புதன், 28 ஏப்ரல், 2010

15. அப்படியா,இப்படியா, எப்படி? தேவராஜன்

15. அப்படியா,இப்படியா, எப்படி? தேவராஜன்
"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்று மானிடப்பிறப்பின் மகத்துவத்தை சிலாகித்து சொன்னவர், அவ்வையார்.
மானிடப்பிறவி வாய்த்திருப்பது என்பது நாம் கிடைத்தற்கரிய பிறவியாகும்! இப்பிறவி எடுத்திருக்கும் நாம் கடவுள் வகுத்து தந்த பாதையில், சரியான நெறியில் வாழ்ந்தோமானால், நாம் நிச்சயமாக கடவுளை அடையலாம்! ஏன், நாமே தெய்வமும் ஆகலாம்!
ஏனைய பிறவிகளைக்காட்டிலும் மானிடப்பிறவிக்குதான் அனேக சுதந்திரங்கள் உள்ளன. எது சரி, எது தவறு? நாம் பிறந்ததன் லட்சியம் என்ன? வாழ்வின் பொருளென்ன போன்றவற்றை அறியும் அறிவையும், எப்படி வாழவேண்டும்? எப்படி வாழக்கூடாது என்று பகுத்தறியும் சக்தியும் மானிடப்பிறப்புக்குத்தான் பிரத்யேகமாக அமைந்திருக்கிறது! நம் கண் எதிரே மாறுபட்ட இருவேறு பாதைகள் இருக்கின்றன. அப்பாதைகளில் சென்றால் விளையும் பலன்களும், இரு வேறு பாதைகளில் சென்றால் சேரும் இடங்களான சொர்க்கம், நரகம் குறிப்பால் உணர்த்தப்பட்டுள்ளன.
இதில் நம் சுயபுத்தியைக்கொண்டு எப்பாதையில், எப்படி செல்கிறோம் என்பதை கடவுள் மேலிருந்து கண்காணிக்கின்றான்! கொஞ்சம் புத்தி தடுமாறும் போது, ஏதோ ஒரு வழியில் எச்சரிக்கை செய்கிறான். அதை குறிப்பால் உணர்ந்து சுதாரித்துக்கொண்டால் கிடைக்கும் மோட்ஷம். கேட்காவிட்டால் நாம் அடைவோம் மோசம்!
கடவுளின் படைப்பில் மனிதப்பிறவி மட்டும் மிகவும் மேன்மை பொருந்தியது.
கடவுள் படைப்பில் எல்லாம் ஒழுங்கும், நேர்த்தியும் கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளதாகவே இருக்கும். கடவுளின் படைப்பில் மனிதப்பிறவி என்பது துலாக்கோல் போல மத்தியமானது. எப்படி எனில், மனிதபடைப்பிற்கு மேல் படிகள். மனிதப்படைப்பிற்கு கீழ் படிகள் என சீராக அமைந்திருக்கின்றன. மேல்படியில் மனிதர்களைக்காட்டிலும் மேம்பட்டவர்கள் பித்ருக்கள். பித்ருக்களைக்காட்டிலும் உயர்ந்தவர்கள் பூத, பேத, பிரேத, பிசாசுகள். இவை தீய சக்திகளாக இருந்தாலும், மிகவும் பலம் கொண்டவைகள். இவைகளைக்காட்டிலும் சிறப்பானவர்கள் யஷர்கள், கின்னர்கள், சித்தர்கள்,சாரணர்கள். இவர்களைவிட உன்னதமானவர்கள் முப்பத்து முக்கோடி தேவர்கள். முப்பத்து முக்கோடி தேவர்களைக்காட்டிலும் மேலானவர்கள் பிரம்மா போன்ற தேவதைகள். இவர்களுக்கும் மேம்பட்டு மிக உயர்ந்த நிலையில் எட்டா இடத்தில் பரிபூர்ணமாக விளங்ககூடியவர் பரம்பொருளாகிய கடவுள்!
இது மனிதப்பிறவி படியில் இருந்து மேல் செல்லும் அப்படிகள்...
அடுத்ததாக, மனிதப்பிறவியிலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் படிநிலைகள் இப்படிகள் எவை எனில், அறிவில் குறைந்த யானை, சிங்கம், புலி போன்ற விலங்குகள் அறிவில் குறைந்து காணப்பட்டாலும் மனிதர்களை விட பலத்தால் உயர்ந்தவைகள். யானை, புலி, சிங்கம் இவைகளுக்கு கீழே உள்ளவை மாடு, ஒட்டகம், மான், குதிரை போன்றவை. அவற்றுக்கும் கீழே இருப்பவை ஆடு, பன்றி, கோழி, முயல் போன்றவை. அவற்றுக்கும் கீழே உள்ளவை பறவைகள். கடைநிலையாக இருப்பவை புழு முதற்கொண்டு எத்தனையோ கண்ணுக்குத் தெரியாத கிருமிகள்.
மேலே சொன்ன மனிதனிலிருந்து மேம்பட்டவைகளான அப்படிநிலைகளும், மனிதனிலிருந்து கீழ்பட்டவைகளான இப்படி நிலைகளுக்கும் இடையில் இருப்பது நாம் எடுத்திருக்கும் மனிதப்பிறவி!
மனிதப்பிறவியிலிருந்து நாம் மேல் நோக்கியும் செல்லலாம்; கீழ் நோக்கியும் செல்லலாம். ஆரம்ப புள்ளியாக மனிதப்பிறவி எடுத்திருக்கிறோம். கடவுள் நமக்கு இரண்டு வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறார். நாம் மேலே செல்லும் அப்படியில் செல்கிறோமா? கீழே செல்லும் இப்படியில் செல்கிறோமா என்பதை பொருத்திருக்கிறது கடவுளுக்கும் நமக்குமான தொடர்பு. கடவுள் இருகரம் நீட்டி தான் படைத்த மனித ஆன்மாவைவரவேற்று, வாரியணைத்து, தடுத்தாட்கொள்ள ஆசையோடு காத்திருக்கிறார்.
மனிதனாகப் பிறந்த நாம் சாத்திர, சம்பிரதாய நியதிகளுக்கு உட்பட்டு, வேத வழிகொள்கைகளுக்கு உடன்பட்டு உலகியல் வாழ்க்கையை நடத்த வேண்டும். பிறந்ததன் நோக்கம் அறிந்து, பாவ, புண்ணிய செயல்கள் எவை, எவை என்பதை பகுத்துணர்ந்து, அன்பு, கருணை, இரக்கம், தர்மம் போன்ற மனித குணங்களை முழுவதுமாக வாழ்க்கையில் கடைப்பிடித்து, தாமரை இலைமேல் தண்ணியாக ஒட்டியும் ஒட்டாமலும் இருந்து, எப்போதும் படைத்த கடவுளை மறவாது நினைத்து, எல்லாம் வல்ல கடவுளை நம்பி, அவனை இறுதியில் சரணடையும் மார்க்கம் எதுவென அறிந்து, ஞானிமார்களும், சித்தர்களும், குருமார்களும் காட்டிய செவ்வழியில் சென்றால், நாம் இப்பிறவியின் முடிவில் தேவர்களும் ஆகலாம்! தெய்வமும் ஆகலாம்!
ஆனால், கடவுள் வகுத்த பாதையிலிருந்து விலகி, வாழ்க்கை கோட்பாட்டிற்கு புறம்பாக நாம் வாழ்க்கை நடத்தினால், பாவம், சூது, கொலை, பொய், புரட்டு என இழி குணங்களை கொண்டிருந்தால், நமக்கு கீழான விலங்குகள், பறவைகள், ஜந்துகளாக பிறவி எடுக்கக்கூடும். அப்படி கீழான பிறவி எடுத்து விட்டால், மீண்டும் மனிதப்பிறவி எடுப்பதற்கு பல யுகங்களாகும். சொல்லொண்ணா துயர் பட வேண்டியிருக்கும். ஆதலால், அப்படியா? இப்படியா?
எப்படி வாழவேண்டும் என்பது நம் கையில் தான் இருக்கிறது. நீங்கள் கடவுளை அடைய வேண்டும் என்று ஆசைப்படுவதைவிட, கடவுள் உங்களை அணைத்துக்கொள்ள ஆசைப்படும்படி நீங்கள் வாழவேண்டும்! கீழான பிறவி எடுக்க வைத்திடும் இழிகுணங்களை எல்லாம் தவிர்த்து, ஒழுக்கத்தோடு, உண்மையாய், கடவுள் சிந்தனையில் வந்தப் பிறவியை அனுபவித்துக்கொண்டிருக்க வேண்டும்.
கடவுள் ஒருவனுக்கு அருள்புரியும் பொழுது, ஒருவனுடைய மதத்தையோ, ஜாதியையோ,கல்வித்தகுதியையோ, செல்வசெழிப்பையோ பார்ப்பதில்லை! யார் எந்த நிலையில் இருந்தாலும், யார் கடவுளுடைய அருள் வேண்டும்; அது கிட்டவேண்டும் என்று நினைந்து, நினைந்து கசிந்துருகி பிரார்த்திக்கின்றார்களோ,அவர்களுக்கு கடவுள் நிச்சயமாக அருள்புரிகிறான்.
தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக