புதன், 28 ஏப்ரல், 2010

16. கனவில் பிறந்த ஞானம் ! தேவராஜன்

16. கனவில் பிறந்த ஞானம் ! தேவராஜன்

போதிமரத்தில் புத்தனுக்கு ஞானம் பிறந்தது! அப்போது அவரின் சுயதேடலின் வழியாக பெற்ற அறிவாக வெளிப்பட்டது தான்"ஆசையே துன்பத்திற்கு காரணம்' என்பது.
பணப்பெட்டியிலிருந்து பட்டினத்தாருக்கு திடீரென்று ஞானம் பிறந்தது! அவரின் உள்முக தேடலின் காரணமாக "காதறுந்த ஊசியும் வராதுகாண் கடை வழிக்கே' என்றார்.
இப்படி பலர் தன்னை அறிந்து, தன் அறிவில் தெளிந்து, வாழ்வில் எல்லாரும் உய்யும் பொருட்டு தானறிந்து மெய்யுணர்வை உலகோருக்குப் புகட்டிச் சென்ற ஞானிகளை கொண்ட பாரத திருநாட்டை ஞான பூமி என்கின்றனர்.
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை அல்லது இயற்கையாகவே அமைந்த வாழ்க்கை ஒன்றிருந்தது.அந்த வாழ்க்கையில் சந்தோஷமிருந்தது; அமைதி இருந்தது; நிறைவு இருந்தது; ஆரோக்கியம் இருந்தது. அப்படியான இனிமையான வாழ்க்கையை நாம் தெரிந்தே தொலைத்து விட்டோம்!
நம்மில் எல்லாருமே நமக்கான வாழ்க்கையை யாருமே வாழ்ந்துக்கொண்டிருக்கவில்லை. நமக்குப் பிடித்த அல்லது ஆசைப்பட்ட வாழ்க்கையையும் யாரும் சுகமாக வாழ்ந்துக்கொண்டிருக்க வில்லை. இந்த உண்மை யாருக்குத்தான் தெரியாது? நாம் நினைத்தப்படி எதுவும் நடப்பதில்லை! நடந்த பல விஷயங்கள் நாம் நினைத்ததுமில்லை!அப்படி இருந்தும் எதற்காக செயற்கையான, நமக்கு பிடிக்காத ஏன் இந்தவாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்?
இப்படியான சிந்தனைகளோடு ஓர் இரவு துõக்கத்தில் இருந்தேன். சிந்தனைகள் கனவுகளோடு சேர்ந்து அதற்கான தேடலில் தோய்ந்திருந்தது. முடிவில் கனவு புரிந்தும் புரியாமலிருக்கும் ஞானத்தை விட்டுச் சென்றது. கனவோடு வந்ததை கடை விரிக்கிறேன். கொள்வோர் கொள்க.
மனித ஜாதியில் துயரம் யாவும் மாயை! எல்லாம் கண்கட்டி வித்தை! அக்கரைக்கு இக்கரைமீது கொண்ட மோகம் போல நம் வாழ்வில் ஒரு போர்வைப் போல மூடிக்கொண்டு, ஆட்டம் காண்பிக்கிறது மாய மாயை! அந்த மாயை எது?
அது "யாரோடும் உன்னை ஒப்பிட்டுக்கொள்ளதே! உனக்கு நிகர் சமானம் நீ மட்டுமே என்பதை உணர்ந்து,நீ நீயாகவே இரு. உனக்கமைந்த வாழ்க்கையை வாழு! உன்னை அறி; அறிந்ததும் அந்நெறி தொழு!'இதை யார் பின்பற்றினாலும் அந்த மாயைபிடியிலிருந்து நழுவிக்கொள்ளலாம்!
மனிதர்களுக்குள் ஏற்பட்ட ஒப்பீட்டு குணமும், பிறரைப்போல தாமும் இருக்க வேண்டும் என்ற ஆசையில் போல செய்தல் மோகத்தால்,
அவரைப்போல இருக்க வேண்டும். இவரைப்போல வீடுகட்டவேண்டும். அவர் அதைப் படித்தார். நாமும் அதைப் படிக்கவேண்டும். இப்படி அடுத்தவரைப் பார்த்து, பார்த்து அவர்களின் ஜெராக்ஸ் ஆக நாம் மாறி,நம்முடைய நகல்களை இழந்து, நமக்கான விருப்பங்களை, தேவைகளை விட்டு, அடுத்தவர் கனவுகளை, லட்சியங்களை , ஆசைகளை சுமந்து கொண்டு, பிறர் சென்ற பாதையில் சென்று பிறரின் வாழ்க்கையை நம் வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருந்தால் எப்படி நிம்மதி கிடைக்கும்? எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்? எப்படி வாழ்ந்த திருப்தி கிடைக்கும்?
இந்த இடத்தில் உங்களுக்கு கொஞ்சம் குழப்பமோ, சந்தேகமோ வரலாம். ஏனென்றால் நீங்கள் பெரும் பொருளீட்டுவதே வாழ்வின் பொருள் என்று பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள்!
பிறரைப்போல தானும் இருக்க வேண்டும். அவரைப் போல நாமும் உயர் கல்வி எல்லாம் படிக்க வேண்டும். அடுத்தவர் போல நிறைய சம்பாதிக்க வேண்டும் இதில் என்ன தவறு இருக்கிறது என்று உங்கள் மனசு கேட்கும்!
உண்மையில் புற உலகில் இருக்கும் அறிவு,செல்வம், பொருள், புகழ் , மரியாதை எல்லாம் நீங்கள் தேடிபோக வேண்டியதில்லை. அவைகள் உங்களைத் தேடி தான் வரவேண்டும். பிறரை காப்பியடிக்கும் உங்களுக்குள் எத்தனை சக்தி இருக்கின்றது தெரியுமா? அதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? உங்களில் இருக்கும் ஆன்மா எத்தனையோ பிறவி எடுத்து எத்தனையோ திறமைகளை, கலைகளை, அனுபவங்களை பெற்றிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? முன்னம் எடுத்த ஜென்ம வாசனையை அறிய நீங்கள் நீங்களாக, சுயமாக இருந்தால் தான் அவற்றை அறிந்து, வெளிகொணரமுடியும்! அந்த ஜென்ம வாசனை பெட்டகத்தின் சாவியை கடவுளிடம் இருக்கிறது. அதை கேட்டு வாங்கிக்கொள்ளும் சூட்சமம் புரிந்தால் உங்களை விட உயர்வானவர், சிறந்தவர் எவருமே இவ்வுலகில் இருக்க முடியாது. ஆனால், உங்களை பற்றி தெரியாமலே, அடுத்தவர் போலவே ஒப்பனை செய்து கொண்டால் எப்படி?
நமக்கென ஒருஅருமையான வாழ்க்கையைக்கொடுத்து, இப்படி தான் வாழவேண்டும், இன்னன்னகாலத்தில் இன்னன்னது நடக்கும் என கடவுள் வகுத்து கொடுத்த வாழ்க்கையை நாம் சகித்துக்கொண்டுதான் வாழ வேண்டும்!
அவரவர் வாழ்க்கை என்பது அவரவர் இஷ்டப்படி வாழ்ந்து போவதற்கு அல்ல. கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கை அவர் விதித்த விதிப்படி, அவர் இஷ்டப்பட்டபடிதான் வாழ வேண்டும். முன்னம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, இப்பிறப்பை அனுபவிக்க வேண்டும்.
ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையும் தனி தனிதான்! ஒருத்தரைப்போல இன்னொருத்தர் வாழ்க்கை முறை இருக்கலாகாது. உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் அவரவர்களுக்குண்டான கடமைகளை கழிக்கவே பிறந்திருக்கிறார்கள். அம்மா, அப்பா, அண்ணன், தம்பி,சொந்தம், பந்தம், நண்பர்கள் எல்லாம் மாயை. அந்த உறவு வட்டத்தில் இருந்து வெளிவரவேண்டும். நாம் நாமாக மட்டுமே இருக்க வேண்டும். இப்பிறப்பில் உனக்கு இவர்கள் அம்மா, அப்பா என்றால், நீ எடுத்த ஒவ்வொரு பிறப்பிற்கு எத்தனை அம்மாக்கள், அப்பாக்கள், சகோதர, சகோதரிகள், மனைவிகள் இருக்க வேண்டும்? அப்படி பார்த்தால் உன்னுடைய அம்மாக்கள், அப்பாக்கள் எத்தனையோ பேர் இந்த மண்ணில் மீண்டும் பிறந்திருக்கலாமே! எல்லோரையும் நீ கண்டு பிடித்து பந்தம் பாராட்ட முடியுமா?ஆகையால் உடலுக்குண்டான பந்தத்தை அறுத்து, ஆத்மாவுக்கு எந்த ஜென்மத்திலும் உற்ற உறவான கடவுளை மட்டுமே தேட வேண்டும்; சரணடைய வேண்டும்.
அடுத்தபடியாக மண்ணில் ஜனித்த சகல ஜீவன்களையும் தம்முடைய பிம்பமாகவே கருதவேண்டும். இப்படி மெய்மை உணர்ந்து, நான் யார்? என் வாழ்க்கை எது? என்று
வாழ்ந்து வந்தால், நாம் துன்பப்படும் போது கடவுள் அருள்கரம் கொடுப்பான். நாமோ செயற்கையான, அடுத்தவரிடம் காப்பியடித்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! நாமே அமைத்துக்கொண்ட வாழ்க்கையில் கஷ்டமோ, நஷ்டமோ எது வந்தாலும் நாம் தானே பொறுப்பேற்க வேண்டும்? அதான் நீயே முடிவு செய்த வாழ்க்கையில் வரும் விளைவுகளை நீயே சமாளித்துக்கொள் என்று கடவுளும் கை விட்டுவிடுகிறானோ? அதனால்தான் நாட்டில் இத்தனை துன்பங்களும், துயரங்களும் மலிந்துகிடக்கின்றனவா?
நான் நானாக இருக்கிறேன். நீ நீயாக இரு. அவர்கள் அவர்களாக இருக்கட்டும். அவ்வாறு இருந்தால், உங்களுக்கு நிச்சயமாக இயற்கையாலோ, கடவுளாலோ சஞ்சலமோ துயரமோ வராது. அவ்வாறு வந்தாலும், அதை போக்குவதற்கான பக்குவம், மனஉறுதி நிச்சயம் கடவுள் கொடுப்பார். ஆனால், நான் நீயாக, நீ நானாக, அவனைப்போல, இவனைப்போல வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளும் போது தான் தொல்லைகளும், துயரங்களும், போட்டிகளும், பொறாமைகளும் வந்து தொலைக்கின்றன.
ஆதலால், நாம் நாமா இருப்பது; யாரோடும் ஒப்பீடின்றி வாழ்வது; நிகழ்காலத்தில் வசிப்பது என்ற கனவில் வந்த ஞானம் புரிந்து, வாழ்ந்தால்வாழும் போதே நமக்கு நிம்மியை, ஆனந்தத்தைத் தருவதோடு, அதுவே கடவுளை நோக்கிச் செல்ல பாதையும் அமைத்து தரும்!
தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக