புதன், 28 ஏப்ரல், 2010

19. மூன்றுக்குள் முக்தி பெறலாம்! தேவராஜன்

19. மூன்றுக்குள் முக்தி பெறலாம்! தேவராஜன்
சாதாரண மனிதர்களாகிய நமக்கு, பக்தி செய்ய இலக்கணம் எல்லாம் தேவையில்லை! அன்பிருந்தால் போதும். கடவுளிடத்தில் மாறாத நம்பிக்கைக் கொண்டிருந்தால் போதும்.
இதையும் தாண்டி கடவுளிடத்தில் பூரணமான பக்தி பண்ணும் போது, கடவுளை மூன்று நிலைகளில் பாவித்து, பக்தி செய்தோமானால் முக்தி பெறலாம். அந்த மூன்று வகை பக்குவ நிலை கீ÷ ழ சொல்லப்பட்டிருக்கிறது. அதில் நீங்கள் முயன்றால் முக்தி பெறலாம்!
பக்தன் கடவுளிடம் "நான் உன்னுடையவன்' என்று தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்வது. இது முதல் வகை பக்தி நிலையாகும். இந்த உலகைப் படைத்து, உலக உயிர்களைப் படைத்து காப்பது கடவுளின் பொறுப்பு என்று எண்ணிக்கொள்ளும் பக்குவம் ஆகும். அதாவது "மரத்தை வைச்சவன் தண்ணி ஊற்றுவான் என்பதாகும். இந்த நிலையில் இருக்கும் பக்தர்கள் தங்களுடைய வழிபாட்டின் பிரதிபலனாக படைத்தது நீ, காப்பதும் நீ. நான் உனக்கு சொந்தமானவன். உன்னை நம்பினேன்; உன்னடி வீழ்ந்தேன். என்னை எதுவேண்டுமானாலும் செய்து கொள் என்று எண்ணிவிடுவதாகும். இத்தகைய பக்தன் கடவுளிடம் எதையுமே எதிர்பார்க்க மாட்டான். நடந்தது நாராயணன் செயல். நடப்பது ஈசன் செயல் என்று இருந்துவிடுவான். இந்த வகை பக்தியின் அடிப்படை நம்பிக்கை அவனின்றி ஓர் அணும் அசையாது என்பதாகும். இத்தகைய பக்தர்கள் கடவுளுக்கு பிடித்தமானவர்கள். கடவுள் எதிர்பார்த்த பக்குவம் கொண்ட உண்மையான பக்தர்கள்.
"கற்றுõணைக்கட்டி கடலில் போட்டாலும் நற்றுணையாவது நமச்சிவாயமே!' என்றிருந்த திருஞான சம்பந்தர் பக்தி இந்த முதல் நிலையில்தான் ஆரம்பித்தது.

"கடவுள் என்னுடையவர்' என்று பாவித்து வழிபடுவது இரண்டாம் நிலை பக்தியாகும். இந்த வகை பக்தி சக மனிதர்களிடத்தில் காட்டும் அன்பைப் போல, கடவுளிடம் காட்டுவதாகும். எனக்கு மட்டுமே அம்மா, அப்பா என்பது மாதிரியும், தான் நேசிக்கும் பெண் தனக்கு மட்டுமே சொந்தம், தனக்கே உரியவள் என்று நினைப்பது போல, பக்தியிலும் பக்தன் கடவுளை தனக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமையில் கொண்டாடும் பக்குவம் ஆகும். இதில் பக்தன் கடவுளை தன்னுடைய சொந்தம் என்று கருதிவிடுவதால் சாமனிய மனிதர்களைப்போலவே கடவுளையும் கருதி, சுக துக்கங்கள் கடவுளுக்கும் உண்டு என்று எண்ணி விடுகிறான். கடவுளுக்கு பசிக்கும், கடவுளுக்கும் வலிக்கும் என்று எண்ணி வழிபாடு செய்வதாகும். இந்த நிலை பக்திக்கு சிறந்த உதாரண புருஷராக இருந்தவர் கண்ணப்ப நாயனார் ஆவார். கண்ணப்பர் காட்டில் கண்ட ஈசனை தன்னுடை கடவுள் என்றே பாவித்து அவருக்கு சாஸ்திர, சம்பிரதாய, ஆகம விதி எதையும் பின்பற்றாமல் பூஜை செய்து வழிபாடு செய்தவர். கடவுளின் நலன் குறித்து பக்தன் கவலைப்படும் நிலை இந்த வகை பக்தியில் வரும். பக்தனின் இத்தகைய கவலை கடவுளுக்கு ஒரு வேடிக்கை சம்பவமாக இருந்தாலும், பக்தன் தன்னைப்பற்றி இப்படி கவலைபடுகிறானே என எண்ணி அவனது துõய பக்தியை மெச்சி, அவனின் விருப்பத்திற்குக் கட்டுபடுகிறான். தன்னுடைய கடவுள் குளிக்க வேண்டுமே என்று வாயில் தண்ணீர் சுமந்து எச்சில் நீரால் ஈசனுக்கு அபிஷேகம் செய்தான். கடவுளுக்குப் பசிக்குமே என்று பன்றி இறைச்சியை தீயிலிட்டு, அது ருசியாக இருக்கிறதா? பதமாக வெந்து இருக்கிறதா என்று வாயில் போட்டு எச்சில் படுத்தியப் பிறகு அதை ஈசனுக்கு படைத்தான். கடைசியில் ஈசனுக்கு கண்ணில் ரத்தம் கசிந்ததுமே, என் கடவுளுக்கு வலிக்குமே, என் கடவுள் கண்ணில்லாமல் அவதிப்படுவாறே என்று, தன் கண்ணையே பிடிங்கி கடவுளுக்கு கண் கொடுத்தவன் கண்ணப்பன். இப்படி ஒரு பக்குவம், ஞானம் இரண்டாம் நிலை பக்தியாகிய "கடவுள் என்னுடையவர்' என்பதாக வெளிபடுகிறது.
அடுத்ததாக கண்ணபகவானின் சேட்டைகள், வம்பு தும்புகள் பொறுக்க முடியாமல் யசோதா கண்ணணை உரலில் கட்டிப் போட்டதும், கண்ணன் யசோதாவின் கட்டுக்குக் கட்டுப்பட்டுதானே கிடந்தான்? காரணம் கடவுளும் பக்தனின் நம்பிக்கைக்கு கட்டுபடுகிறான் என்பதால்தான்!
"நானே கடவுள்! கடவுளும்நான் ' என்று கடவுளோடு ஒன்றிவிடும் நிலை மூன்றாவது நிலை பக்தி வகையாகும். இந்த நிலை பக்திநிலையில் "மன்னனும் நானே; மக்களும் நானே; மரம், செடி, கொடியும் நானே!' என்று கீதையில் கண்ணன் சொன்னது போல், ஒரு பக்தனும் தானும் கடவுள், தன் முன் இருப்பதெல்லாம் கடவுள் என்று உணரும் பரிபக்குவம் ஆகும்.
இது பக்தியின் இறுதி நிலை என்றுகூட சொல்லலாம். இந்த பக்தி நிலையில் கடவுளைவிட்டு ஒரு கணம்கூட பக்தன் பிரிந்திருக்கப் பிரியப்படமாட்டான். அது அவனால் முடியாத செயலும்கூட. ஏனென்றால் அது அவன் கடவுளோடு ஒன்றிவிட்டதால் ஏற்படும் உறுதி. கடவுளிடமிருந்து தன்னை வேறுபடுத்திப் பார்க்க முடியாத பக்குவநிலை. கடவுளும் தானும் ஒன்று என்றளவுக்கு இறுக்கமான பிணைப்பு அது.
"இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!' என்று மாணிக்க வாசகர் ஈசனை போற்றிப் பாடியதும் மூன்றாம் நிலை பக்தியின் சாரமே ஆகும். இவரையும் விட ஒரு படி மேலே சென்று ஆண்டாளும், மீராவும் கிருஷ்ணனை தன் கணவனாகவே ஏற்று கொண்டவர்கள்.
இந்த மனிதப்பிறவியிலிருந்து எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டேன். பெற வேண்டியவற்றை எல்லாம் பெற்றுவிட்டேன். வேறென்ன வேண்டும்? வேறெதற்கு ஏங்க வேண்டும்? கடவுளிடம் யாசிப்பது போய் தாமே கடவுள் நிலைக்கு உயர்வது என்பது இந்த மூன்றாம் நிலை பக்தியின் உச்சநிலை ஞானமாகும்!
கடவுள் எங்கும் இருக்கிறார் என்பதை ஹிரண்யகசிபுவுக்கும் உலக மக்களுக்கும் உணர்த்த நாராயணன் துõணிலிருந்து நரசிம்மனாக வெளிப்பட்டார். அகோர தோற்றத்தில், பயங்க கோபம் கொப்பளிக்க காட்சி தந்த நாராயணனிடம், பிரகலாதன் கொஞ்சமும் அச்சமின்றி நெருங்கி, நாராயணன் அடிபணிந்தான். இது கண்டு நாராயணன்,"பிரகலாதா, உனக்கு என்ன வேண்டும், கேள்!' என்கிறான். அதற்கு, "எனக்கு எதுவும் வேண்டாம். தாங்களிடம் ஏதேனும் யாசித்துப் பெற்றால் நான் ஒரு வியாபாரி ஆகிவிடுவேன்' என்று கூறி வரமேதும் கேட்கவில்லை. கடவுளின் பாத கமலங்களைவிட ஒரு பக்தனுக்கு என்னவேண்டும்? அதனால் தான் பிரகலாதன் எதுவுமே கேட்கவில்லை. இது சரணாகதி தத்துவம். தன்னையே கடவுளின் ஓர் அங்கமாக எண்ணிவிட்டால், "நான் கடவுள்' என்று என்ற நிலையை எட்டிவிடலாம்!
மேலே சொன்ன மூன்று நிலை பக்தியில் எந்த நிலை பக்தியில் இருந்தாலும் நிச்சயமாக நாம் கடவுளுக்கு பிரியமானவர்களாக ஆகிவிடலாம். பிறந்தப் பிறவிப் பயனையும் அடைந்து விடலாம்!
தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக