புதன், 28 ஏப்ரல், 2010

13. பாவத்திற்கான நரகத் தண்டனைகள்! தேவராஜன்

13. பாவத்திற்கான நரகத் தண்டனைகள்! தேவராஜன்
புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கத்தில் சுகம் காண்பர்கள். பாவம் செய்தவர்கள் நரகத்தில் சொல்லொண்ணா துயரம் அடைவார்கள் என்று புராணங்கள் எடுத்தியம்புகின்றன. இருந்தும் நாம் பாவங்கள் செய்யாமல் இருப்பதில்லை. சிலர் சொர்க்கம், நரகம் என்பதலாம் சுத்த புரூடா என்கின்றனர்.
உண்மையில் சொர்க்கம், நரகம் இருப்பதை ஏழ்உலகம் சுற்றிவரும் நாரத முனிவரும், நந்திதேவன் அருளால் திருமூலரும், நசிகேதனும் பார்த்ததை புராணச் செய்திகள் மூலம் அறியமுடிகிறது. மேலும்,அந்த செய்திகள் வாயிலாக நரகம் என்பது எண்பது லட்சம் மண்டலங்களைக்கொண்டது என்பதையும் அறிகிறோம்.
சரி, இனி நாம் செய்த பாவங்களுக்கு நரகத்தில் என்னென்ன தண்டனைகள் வழங்கப்படும் என்று தெரிந்துகொள்வோம். இதைத் தெரிந்துக்கொண்டப்பிறகாவது பாவம் செய்வதை தவிர்ப்போம்.
அடுத்தவர் வளர்த்த பசுவை தெரியாமல் திருடியவனுடைய ஆத்மா மகாவசி எனப்படும் நரகத்தில் 100 ஆயிரம் ஆண்டுகள் இருட்டறையில் கிடந்து துன்பத்தை அனுபவிக்க வேண்டும். பிறருடைய நிலத்தை ஏமாற்றி அபகரித்து கொண்டவன், பிரமணனைக் கொன்றவன் ஆகியோர் அமாகும்பம் என்ற நரகத்தில் கடும்வெப்பமண்டலத்தில் வாழவேண்டும்.
சிறுகுழந்தை, பெண், முதியவர், பலமற்றவன் ஆகியோரைக் கொலைசெய்தவன் ரவுரம் என்கிற நரகத்தில் கிடந்து துன்பப்படவேண்டும். இவர்களுக்கு பிரளயம் அழியும் வரை விமோசனம் கிடைக்காது.
தனக்கு வேதம் கற்பித்த குருவின் நிலங்களில் பயிர்களை அழித்தவனும், திருடர்களும் மகா ரவுரவம் எனப்படும் நரகத்தில் ஒரு கல்பகாலம் தீயிலே கிடந்து வெந்துபோக வேண்டும். இந்த தண்டனை முடிந்தப்பிறகு, அந்த காரம் என்கிற நரகத்தில் இருட்டறையில் கிடந்து அவதிப்பட்டவேண்டும். பின்னர் அவர்களை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு புழுக்கள், அட்டைகள் மற்றும் நீர்வாழ்பூச்சிகளைக்கொண்டு உடலை அரித்துத் தின்னச் செய்வார்கள்.
தாயைக்கொன்றவன் அசிபத்திரவனம் எனப்படும் நரகத்தில் ஒருகல்பகாலம் கிடந்து துன்புற்று, பின்னர் சுடுமணலில் வறுத்தெடுக்கப்படுவான்.
பசியோடு எதிரே ஒருவன் கையேந்தி நிற்கும் போது அவனைப்பார்க்கவைத்து வகைவகையான பலகாரங்களைச் சாப்பிடுபவன் அவன் காகோலம் என்ற நரகத்தில் மலமூத்திர சகதியில் புழுத்துக்கிடக்கும் புழுக்களை புசிக்குமாறு தண்டிக்கப்படுவார்கள்.
நாள்தோறும் கடைபிடிக்க வேண்டிய நித்யகர்மானுஷ்டங்களை கைவிட்டவன் குத்தலம் என்ற நரகத்தில் தள்ளப்பட்டு ரத்தத்தையும் மூத்திரத்தையும் மட்டுமே அருந்துமாறு தண்டிக்கப்படுவார்கள்.
எவை எல்லாம் சாப்பிடக்கூடாது என்று சாஸ்திரம் சொல்லி உள்ளதோ அவைகளை சாப்பிடுபவன் துர்க்கதம் என்ற நரகத்தை அடைந்து உதிரத்தை அருந்துமாறு செய்யப்படுவான்.
தன்னை நம்பிவந்தவனை, அபயம் கேட்டவனை கொலைசெய்தவன், மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளுபவன் நரகத்திலே கொதிக்கும் எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்தெடுக்கப்படுவான்.
அயோக்கியர்களும், பிறருக்கு துன்பவிளைவிக்கும் முரடர்களும் மகாஜ்வாலம் என்ற நரகத்தில் தீயினால் பொசுக்கப்படுவார்கள்.
மூத்தவர்களுடைய மனைவியை, பிறருடைய மனைவியை, கீழ்தரமான மங்கையரோடு சல்லாபிப்பவர்கள் கிரகசம் என்ற நரகத்தில் சேர்க்கப்பட்டு அவர்களுடைய அவயங்களை ரம்பம் கொண்டு அறுப்பார்கள்.
பிறருடைய நல்ல குணத்துக்கு இழுக்குத் தேடுதல் போன்ற குற்றங்களை செய்பவர்கள் கொதித்துக்கொண்டிருக்கும் வெல்லப்பாகிலே தள்ளப்படுவார்கள்.
விலங்குகளைக் கொன்றவன் நரகத்தில் துõக்கமுடியாத சங்கிலியை பிணைத்து துன்புறுத்தப்படுவார்கள்.
தங்கத்தை திருடியவன் அம்வரிசம் என்ற நரகத்தையும், மரங்களை வெட்டியவன் வஜ்ர சஸ்திரகம் என்ற நரகத்தில் தள்ளப்பட்டு துன்பம் அனுபவிக்க துன்புறுத்தப்படுவர்.
பொய்சாட்சி சொன்னவன், பூதிவக்திரம் என்ற நரகத்தையும், அடுத்தவர் பணத்தை திருடியவன் பரிலுந்தம் நரகத்தையும், மது அருந்திய பிராமணன் விலேபம் என்ற நரகத்தையும், பிறரிடம் துவேஷத்தை உண்டாக்கி அவர்களுடைய நட்பை குலைப்பவன் மகாதாம்ரம் என்ற நரகத்தையும் அடைந்து கொதிக்கும் செம்புக் குழம்பிலே தள்ளப்பட்டு துன்பத்தை அடைவார்கள்.
அடுத்தவர் மனைவியை பலவந்தமாக அடைந்து இன்புற்றவர்கள் நரகத்தில் கொதிக்கும் இரும்புத் துõணையோ, இரும்பாலான பெண் உருவையோ தழுவுமாறு தண்டிக்கப்படுவார்கள். அதுபோல வாழ்க்கையில் பல ஆடவர்களுடன் கூடி இன்பம் அனுபவித்தவள் கூரிய முட்கள் நிறைந்த மரத்தை இரு கைகளாலும் கட்டித் தழுவுமாறு கட்டாயப்படுத்தப்படுவார்கள்.
மதுவைத் திருடியவன் பரிதாபம், பிறர் செல்வத்தை கொள்ளையடிப்பவன் காலசூத்திரம், மாமிசத்தை பெரிதும் விரும்பி உண்பவன் சூச்மலம், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கர்மாக்களை செய்யாது விட்டவன் உக்கிரகந்தம் ஆகிய நரகங்களில் தள்ளப்பட்டு சொல்லொண்ணா துயரம் காண்பார்கள்.
இப்படி நாம் தவறு என்று தெரிந்தே செய்யும் இன்னும் பல பாவங்களுக்கு ஏகப்பட்ட தண்டனைகள் இருக்கின்றன.
இதையெல்லாம் படித்ததும் உங்கள் மனதில் ஒரு அச்சம் எழுந்திருக்கவேண்டும். அவ்வாறு உங்களுக்கு அச்சம் எழுந்திருந்தால் நீங்கள் பாவத்திலிருந்து விலகி ,கடவுளின் ஆதரவு கரத்தை நோக்கி அடி எடுத்து வைக்க சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது என்று அர்த்தம்.
தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக