புதன், 7 ஏப்ரல், 2010

பேராசையால் வந்த மனித ஆயுள்!

பேராசையால் வந்த மனித ஆயுள்!

கடவுள் இந்த உலகத்திற்கான உயிரினங்களை ஒவ்வொன்றாக படைத்துக்கொண்டிருந்தார். முதலில் ஒரு கழுதையை படைத்து, "" கழுதையே, நீ கடுமையாக உழைக்க வேண்டும். பொதி சுமக்க வேண்டும். இலைகள் மற்றும் காய்கறிகளை உண்டு 50 ஆண்டுகள் வாழவேண்டும்'' என்றார் கடவுள்.
அதற்கு கழுதை மிக பணிவுடன், "" கடவுளே நீ சொல்வதை அப்படியே ஏற்று மகிழ்கிறேன். ஆனால், 50 ஆண்டு ஆயுசு வேண்டாம். அதை 25 ஆண்டுகளாக குறைத்து அருள வேண்டும்'' என்றுகேட்டுகொண்டது. கடவுளும் சரி என்றார்.
2வதாக ஒரு நாயை படைத்து அதனிடம், "" மனிதனுக்கு காவலனாக இருப்பாயாக! நீ அவன் கொடுக்கும் ஆகாரத்தை உண்டு 40 ஆண்டுகள் வாழ்வாயாக!'' என்று ஆசீர்வதித்தார், கடவுள்.
உடனே, நாய், ""கடவுளே, உங்கள் கட்டளையை அப்படியே ஏற்கிறேன். ஆனால், எனக்கு 40 ஆண்டு ஆயுள் வேண்டாம். அதை 20 ஆண்டாக குறைத்தருளுக"'' என்றதற்கு கடவுளும் சரி என்றார்.
3வதாக ஒரு குரங்கை படைத்த கடவுள், அதனிடம்"" நீ மனிதர்களை குதுõகலப்படுத்த ஓடி,ஆடி, குதிக்க வேண்டும். மரத்துமரம் தாவிக்கொண்டிருக்கணும். பழங்கள், காய்களை உண்டு 30 ஆண்டுகள் வாழ வேண்டும்'' என்றார் கடவுள்.
அதற்கு குரங்கு, "" கடவுளே, தாங்கள் சித்தம் என் பாக்கியம். நான் 30 ஆண்டுகள் இருந்து என்ன சாதிக்கப்போகிறேன். 15 ஆண்டுகள் போதுமே'' என்றது. கடவுளும் சரி என்றார்.
இறுதியாக கடவுள் மனிதனைப் படைத்தார். அவனிடம், "" மனிதா, நீதான் உலக உயிர்களுக்கெல்லாம் எஜமான். இவைகளை உன் வாழ்க்கைக்கு எளிதாக பயன்படுத்திக்கொள்ளலாம். நீ விருப்பப்பட்டதை சாப்பிடலாம். உனக்கு ஆயுள் 20 ஆண்டுகள்'' என்றார், கடவுள்.
அதற்கு பேராசைப்பிடித்த மனிதனோ, "" கடவுளே 20 ஆண்டுதானா? இது போதாது. கடவுளே தாங்கள் என் மீது கருணைக்கொண்டு கழுதை வேண்டாமென்ற 25 ஆண்டையும், நாய் வேண்டாமென்ற 20 ஆண்டையும், குரங்கு வேண்டாமென்ற 15 ஆண்டையும் சேர்த்து எனக்கு கொடுத்துவிடு'' என்றான். கடவுளும் சம்மதித்தார்.
காலங்கள் ஓடியது. 20 ஆண்டுகள் மனிதன் மனிதனாகவும் அடுத்து 25 ஆண்டுகள் கழுதை போலப் போல உழைக்கிறான். அடுத்த 20 ஆண்டுகள் தன் குடும்பத்தை நாய் போல காக்கிறான். கடைசி 15 ஆண்டுகள் முதுமை எய்தி குரங்கு போல தன் பேரப்பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியூட்டும் செயலை செய்து வாழ்கிறான். இது தான் மனித வாழ்க்கை என்பது!


எது உண்மை?

ஒரு கிராமத்தில் ஒரு ரிஷி வாழ்ந்து வந்தார். அவர் வாழ்க்கையில் எப்போதுமே உண்மையே பேசுவார். ஒருபோதும் பொய் பேசாதவர்.
ஒரு நாள் அரசமரத்தடியில் அமர்ந்திருந்தார் ரிஷி. அந்த வழியே தப்பித்தால் போதும் என்று ஒரு பசுமாடு தலைத்தெறிக்க ஓடிக்கொண்டிருந்தது.
சில நிமிடங்கள் கழித்து ஒருகசாப்புக்கடைகாரன் அந்த பசுவை துரத்திக்கொண்டு வந்தான். அரசமரத்தடியில் அமர்ந்திருந்த ரிஷியிடம் அவன், "" ஐயா, இந்த வழியே ஒரு பசுமாடு ஓடிவந்ததைப் பார்த்தீர்களா?'' என்று மூச்சிறைக்கக் கேட்டான்.
எப்போதும் உண்மையை பேசக்கூடிய ரிஷி "" ஆமாம். இந்தப்பக்கம் ஒரு பசு ஓடிவந்தது. அது இதோ இந்தப்பக்கம் தான் சென்று கொண்டிருக்கிறது'' என்றார்.
உடனே அந்த கசாப்புக்கடைகாரன் பசு சென்ற திசையில் ஓடி பசுவைப் பிடித்து விட்டான்.
பின்னர், அந்தப் பசுவை இறைச்சிக்காக அடித்து கொன்று விட்டான். அந்த பசு இறைச்சிக்காக கொல்லப்பட ரிஷி ஒரு காரணமாக இருந்து விட்டார்.
சில ஆண்டுகள் கழித்து அந்த ரிஷி இறந்து விட்டார். மக்கள் எல்லாம் எப்போதும் உண்மையே பேசக்கூடிய ரிஷியின் ஆத்மா சொர்கத்திற்கு சென்று இருக்கும் என்று பேசிக்கொண்டனர்.
அதே சமயம் ரிஷியின் ஆத்மாவை பாசக்கயிற்றால் கட்டி எமதுõதர் நரகத்திற்கு இழுத்துச் சென்றார். ரிஷியின் ஆத்மா ஒன்றும் பரியாமல் குழம்பியது. நாம் வாழ்நாள் முழுக்க உண்மையை தானே பேசி வந்தோம்? பிறகு எதற்கு நாம் நரகம் கொண்டுச் செல்லப்படுகிறோம்? என்று எண்ணிய ரிஷியின் ஆத்மா, "" நான் செய்த பாவம் தான் என்ன? என்னை எதற்கு நரகத்திற்கு கொண்டு செல்கிறாய்?'' என்று எமதுõதுவனிடம் கேட்டது.
அதைக்கேட்டு சிரித்தார் எமதுõதர். ""நீ உண்மை மட்டுமே பேசுவாய் என்பது எனக்குத்தெரியும். ஆனாலும் உண்மையில் சில வித்தியாசங்கள் உண்டு. அது உனக்குத் தெரியவில்லை. மிகச்சிறந்த உண்மை என்பது அந்த உண்மையால் எந்த ஒரு உயிருக்கும் தீங்கு நேரிடக்கூடாது. ஆனால், நீ சொன்ன ஒரு உண்மையால் ஒண்ணும் தெரியாத அறியாத ஒரு பசு உயிரிழந்து விட்டதே! அந்த பாவத்திற்கு தான் உன்னை நரகத்திற்கு கொண்டுச் செல்கிறேன்'' என்றார் எமதுõதர்.
நாம் சொல்லும் உண்மையால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படக்கூடாது . அப்படி ஏற்பட்டால் அந்த உண்மையும் ஒரு பாவம்தான்!

கோபப்படாதே பையா!
கோபுலு எதுக்கும் சட்டென்று கோபம் கொள்வான். அவனிடம் பழகவே பலர் பயப்படுவார்கள். இருந்தாலும், கோபுலு அவன் சுபாவத்தை கொஞ்சம்கூட மாற்றிக்கொள்ளவில்லை.
இப்படித்தான் ஒருநாள் வீட்டில் காலையில் எழுந்ததும், தன் தங்கை அம்முலு மீது எரிச்சல்கொண்டான். இதைக்கவனித்த கோபுலுவின் அப்பா, கோபுலுவை அருகே அழைத்து, "" கோபம் என்பது எத்தகையது என்பதை நீஅறியாதவனாக இருக்கிறாய். உன் கோபத்தை நீ அடக்கி, கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஒரு எளிய பயிற்சி இருக்கிறது. உனக்கு எப்போதெல்லாம் கோபம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் ஒரு ஆணியை எடுத்து இந்த பலகையில் சுத்தியல் கொண்டு அடித்துவா.'' என்றார்.
ஒரு நாளைக்குள் கோபுலு கோபப்பட்டதன் அடையாளமாக 37 ஆணிகளை பலகையில் அடித்துவிட்டான். இப்படிதினமும் கோபம் கொள்ளும் போதெல்லாம் பலகையில் ஆணியை அடித்து வந்தான். ஒரு வாரம் கழிந்தது. கோபுலுவுக்கும் கொஞ்சம் கோபம் தணியதொடங்கியது.
கடைசியாக கோபுலுவின் அப்பா, கோபுலுவிடம், "" நீ பலகையில் அடித்த ஆணிகளை தினமும் ஒன்றாக பிடிங்கி எடு'' என்றார். அப்படியே கோபுலு செய்து வந்தான். வார முடிவில் கோபுலு எல்லா ஆணிகளையும் பலகையில் இருந்து எடுத்து விட்டான்.
அப்போது கோபுலுவின் அப்பா ஆணி அடித்த பலகையைக் காட்டி, "" நீ அடித்த ஆணியை பிடிங்கி விட்டாய். இருந்தும் பலகையில் ஏற்பட்ட துளையை எப்படி நிரப்புவாய்? இது போல தான் ஒருத்தரை கத்தியால் கீறினால் கூட பெரிய பிரச்னை இல்லை. அதற்காக எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் கீறிய இடத்தில் ஏற்பட்ட தழும்பு மன்னிப்பு கேட்பதால் மாறிவிடுமா என்ன? நீ கோபப்பட்டு ஒருத்தரை கடிந்து கொள்ளும் போது அவர் மனம் வேதனைப்படும். காயப்படும். பின்னர், நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டாலும்கூட கோபத்தில் பேசிய வார்த்தைகளால் அவருக்கு ஏற்ப்பட்ட மனக்காயம் ஒருபோதும் ஆறாது. ஆதலால் கோபம் படுவதை நிறுத்திக்கொள்'' என்றார்.
கோபுலுவும் எதற்கெடுத்தாலும் பிறர்மீது கோபப்படுவதை குறைத்துக்கொண்டே வந்தான். இன்னும் சில மாதங்களில் கோபுலு நிச்சயம் ஆத்திரப்படமாட்டான். நீங்கள் கோபகாரர்களாக இருந்தால், கோபத்தை இன்று முதல் நிறுத்திக்கொள்ளுங்கள். அல்லது கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக