புதன், 28 ஏப்ரல், 2010

11. துன்பம் வருவது ஏன்? தேவராஜன்

11. துன்பம் வருவது ஏன்? தேவராஜன்

மனிதர்கள் சுயநலவாதிகள்! இன்பமும் சந்தோஷமும்படும் போது, "ஏ, கடவுளே ஏன் எனக்கு இவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தாய்?'என்று கேட்பதில்லை. சரி, அனுபவிக்கும் சந்தோஷத்தை தந்த கடவுளுக்கு அந்த கணத்தில் நன்றியாவது யாராவது நம்மில் சொல்கிறோமா? ஆனால், துன்பப்படும் போது மட்டும் கண் கண்ட கோயில் எல்லாம் படி ஏறி, வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு "ஏன் எனக்கு இப்படி ஒரு துயரத்தை கொடுத்தாய்?' என்று கேள்விகள் கேட்டு கடவுளிடம் கோரிக்கை வைக்கிறோம்! கொஞ்சம் பக்குவப்பட்டவர்கள் "கடவுளே துயரத்தைக் கொடுப்பதோடு அதை தாங்கும் மன வலிமையையும் கொடு' என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

நீ சந்தோஷமாக சிரிக்கும் தருணத்தில் கடவுளை நினைத்தால், நீ துன்பத்தில் அழும் போது கடவுளை உன்னை நினைப்பான். இதுகூட தெரியாமல் தான் நாம் கடவுளிடம் சுயநலத்தோடு பக்தி செய்து வருகிறோம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகை துன்பம் வருகிறது. அதற்கு காரணங்களும் வெவ்வேறாக இருக்கின்றன. பசிக்கிறதே! உணவில்லையே என்று ஒருவன் துன்பப்படுகிறான். அறுசுவை உணவிருக்கிறது! ஆனால் பசிஇல்லையே... செரிமாணம் ஆவதில்லையே என்று ஒருவன் துன்பப்படுகிறான். இதில் துன்பத்திற்கு காரணம் பசியா? உணவா? எதை சொல்வீர்கள்? எதைச் சொன்னாலும் அவரவர் நிலையில் தவறாகும்.
வாழ்க்கை நெடுகிலும் சந்தோஷமே ஒருவன் அனுபவித்துக்கொண்டிருந்தால், அவன் நினைப்பதெல்லாம் நடந்துகொண்டிருந்தால் அவன் ஒருபோதும் கடவுளை நினைக்கவே மாட்டான். அதுமட்டுமல்ல; ஆணவம் தலைக்கேறி ஆட ஆரம்பித்து விடுவான். எல்லாம் நம் முயற்சியால் மட்டுமே நடக்கிறது என்று இறுமாப்பு கொண்டுவிடுவான்.

அதற்காகத் தான் கடவுள் திடீரென நாம் எதிர்பார்க்காமலேயே துன்பத்தை கொடுக்கிறார்.அந்த துன்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவனை வதைக்கும் போது, அந்த துன்பநிலையிலும் அவன் உண்மை , நேர்மை, தர்மம் போன்ற ஒழுக்க நெறிகளிலிருந்து விலகாமல் இருக்கிறானா? துயரத்தின் ஆரம்பத்தில் அல்லது விளிம்பில் தன்னை நினைத்து, துன்பம் போக்கியருள பிரார்த்திக்கிறானா? என்பதை சோதிக்கவே, துன்பம் கொடுத்து அந்த துன்பத்தின் மூலம் மனம் பக்குவமடைய வைக்கிறார். பக்குவமடைந்த நம் மனதை கடவுள் ஆசீர்வதித்து ஏற்றுகொள்கிறார்.
கடவுளை புரிந்துகொள்ளும்மனத்தடைகளை உங்களுக்கு உணர்த்துவது துன்பமே. மனத்தடைகளில் இருந்து உங்களை விடுவிப்பதும் துன்பமே. உங்களை உங்களில் இருந்து விடுவிப்பதற்காக கடவுள் கொடுக்கும் உதவிகரமே துன்பம். துன்பமே உங்களுக்கு குரு. ஈசனின் திருவிளையாடல்கள் எல்லாம் பக்தர்களுக்கு சோதனைக் கொடுத்து, அவனை ஆட்கொண்ட புராணம் கதைகள் ஒன்றா, இரண்டா? நினைத்துப்பாருங்கள்!

யாருக்கு துன்பம் இல்லை. ரமணருக்கும், பரமஹம்சருக்கும் புற்றுநோய் வந்தது. விவேகானந்தருக்கும் சாயிபாபாவுக்கும் பட்டினி வடிவில் துன்பம் ஏற்பட்டது. அவர்கள் எல்லாம் நம்மை போல புலம்பாமல் துன்பம் வரும்போதெல்லாம் எந்தக்காரணமும் கூறாது ஏற்றுக்கொண்டு அந்தத் துயரை அடிவரை அனுபவித்து அதன் மூலமே மனதில் இருக்கும் அழுக்குதொடர்புடைய மனதடைகளை போக்கிக்கொண்டனர்.

துன்பம் ஏற்படுவதற்கு காரணமான கருவிகளான கோபம், அவசரம், ஆவேசம், பொறாமை,காமம், ஆசை என மனதில் எழும் மன எழுச்சிகள், மனக்குமுறங்கள், மனஅழுத்தங்கள் போன்ற மனமாற்றங்கள் காரணமாக இருக்கின்றன. இதற்கு அடிப்படையாக இருப்பது நாம் நாமாக இல்லாமல் இருப்பதும், நமக்கான வாழ்க்கையை நாம் வாழாமல் இருப்பது தான்.
நீங்கள் ஒவ்வொருவரும் இன்னொருவரைப் போல் வர முயலாமல், நீங்கள் ஒவ்வொருவரும் நீங்களாகவே இருக்க முயலவேண்டும். அது தான் உங்களுக்கு மட்டுமே உரிய பாதை; வாழ்க்கை. அதுவல்லாமல் நீங்கள் அடுத்தவர் பாதையில், அடுத்தவர் வாழ்வை வாழ்வது எல்லாம் வேஷங்கள். வேஷங்கள் தான் துன்பத்தை கொட்டித்தீர்க்கின்றன. நீங்கள் நிஜமாக இருந்து, கடவுள் பக்தியுடன் இருங்கள் பேரானந்தம் கிடைக்கும்.
துன்பங்கள் ஒவ்வொன்றும் வரும்போது அவற்றிலிருந்து தப்பிக்கும் வழியை நீங்களே உங்கள் அறிவினால் ஊகித்து அவற்றிலிருந்து தப்பிக்க முயல்கிறீர்கள். இது செயற்கை தனம் அல்லவா? எப்படிவந்த இன்பத்தை புறந்தள்ளாமல் அதை முழுமையாக அனுபவிக்கிறோமோ, அதை போல வந்த துன்பத்தை அனுபவிப்பதுதான் இயற்கை. அதிலிருந்து தப்பிப்பது எவ்வகையில் நியாயம்?
எந்தத் துன்பத்தையும் முழுமனதோடு ஏற்றுக்கொண்டு அதிலிருந்து தப்பிக்கும் எண்ணத்திலோ, முயற்சியிலோ மனதை செலுத்தாமல் அத்துன்பத்தினால் விளையும் வேதனையை அனுபவித்தால், அத் துன்பத்திற்குக் காரணமான வேர் அறுத்து கடவுள் உங்களை விடுவிப்பார்.
உலகில் உள்ள எவ்வளவோ இன்பங்களை நாடும் நாம் அதே சமயம் கடவுளையும் நாடுகிறோம். கடவுளைமட்டுமே நாடினால் போதும். பிற இன்பங்கள் எல்லாம் தானே வரும் என்ற உண்மையை நாம் அறிவதில்லை. இதனால் நம்முடைய மனம் கடவுளை நாடுவதைவிட அதிகமாகப் பிற இன்பங்களையே நாடுகிறது.
கோயிலுக்குச் சென்றாலோ, சத்சங்கம், பஜனைக்குச் சென்றாலோ,ஆன்மிக சொற்பொழிவு கேட்டாலோ கொஞ்சநேரம் மனம் அமைதியடைகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. கடற்கரை, ஆற்றங்கரை, தோப்பு, நல்ல சினிமா,நாடகம் போனாலும் பிடித்த பாட்டு, பிடித்த புத்தகம் கேட்டாலும் படித்தாலும் கொஞ்சம் அமைதியும் மகிழ்ச்சிøயும் மனதுக்கு கிடைக்கிறது.
இதற்கு எல்லாம் காரணம் சூழல் மாற்றத்தால் ஏற்படும் நம் மனமாற்றம். இந்த மாயை வித்தையை புரிந்து கொள்ளாமல் கடவுளை புறக்கணித்து விட்டு நிலையற்ற சந்தோஷத்திலும், போதையில் இன்பத்திலும், சிற்றின்பதிலும் உழன்று பேரின்ப வெள்ளத்தை பெறமுடியாமல் ஏமாந்து போகிறோம்.
கடவுளை அடைய உதவும் படிகட்டுகள் தான் துயரங்கள்! அந்த துயரங்கள் வருகிறதென்றால் நாம் கடவுளின் சமீபத்தில் நகருகிறோம் என்று அர்த்தம்!
தேவராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக