புதன், 28 ஏப்ரல், 2010

20 . உயிர்திணையும் அஃறிணையும்! தேவராஜன்

18. நாத்திகர் என்று யாரும் இல்லை! தேவராஜன்

கடவுளின் அருளைப் பெற, முக்தியடைய, ஞானம் பெற பல ஆன்மிக மார்க்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஞானிமார்களும் தாங்கள் ஏதோ ஒரு மார்க்கத்தை பின்பற்றி முக்திப் பெற்றிருக்கின்றனர். கடவுளின் திருத்தாளை அடைய செல்லும் மார்க்கங்கள், அதற்காக எடுக்கப்படும் முயற்சிகள், அவர்கள் கண்ட அனுபவங்களின் உபதேசங்கள் வெவ்வோறாக இருந்திருக்கின்றன. ஆனால், அது எந்த மார்க்கமாக இருந்தாலும், அது தவறாது நம் ஆன்மாவை கடவுளிடத்தில் சேர்த்துவிடும் என்பது மட்டும் உறுதி.
பூமி தோன்றி எத்தனையோ ஆண்டுகள் உருண்டோடி விட்டன. கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம் என கடந்து இப்போது கலியுகத்தில் நாம் வாழ்கிறோம். ஒவ்வொரு யுகத்திலும் கடவுளையடைய பல வழிமுறைகளில் வழிபாடு செய்துள்ளனர். கிருத யுகத்தில் தவம், தியானம் செய்து கடவுளின் அருளைப் பெற்று இருக்கின்றனர். திரேதாயுகத்தில் வேள்விகள் இயற்றியும், துவாபர யுகத்தில் அர்ச்சனை, மந்திரம் செபித்து கடவுளின் அருளைப் பெற்றிருக்கின்றனர்.
இதெல்லாம் எப்படி அவர்களால் முடிந்தது? அது அவர்கள் வாழ்ந்த யுகத்தின் மகிமை. கலியுகத்திற்கு முந்திய யுகத்தில் வாழ்ந்தவர்களுக்கெல்லாம் ஆயுள் பலம் அதிகம். ஆயிரம், லட்சம் ஆண்டுகள் வாழும் பாக்கியத்தைப் பெற்றிருந்ததால் அவர்களால் ஆண்டாண்டாய் தவமியற்ற முடிந்தது. தன் மேல் புற்று வளரும் அளவுக்கு தவமிருந்திருக்கும் ரிஷிகளைப் பற்றியெல்லாம் புராணங்களில் படித்திருக்கிறோம். கிருதயுகத்தில் வேதம் சொன்னப்படி ஆசார, நியமங்கள் படி வாழ்வதற்கான புறச்சூழலும் நன்றாக அமைந்திருந்தது. திரேதா யுகத்தில் வேள்விக்குண்டான பொருள்கள் எல்லாம் பரிசுத்தமாக கிடைத்தன. ஆதலால், அவர்களால் கடவுளையடைய தவம், தியானம், வேள்வி, மந்திரசெபித்தல் செய்ய முடிந்தது.
இவை எல்லாம் இந்த கலியுகத்தில் இப்படி எல்லாம் செய்பவர்களைக்கூட வேடிக்கைப் பார்க்கக்கூட முடியாது. ஏனென்றால் நாம் வாழும் யுகம் அப்படி இருக்கிறது.
மந்தா: ஸூமந்த மதய: மந்த பாக்யா ஹ் யுபத் ருதா:
பாகண்ட நிரதா: சந்தோ விரக்தா ஸபரிக்ரஹா பாத்ம புராணம் 1:32
இந்த சுலோகத்தின் வழியாக இப்போது நடக்கும் கலியுகத்தைப் பற்றியும், கலியுகத்தில் வாழும் மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதை அறியலாம். கலியுக மாந்தர்கள் மந்த புத்தி, சோம்பேறிதனம் கொண்டிருப்பார்கள். பாக்யமற்று இருப்பார்கள். உண்மையான வைராக்கியம், எதிலும் உறுதியில்லாமல் இருப்பார்கள் என்கிறது பாத்மபுராணம்.
ஆக, கலியுகத்தில் ஒருவர் ஆன்மிக சாதனைகள் செய்ய ஆசாரம், அனுஷ்டானம், கர்ம யோகம், வைராக்கியம், யோக மார்க்கம், சரணாகதி, நம்பிக்கை இவைகளை எப்படி பின்பற்ற முடியும்?
மேற்கண்ட கடுமையான பல கட்டுபாடுகள், நியமங்கள் இருப்பதால் பலர் நமக்கெல்லாம் ஆன்மிகம் சரிவராது என்று ஒதுங்கிக்கொள்கின்றனர். இன்னும் சிலர் கடவுளை நம்பாத நாத்திகர்களாகிவிட்டனர்.
கடவுளை அடைய மார்க்கம் கடுமையாக இருப்பதால் பக்தி செய்வதை விட்டு விடவா முடியும்? கலியுகத்தில் பெரும்பாலோர் கடவுளிடம் வேண்டிக்கொண்ட மறுநிமிடமே தம் வேண்டுதல் உடனே நடந்து விடவேண்டும் என்று அபிலாசைப் படுகின்றனர். மேலும், பக்தி செய்வதில் எந்த வித கடினமான சாதனைகளும் செய்யாமல் கடவுளை அடைய முடியுமா? என்பது கூடுதல் ஆசை! ஏனென்றால் பூசை, புனஷ்காரம் எல்லாம் செய்ய நேரமில்லை. தியானம் , யோகம் செய்ய உடல் வலிமையோ, மன வலிமையோ இல்லை. திடமான வைராக்கியமும் இல்லை. இப்படி இருப்பதுதான் கலியுக மனிதர்களின் குணம் என்பதும் வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி கலியுக மனிதன் இருப்பான் என்பதால், அப்போதே வேதத்தில் அதற்கும் உபாயத்தைச் சொல்லி இருக்கிறது.
ஸாங் கேத்யம் பாரி ஹாஸ்யம் வா
ஸ்தோபம் ஹே லனமேவ வா
வைகுண்ட நாமக்ர ஹணமஷே ஷா க ஹரம் விது ஸ்ரீமத் பாகவத்தில் இடம்பெற்றிருக்கும் இந்தச் சுலோகம் " நீ இறைவனின் நாமத்தை எப்படி வேண்டுமானாலும் சாதாரணமாகவோ, பரிகாசமாகவோ, ஏளனமாகவோ சொன்னாலும் அது தவறாமல் உன்னை இறைவனின் சரணத்திற்கு அழைத்துச் செல்லும். ' என்று வலியுறுத்துகிறது.
ஜாதி, மத, தேச வேறுபாடின்றி எவரும் கால நியமங்கள் இல்லாமல், எப்போதும், எவ்விடத்திலும் இறைவனின் நாமத்தை சொல்லலாம். எவ்வித ஆசார, அனுஷ்டானமும் தேவையில்லை. எந்தவித பொருளோ, விதிமுறையோ, கட்டுப்பாடோ அவசியமில்லை. நம்பிக்கை என்னும் அடிப்படை தேவையும்கூட வேண்டாம்.
கலியுகத்தில் தெரிந்தோ ,தெரியாமலோ; நம்பிக்கையுடனோ, நம்பிக்கை இல்லாமலோ எப்படியோ வாழ்வில் ஒரே ஒரு முறை "ராமா! கிருஷ்ணா! சிவா! சங்கரா! கந்தா! முருகா! விநாயகா!...' என்று இறைவனுடைய நாமத்தை உச்சரித்தாலே போதும். பிறந்த புண்ணியத்தை அடைந்து விடலாம். அப்படிப் பார்த்தால் கலியுகத்தில் எல்லாருமே ஆத்திகர்கள் தான்! நாத்திகர் என்று யாருமே இல்லை!
கலியில் வர்ணம் வண்ணமாச்சு! ஆஸ்ரமம் சோலையாச்சு! இந்த சூழலில் கடவுள் தன்னை நம்புவனுள்ளும் சரி; நம்பாதவனுள்ளும் சரி "மனசாட்சி' என்ற பெயரில் அமர்ந்து கொண்டு வழிநடத்துகிறான்.
நாத்திகம் என்று நீ கடவுளை ஏளனம் செய்யும் போதும், பரிகாசம் செய்யும் போதும், நிந்தனை செய்யும் போதும் தான் அறியாமலேயே கடவுளை நினைப்பதால், அவன் நாமாத்தை உச்சரிப்பதால் எந்த நாத்திகனும் அப்போதே ஆத்திகனாகிவிடுகிறான்.
கலியுகத்தில் ஒரே ஒரு முறை இறைவனின் நாமமான (ராமா, கிருஷ்ணா, சங்கரா, கந்தா, விநாயகா...) என ஏதோ ஒன்றை சொன்னால் போதும். கிருதயுகத்தில் தியானம் செய்து, திரேதாயுகத்தில் வேள்வி செய், துவாபர யுகத்தில் மந்திரம் செபித்து எந்த உயர்நிலையை அடைந்தனரோ, அந்த உன்னத நிலையை இந்த யுகத்தில் ஒரு முறை நாமா சொல்வதினாலேயே அடைந்து விடலாம்! ஆதலால் இந்த யுகத்தில் யாரும் நாத்திகராக இருக்க வாய்பே இல்லை. அப்படியே இருந்தாலும், இந்த கட்டுரை ஒரு முறை படிப்பதன் மூலமே அவரை அறியாமல் இறைவனின் நாமத்தை நினைத்து விடுவதால் ஆத்திகராகி விடுவர்.
தேவராஜன்



20 . உயிர்திணையும் அஃறிணையும்! தேவராஜன்
உலகில் கடவுள் 85 லட்சம் உயிரினங்கள் படைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடவுளின் அருள்பார்வையில் எல்லா உயிரினங்களும் ஒன்று தான். எந்த வேறுபாடும் கிடையாது. மனிதனின் பார்வையில் தான் பேதங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. மனிதன் தன்னை போல சக மனிதர்களிடமே பேதம் கண்டு திரிகிறான். கடவுள் ராஜாங்கத்தில் அனைத்து உ<யிர்களும் சமம். கடவுளை நேசிப்பவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் எல்லாம் உலகில் உள்ள சக ஜீவன்களை சமமாகவே பாதிக்கின்றனர்."வாடியப் பயிரை கண்டுபோதெல்லாம் வாடினேன்' என வள்ளலார் வருந்தினாரே, அந்த பரிபக்குவம் கடவுள் உணர்வு நிரம்ப பெற்றவர்களால்தான் இப்படி எல்லாம் சக உயிர்களைக்கண்டு பரிதாப படமுடியும்!
வாழ்வியல் ரீதியாக உலக உயிர்களை இரு வகையாக பிரித்திருக்கிறோம். அவை உயர்திணை, அஃறிணை.ஆறறிவுப் பெற்ற உயிர்கள் எல்லாம் உயர்திணை. அவ்வாறு அல்லாதவை எல்லாம் அஃறிணையாக இலக்கணம் வகுத்துள்ளது. அஃறிணை என்ற சொல்லாவகம்கூட பாராட்டக்கூடியது.
உலக வழக்குப்படி உயர்வு என்றால் தாழ்வு, நன்மை என்றால் தீமை என்று தான் எதிர்பதம் கொள்கிறோம். ஆனால் பாருங்கள் இலக்கணம் வகுத்த தொல்காப்பியன் உயர்திணை என்று சொல்லிவிட்டு அதற்கு எதிர்பதமாக இருப்பது தாழ்வு திணை என்று சொல்லாமல் அஃது அல்லாத திணை அஃறிணை என்று கவுரவப்படுத்தியுள்ளான்.
இதில் இருந்தே அஃறிணைக்கு ஏதோ ஒரு சிறப்பு இருப்பது புலனாகிறது தானே! ஆம்! மனிதர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு அஃறிணையான உயிரினங்களுக்கு உண்டு என்பதன் சிந்தனைத் தேடல்தான் இந்த கட்டுரையில் சொல் கட்டுமானம்.
மனிதர்கள் ஆறறிவு பெற்றவர்கள். எது நல்லது? எது கெட்டது? என்று பகுத்து உணரும் திறன் பெற்றவர்கள். அது மட்டுமல்ல உயிர் படைப்பில் அரிதான மேன்மையையும் பெற்றவர்கள் ஆவர். பிறவி சுழலில் பாவத்தைவிட, புண்ணியம் சேர்த்த ஆன்மா மனிதப்பிறவி எடுக்கிறது. முன்னம் எடுத்த பிறவியில் அதிகமாக பாவம் செய்த ஆன்மா அஃறிணையாக பிறவி எடுக்கிறது. அஃறிணை என்றால் ஆடு, மாடு, கோழி, ஜந்துக்கள் ஆகும்.
மனிதப்பிறவியில் தான் நல்லது, கெட்டது தெரிகிறது. நல்லவை செய்ய அதற்குண்டான புண்ணியமும், கெட்டது செய்தால் அதற்குண்டான பாவமும் வந்து சேர்கிறது. ஆக, மனிதன் செய்யும் செயலால் விளையும் பாவ, புண்ணியங்கள் எல்லாவற்றிற்கும் மனிதனே பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கிறது. மனிதப்பிறவி வாய்த்திருப்பதன் பேறு என்னவெனில் முன்னம் செய்த வினையை அனுபவிக்கவும் எடுத்தப் பிறவியில் பாவ செயல்கள் செய்யாது புண்ணியம் தேடிக்கொண்டு பிறவி எடுப்பதை தவிர்த்துக்கொள்ள கொடுக்கப்பட்ட சந்தர்ப்பம் ஆகும். நாம் ஆறறிவைக்கொண்டு, எது பிறவியை தடுக்கவல்ல செயல்கள் என்பதை அறிந்து, கடவுளை பிரார்த்தனை செய்து, கடவுள் ஆணைப்படி நியம, சாஸ்திரங்களை கடைபிடித்து வாழ்ந்து வாழ்வின் இறுதியில் கடவுளின் ராஜாங்கத்தில் தம்மை இணைத்துக்கொள்ளவேண்டும். ஆனால், மனிதப் பிறவி எடுத்ததுமே உயிர் மேல் ஆசை வந்து தொற்றிக்கொள்கிறது. பாசப்பற்று வேறு ஒட்டிக்கொள்கிறது. பொருள் மீதும், பொன் மீதும் இப்படி உலகப் பொருள்கள் மீது ஆசை வந்து படுத்த, புண்ணியம் தேடும் பாதையை மறந்து, பாவத்தைத் தேடிக்கொள்கிறோம்.
ஆனால், அஃ“றிணையான ஆடு, மாடு, கோழி போன்ற விலங்குகளாக பிறவி எடுத்தவை எல்லாம் அவைகள் எடுத்த பிறவியில் புண்ணியம் சேர்த்து கொள்கின்றன. எப்படி எனில், அவைகளுக்கு எது நல்லது, கெட்டது என்பதை பகுத்துணரும் ஆற்றல் இல்லாததால் அவைகள் ஆற்றும் செயல்களால் வரும் விளைவுகளை அவை கொள்வதில்லை! அஃறிணைகளுக்கு மனிதர்களைப்போல பற்று, ஆசை, உயிர் ஆசை எல்லாம் கிடையாது. கடவுள் அருளைப் பெறவும் அவைகளுக்குத் தெரியாது என்பதால், அவைகள் கடவுளைப் புறக்கணித்த குற்றத்திற்கு ஆளாவதில்லை!
மனிதன் இறந்ததும் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நரகமோ, சொர்க்கமோ செல்கிறான். ஆனால், விலங்குகள் எல்லாமே இறந்ததும் சொர்க்கம் மட்டுமே செல்கின்றன. அவைகள் நரகம் புகுவதில்லை. அது மட்டுமல்ல எடுத்த பிறவியில் அவைகள் பாவம் எதையும் தெரிந்தே செய்வதில்லை. அவை வாழும் வரை பற்றற்று இருந்து, முன்னம் செய்த பாவங்களை போக்கிக்கொள்கின்றன. மேலும் பகுத்தறிவு இல்லாத எந்த ஜீவனின் மனதுள் கடவுள் இருந்து அருள்பாலிக்கிறான். இந்த பேறு யாருக்கு வாய்க்கும்?
மனிதப்பிறவி எடுத்து, அல்லற்று பாவம் தேடிக்கொண்டிருப்பதை விட, விலங்குகளாய் பிறப்பு எடுப்பது மேல் தான்! தன்னை மறப்பது தான் மனதின் வேலையாக இருக்க வேண்டும். அது சாதாரண மனிதர்களாகி நமக்கு வாய்க்காது. துறவிகளுக்கும், ஞானிமார்களுக்கும் வேண்டுமானால் அந்த பக்குவம் வரலாம். சிவனேன்னு இருப்பது என்பது விலங்குகளுக்கு வாய்த்த ஒரு பேறாகும். அதுவாய் பிறந்து, அதுவாய் இருந்து, அதுவாய் இறந்து, அது அதுவாய் போய்விடுகின்றன. அதுவாய் இருப்பது பிரம்மம் என்பதால் அவைகள் நேரடியாக பிரம்மத்தோடு சேர்ந்து விடுகின்றன. நாமோ நான் எனும் ஆணவ மலம் கொண்டு, நான் என்று வாழ்ந்து, நான் என்று இறந்து, நான் என்றே எஞ்சிவிடுவதால் மும்மலம் தீராமல் மீண்டும், மீண்டும் பிறப்பெடுக்கிறோம்.
என்னுடை பிரார்த்தனை எல்லாம்"கடவுளே! மீண்டும் பிறவாமை வேண்டும். அவ்வாறு பிறந்து விட்டால் அந்தப் பிறப்பு மனிதப்பிறப்பாக இல்லாமல் அஃறிணையாக இருக்கவேண்டும். ஒரு வேளை அடுத்தப்பிறவியில் ஆடாய், மாடாய், பன்றியாய், நாயாய் பிறந்தால் பாவம் அறியாது, புண்ணியம் மட்டுமே தேடிக்கொண்டு பிறவி சாகரத்தைக் கடக்க அருள்வாயாக!' என்பதாகவே இருக்கிறது.
தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக