புதன், 28 ஏப்ரல், 2010

10. தேடல் ஒரு தவம்! தேவராஜன்

10. தேடல் ஒரு தவம்! தேவராஜன்

தேடல் தான் வாழ்க்கை. தேடல் ஓர் அறிவு முதலாக ஆறறிவு வரை சகல ஜீவராசிகளுக்கும் உரித்தானது. ஒரு விதைக்கூட பூமியில் புதைத்தால் மண்ணை முட்டி வெளியே என்ன இருக்கிறது என்ற தேடலின் முயற்சிதான் அதன் வளர்ச்சி! ஒரு எறும்பு கூட சர்க்கரை இருக்கும் இடத்தை நோக்கிச்செல்லும் இது உணவுக்கான தேடல். இப்படி தேடல் என்பதன் நோக்கம் வெவ்வேறாக இருந்தாலும் எவ்வுயிருக்கும் தேடல் தேவை என்பது புலனாகிறது.
வெளிஉலகையே பாராமல்அரண்மனை,வகையாய் ருசிக்க மது, பழங்கள், உணவுவகைகள், சேவகம் செய்ய ஆயிரம் பணியாளர்கள், அந்தப்புரத்தில் கொஞ்சும் குமரிகள், இனிக்கும் இளமை, அதை அனுபவிக்க அழகான ராஜகுமாரி இப்படி சுகபோகத்தில் மிதந்த ஒரு ராஜகுமாரன், பிணி,முதுமை, சாக்காடு கொண்ட மூன்று மனிதர்களைப் பார்த்ததும் அவனுக்குள் ஒரு தேடல் துளிர்த்தது. அந்த தேடல் ஒரு மன்னனாக இருந்திருக்கவேண்டியவனை மகாஞானியாக்கி, போதிமரத்தில் அவனை புத்தனாக்கியது.
இந்த உலகில் பக்தி செய்பவனும் சரி; பக்தி செய்யாதவனும் சரி சந்தோஷம், நிம்மதி, அமைதியைத் தேடுகிறான். தேடலில் அவன் வாழ்க்கை நம்பிக்கையின் ஈரத்தோடு தொடர்கிறது.
மனிதருக்கு மனிதர் தேடல் பார்வை பல வகையாக உள்ளது. ஒரு துறவியோ, ஞானியோ ஆனந்தத்தை நிலையற்ற உலகவிஷயங்களில் தேடாமல் என்றும் ஜீவித்திருக்கும் இறைவனைத் தேடி ஆனந்தம் அடைகின்றனர்.
நிலையற்ற உலகவிஷயங்களில் நிம்மதி தேடுபவன் கோடி கோடியாய் சம்பாதிக்கிறான்; சொகுசு பங்களா, கார், மனைவி, மக்கள் எல்லாம் இருந்தும் அவன் இறுதியில் போதையில் தான் ஆனந்தம் காண்கிறான்.
நீரின் இயல்பு எவ்வளவு உயரத்தில் இருந்து கொட்டினாலும் அது கீழ் நோக்கித்தான் விழும். தீயின் இயல்பு எப்படி என்றால் அது எங்கே எரிந்தாலும் அதன் சுடர் மேல்நோக்கித்தான் இருக்கும். அதுபோல தேடலில் இரு இயல்புகள் இருக்கிறது. வெளியே என்ன இருக்கிறது? வெளியே என்ன இருக்கிறது? என்ற தேடலில் மனிதன் தனக்கான உணவு, உடை, உறைவிடம், சொந்தம், பந்தம் எல்லாம் தேடிக்கொண்டான்.
அதுமட்டுமல்லாமல் பணமிருந்தால் உறவுகள், சொந்தங்கள், நட்புகள், உலகம் மதிக்கும், தன்னை திரும்பிப்பார்க்கும் என்ற கற்பனை கவுரவத்திற்காக வாழ்நாளை பணம் சம்பாதிக்கவே அடமானம் வைத்துவிடுகிறான். சிலர் பதவி, அதிகாரம், புகழ் இருந்தால் நமக்கு எல்லாரும் அடிமையாக இருப்பார்கள், கொண்டாடுவார்கள் என்ற கீழான நினைப்பில் அதை தேடுவதில் வாழ்நாளை கரைத்துக்கொள்கிறார்கள். இதெல்லாம் வெளியே என்ன இருக்கிறது? என்ற தேடலின் விளைவுகள். இதில் சிலர் தன்னலமற்றுஅபூர்வமாய் தேடியதில் அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தன.
அடுத்ததாக உள்ளே என்ன இருக்கிறது என்று கண்மூடிக்கொண்டு தேடலில் நுழைந்து,
தனக்குள்ளேயே உள் முகமாக தேடி... தேடி... இந்த பிண்டமே அண்டம்! அந்த அண்டமே இந்த பிண்டம் என்றுஞானம் அடைந்தான்.அதன் பயனாக கடவுளை அறிந்தான்.
ஒரு ஆப்பிள் மரத்திலிருந்து ஒரு ஆப்பிள் விழுகிறது. நாமாக இருந்தால் என்ன செய்வோம் அதை எடுத்து வந்து கழுவி சாப்பிடுவோம். ஆனால், சர்ஐசக் நியூட்டன் அவ்வாறு செய்யவில்லை. இந்த ஆப்பிள் ஏன் மேலே போகாமல் கீழே விழுகிறது என்று கையில் ஆப்பிளை வைத்துக்கொண்டு யோசித்தான்; தேடலில் மூழ்கினான். கடைசியில் புவியீர்ப்பு விசையைஉலகுக்கு அறிமுகப்படுத்தினான். இது ஒருவகை தேடல்.
கடற்கரைக்கு காற்று வாங்க போகிறோம். கடல் அழகை ரசிக்கிறோம். ஆனந்தம் அடைகிறோம். இந்த மகிழ்ச்சியைத் தேடிதானே கடற்கரைக்கு ச் செல்கிறோம். ஆனால், யாராவது கடலின் ஆழம் எவ்வளவு இருக்கும். எங்கு ஆரம்பித்து எங்கே முடிகிறது இந்த கடல்? கடலுக்கடியில் என்னன்ன ஜீவராசிகள் இருக்கும். பாதாளலோகம் கடலுக்கடியிலா இருக்கிறது என்றெல்லாம் நாம் சிந்தித்ததுண்டா? அப்படி ஒரு தேடல் இருந்திருந்தால் ஆராய்ச்சியாளர்கள் ஆகியிருப்போம்.
வானத்தைப் பார்க்கிறோம்; நிலவைப்பார்க்கிறோம்'; மேகத்தைப் பார்க்கிறோம் ரசிக்கிறோம். அதையும் தாண்டி வானத்தின் மறுபக்கம் எப்படி இருக்கும்? வானத்துக்குள்ளே என்ன இருக்கிறது? சொர்க்கம், நரகம் எல்லாம் வானத்தில் எங்கே இருக்கும். என்றாவது ஒரு நாள் வானம் உடைந்து விழுந்து விடுமா? வானம் எதை பிடித்துக்கொண்டு நிற்கிறது? இப்படி எல்லாம் உங்கள் தேடல் விரிந்திருக்கிறதா? இப்படி யோசித்தவர்கள் எல்லாம் விஞ்ஞானிகளாக, ஞானிகளாக ஆகிவிட்டார்கள். அவர்கள் தேடல் உள்முகமாக இருந்துவிட்டது.
வெளிமுக தேடல் கடலலைப் போல ஓயாது மனதில் நச்சரித்துகொண்டே இருக்கும். அது எல்லையில்லாமல் விரிந்துகொண்டேயிருக்கும். ஒன்றைவிட்டு பிறிதொன்றை பற்றியபடியே இருக்கும்.
உதாரணமாக யானை எப்போதும் தன் துதிக்கையை அங்கும் இங்கும் ஆட்டிக்கொண்டே இருக்கும். தரையில் உள்ள குப்பை கூளத்தையெல்லாம் பொறுக்கிக்கொண்டேயிருக்கும். யானையின் துதிக்கை ஆட்டத்தை நிறுத்த, பாகன் ஒரு குச்சியையோ, சங்கிலியையோ கொடுப்பான். அதைப் பிடித்துக்கொண்டு யானை அமைதியாக துதிக்கையை அசைக்காமல் இருக்கும். அதுபோல மனித மனம் வெளிமுக தேடலில் அலைந்து கொண்டேயிருக்கும் திருப்தியில்லாமல். அதற்கு பக்தி என்கிற ஒரு பிடிமானத்தைக் கொடுத்து விட்டால் போதும்.மனம் அலைபாயாமல் இருக்கும். ஒடுங்கிய மனம் உள்முக தேடலில் மூழ்கி ஞானத்தில் திளைக்கும். அல்லது குறைந்தபட்சம் அமைதியையோ, நிம்மதியையோ அடையும்.
தேவராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக