீஸ் கவனிப்பு இருக்காது'' என்று மிரட்டினார்
துப்புராஜ்.
திவாகருக்கு பயத்தில் வேர்த்துக் கொட்டியது. துப்புராஜ் முன்பு, மவுனமாய் தலைகவிழ்ந்து
நின்றவனை கண்ணாயிரம் விலங்கிட்டு அழைத்துச் சென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக