புதன், 28 ஏப்ரல், 2010

5. சொர்க்கம் செல்ல பெயர் பதிவு செய்துவிட்டீர்களா? தேவராஜன்

5. சொர்க்கம் செல்ல பெயர் பதிவு செய்துவிட்டீர்களா? தேவராஜன்

நாம் இந்தப் பூமியில் பிறந்தவுடன் நமது இருப்புக்கான, வாழ்வுக்கான ஆதாரமாக நமது பெயர் பதிவு செய்யப்படுகிறது. அடுத்ததாக, கல்வி கற்பதற்கு பள்ளிக்கூடம் போகும் போது நம் பெயர் பதிவு செய்யப்படுகிறது. நிலம் வாங்கும் போதும், வீடு வாங்கும் போதும், தண்ணீருக்காகவும் நம் பெயர் பதிவு செய்யப்படுகிறது. வாகனங்களுக்கு உரிமம் வாங்கும் போதும், வாகனம் ஓட்டுவதற்கு லைசன்ஸ் வாங்கும் போதும் நம் பெயர் பதிவு செய்யப்படுகிறது. ரேஷன் கார்டு, கேஸ் இணைப்பு வாங்கும் போதும், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்யும் போது,வெளிநாடு செல்ல பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை வாங்க என இங்கே தற்காலிகமாக வாழ்வதற்கு ஆயிரத்தெட்டு முறை நம் பெயரை பதிவு செய்துள்ளோம். ஆனால், நம்மை படைத்த இறைவன் வசிக்கும் சொர்க்கத்தில் நாம் வசிக்க, இறைவனின் திருகமலத்தில் இருக்க நம் பெயரை பதிவு செய்து இருக்கிறோமா? என்பதை இந்த வார ஆன்மிக சிந்தனையாக சிந்திப்போம்.
எப்படி நாம் வெளிநாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட், விசா தேவைப்படுகிறதோ, அதுபோல நாம் சொர்க்கம் செல்வதற்கு ஆன்மிகம் என்கிற பாஸ்போட்டும்,பக்தி என்கிற விசாவும் தேவை. இவைகளை பெற பல வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளை நமது வேதமும்,மதமும், இதிகாசமும், புராணங்களும் எடுத்துச் சொல்கின்றன. அந்த வழிமுறைகளில் சென்று கோயிலில் இறைவனை தரிசித்து, நாம் இறைவனின் அன்புக்கு ஆளானால், இறைவன் பக்தர்களுக்கு சொர்க்கம் செல்ல விசா கொடுத்தருள்வான்.
பக்தி என்பது மனிதனாக பிறந்த யாவருக்கும் வேண்டிய ஒன்றாகும். பக்தியை குழந்தைப் பருவம் முதல் செய்ய பழக வேண்டும். பக்தியை முதுமையில் தான் செய்ய வேண்டும் ஒரு போதும் கருதகூடாது.
உலகத்தில் பெரும்பாலோர் நல்ல வீடு, கவுரவமான வேலை, திரண்ட செல்வம், அழகான மனைவி, அறிவான குழந்தைகள், ஆரோக்கியம்,சந்தோஷம், நிம்மதி இவைகளைப் பெறுவதற்கு தான் பக்தி என்று எண்ணிக்கொள்கின்றனர். இவைகளை பக்தி செய்தால் பெறலாம் என்பது உண்மை ஒருபுறம் இருந்தாலும், இவைகளைப் பெறுவதற்காக மட்டுமே பக்தி செய்வது என்பது அர்த்தமல்ல.
ஒரு சிலர் "அட, நான் இப்போ சகல வசதிகளுடன் சந்தோஷமாகத்தானே இருக்கிறேன். பாசமுள்ள பெற்றோர், அன்பான மனைவி, அழகான குழந்தைகள், சொகுசு பங்களா, பெரிய கார், கைநிறைய சம்பளம்... இப்படி எல்லாம் நிறைவாக தானே இருக்கிறது! வாழ்க்கை குதுõகலமாக தானே போய்கிட்டு இருக்கு. பின் எதற்கு நான் பக்தி செய்ய வேண்டும்? வாழும் வாழ்வே சொர்க்கமாக இருக்கும் போது, சொர்க்கம், மோட்ஷம், கைலாஷம், வைகுண்டம் எல்லாம் எதற்கு? என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த வாழ்க்கை இத்துடன் முடிந்து விட்டால் பரவாயில்லை. எடுத்தப்பிறவி மண்ணுலக வாசத்தோடு முற்றுபெற்றுவிட்டால் நீங்கள் நினைப்பது சரிதான். எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விட்டு போகலாம். ஆனால், நிலைமை அப்படி இல்லையே! இறப்புக்குப் பிறகு, நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப கடவுளின்நியாய தீர்ப்பு ஒன்று இருக்கிறதே. நாம் புரிந்த நல்லது, கெட்டதுக்கு ஏற்ப நரகமோ தண்டனையோ, சொர்க்கம் எனும் வெகுமதியோ கிடைக்க உள்ளதே. அதனால் தான் நரகம் சென்று தண்டனை அனுபவிக்காமல் இருக்கவும், அதே சமயம் சொர்க்கம் செல்ல பக்தி செய்யவேண்டும். சொர்க்கம் செல்வதற்கு பக்தியின் மூலம் நம் பெயரை முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இன்று சந்தோஷமாக இருக்கலாம். நிம்மதியாக இருக்கலாம். சகல வசதிகள் இருக்கலாம்.ஆனால், அது நிச்சயமானது என்று எப்படி உங்களால் நினைக்க முடியும்? நாளை என்ன நடக்கும் என்று உங்களுக்கென்ன தெரியும்? எல்லாம் படைத்தவன் கையில் அல்லவா இருக்கிறது. நாளை உங்களுக்கு எந்த கஷ்டமும் வராது என்று எப்படி முடிவு செய்ய முடியும்? ஆதலால், இப்போது இருக்கும் வசதி,வாய்ப்பு, சந்தோஷங்கள் நிலைத்திருக்க பக்தி செய்துதானே ஆகவேண்டும்?
சிலர் இன்று வறுமையில் இருக்கலாம். கஷ்டப்படலாம். என்னடா இது வாழ்க்கையே நரகமாச்சே! என்று நொந்து கொண்டு என்னத்த பக்தி செய்து என்னத்த ஆகப்போகுது என்று மனம் வெம்பி கடவுளையும் பக்தியையும் புறக்கணித்தல் முட்டாள் தனமான செயலாகும். ஏனென்றால் நாளை என்பது நம் வசம் இல்லையே... ஒரு வேளை நாளை அப்படியே வாழ்க்கை தலைகீழாக மாறலாம். வறுமை அகலலாம்; கஷ்டம் தீரலாம். நம்பிக்கையோடு பக்தி செய்து வந்தால் நல்லது நடக்கும். எனவே கஷ்டத்தில் இருப்பவர்களும் சரி; சந்தோஷத்தில் இருப்பவர்களும் சரி பக்தி செய்துதான் ஆகவேண்டும்.
இந்த இரு சாரார் அல்லாத இன்னொரு பிரிவினரும் இருக்கின்றனர். அவர்கள் தங்களை நாத்திகவாதிகள் என்று சொல்லிக்கொள்வார்கள். அவர்கள் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் புருடா பொய் என்று நம்புகின்றனர். இவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கை சரியா, தவறா என்பதை வரும் காலம் உணர்த்தும். ஆனால், சின்ன உபாயம் இருக்கிறது. வானிலை அறிக்கையில் மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. குடை கொண்டு போங்கள் என்று வலியுறுத்துகின்றது. நீங்கள் வீட்டை விட்டு கிளம்பும் போது குடைகொண்டு போங்கள். மழை வந்து விட்டால் குடை கொண்டு நனையாமல் வீடு வந்து சேரலாம். ஒருவேளை மழை வராது போனால் ஒன்றும் மோசமில்லையே... குடையை அப்படியே எடுத்து வந்து விடுங்கள். இந்த குடையை சுமக்கவா உங்களுக்கு சிரமம்? இங்கே நான் குடை என்று குறிப்பிட்டிருப்து பக்தியைத் தான் என்பது உங்களுக்கு விளங்கி இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக