சனி, 3 ஏப்ரல், 2010

நான்... எனது வாழ்க்கை!

நான்... எனது வாழ்க்கை!
நடிகை அனுராதா மனம் திறந்த பேட்டி.
பேட்டி: எஸ். தேவராஜன்.

என் குடும்பம் கலை குடும்பம்!

எண்பதுகளின் மத்தியில் தலுக்கி மினுக்கி நடனமாடி நடித்து எட்டிலிருந்து எண்பது வயதுவரை உள்ள ரசிகர்களை மயக்கிப்போட்டவர்.தமிழ் சினிமாவின் கவர்ச்சிக்கன்னி! ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை அனுராதா. கதாநாயகியாக அறிமுகமாகி,பின்னர் பல வேஷங்கள் கட்டி கடைசியில் ரசிகர்கள் மனதில் நடன புயல் வீசி, கவர்ச்சி மழைபொழிந்து நிரந்தரமாக நடனமயிலாகவே தங்கிவிட்டவர்.
இவருடைய திரையுலக பிரவேசம், நடிப்பு அனுபவங்கள், பணிபுரிந்த இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் பற்றியும், தன் வாழ்க்கையில் நிகழ்ந்த சந்தோஷங்கள், துயரங்கள், மனக்காயங்களை இந்த தொடர் மூலம் வாரமலர் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.
என் தாத்தா, பாட்டி ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த ராஜமுந்திரி தான் பூர்வீகம். என் அம்மா, அப்பா சென்னைக்கு வந்து விட்டதால், நான் பிறந்து, வளர்ந்தது, படித்தது எல்லாம் நம்ம சிங்கார சென்னைதான்.
என் குடும்பம் கலை பாரம்பரியம் கொண்டது. என் பாட்டன், பாட்டி முதல் என் பெண் வரை எல்லோருக்குமே கலை ரத்தம் தான் ஓடுகிறது என்றால் அது நிஜம். நீங்கள் நம்பிதான் ஆகணும்.
அந்தக்காலத்திலேயே என்னோட பாட்டி கிருஷ்ணாபாய், அன்றைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் நடித்த படங்களில் கேரக்டர் ரோல் பண்ணியிருக்காங்க. குறிப்பிட்டு சொல்லணும்னா சிவ கவி படத்தைச் சொல்லலாம். என் தாத்தா இசைக்கலைஞர். இவர்கள் வாரிசு தான் என் பெற்றோர். அப்பா கிருஷ்ணகுமார் டான்ஸ்மாஸ்டர் ஆக இருந்தாங்க. அம்மா சரோஜா டிராமாவில பிஸியா நடிச்சிக்கிட்டு இருந்தாங்க. பார்த்தீங்கல, இப்ப நம்புறீங்களா, என் குடும்பமே கலைக்குடும்பம் என்பதை.
வீட்டில் அப்பா ஒருபக்கம் பிஸி; அம்மா ஒருபக்கம் பிஸின்னு தான் இருந்தாங்க. அப்ப நான் ஸ்கூல்ல படிச்சுக்கிட்டு இருந்தேன். வீட்டுக்கு யார் யாரோ விஐபிங்க எல்லாம் வருவாங்க. எனக்கு அப்போ சினிமாவைப்பத்தி அதிகம் தெரியாததனால் வந்தவங்களின் அருமை, பெருமை பத்தி எல்லாம் தெரியாமல் போச்சு. நான் உண்டு படிப்பு உண்டுண்ணு தான் இருந்தேன். கோடை விடுமுறை வந்தா லீவு நாள்ல வீட்டில் இருப்பதற்கு பதிலா, அப்பாவுடனும் அம்மாவுடனும் சூட்டிங் பார்க்க போவேன். அந்த காலத்து நடிகர்கள் நடிக்கிற காட்சிகளைப்பார்த்து ரசிப்பேன். லீவு நாளில் சூட்டிங் போனப் பிறகு தான் சினிமாவுக்கும், சினிமாவுல இருக்கிற நடிகர்களுக்கும் உள்ள புகழ் எவ்வளவு பெரிசுன்னு தெரிஞ்சது. அதுக்காக எனக்கு சினிமாவில நடிக்க ஆசை அப்பவே வந்துட்டுன்னு அர்த்தம் பண்ணிக்காதீங்க. அப்போ மனசுல தோணியதை தான் சொன்னேன். விடுமுறை முடிஞ்சதும் பழையபடி ஸ்கூலுக்கு போறதும் வீட்டுக்கு வரதும்தான் காலம் போயிட்டு இருந்துச்சு.
நையன்த் கிளாஸ் படிக்கும் போது நல்ல மொழு மொழுன்னு இருப்பேன்.அப்ப எனக்கு வயசு பதிமூணு இருக்கும்னு நினைக்கிறேன். அப்ப எனக்கு சுட்டித்தனம் அதிகம். இந்த வயசிலதான் வாழ்க்கையே ஆர்ப்பாட்டமா போச்சி.
அப்போ அது கோடை விடுமுறையா இல்ல சாதாரணமா வரும் விடுமுறையான்னு சரியா ஞாபகமில்ல. அம்மாவுடன் சூட்டிங் போனேன். அம்மாவுடன் சூட்டிங் போனதினால சினிமாவுல சிலருக்கு என்னைத் தெரியும். எல்லாரும் என்னை டான்ஸ் மாஸ்டர் பொண்ணுன்னு சொல்வாங்க. என் அம்மாவும் பிரபலம் என்பதால் பிரபலங்களின் பொண்ணாக நான் இருந்தேன். இப்படி அடிக்கடி சினிமா சூட்டிங் போயிட்டு வரதால சினிமாவிலுள்ள லைட் மேனிலிருந்து கேமரா மேனுக்கும், நடிகர்கள், இயக்குனர்களுக்கு நான் யாரோடு பொண்ணு என்பது நல்லாவே தெரியும்.
அப்ப மலையாள சினிமாவில் கே.ஜி.ஜார்ஜ் என்பவர் நல்ல டைரக்டர். அவர் மலையாளத்தில் ஒரு குடும்பகதை எடுக்கறதாக தீர்மானித்திருந்தார். அந்த படத்துக்கான கதை ஒரு அம்மா மற்றும் மகளுக்கான உறவுபற்றிய ஆழமான உணர்வுகள் பற்றியது. அந்த கதைக்கு மகள் கதாபாத்திரம் ரொம்ப எதார்தமாக இருக்கணும்னு விரும்பி இருக்கிறார்.
இந்த சமயத்தில் நானும் அம்மாவும் சூட்டிங் வர்ரதை நான் அம்மா மீது வைத்திருக்கிற பாசத்தை யாரோ அவர்கிட்ட சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். அப்ப எனக்கு பதிமூணு வயசுதானே! நைன்த் கிளாசு வேற படிச்சுகிட்டு இருந்தேன். ஒரு நாள் ஸ்கூலுக்கு கிளம்பிக்கிட்டு இருக்கேன். அம்மா என்கிட்ட வந்து இன்னைக்கு ஸ்கூலுக்கு போக வேண்டாம். வீட்ல இரு. உன்னைப் பார்க்க ஒரு பெரிய டைரக்டர் வர்றாங்க என்று சொன்னாங்க. எதுக்கு அம்மா என்கிட்ட இதை சொல்றாங்க. டைரக்டர் அப்பாவையோ, அம்மாவையோ தானே பொதுவா பார்க்க வருவாங்க. என்னை எதுக்கு பார்க்க வரணும்.... ஏன்னு ரொம்ப நேரமா யோசிக்கிட்டு இருந்தேன். இப்பதானே யோசிக்க ஆரம்பிச்சிருக்கிறேன். பொறுங்க. அடுத்தவாரம் யோசித்ததுக்கு என்ன பதில் தெரிஞ்சிக்கிடலாம்.
தொடரும்.
முதல் ஏமாற்றம்!

நான் அம்மாகூட, அப்பாகூட லீவு நாள்ல சினிமா சூட்டிங்வேன்னு சொன்னேன்ல. அப்போ அம்மா மலையாள படசூட்டிற்கு எல்லாம் அழைச்சுட்டு போயிருந்தாங்க. அப்ப என்னையும் எங்க அம்மாவையும் அடிக்கடி ஒண்ணாப்பார்த்திருக்கிறார் மலையாளத்தில் பிரபலமான டைரக்டர் கேஜி. ஜார்ஜ்.
அப்போ டைரக்டர் கேஜி.ஜார்ஜ் அம்மாவுக்கும், பெண்றுணுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பான உணர்வுள்ள கதை ரெடி பண்ணியிருந்திருந்தார். அவர் கதைப்படி மகளாக வரும் காதாபாத்திரத்திற்கு துறுதுறுன்னு சுட்டியாக மொழுமொழுன்னு உள்ள ஒருபொண்ணுதான் பொருத்தமாக இருக்கும்னு அவர் எண்ணியிருந்தார். அவர் கதைக்கேத்த கதாபாத்திரத்திற்கு நான் அப்படியே பொருந்துவேன்னு நினைத்து, என்னை நடிக்கவைக்கணும்னு அவர் தீர்மானித்து விட்டார். அதற்காகத் தான் அந்த டைரக்டர் எங்க வீட்டிற்கு வந்தார். என்னை நேரில் பார்த்து போக வந்தார்.
சொன்னபடியே வீட்டிற்கு வந்தார். என் அம்மா, அப்பாவிடம் கதையை சொல்லி அந்த மகள் கதாபாத்திரத்திற்கு உங்க மகள் பொருத்தமா இருப்பாள் என்று கூறி, என்னை நடிக்க வைக்க விருப்பம் தெரிவித்தார். எனக்கோ அப்ப வயசு பதிமூணுதான். படிச்சுக்கிட்டு வேற இருந்தேன். நடிக்கப்போனா படிப்புகெட்டுவிடும் என்பது மட்டுமல்ல; இந்த வயதில் இவள் நடிக்க முடியுமா என்ற யோசனைகள் பல இருந்தாலும், வீடு தேடி வந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் என் பெற்றோர் தீர்மானமாக இருந்தார்கள். டைரக்டரிடம் நான் நிச்சயம் நடிப்பேன்னு சொல்லியனுப்பி வைச்சுட்டாங்க.
டைரக்டரும் "நீ எதிர்காலத்துல நல்லா வருவேன்னு' ஆசீர்வாதம் செய்துவிட்டு கிளம்பி விட்டார்.
எனக்கு ஒண்ணுமே புரியல. நாம சினிமாவில் நடிக்கப்போறோமா? என்னால் நம்பவே முடியல. சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும், நடிப்பது அப்படி ஒண்ணும் சுலபமான விஷயமில்லை என்பதை நினைக்கும் போது உதறல் எடுத்தது. ஆனாலும் மனதுக்கு ஆறுதலாக இருந்த விஷயம் என்ன வென்றால் நான் எப்போதும் அம்மா செல்லம். அம்மா மேல ரொம்ப பிரியமா இருப்பேன். அப்பா மேலேயும் பிரியம் உண்டு. எப்போதும் அம்மாகூடவே முந்தானையைப் பிடிச்சுக்கிட்டு அலைவேன். இப்படி அம்மா பொண்ணா இருந்த எனக்கு நடிக்கப் போகும் படத்தில் கதாபாத்திரம் கூட ரியல் லைப்பில் நான் இருப்பது போலவே கிட்டதட்ட இருந்தது. அதனால், எப்படியும் நடிச்சுடலாம் எங்கிற தைரியம் எனக்கு ஏற்பட்டது.
அது ஒரு நாள். படம் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. கூடவே அம்மாவும் இருந்தாங்க. மேக்கப், லைட்டிங், கேமாரா எல்லாம் ஒருவித புது அனுபமாக இருந்தது. டைரக்டர் ஜார்ஜ் எப்படி நடித்துக்காட்டினாரோ, நடிக்கச் சொன்னாரோ அது போலவே அதிக டேக் வாங்காம நடித்தேன். நாட்கள் ஓடிக்கிட்டே இருந்தது. படமும் வளர்ந்து கொண்டே இருந்தது. ஒருவழியாய் படம் முடிந்தது. நாமலும் நடிகை ஆயிட்டோம்ன்னு சந்தோஷமாக தான் இருந்தேன். ஆனா, அந்த சந்தோஷம் நிலைக்கல. படம் எடுக்கப்பட்டு போஸ்ட் புரடக்ஷன் வேலை நடந்துக்கிட்டு இருந்தது. எல்லார்கிட்டேயும் நான் நடிக்கிறேன்னு வேற பெருமையாக சொல்லிக்கிட்டு திரிந்தேன். படம் சீக்கிரம் ரிலீஸ் ஆகும். தியேட்டரில் பெரிய திரையில் என்னோட முகத்தையும் நடிப்பையும் பார்க்க நான் ரொம்ப ஆசை, ஆசையாய் இருந்தேன். படம் சில்வர் ஜீப்ளி எல்லாம் கொண்டாடும் என்கிற கனவில் மிதந்தேன். எனக்கென்ன சினிமா பற்றி தெரியும்? நான் விளையாட்டுச் சிறுமி, கத்துக்குட்டி. இந்த மாதம் படம் ரிலீஸ் ஆகும், அடுத்தமாசம் ரிலீஸ் ஆகும்ன்னு ஏங்கி, ஏங்கி போனேன். ஆனால் கடைசி வரைக்கும் அந்தப் படம் ரிலீஸ் ஆகவே இல்லை. படம் தான் ரிலீஸ் ஆகல அந்தப் படத்தோட பெயரையாவது சொல்றேன் கேட்டுகுங்க. " இனிய அவள் உறங்கட்டும்' 1979 ஆண்டு தொடக்கத்தில் எடுக்கப்பட்ட அந்தப்படம் இன்னைக்கும் வரை அந்த மலையாளப்படம் வெளிவரவே இல்லை. என்ன முதல் படமே ரிலீஸ் ஆகலே, இனிமே யாரு நமக்கு நடிக்க சான்ஸ் கொடுப்பாங்கன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்...
தொடரும்.

காதலிக்க 90 நாள்!
முதல் படம் எனக்கு முதல்அனுபவமாக இருந்தது. இருந்தாலும் வெற்றி ,தோல்வி, எதிர்ப்பார்ப்பு எல்லாம் அப்படி ஒண்ணும் பெரிசா என்னை பாதிக்கலைன்னுதான் சொல்லுவேன். 14,15 வயசுல அதைப்பற்றி எல்லாம் எதுவும் தோணல. முதல் படத்திற்கு பிறகு, மலையாளத்தில் சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. பல படங்கள் நடிச்சேன். இருந்தாலும் தமிழில் நடிக்க வாய்ப்பு வராமல்தான் இருந்தது. மலையாள படங்களில் நடிச்சிகிட்டு இருந்தேன்.அப்ப திடீரென்று தமிழில் நடிக்க ஒருவாய்ப்பு வந்தது. ரொம்ப சந்தோஷமா இருந்தது. பெருமையாக இருந்தது. ஏன்னாஅப்ப தமிழில் தன் நடிப்பால் கொடிக்கட்டி பறந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு என்றால் கேட்க வேண்டுமா என்ன? என்னைப்போல 14 வயசுக்குள்ளேயே நடிக்க வந்த நடிகை எல்லாம் இருந்தாங்க. ரம்யா கிருஷ்ணன், ஷோபனா நடிச்சிகிட்டுதான் இருந்தாங்க. சரி, தமிழில் நடிக்க வந்த சந்தோஷமான அனுபவத்தைத் சொன்னேன்ல. ஆனா அதுக்கு முன்னால ஒரு கசப்பான அனுபவம் எனக்கு தமிழில் நடிக்க வரும் போது ஏற்பட்டது. அது சிவாஜி சாரக கூட நடிக்கறதுக்கு முன்பே
தமிழில் காதலிக்க 90 நாள் என்கிற படத்தில் ஹீரோயினா நடிச்சேன். அந்த படம் ஏதோ சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமபோச்சு. ஆசை, ஆசையாய் தமிழில் நடிச்ச முதல்படம் வெளிவராததால எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகதான் இருந்தது. ஆனால், அந்த ஏமாற்றத்தை துõக்கி சாப்பிடும்படி, நானே எதிர்ப்பார்க்காத ஆச்சரிய வாய்ப்பு தான்
சிவாஜி கணேசன் ஹீரோவா நடிக்க இருந்த மோகனப்புன்னகை என்கிற படத்தில் நடிகர் நாகேஷ் மூலம் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப்படத்தை இயக்கிய இயக்குனரும் ஒரு பெண் தான். அவங்க பெயர் ஷீலா. மோகனப் புன்னகைப் படத்தில் என்னைச் சேர்த்து மூன்று ஹீரோயின்கள். அந்தப்படம் 9 மாசம் ஷூட்டிங் நடந்தது. நான் தினமும் ஸ்கூலுக்கு போறமாதிரி போய் வந்தேன். தினமும் மேக்கப் போட்டுக்கிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பேன். சில நாள் எனக்கான காட்சி இருக்கும். படம்பிடிப்பார்கள். சில நாள் எனக்கு எந்த காட்சியும் இருக்காது. இருந்தாலும் நானும் அங்கே இருப்பேன். இன்னை க்கு பெரிய டைரக்டர்களா வளர்ந்திருக்கும் பி.வாசு, சந்தானபாரதி இவங்க இரண்டு பேரும் மோகனப்புன்னகையில் அசோசியேட் டைரக்டராக இருந்தவங்க. அந்தப் படத்தில எனக்கு சரியாக நடிக்க வராது. ஷீலா மேடம் எனக்கு நடிக்க கத்துக்கொடுப்பாங்க. அவங்க தான் என்னை நல்லா நடிக்க வைச்சாங்க. ஒருவழியாக அந்தப்படம் நடித்து முடித்தேன். படம் வெளிவந்தப்பிறகு எனக்கு நல்லப்பெயர் கிடைச்சது. அதுக்கு அப்பறம் தமிழில் சில படங்கள் நடிச்சேன். குழந்தையைத் தேடி, காளிக்கோயில் கபாலி பிரியமுடன் பிரபு போன்ற படங்களில் நடிச்சேன். 35 படங்களுக்கு மேல ஹீரோயினா நடிச்சேன். என்னவோ என்னால் தமிழில் தொடர்ந்து ஹீரோயினா நிலைத்திருக்க முடியல. பட வாய்ப்புகள் சரியாக அமையாமல் இருந்தது. பிறகு மீண்டும் மலையாள திரையுலகுக்குப் போனேன். அங்கே சில படங்களில் நடிச்சிக்கிட்டு இருந்தேன். நடிக்க வந்தது சின்ன வயசு என்றாலும், அப்பறம் வயசு ஏறியது, சினிமா பற்றிய அறிவும் அதன் நெளிவு சுளிவுகளும் தெரிய வந்தது. அப்படி இருந்தப்போது சினிமாவில் நானே எதிர்பாராத ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. அந்த திருப்பு முனையை ஏற்படுத்தியவர் என் அப்பானின் நண்பர். அவர் என்னை நடிப்பில் திசை திருப்பியது யதார்த்தமாக நடந்தது தான். ஆனால் அதுவே என் டிரண்டாக தொடரும் என்று நான் கனவுகூட காணவில்லை. அது நடந்தே விட்டது. அந்த திருப்பு முனை தந்த சம்பவம் என்ன? அடுத்த வாரம் சொல்றேன்.
தொடரும்.
ஆடாத ஆட்டமில்லை காலுக்கு ஓய்வுமில்லை!

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் ஹீரோயினாகவும், செகண்ட் ஹீரோயினாகவும் பல படங்கள் நடிச்சுக்கிட்டுதான் இருந்தேன். அந்த காலகட்டத்தில் நிறையபுதுமுக நடிகைகள் வேறு வந்துகிட்டு இருந்தாங்க. புதியவர்களிடம் போட்டி போடும்நிலை எனக்கும் வந்தது.
என் அப்பாவின் நண்பர் ஒருவர் மலையாளத்தில் கேமராமேனாக இருந்தார்.அவர் பெயர் வில்லியம்ஸ். அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவர் மலையாளத்தில் அவர் நல்ல படங்களில் பணியாற்றி இருக்கிறார். அது ஒரு நாள். அவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அப்போது அவர் காளியமர்த்தனம் என்கிற படத்தில் பணியாற்றி வந்தார். அந்தப் படத்தில் அவர் நட்புக்காக என்னை ஒருபாடல் காட்சியில் நடனம் ஆடி நடிக்க கேட்டார்.எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இருந்தாலும் அவர் அப்பாவின் நண்பர், என் வளர்ச்சியில் அக்கறையுள்ளவர். அவருக்குத் தெரியாதா எது சரி, எது தவறு என்று. அவர் யோசித்துதான் ஒருமுடிவெடுத்து, நம்மை அழைக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். சரி, முழுமனதுடன் வில்லியம்ஸ் அங்கிளின் அழைப்பை ஏற்றுக்கொண்டு நட்புக்காக ஒரு பாடல்காட்சியில் நடிப்பதென்று முடிவு செய்தேன். காளியமர்தனம் மலையாளபடத்தில் பாடல்காட்சிக்கு ஆடி நடித்தேன். அந்த படம் ரீலீஸ் ஆனது. யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அந்த படம் வெற்றியடைந்தது. அதை எடுத்து எனக்கு பாடல் காட்சியில் ஆடி நடிக்க பல வாய்ப்புகள் வந்தன. முதலில் அப்படி நடிப்பதற்கு கொஞ்சம் தயக்கம் காட்டினேன். ஆனால், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அனுராதா படத்தில் ஆடல் பாடல் காட்சியில் நடித்தால் அந்த படம் நிச்சயம் வெற்றியடையும் என்று ஒரு சென்டிமென்டாக கருதினார்கள். அவர்கள் நம்பிக்கையை ஏன் நாம் மறுக்கணும் என்று தோன்றியது. பிறகு, வந்த வாய்ப்புகளையும் எல்லாம் பயன்படுத்திக்கொண்டேன். ஒரு காலகட்டத்தில் நான் ஆட்டம் போடாத படமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பல படங்களில் நடித்தேன். என் ஆட்டத்தை ரசிப்பதற்கு என்று ரசிகர் லட்சம் லட்சமாய் இருந்தார்கள்.
அதே சமயம் அந்தக்காலகட்டத்தில் திரைப்பட டான்ஸ் மாஸ்டர்களுடன் சில்க்ஸ்மிதாவுக்கு கருத்துவேறுபாடு இருந்தது. அதனால், டான்ஸ் மாஸ்டர்கள் எல்லாம் சில்க்ஸ்மிதா நடிக்கவேண்டிய படங்களையெல்லாம் எனக்கு தந்தார்கள். அதனால் நான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை மள மளவென்று உயர்ந்தது. ரசிகர்களிடமும், இயக்குநர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் என் செல்வாக்கு உயர்ந்தது. படங்களில் டான்ஸ் மட்டுமே செய்து கொண்டிருந்ததால், பின்னர் இயக்குநர்கள் எனக்கு படத்தில் நடிப்பதற்கு அவ்வளவாக வாய்ப்புகளை கொடுக்கவில்லை. சரி, நடிப்பு என்று வந்துவிட்டால் எல்லாமும் நடிப்புதானே? டான்ஸ் என்றால் நடிப்ப இல்லையா, என்ன? என்று எனக்குள் யோசனை தோன்றியது. அதனால், அனுராதை நம்பி வருபவர்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை படத்தில் செய்து கொடுத்து எல்லாரிடமும் நல்ல பெயரை வாங்கினேன்.
இப்படி ரொம்ப பிஸியாக நடித்துக்கொண்டிருந்தப்போது வாழ்க்கை பற்றிய தேடல் இல்லாமல் இருந்தேன். ஆனால், எனக்கும் எல்லாருக்கும் வருவது போல அந்த சந்தர்ப்பம் வந்தது.
அந்த இளைஞர் துறுதுறுவென்று இருப்பார். சகஜமாக எல்லாரிடமும் பேசி, சிரிப்பார். அவரும் ஒரு டான்ஸ் மாஸ்டர்தான். அவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. நான் நடிகை என்றாலும் நானும் சாதாரண பெண்தானே! எனக்குள்ளும் ஆசாபாசங்கள் இருக்காதா என்ன? என்னவோ தெரியவில்லை எனக்குள் அவரைப்பார்த்தாலே ஒரு இனம் தெரியாத ஒரு அவஸ்தை ஏற்படும். கண்ணுக்குள் பட்டாம்பூச்சி படபடக்கும். அட ராமா, இதான் காதலா? என்று மனசுக்குள் உட்கார்ந்து ஆசை ஊஞ்சாலாடும். ஆமாம்! இந்த அனுராதாவுக்கும் காதல் வந்தது.... என் காதல் கதையை அடுத்த வாரம் சொல்றேனே!...
தொடரும்.


என்னை கலங்கடித்த அந்த துயரம்!
எல்லோரையும் போல எனக்கும் காதல் வந்தது. காதல் வந்தால் இந்த உலகமே மறந்து விடுமே! நாம் மட்டும் காதலில் விதிவிலக்கா என்ன? இதுவரை சினிமாவில் பார்த்த காதலும் , காதல் காட்சியில் நடித்த எனக்கு ,காதல் வந்தது ஒரு புதுவித அனுபவம் என்றுதான் சொல்வேன்.
நான் ஒரு நடிகை. அதுவும் ரசிகர்களிடம் நல்ல டான்சர் என்று பெயர் எடுத்தவன். நடனத்தின் மீது எனக்கு எப்போதும் காதல் உண்டு. அப்படி இருக்கும் போது என் உள்ளத்தை கவர்ந்த ஒரு டான்ஸ் மாஸ்டரிடம் காதல் வராமல் போகுமா என்ன? ஆமாம் நான் காதலித்தது ஒரு டான்ஸ் மாஸ்டரைத்தான்.
அந்த டான்ஸ் மாஸ்டர் பார்க்க துறுதுறுன்னு செவப்பா இருப்பார். கலகலன்னு சிரிப்பார். எதையோ சாதிக்கணும் கண்ணில் கனவு சுமந்து இருந்தவர். அவர் பெயர் சதீஸ்குமார். என்னை அவருக்குப் பிடித்திருந்தது. அவரை எனக்கு பிடித்திருந்தது. அவ்வப்போது சந்திப்போம்; சிரிப்போம்; கொஞ்சமாக பேசிக்கொள்வோம். இப்படி எங்களுக்குள்
ஆரம்பத்தில் நட்பில் ஆரம்பித்த எங்கள் பழக்கம் போக போக ஒருத்தருக்கொருத்தர் புரிதல் அதிகமாகி காதலாக மாறியது. இருவரும் ஒரே தொழிலில் இருப்பதால் எங்களுக்குள் எந்தப்பிரச்னையும் வரவில்லை. காதல் கனிந்து அது திருமணத்தை நோக்கி செல்வதை இருவருமே அறிந்தோம்.
இருவரும் பேசி தீர்மானித்துக்கொண்டு 1987ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டோம். திருமணம் ஆனதும் நான் நடிப்பதை குறைத்துக்கொண்டேன். எங்கள் காதல் வாழ்க்கை சந்தோஷமாக கழிந்துக் கொண்டிருந்தது. 1988 மகள்அபிநயா பிறந்தாள். அவள் பிறந்ததிலிருந்து சினிமை விட்டு ரொம்பவும் விலகி இருந்தேன்.
மாதங்களும், வருடங்களும் உருண்டன. மீண்டும் சினிமாவிற்கு வேறு அவதாரம் எடுத்தேன். நானும் கணவரும் சேர்ந்து படங்களுக்கு நடன இயக்குனர்களாக பணிபுரியலாம் என்று முடிவு செய்து, சினிமாவில் வாய்ப்பு தேடினோம். எங்கள் கனவு பலித்தது போலவே எங்களுக்கு சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. தமிழில் இயக்குனர் செந்தில் நாதன் அவர்கள் பிரபு கதாநாயகனாக நடித்த நாளைய செய்திபடத்தில் டான்ஸ் மாஸ்டர் ஆக பணி செய்ய நல்ல வாய்ப்பைக் கொடுத்தார். நானும் கணவரும் அந்த படத்திற்கு சிறப்பாக நடன காட்சிகள் அமைத்து கொடுத்தோம். அதன் பிறகு இன்னிசை மழை இப்படி சில படங்கள் பண்ணினோம். கன்னடம், தெலுங்க உள்ளிட்ட 50 படங்களுக்குமேல நானும் என் கணவரும் சேர்ந்து நடன இயக்குனர்களாக பணிபுரிந்திருக்கிறோம்.
இப்படி சந்தோஷமாக வாழ்க்கை நடந்துகிட்டு இருந்தது. இடையில் காளீஸ்வரன் மகன் பிறந்தான். வாழ்க்கை என்னவோ வேகமாக ஓடிப்போனது போலவே இருந்தது. 9 ஆண்டுகள் ஓடிப்போனது. எனக்கு உலகமே வீடு தான்! மகள், மகன், கணவன் தான் என் சந்தோஷம், நிம்மதி, துணை என சகலமும் அவர்களாகவே இருந்தார்கள்.
இப்படி ஆசை ஆசையாய் காதலித்த கணவருக்கு திடீரென்று அப்படி ஒரு கதி ஏற்படும் என்று நான் கனவிலும்கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால்... அது நடந்து விட்டது. என் கணவருக்கு அப்படி என்ன நடந்தது? அதை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதைக்கிறது. கொஞ்சம் பொறுங்க, அடுத்த வாரம் சொல்றேன்.
தொடரும்
கணவனும் எனக்கு ஒரு குழந்தை!

திருமணம் ஆகி பத்தாண்டுகள் முடிந்தது. எங்களின் இனிய இல்லற வாழ்விற்கு பரிசாக பெண் ஒன்றும் ஆண் ஒன்றும் என இருசெல்லப்பிள்ளைகள். இருவரும் சினிமாவில் தெலுங்கு, கன்னடம், தமிழ் என படங்களுக்கு நடன இயக்குனர்களாக இருந்து வந்தோம். இப்படி சந்தோஷமாக கழிந்தது நாட்கள்.
அது ஒரு நாள்... வாழ்வில் என்னை கலங்கடித்த நாள்! என்னால் இன்றும் அதை நினைத்தால் என் கண்களில் கண்ணீர் சிந்தும். சரி, விஷயத்துக்கு வர்றேன். எப்போதும் போலவே என் கணவர் அன்றும் அவருடைய நண்பர்களைப் பார்ப்பதற்குச் சென்றிருந்தார். நண்பர்களைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். ஆனால் வீடு வந்து சேரவில்லை. அதற்கு பதில் என்னை அதிர்ச்சியடைய வைத்த செய்தி மட்டுமே வந்தது. "மேடம்,உங்கள் கணவர் டூவீலரில் வரும் போது ஆசிடென்ட் ஆகிவிட்டது. இப்போது ஆஸ்பத்திரியில் ஐசியூ வில் அட்மிட் பண்ணியிருக்கோம்' செய்திகேட்டு பதறியடித்துக்கொண்டு, ஓடினேன்...
ஆஸ்பத்திரியில் ஐசியூவில் என் கண்ணுக்கு க் கண்ணாக நேசித்த, ஆசை ஆசையாய் காதலித்த என் அன்பு கணவர் பேச்சு, மூச்சின்றி படுத்துக்கிடந்தார். அவரைப் பார்த்ததும் என் இதயம் துடிப்பதை சட்டென்று நிறுத்திவிட்டது.
டாக்டர்கள் அவசரசிகிச்சை செய்தார்கள். நேரங்கள் கடந்தப்பிறகு, அவர் உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர்கள் சொன்னப்பிறகு தான் எனக்கு உயிரே வந்தது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் நாட்கள் நகர்ந்தன. ஒருவழியாய் குணமடைந்தார். வீட்டிற்கு அழைத்து வந்தேன் எப்படி தெரியுமா ஒரு குழந்தையைப்போல. கணவராக வீட்டை விட்டு போனவர் ஆசிடென்ட்க்கு பிறகு குழந்தை போல ஆனார். ஆமாம் மூளையில் பலமாக அடிப்பட்டு சுயநினைவுகளை முற்றிலுமாக இழந்திருந்தார். கிட்டதட்ட அதன்பின் அவர் கோமாவில்தான் இருந்தார். அவரை என் இருபிள்ளைகளைப் எப்படி பார்த்துக்கொண்டேனோ அதுபோலவே என் கணவரையும் மூன்றவது குழந்தையாக பார்த்துக்கொண்டேன். சாப்பாடு ஊட்டிவிடுவது முதல், குளிக்கவைப்பது என எல்லா உதவிகளையுமே நானே செய்து வந்தேன். இப்படி தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. வீடுபுறம், தொழில் ஒரு புறம் என கவனம் செலுத்துவதில் மிகவும் சிரமப்பட்டேன். பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்து விட்டார்கள். அவர்கள் சுயமாக தங்கள் தேவைகளை செய்துகொள்ள தொடங்கினார்கள். வீட்டில் கணவன் ஒரு மனநோயாளி போலவே இருக்கிறாரே என்று நான் வருத்தப்படாத நாளே கிடையாது. அவரை எப்படியும் குணப்படுத்திவிடலாம் என்று கனவுதான் காணமுடிந்ததே தவிர, நிஜத்தில் அது முடியாத செயல் என்று உறுதியாகவே தெரிய வந்தது. விதியை யாரால் வெல்ல முடியும் நமக்கு பிரார்த்தம் அவ்வளவுதான் என்று ஆறுதல்பட்டுக்கொண்டேன்.
இப்படி கோமாவில் ஒன்பது ஆண்டுகள் இருந்தவர் ஒரு நாள் என்னை நிரந்தரமாக விட்டு பிரிந்த வானகம் போனார். சொல்லொண்ணொ துயரம் சுமந்தேன். அந்த துயரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவந்தப்போது, அடுத்த மூணாவது மாசத்தில் என்னை பெற்ற அம்மாவும் இறந்து என்னை மீண்டும் மீளாதுயரத்தின் உயரத்தில் ஏற்றிவிட்டார்கள்.
வாழ்க்கையே எனக்கு சூன்யமாகிவிட்டது. இனி நான் மட்டும் இருந்து என்ன சாதிக்கப்போகிறேன்? என்று நினைவுகள் வட்டமிட்ட என் துõக்கங்களை கெடுத்துக்கொண்டிருந்தது. இருந்தாலும் இருபிள்ளைகளை வளர்த்து, படிக்கவைத்து, ஆளாக்கவேண்டுமே என்ற வைராக்கியம் என்னை வாழவைத்தது.
இழப்புகளையும், துயரங்களையும் துõரவைத்துவிட்டு என் பிள்ளைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தினேன். ஆண்டுகள் கழிய,கழிய என் பிள்ளைகளும் இன்று வளர்ந்து விட்டார்கள்!
இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்னவென்றால் நான் 13 வயசில் நடிக்க வந்தேன் என்று சொன்னேன் அல்லவா? அதே போலவே என் குடும்பத்தில் என் வாரிசும் 13 வயதில்...
சுவாரஸ்யமான அந்த விஷயத்தை அடுத்த வாரம் சொல்றேன்.
தொடரும்.


தாயைப் போலவே பெண்ணும்...

நான் 13 வயசில் இருக்கும் போது எப்படி எதிர்பாராமல் நடிக்க வந்தேனோ அதே போலவே என் மகள் அபிநயாவுக்கும் 13 வயசில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனக்கும் அவளுக்கும் ஆச்சரியமாக இருந்தது.
என்னை அறிமுகப்படுத்தியதும் ஒரு மலையாளபட இயக்குனர். அபிநயாவை அறிமுகப்படுத்தியதும் ஒரு மலையாளபட இயக்குனர்தான்.
என்னை விட என் மகளுக்கு நல்ல ரிச்சான என்டரி கிடைச்சுது. பெரிய படம். பெரிய இயக்குனர். நல்ல கதை என அந்தப் படம் இருந்தது. "பிரண்ட்ஸ்' என்ற அந்தப் படத்தில் விஜய், சூர்யா, தேவயானி என பிரபலமானவங்க எல்லாம் நடித்த அந்தப் படத்தில் அபிநயாஸ்ரீயும் அறிமுகம் ஆனாள்.
இந்தப்படத்தில் என் மகள் அறிமுகமானது ஒரு ஆச்சரியமான ஒரு விஷயமாகும். என்மகள் அவளுடன் படிக்கும் பிரண்ட்ஸ் வீட்டிற்கு சென்று வரும் போது ஒரு நாள் எதேட்சையாக மலையாளப்பட இயக்குனர் சித்திக் கண்ணில் பட்டிருக்கிறாள். அப்போது மொழு மொழுவென சுட்டித்தனமாக இருந்த அபிநயா பற்றி நண்பர் வீட்டில் விசாரித்திருக்கிறார். அவர்களும் அபிநயா, நடிகை அனுராதாவின் பெண் என்றுசொல்லியிருக்கிறார்கள். அபிநயா என்னோட மகள் என்று தெரிந்ததும், இயக்குனர் சித்திக் என்னிடம் பிரண்ட்ஸ் கதையைச் சொல்லி அதில் அபிநயாவின் கேரக்டரை விளக்கி ,இந்த படத்தில் உங்க பெண் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டார். எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஏன்னென்றால் அப்போது அபிநயாவுக்கு வயசு பதிமூணு. இந்தப் பருவத்தில் இவளால் நடிக்க முடியமா? என்று யோசித்தேன். நானும் 13 வயதில் நடிக்க வந்ததினால் அதன் கஷ்டங்கள் என்னவென்று நன்றாகவே எனக்குதெரியும். விளையாட்டுத்தனமாய் ஓடி, ஆடித் திரிந்து கொண்டிருக்கும் இவளின் தலையில் இப்படி ஒரு பாரத்தை வைத்தாள் தாங்குவாளா? மேலும் இவள் என் மகளாச்சே! ரசிகர்களிடம் அனுராதாவின் பொண்ணு என்பதால் கூடுதலாக நடிப்பை எதிர்பார்ப்பார்களே! அதை எல்லாம் என் மகளால் தரமுடியுமா? கொஞ்சம் குழப்பாக இருந்தேன். சரி. நாம் எதுக்கு குழம்பிக்கொண்டு இருக்க வேண்டும்? நடிக்கப்போவது அவள் தானே! இதை அவளிடமே கேட்டு விட்டால் என்ன? என்று தீர்மானித்து அபிநயாவிடம் " நீ நடிக்க விரும்புகிறாயா? உன்னால் நடிக்க முடியுமா? திரையுலகில் எனக்கு இருக்கும் பெயரை காப்பாற்றுவாயா?' என்று கேட்டேன்.
அதற்கு,அபிநயா " அம்மா, உன்னால் 13 வயசில் நடிக்க முடிந்தப்போது, என்னால் மட்டும் நடிக்க முடியாதா என்ன?' என்று கேட்டு விட்டு தான் நடிக்க விரும்புவதாக தெரிவித்தாள். ஏதோ விளையாட்டுத்தனமாக பேசுகிறாளோ என்று தான் நான் நினைத்தேன். ஆனால், அவள் கேமராவுக்கு முன் நடித்தப்போது, நான் அசந்துவிட்டேன். இவள் நடித்துவிடுவாள் என்ற நம்பிக்கை எனக்குள் எழுந்தது.
ஒருவழியாய் அவள் பிரண்ட்ஸ் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நன்றாகவே நடித்திருந்தாள். படம் நல்லவிதமாக முடிந்து. வெளி வந்து நன்றாக முடிந்தது. அந்தப்படம் அவளுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. பின்னர் தமிழிலும், தெலுங்கு படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் வந்தன.
ஆண்டுகள் சில கழிந்தன. என் பையனும், பொண்ணும் வளர்ந்து விட்டார்கள். அவர்களுக்கு நல்லதும் கெட்டதும் தெரிய ஆரம்பித்து விட்டது. இனிமேல் என் நாம் சினிமாவில் ரீ என்டரீ ஆக கூடாது என்று சிந்தனை எழுந்தது. அப்போது என் காலகட்டத்தில் நடித்து பின்னர் சினிமாவிலிருந்து விலகியிருந்த சில நடிகைகள் மீண்டும் நடிக்க வந்த நேரம். ஆதலால் எனக்கும் அந்த எண்ணம் வந்தது. சரி, வாய்ப்பு வந்தால் பார்ப்போம் என்றிருந்தேன்.
நான் நினைத்தது போலவே மீண்டும் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.
வின்னர் படம் மூலம் நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடித்தேன். நான் நடித்த கதாபாத்திரம் நன்றாகவே வந்திருந்தது.கடைசியாக நான் நடித்த சில படங்களில் என்னை டான்சராகவே பார்த்து பழகிய ரசிகர்களுக்கு என்னுடைய அந்த வித்தியாசமான கதாபாத்திரம் அவர்களுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன்.அதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனக்கு நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்தது. பின்னர் மலையாளம், தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரத் தொடங்கின.
இப்போது எல்லாம் சினிமாவில் நடித்த நடிகைகள் எல்லாம் டி.வி.சீரியல்களில் நடித்து வருவது பேஷனாகிவிட்டது. இப்படி சினிமாவில் இருந்து டி.வி.சீரியல்களுக்கு வந்த நடிகைகள் பலர் இருக்கின்றனர். எனக்கும் டி.வி.சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. நானும் டி.வி. சீரியல்களிலும் நடிக்க வந்து விட்டேன். இப்போது உங்கள் வீட்டு டி.வி.யில் தங்கம் என்கிற டி.வி. தொடர் மூலம் உங்களை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கேன்.
சினிமாவில் ஒருவகை நடிப்பு, சீரியல்களில் ஒரு வகை நடிப்பு என என்னால் பரிணாமிக்க முடிகிறது. இருந்தாலும் எத்தனை கதாபாத்திரங்கள் நடித்தாலென்ன? உங்களைப்போல நானும் ஒரு கதாபாத்திரமாய் வாழ்ந்து வருகிறேனே, அதற்கு ஏது ஈடு? அதென்ன கதாபாத்திரம் என்று கேட்கிறீர்களா? பொறுங்கள். அடுத்த வாரம் சொல்றேன்.
தொடரும்.

என் வாழ்க்கையில் நான்தான் கதாநாயகி!
என்னுடைய சம காலகட்டத்தில் நடித்து, பின்னர் சினிமாவிலிருந்து விலகியிருந்த சில நடிகைகள் மீண்டும் நடிக்க வந்த நேரம். ஆதலால் எனக்கும் அந்த எண்ணம் வந்தது. சரி, வாய்ப்பு வந்தால் பார்ப்போம் என்றிருந்தேன்.
நான் நினைத்தது போலவே மீண்டும் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.
வின்னர் படம் மூலம் நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடித்தேன். நான் நடித்த கதாபாத்திரம் நன்றாகவே வந்திருந்தது.கடைசியாக நான் நடித்த சில படங்களில் என்னை டான்சராகவே பார்த்து பழகிய ரசிகர்களுக்கு என்னுடைய அந்த வித்தியாசமான கதாபாத்திரம் அவர்களுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன்.அதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனக்கு நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்தது. பின்னர் மலையாளம், தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரத் தொடங்கின.
இப்போது எல்லாம் சினிமாவில் நடித்த நடிகைகள் எல்லாம் டி.வி.சீரியல்களில் நடித்து வருவது பேஷனாகிவிட்டது. இப்படி சினிமாவில் இருந்து டி.வி.சீரியல்களுக்கு வந்த நடிகைகள் பலர் இருக்கின்றனர். எனக்கும் டி.வி.சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. நானும் டி.வி. சீரியல்களிலும் நடிக்க வந்து விட்டேன். இப்போது உங்கள் வீட்டு டி.வி.யில் தங்கம் என்கிற டி.வி. தொடர் மூலம் உங்களை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கேன்.
சினிமாவில் ஒருவகை நடிப்பு, சீரியல்களில் ஒரு வகை நடிப்பு என என்னால் பரிணாமிக்க முடிகிறது. இருந்தாலும் எத்தனை கதாபாத்திரங்கள் நடித்தாலென்ன? உங்களைப்போல நானும் ஒரு கதாபாத்திரமாய் வாழ்ந்து வருகிறேனே, அதற்கு ஏது ஈடு? அதென்ன கதாபாத்திரம் என்று கேட்கிறீர்களா?
கதாநாயகி. குடும்பத்தில் கதாநாயகி ரோல்தான்! கணவருக்கு நல்ல மனைவியாக, குழந்தைகளுக்கு பொறுப்புள்ள அம்மாவாக என் வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறேனே, அதற்கு எதுவுமே ஈடாகாது. பொதுவாக நடிகைகளின் குடும்ப வாழ்க்கை நிலைத்திருக்காது என்ற எண்ணம் பரவலாக பலரிடம் இருப்பதுண்டு. ஆனால், நான் நடிகை என்றாலும் என் குடும்பவாழ்க்கை நிலையாக, சிறப்பாகவே அமைந்திருக்கிறது என்று சந்தோஷப்பட்டுக்கொள்வேன். உங்களைப் போலவே நானும் நல்ல இல்லத்தரசியாக திகழ்கிறேன்! பணம், புகழ்,கவுரவம் எல்லாம் வெளியேதான். வீட்டுக்குள் வந்து விட்டால் அனுராதா கணவனுக்கு அடங்கிய மனைவியாக, பிள்ளைகளுக்குப் பிடித்த அம்மாவாகவே இருந்திருக்கிறேன்.
என் கணவரின் பேச்சை ஒருபோதும் நான் தட்டியதில்லை. என்பிள்ளைகளை விட்டு ஒருபோதும் விலகியதில்லை. எந்நேரம் ஆனாலும் வீட்டில் நான் சமைத்ததை தான் கணவர், பிள்ளைகளோடு சேர்ந்து சாப்பிடுவேன். என்னால் நடிகையாகவும், அதே சமயம் ஒரு குடும்பத் தலைவியாகவும் இருக்க முடிந்ததற்கு காரணம் பொறுமை, விட்டுக்கொடுக்கும் தன்மை, அனுசரித்துபோகுதல், கணவருக்கு பணிந்து நடத்தல், தான் என்கிற கர்வமோ, ஈகோவோ, நீயா, நானா பெரியவர் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருந்தது எனக்கு. அதனால் தான் சொல்கிறேன் பெண்களுடைய இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்க விட்டுகொடுத்துப்போகும் தன்மை கெட்டியாகப்பிடித்துக்கொள்ளுங்கள். பெண் சுதந்திரம், பெண்ணாதிக்கம் எல்லாவற்றையும் வீட்டுக்கு வெளியே விட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கை சுகப்படும். அது மட்டுமல்ல பெண்களால் குடும்பம் கோயிலாகும்! பல்கலைகழகமாகும் என்று நான் உறுதியளிக்கிறேன்.
நிறைந்தது!
பேட்டி: எஸ். தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக