செவ்வாய், 13 ஏப்ரல், 2010

பபிள்காமும் சாக்பீஸ் ஓவியமும்... தேவராஜன்

பபிள்காமும் சாக்பீஸ் ஓவியமும்... தேவராஜன்


இன்ஸ்பெக்டர் துப்பண்ணா ஆழ்ந்த யோசனையில் இருந்தார்.
இதுவரை இப்படி ஒரு சவாலான புகாரை அவர் சர்வீசில் பார்த்ததில்லை.
புகாரில் சொல்லப்பட்ட கோபுவை கடத்தியவன் யார் என்று கண்டுப்பிடிக்கவில்லை.
ஒரு வாரம் கடந்து விட்டது. இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. கேஸின் வால் எது?
நுனி எது? புரியாமல் துப்பண்ணா மேஜை மீது இருந்த பூமி உருண்டையை உருட்டிக்
கொண்டிருந்தார்.
அப்போது உதவியாளர் கான்ஸிடபிள் கண்ணாயிரம் வந்தார்.
"" சார்! ஒரு நல்ல துப்பு கிடைச்சுருக்கு '' என்று முகம் மலர்ந்தார், கண்ணாயிரம்.
புருவத்தைச் சுருக்கி, கூர்மையான பார்வையை கண்ணாயிரம் மீது பாய்ச்சி விட்டு,"" என்ன அது?''
என்றார்.
"" சார், அந்த கோபு கடத்தப்பட்ட நாளில் இருந்து அந்த தெருவில் இருக்கும் ஸ்கூல் வேன்
டிரைவரும் ஊரில் இல்லையாம். இன்னைக்கு காலையில் தான் வந்திருக்கான். எனக்கென்னவோ
அவன் மீது சந்தேகமா இருக்கு, சார்!'' என்ற கண்ணாயிரம் பக்கத்திலிருந்த பானையிலிருந்து
தண்ணீர் எடுத்து மடக் மடக்கென்று பருகினார்.
"" கண்ணாயிரம்! எதுக்கும் அந்த வேன் டிரைவரை பாலோ பண்ணு. எங்க போறான்? என்ன
பண்றான் என்பதை கவனமா நோட் பண்ணு. நாம சந்தேகப்படறது அவன் தான்னா அப்பறம்
கோழிய அமுக்கற மாதிரி அமுக்கிடலாம்.'' என்றவர் அவரின் கடா மீசையை முறுக்கினார்.
பிறகு, ஸ்டேஷனிலிருந்து ஜீப்பை எடுத்துக்கொண்டு, கோபு வீட்டிற்கு கிளம்பினார்.
கோபு வீடு.
கோபுவின் அம்மா மீனா அழுது வடிந்து கொண்டிருந்தாள்.
இன்ஸ்பெக்டர் துப்பண்ணாவைப் பார்த்ததும் எழுந்து, "" சார், என் பையன் கோபு இருக்கிற
இடம் தெரிஞ்சதா,சார்?'' தழுதழுத்து கேட்டாள், மீனா.
"" ம்... ஒரு ஆள் மேல சந்தேகமா இருக்கு. அவனை கண்காணிச்சுட்டுதான் இருக்கோம்.
அவன் நடவடிக்கையில் எதாவது மாற்றம் இருந்தா... கண்டிப்பா இன்னும் ரெண்டு நாள்ல
கோபு உங்க வீட்ல இருப்பான். கவலைப் படாதீங்க. அப்பறம் கோபுவுக்கு ரொம்ப
தெரிஞ்ச பழக்கமானவங்க பெரியவங்க யாராவது இருக்காங்களா?'' என்று கேட்டு விட்டு,
கோபுவின் ஸ்கூல் பேக்கை எடுத்து பார்த்தார்.
"" என்ன சார், ஸ்கூல் பேக்கில் எதாவது நோட்ல எழுதி வைச்சுட்டு ஓடி போயிருப்பான்னு
சந்தேகப் படறீங்களா? அவன் வீட்டுக்குச் செல்லப்பிள்ளை. அவனை இதுவரை அடிச்சதோ,
திட்டியதோ கிடையாது சார்!'' என்றாள், மீனா.
""சரி, அப்பறம் வர்றேன்'' என்று கிளம்பியவர் கிச்சன் சுவரைப் பார்த்து, கொஞ்ச நேரம்
மவுனமாக இருந்து விட்டு, பின்னர் புறப்பட்டார்.
இரண்டு நாட்கள் ஓடின.
கண்ணாயிரம் ஸ்டேஷன் வந்ததுமே, துப்பண்ணாவிடம் "" சார், சந்தேகப்பட்டது உறுதியாகிட்டு.
அந்த வேன் டிரைவர் வீட்டில் இல்லை. வீடு பூட்டிக்கிடக்குது'' என்றார்.
"" அப்படியா! சரி, வா. அவன் இல்லாத போதே அவன் வீட்டை சோதனைப் போட்டிடலாம்.''
துப்பண்ணாவும் கண்ணாயிரமும் வேன் டிரைவர் வீட்டுக்குச் சென்றனர்.
கண்ணாயிரம் டூப்ளிக்கேட் சாவியால் பூட்டைத் திறந்தார்.
வீட்டில் நுழைந்து எல்லாவற்றையும் சோதனை போட்டனர். ஆனால், அவன் கோபுவை
கடத்தியதற்கான எந்த தடயமும் கிடைக்க வில்லை.
தலையில் கை வைத்து தரையில் உட்கார்ந்தவர் சட்டென்று சுதாரித்துக்கொண்டார். காரணம்
தரையில் சாக்பீஸ் துண்டு ஒன்று கிடந்தது. ""கண்ணாயிரம் டார்ச் லைட் எடுத்து அந்த கட்டிலுக்கு
அடியில் வெளிச்சம் காட்டுங்க'' என்றார்.
வெளிச்சத்தில் கட்டிலுக்கு கீழே தரையில் வீடு, மரம், பூனை படங்கள் வரையப்பட்டு இருந்தது
. இதைப் பார்த்ததும் துப்பண்ணா மனதில் ஏதோ ஒன்று நெருடியது.
"" கண்ணாயிரம்! கடத்தல் நாடகம் சீக்கரம் முடிஞ்சுடும்ன்னு உள் மனசு சொல்லுது'' என்றார்.
வீட்டை விட்டு வெளியே வரும் போது, கதவில் பபிள்காம் துப்பப்பட்டிருந்ததை கவனித்தார்,
துப்பண்ணா.
ஸ்டேஷனுக்கு வந்தவர் உடனே கோபு வீட்டுக்கு போன் செய்தார்.
லையனில் கோபுவின் அப்பா மகேஷ்பேசினார்.
"" சார், உங்க பையன் கோபு அடிக்கடி பபிள்காம் மென்னுக்கிட்டு இருப்பானா?''
"" ஆமாம் சார். எப்போதும் அவன் பாக்கெட்டில் பபிள்காம் இரண்டு மூணு இருக்கும்''
"" ஓ.கே. மகேஷ். உங்க பையனைக் கடத்தியவனை கண்டுப்பிடிச்சுட்டோம். சீக்கரமே கோபு
வீடு வந்துடுவான்'' என்றார்.
இதை கேட்டு மகேஷ்நிம்மதி பெருமூச்சு விட்டார்.
மறுநாள் அந்த வேன் டிரைவர் வீட்டிற்கு வந்தான்.
மறைந்திருந்த கண்ணாயிரமும் மற்றவர்களும் அவனைப் பிடித்து, ஸ்டேஷனுக்கு கொண்டு
வந்தனர்.
"" ஏன்டா, கோபுவைக் கடத்தின? இப்ப எங்க அவனை ஒளிச்சு வைச்சிருக்க?'' உக்கரமாய்
துப்பண்ணா கேட்டார்.
வேன் டிரைவர் கோபுவைக் கடத்த வில்லை என்று ஆயிரம் சத்தியம் செய்தான். இல்லவே
இல்லை என கடைசிவரை சாதித்தான்.
கண்ணாயிரம் அவனை கண்டபடி அடித்து, உதைத்தார். அப்பவும் அவன் தான் கடத்தியதை
ஒப்புக்கொள்ளவில்லை.
கடைசியாக துப்பண்ணா தான் துப்பறிந்த ரகசியத்தை எடுத்துவிட்டார்.
"" டேய்... உன் வீட்ல ஒரு சாக்பீஸ் துண்டு கடந்தது. அது மட்டுமல்லாம கட்டுலுக்கு கீழே
தரையில படம் எல்லாம் வரைஞ்சிருந்தது.கோபு நல்ல படம் வரைவான். அதை அவன் வீட்டு
கிச்சன் சுவரில் கவனிச்சேன். அது மட்டுமல்ல கோபு எப்போதும் பபிள்காம் மெல்லுவான்
அவன் துப்பி இருந்ததும் கதவு இடுக்கில் கிடந்தது. இது போதாதா நீ தான் கோபுவை
கடத்தி வைச்சு இருக்கேன்னு. இப்போ நீ உண்மைய சொல்லல. என் கையால அடிப்பட்டே
செத்துடுவே'' என்று மீசையை முறுக்கியதுமே...
வேன் டிரைவர் உண்மையை ஒப்புக்கொண்டான்.
அவனிடம் இருந்து கோபுவை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
துப்பண்ணாவின் துப்பறியும் திறமையை நினைத்து கண்ணாயிரம் ஆச்சரியப்பட்டுபோனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக