புதன், 28 ஏப்ரல், 2010

8. நானாக நானில்லை நான்! தேவராஜன்

8. நானாக நானில்லை நான்! தேவராஜன்
கடவுளிடமிருந்து தான் நாம் எல்லோரும் வந்திருக்கிறோம். ஆனால் மீண்டும் எல்லோருமே கடவுளிடம் செல்லுவதில்லை. கடவுள் மனிதர்கள் தம்மை விட்டு விலகக்கூடாது; பிரியக்கூடாது என்று தான் என்றுமே பிரியப்படுகிறான். ஆனால் நாம் அப்படிநினைக்கவில்லையே! பிறந்த முதலாய் கடவுளுக்கும் நமக்கான இடைவெளியை ஏற்படுத்திவிடுகிறோம். அடுத்ததாக கடவுள் அமைத்து தந்த பாதையிலிருந்து விலகி, மாற்றுபாதையில் மனம் மறந்து செல்கிறோம். இதை தடுக்கக்கூட கடவுள் வராதபடி பல தடுப்பு சுவர்களை எழுப்பிவிட்டோம். இப்படி நாம் கடவுளுக்கும் நமக்குமான பல தடுப்பு சுவர்களை மனதில் கட்டிவைத்திருக்கிறோம். அவற்றில் ஒன்றை எப்படி அகற்றுவது என்பதை இந்தவார ஆன்மிக சிந்தனையாக பார்ப்போம்.
மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே மறித்து நிற்கும் ஒரு சுவர்தான் நான்! நான் எனும் மமதை, அகம்பாவம் மனிதனை மனிதனாக இருக்கவிடாமல், மிருகமாக வைத்துள்ளது. வேதங்கள், உபநிஷத்துகள், புராணங்கள் எல்லாமே ஒட்டுமொத்தமாய் தொகுப்பாக குரல் கொடுப்பது என்னவெனில் நான் என்பதை அழித்துவிடு. கொன்றுவிடு என்பதுதான்.
மனிதனின் மனதில் நான் கர்வம் ஓங்கி வேறுõன்றிவிட்டால் மனிதனிடம் அன்பு பரிணமிக்காது; பக்தி திளைக்காது; கருணை பிறக்காது; தியாகம் ஊற்றெடுக்காது. ஆனால், நான் என்னும் அகம்பாவத்திலிருந்து காமம், குரோதம், பேராசை, இழிகுணம், சூது, வன்மை, தீமை எல்லாம் கேட்காமலே மனதில் வந்து அமர்ந்து மனிதனை அரக்கனாக்கிவிடும்.
ஒரு துறவியிடம் ஆசி பெற ஓர் அரசன் வந்தான். அவன், "சுவாமி, நான் அரசன்; நான் மக்களின் துயர் துடைப்பவன்; நான் தலைவன்; நான் ஆட்டிவித்தால் இந்த நாட்டுமக்கள் என் சொல்படி ஆடுவார்கள்.' என்று மமதையோடு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தனக்கு ஆசி வழங்குங்கள் என்றான்.
துறவி அரசனைப்பார்த்து மென்மையாக சிரித்து விட்டு, " இப்போது சமயமில்லை. பிறகு வா.' என்றார். இதைக்கேட்டு ஆணவத்தில் கொதித்த அரசன், " இப்போது இல்லை என்றால் எப்போது உங்களை வந்து பார்த்து ஆசி கேட்பதாம்?' என்றான்.
அரசனின் கோபத்தைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாத துறவி, " நான் செத்தப்பிறகு, வா' என்றார்.
என்ன இந்த துறவி சுத்தமடையனாக இருப்பான் போல இருக்கே என நினைத்த அரசன்," நீங்கள் செத்தப்பிறகு நான் எதற்கு வரவேண்டும்?' என்றான்.
"அடே, மூடனே "நான் செத்தப்பிறகு' என்றால் நான் செத்தப்பிறகு அல்ல. வார்த்தைக்கு வார்த்தை நான்... நான்... நான்... என்று ஆணவத்தோடு சொல்கிறாயே, அந்த நான் என்கிற செருக்கு செத்தப்பிறகு வா என்ற அர்த்தத்தில் சொன்னே. போய் வா' என்றார் துறவி. இதைக்கேட்டு அரசன் வெட்கி தலைகுனிந்தான்.
நான் என்கிற ஆணவமலம் அழிந்தால்தான் மட்டுமே நீ இறைவனுக்கு நீ இணக்கமாவாய்; இறைவனோடு இணையப்படுவாய்; அரவணைக்கப்படுவாய்!
நாடெல்லாம் பல வெற்றிக்கொண்ட மன்னன் அலெக்சாண்டர் வரும் வழியில் ஒரு ஞானி அமர்ந்திருந்தார். ஞானியைக்கடந்து சென்றான் அலெக்சாண்டர். எதைப்பற்றியும் லட்சியம் பண்ணாமல் அந்த ஞானி வானத்தையே நோக்கிக்கொண்டிருந்தார். அலெக்சாண்டருக்கு கோபம் மூக்கின் மேல் வந்து அமர்ந்தது. தான் ஓர் அரசன். அதுவும் மாமன்னன். கொஞ்சம்கூட தம்மை ஒருபொருட்டாக கருதாமல், மிக அலட்சியமாக இருந்து, மரியாதை தராமல் இருக்கிறாரே, என்று மனதுள் கருவிக்கொண்டான். இருந்தாலும், வெளிப்படையாக அதைக்காட்டிக்கொள்ளாமல் அவர் ஒரு ஞானியாச்சே! ஆதலால் வந்த கோபத்தை தணித்துக்கொண்டு, அவரிடம் சென்று, " பெரியவரே, அலெக்சாண்டர் வந்திருக்கேன். உங்கள் முன் நிற்பது உலகத்தையே வெல்லும் வலிமைக்கொண்ட மாமன்னன்! உங்களுக்கு நான் எதாவது செய்ய வேண்டுமா? தயங்காமல் கேளுங்கள். எதுவாக இருந்தாலும் செய்கிறேன்.' என்றான் பெருமிதத்தோடு.
அலெக்சாண்டரை கொஞ்சம் தீர்க்கமாய் பார்த்து விட்டு, மவுனம்காத்தார் அந்த ஞானி. அலெக்சாண்டரோ இவர் நம்மிடம் ஏதோ பெரிதாக கேட்கவேண்டும் என்று யோசிக்கிறார் போலும் என்று மனதில் எண்ணிக்கொண்டான்.
கொஞ்சம் நேரம்கழித்து, அலெக்சாண்டரை நோக்கி, " என்னை தொந்தரவு செய்யாமல், என் மேல் படும் அந்த சூரிய ஒளியை மறைக்காமல் கொஞ்சம் ஒதுங்கி நின்றால் போதும்' என்றார்.
இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு திகைத்து நின்றான் அலெக்சாண்டர்.
ஞானிக்கு நான் என்கிற மமதையில்லை. அவரைப்பொருத்தவரை கடவுள் தான் மிகப் பெரியவன். அலெக்சாண்டர் அவர்முன் ஒரு பொடியன். "நாமார்க்கும் குடியல்லோம் நமனைக் கண்டு அஞ்சோம்!' என்பதின் இலக்கணமாக அந்த ஞானி யாரைக்கண்டும் அஞ்சாமல், எவர் தயவும் நாடாமல் இருக்கும் பக்குவத்தினால்தான் அலெக்சாண்டரிடம் அவர் எதுவும் கேட்கவில்லை.
"நீரோ, நிலமோ,காற்றோ, நெருப்போ, வானமோ இவையின்றி உன்னால் வாழமுடியாது. இது கடவுள் போட்ட பிச்சை! பிச்சைப் பெற்று வாழும் நீ, நான் என்ற ஆங்காரம் கொண்டு நான் அரசன் என்று கர்ஜனை என்கிற பெயரில் என் முன் கூச்சல்போடுகிறாய். எல்லாம் செய்வேன்! எதுவும் தருவேன்! உலகத்தையே வெல்வேன்! எதையும் நினைத்தால் செய்து முடிப்பேன் என்று வெற்றுரை பேசுகிறாயே, கண்ணில் பார்வையில்லை என்றால் அவன் குருடு. அவனுக்கு உன்னால் பார்வைத்தரமுடியுமா? செவிகள் கேட்காவிட்டால் அவன் செவிடு. அவனுக்கு உன்னால் கேட்கும் திறனை கொடுக்க முடியுமா? நாக்கு பிறழாவிட்டால் அவன் ஊமை. அவனை நீ பேச வைக்கமுடியுமா? கை, கால்கள் செயல்படாவிட்டால் அவன் முடவன் அவனுக்கு உன்னால் வேறு கை,கால்களை ஆணையிட்டு கொண்டு வரமுடியுமா? அடே, கிறுக்கா! ஐந்து புலன்களுக்கும் கட்டளையிடுபவன் கடவுள். இதையெல்லாம் கடவுள் ஒருவன் தான் கொடுக்கமுடியும். நான் அரசன்! நான் எதையும் செய்வேன்! என்று நான் நான் நான் என ஆணவத்தில் பெருமைப்பட்டுக்கொள்ளும் உன்னுள் இருக்கும் நான் என்கிற மமதை ஒரு மாயை. அது ஒரு போதை! அது இருப்பது போல இருக்கும். ஆனால் இல்லாதது. இல்லாததை இருப்பதாக எண்ணி உன் ஆத்மாவை காயப்படுத்திக்கொள்ளாதே!' என்று ஞானி சடசடவென வார்த்தைகளைக்கொட்டியதைக்கேட்டு அலெக்சாண்டர் மனம் தெளிந்தான். மமதையை விட்டொழிக்க விரும்பினான்.
அலெக்சாண்டர் தான் இறந்தப்பிறகு என்னை எரியூட்ட கொண்டும் செல்லும் வழியில் என்இரு கைகளை விரித்து வையுங்கள்! அதைப் பார்க்கும் மக்களுக்கு உலகையே வென்ற வீரன், மாமன்னன் அலெக்சாண்டர்கூட போகும் போது ஒன்றும் கொண்டுச் செல்ல வில்லை. வெறும் கையோடு தான் போகிறான்' என்று என்மூலம் பாடம் கற்றுக்கொள்ளட்டும் என்று சொல்லிவைத்திருந்தானாம். எப்படி அலெக்சாண்டரால் இப்படி கூறமுடிந்தது? காரணம் அவனிடமிருந்து நான் விலகியது ஒரு காரணம், அந்த காரணத்தை உருவாக்கிய ஒரு ஞானியைப் பார்த்ததன் விளைவு!
மனிதனிடம் கோபம், செருக்கு ,சுயநலம், குரோதம், காமம், பேராசை, சூது, பொய் இவை எல்லாம் கலந்த கலவையின் தொகுப்பு தான் "நான்' மமதைக்குணம். இந்த மமதையை ஒழித்தால் உன்னிலிருந்து செருக்கு, குரோதம், சுயநலம், ஆணவம் எல்லாம் கரைந்து விடும். இவை எல்லாம் உன்னிலிருந்து விலகிவிட்டால் "நான்' போய் ஞானம் இருக்கும். சாந்தம் இருக்கும். ஆனந்தம் இருக்கும். கருணையிருக்கும். இறுதியில் கடவுளும் இருப்பார்.
தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக