புதன், 28 ஏப்ரல், 2010

3. கோயில் எழுப்பினால் கோடிப்பிறப்பு புண்ணியம்! தேவராஜன்

3. கோயில் எழுப்பினால் கோடிப்பிறப்பு புண்ணியம்! தேவராஜன்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும் என்பர். தரிசனம் செய்வதற்கே இவ்வளவு புண்ணியம் எனின் கோயில் எழுப்பினால் கேட்கவேண்டுமா என்ன, நிச்சயம் கோடிப்பிறப்பு புண்ணியம் கிடைக்கும்.
இன்று வரை சோழமன்னர்கள் இன்னும் பிற மன்னவர்கள் வரலாற்றில் மட்டுமல்ல, மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே, எப்படி? அவர்கள் வீரர்களாக,அதிகார செல்வாக்குபெற்றிருந்ததினாலா, பல நாடுகள் வெற்றிகண்டதினாலா? தான தர்மம் செய்ததாலா? இவை எல்லாம் ஒரு காரணமாக இருந்தாலும், அவர்கள் காலத்தால் அழியாத பல கோயில்களை எழுப்பியதால்தான் அவர்கள் புண்ணியமும், நீங்கா புகழையும் அடைந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள் மனங்களில்.
அதெல்லாம் சரி, காசே கடவுளாக நினைக்கிற இந்தக் காலத்தில் சாமானியர்களால் கோயில் எழுப்புவதெல்லாம் நடக்கக்கூடிய செயலா என நினைத்து விடவேண்டாம். சிதலமடைந்த கோயில்கள் எழுப்ப உங்களால் முடிந்த நன்கொடைகளை கொடுங்கள். புதிதாக யாராவது கோயில் எழுப்பினால் உங்கள் பங்குக்கு இயன்றளவு உதவுங்கள். அதுபோதும். கோயில் எழுப்ப கோடீஸ்வரரால் மட்டும்தான் முடியும் என எண்ணவேண்டாம்.
கோயில் எழுப்பினால் உண்டாகும் பலன்கள் என்ன என்பதை இந்த வார சிந்தனையாக தெரிந்து கொள்வோம்.
இறைவனுக்கு கோயில் எழுப்ப யாரொருத்தர் முயற்சிகளில் ஈடுபடுகிறார்களோ அவர்களுக்கு, ஆயிரம் பிறப்புகளில் தான் செய்த பாவங்களிலிருந்து விடுபடுகிறார்கள்.
கோயில் எழுப்ப வேண்டும் என்று ஒருவன் ஆசைப்பட்டாலோ, தன் மனதில் எண்ணினால்கூட, அவன் நுõறு பிறப்புகளில் செய்த பாவங்களில் இருந்து விமோசனம் பெறுகிறான்.
கோயில் எழுப்ப ஒருவன் மேற்கொண்ட முயற்சிகளை, திட்டங்களை எவனொருவன் ஆதரிக்கிறானோ, அவன் கூட பாவங்களில் இருந்து விடுபடுகிறான்.
சிவனுக்கு கோயில் எழுப்பிய பல்லவன் காடவர்மன் மன்னனுக்கும், அதே சமயம் நினைவாலேயே கோயில் எழுப்பிய பூசலாருக்கும் ஈசன் அருள்புரிந்தமையை நாம் படித்திருப்போம்.
கோயில் எழுப்பினாலும் சரி, கோயில் எழுப்ப விருப்பப்பட்டாலும் இறைவன் பேதமில்லாமல் ரட்சிக்கிறான் என்பதற்கு ஒரு கதை சொல்கிறேன்:
ஒரு நாட்டில் கண்ணப்புரத்தான் எனும் மன்னன் சோழ தேசத்தை நீதி, நெறி, நேர்மையோடு ஆட்சி செய்து வந்தான். அவன் அரண்மனையில் ஒரு வாயில் காப்போன் மருதன் சேவகம் செய்து வந்தான். நீண்ட நாள் குழந்தைச் செல்வம்இல்லாமல் இருந்த மன்னருக்கு இறைவன் அருளால் ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது. அதே நாளில், அதே நேரத்தில் வாயில் காப்போனுக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது.
இருவருமே ஒரே நாளில் பிறந்ததால் மன்னனுக்கு வாயில்காப்போன் மகன் மீதும் பிரியம் உண்டு.
அந்த இரண்டு பிள்ளைகளுமே வளர்ந்து, வாலிப பருவம் எய்தினார்கள். ஒரு அமாவாசை நாளில் மன்னரின் மகனுக்கு திடீரென்று கை,கால் வலிப்பு ஏற்பட்டது. கொஞ்ச கொஞ்சமாய் மேலும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதை சமயத்தில் வாயில்காப்போன் மகனுக்கும் கை,கால் வலிப்பு ஏற்பட்டு அவனும் படுத்த படுக்கையானான். ஆறு மாதங்கள் ஓடின. அரண்மனை வையித்தியரால் மன்னர் மகனை குணப்படுத்த முடியவில்லை. என்ன நோய் என்றும் கண்டுபிடிக்கவில்லை.
வரம்பெற்ற வந்த பிள்ளை இப்படி படுக்கையில் கிடக்கிறானே என மன்னர் புலம்பினார்.
அதே சமயம் வாயில்காப்போன் மகனின் பிறந்த ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அரண்மனை ஜோதிடரிடம் காட்டி மகன் பிழைப்பான? பிழைக்க மாட்டானா என அறிந்து வர ஜோதிடரைக்காண காடு கடந்து சென்றான்.
ஜோதிடர் ஜாதகத்தைப்பார்த்து அதிர்ந்து போனார். இந்த ஜாதகத்துக்கு உள்ள தோஷத்துக் இவனால் பரிகாரம் பண்ணமுடியாதே என நினைத்த ஜோசியர், ""இன்னும் ஒரு மண்டலம் கழித்து வா, பரிகாரம் சொல்கிறேன். இப்போ போய் வா.'' என்றார்.
வாயில்காப்போன் கிளம்பிய கணத்தில், மன்னரும் தன் மகனுக்கு ஜோதிடம் பார்க்க வந்தார்.
ஜோதிடர் மன்னர் மகனின் ஜாதகத்தைப் பார்த்து அதிர்ந்து போனார். காரணம் வாயில்காப்போன் மகனின் ஜாதகமும், மன்னர் மகன் ஜாதகம் ஒன்றுபோலவே இருந்தது. ஜாதகம் கணித்த ஜோதிடர், ""அரசே, இது பிரமஹத்தி தோஷமும்,பித்ரு தோஷமும் இருக்கு. இந்த தோஷம் கழிய நீங்க ஒரு சிதிலமடைந்த கோயிலை புதுப்பித்து ஒரு மண்டல நாளுக்குள் கும்பாபிஷேகம் பண்ணிவிட்டா போதும் உங்க மகன் பிழைத்து விடுவான்'' என்றார்.
அரண்மனை வந்த மன்னர் நாட்டில் சிதிலமடைந்த கோயிலை எல்லாம் புதுபிக்க ஆணையிட்டார். மன்னரின் உத்தரவுபடியே நாட்டில் இருந்த பத்துக்கும் மேலான கோயில் 48 நாட்களுக்குள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. அடுத்த ஒரு வாரத்தில் மன்னரின் மகன் பிழைத்துவிட்டான். அதே சமயம் வாயில் காப்பவனின் மகனும் உயிர்ப்பிழைத்து விட்டான். அவன் எப்படி பிழைத்தான்?
தேவராஜன்


4. கோயில் எழுப்பினால் கோடி புண்ணியம்2 தேவராஜன்
நம் மகன் தோஷம் கழிக்க கோயில்களுக்கு கும்பாபிஷேகம் பண்ணினோம். மருதன் என்ன செய்தான் அவன் மகன் பிழைத்தது எப்படி? ஒருவேளை ஜோதிடன் பொய் சொல்லிவிட்டானா? அரணமனைக்கு ஜோதிடரை அழைத்துவர மன்னர் உத்தரவிட்டார்.
சபையில் ஜோதிடர் உயிர்பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தார்.
""ஜோதிடரே, என் மகனும், வாயில்காப்பவன் மருதன் மகனும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் பிறந்தவர்கள். ஒரே மாதிரி தோஷமிருந்து நோய்வாய்ப்பட்டார்கள். என்மகனுக்கு கோயில் புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்ததினால் தோஷம் கழிந்து மகன் பிழைத்து விட்டான். எந்த கோயிலும் கும்பாபிஷேகம் செய்யாத மருதன் மகன் பிழைத்தது எப்படி? காரணம் சொல்லா விட்டால் உன் தலை <உருளும்'' என்றார்.
ஜோதிடருக்கு ஒண்ணுமே புரியவில்லை. மருதனின் மகன் தோஷம் கழிக்காமல் பிழைத்திருக்க முடியாது என்ற உறுதியில் இருந்த ஜோதிடர், மன்னரிடம் ''அரசே, என் கணிப்பு ஒரு போதும் பொய்ப்பதில்லை. ஆதலால் நிச்சயமாக மருதன் ஒருகோயில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணித்தான் இருக்கவேண்டும்'' என்றார். இதைக்கேட்டு சபையில் உள்ளோர் சிரித்தார்கள்.
மருதனிடம் விசாரித்தனர். எப்படி உன் மகன் பிழைத்தான்? கேள்விகள் மருதனை வட்டமடித்தன. அப்போது தான் மருதனுக்கு ஞாபகம் வந்தது. அன்று நடந்ததை விவரித்தான்.
""ஜோதிடரைப் பார்த்துட்டு வீட்டுக்கு வர காட்டுவழியில வந்துக்கிட்டு இருந்தப்போ திடீர்ன்னு மின்னலும் இடியுமா மழை பெய்தது. மழை விடவேயில்ல. சரி ஒதுங்க இடம் கிடைக்குமான்னு அக்கம் பக்கம் பார்த்தேன். கொஞ்சதுõரத்துல ஒரு பழைய கட்டடம் தெரிஞ்சது. அங்கே போயி பார்த்த அது பாழ் அடைந்த கோயில். இருட்டிவிட்டதால அங்கே தங்கிட்டேன். குளிர்ல கொஞ்சம் கண்ணயர்ந்து இருந்தப்போ. நாம மட்டும் செல்வந்தரா இருந்தா, ஒரு அரசரா இருந்தா இந்த பாழடைந்த கோயிலைக்கட்டி கும்பாபிஷேகம் பண்ணலாம் நாம தான் பஞ்சபரதேசியாச்சே! என்று எண்ணிக்கொண்டேன்.
அந்த நெனப்பிலே படுத்துட்டதால கனவிலேயே நான் ஆசப்பட்டப்படி அந்த கோயில கட்டி கும்பாபிஷேகம் வரை செஞ்சிட்டேன். கனவு முடிந்து பார்த்தா பொழுது விடிந்து விட்டது. வீட்டுக்கு வந்துட்டேன். நடந்தது இது தான்'' மருதன் சொல்லி முடித்தான்.
மருதன் சொல்லியதை வைச்சு சுதாரித்துக்கொண்ட ஜோசியர்,""அரசே, நீங்க செல்வ பலம்,ஆள்பலம்,அதிகார பலம் இருப்பதால சிதிலமடைஞ்ச கோயில புதுப்பித்து கும்பாபிஷேகம் பண்ணிட்டீங்க. ஆனா மருதன் சாமானிய மனுஷன் அவனால அது முடியாமா? இருந்தாலும் அக்னி புராணத்தில கோயில் எழுப்பினாலும், கோயில் எழுப்ப விரும்பினாலே ஆயிரம் பிறப்பு பாவங்கள் போய்விடும்ன்னு சொல்லியிருக்கு. அந்த வகையில தான் மருதன் மகனும் உயிர் பிழைத்திருக்கான்'' என்றார்.
""அப்படியா?'' என ஆச்சரியப்பட்ட மன்னன் ""அக்னி புராணத்தில் கோயில் எழுப்பினால் வரும் பலன்களை சொல்லு'' என்றார்.
ஜோசியர் சொல்ல ஆரம்பித்தார்.
கிருஷ்ணனுக்குக் கோயில் எழுப்பியவனுடைய மூதாதையர்கள் நரகத்தில் இருந்து விடுபடுவர். அவர்கள் சந்தோஷமாய் விஷ்ணு லோகத்தில் வாழ்வார்கள். ஆலயம் எழுப்புவதால் பிருமஹத்தி பாவம் விலகிடும். யாகம் முதலான கர்மாக்களைச் செய்தும் அடையமுடியாத பலன்களை எல்லாம் அடையலாம். தேவர்களுக்காக யுத்தத்திலே ஈடுபட்டு, மரணம் அடைந்து சொர்க்கத்தை அடையும் பலனை, ஆசாரம் உள்ளவனோ, அது இல்லாதவனோ ஒரு கோயில் கட்டுவதன் மூலம் பெறமுடியும்.
ஒரு கோயிலை எழுப்புவதால் ஒரு சொர்க்கத்திற்கு செல்கிறான். 3 கோயிலை எழுப்பியவன் பிரும்மலோகம் செல்கிறான். 5 கோயிலை எழுப்பியவன் கைலாசத்துக்கு செல்வான். 8 கோயிலை எழுப்புவன் வைகுந்தம் செல்வான். 16 கோயிலை எழுப்புவன் சகல சவுபாக்கியங்களை அடைந்து, வாழ்ந்து, பிறவாப் பேரின்பத்தை அடைவான்.
பெரிய கோயிலை எழுப்புபவன் முக்தி அடைகிறான். சாதாரண கோயிலை எழுப்புபவன் சொர்க்க வாசத்தை அடைகிறான். ஒரு ஏழை சிறிய கோயிலையும், செல்வந்தன் பெரிய கோயிலை எழுப்பினாலும் பலன் இருவருக்குமே சமம்தான். ஆயிரமோ, நுõறோ எவ்வளவு பணம் கோயில் எழுப்ப கொடுத்தாலும் விஷ்ணு லோகத்தை அடைகிறான்.
இளம் வயதில் விளையாட்டாக மணலைக்கொண்டு வாசுதேவனுக்கு கோயில் கட்டினாலும் அவன் வைகுந்தத்தையை அடைகிறான்.
கோயிலுக்கு மலர்களும் வாசனைப் பொருள்களும் தருபவன் உத்தம லோகத்தை அடைகிறான். ருத்திரன், சூரியனுக்கு கோயில் எழுப்புபவன் அடையும் புகலுக்கு எல்லையே இல்லை.
எனவே, நாம் வாழும் போதே புண்ணியம் தேடவும், சொர்க்கம் செல்லவும் கிடைத்த ஓர் அரிய வழி, கோயில் எழுப்புவதும், கோயில் எழுப்புபவர்களுக்கு முடிந்த உதவி செய்வதாகும். இப்படிப்பட்ட நல்ல காரியம் ஒன்றை சிந்திப்பதே இந்த வார ஆன்மிக சிந்தனையாக இருக்கட்டுமே!
தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக