புதன், 28 ஏப்ரல், 2010

17. இல்லறமா? துறவறமா? தேவராஜன்

17. இல்லறமா? துறவறமா? தேவராஜன்
இறைவனின் குழந்தைகளான நாம் அனைவரும் நம் மனதை மேம்படுத்தி, எண்ணங்களை வளப்படுத்தி, உயிரை துõய்மைப்படுத்தி, நாம் மீண்டும் இறைவனோடு சேரவேண்டும் என்பது தான் குறிகோளாக இருக்க வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் எவ்வாறு மனதை நல்வழிப்படுத்தி, வாழ்க்கை செம்மையாக வாழ்ந்து கொண்டு, இறைவனோடு இணைவதற்கு இல்லறம் வழியில் செல்வதா? துறவற வழியில் செல்வதா? எவ்வழி சுலபமானது? என்பது தான் எல்லாருக்கும் தேவைப்படும் ஒரு பதிலாகும்.
இல்லறத்திலும் அறம் இருக்கிறது. துறவறத்திலும் அறம் இருக்கிறது. ஆக இருவழியும் சிறந்த வழி என்பதில் மாற்று கருத்து இருக்கப்போவதில்லை. ஆனால், எது சுலபமான வழி என்பதில் தான் கருத்தொற்றுமை இருப்பதில்லை.
நம் முன்னோர்கள் இல்லறம் என்பதை முக்கியமான ஒன்றாகக் கருதினர். இல்லறம் என்றால் என்ன? அதன் பயன் என்ன என்பதைப் பற்றி நன்கு அறிந்திருந்து, அதற்கேற்றவாறு வாழ்ந்தனர். அதனால் தர்மம் செழித்தது. வாழ்க்கை சிறப்பாக இருந்தது.
புதுமணத் தம்பதிகள் முதலில் தம் இல்லத்திலுள்ள பெரியவர்களை மதித்தும், வணங்கியும் அவர்களை அனுசரித்தும், அவர்களுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்து வந்தனர். விருந்தினர்களைப் போற்றியும், அனாதைகள், துறவிகளுக்கு அன்னதானம் அளித்தும் பெரு வாழ்வு வாழ்ந்துவாழ்நாளை கழித்தனர்.
அதனால் தான் பத்தினிப் பெண்கள் "பெய் என்று சொன்னதும் மழை பெய்தது! ஒரு பெரிய தவசியிடம் கூட கொக்கென நினைத்தாயா கொங்கணவா?' கேட்க துணிந்ததற்கு காரணமாக இருந்தது அவர்கள் போற்றி வந்த இல்லற தர்மம்தான்!
இவ்வுலக உயிர்கள் எல்லாவற்றையும் பரம்பொருளாக நேசிக்கவேண்டும் என்பது எல்லாராலும் முடியாத காரியம் என்பதால் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் அவர்கள் சேர்ந்து தமக்குப்பிறக்கும் குழந்தைகளையும், குழந்தைகள் பரஸ்பரம் தாய் தந்தையரிடம் அன்புகாட்டி, உறவு, அண்டை அயலாருக்கு உதவிபுரிந்து, கருணையும், அன்பும் செலுத்தி வாழவேண்டும். இது இல்லற தர்மம் ஆகும்.
எங்கோ பிறந்து, வளர்ந்த ஒரு பெண்ணை மணந்து, அவளிடம் அன்பு செலுத்தி, அரவணைத்து, பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, கஷ்ட, நஷ்டங்களை அனுபவித்துக்கொண்டு இதற்கு இடையில் இறைவனை நினைத்து, அவனை அடைய ஆசைக்கொண்டு இருத்தல் என்பது லேசுபட்ட காரியமா, என்ன? இல்லறத்தில் இருப்பதே பெரிய அறம்! ஏனென்றால் தான, தர்மம் செய்ய வேண்டும், அண்டி வந்தோருக்கு உதவி செய்ய வேண்டும். தமக்கு உதவும் வீட்டு விலங்குகளை பராமரிக்க வேண்டும். ஜீவனம் நடத்த உழைக்க வேண்டும். போராட வேண்டும். உழைத்தச் செல்வங்களை தம் குடும்பத்தாருடன், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதையும் தாண்டி
தாம் பெற்ற குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை முதலில் கற்றுதரவேண்டும். நற்கல்வியை அவர்கள் பெற துணையாக இருக்கவேண்டும். பிறகு, தம் வாரிசுகளுக்குத் தேடிதரவேண்டிய பெரிய சொத்து ஆன்மிகம்! அதை புகட்ட தாம் ஒழுக்க சீலர்களாக, நல்ல பக்திமானாக திகழவேண்டும். இந்த கடமைக்கு இறையருளைச் சேர்ப்பது என்றும் கூறலாம். நாம் பெற்றெடுத்த பிள்ளைகள் இறைவனை அடையும் வழியில் செலுத்திவிட்டால் போதும். நம் வம்சம் படிப்படியாக இறைவனை நோக்கிச் செல்லும் !இத்தகைய ஒருபுண்ணியக்காரியங்களை செய்யத் தொடங்கி விட்டால் ஓர் இல்லறவாசியின் இறை தர்மம் நிறைவு அடைந்து விடும்.
அடுத்து, இளமையில் பொருளைத் தேடி,அதன் மூலம் சகல சுகமும் அனுபவித்து, மத்திம பருவத்தில் மனைவி, மக்களோடு பாசம், அன்பு கொண்டு, முதுமை வந்துற்றதும் பொறுப்புகளை எல்லாம் தம் பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு, மனைவியோடு ஸ்தலம் , தீர்த்தம், மூர்த்தி என சென்று வந்து, முடிவில் கொஞ்சம் கொஞ்சமாக பந்த பாசங்களிலிருந்து ஒதுங்கி,தாமரை இலை தண்ணீர் போல இல்லறத்தில் இருந்து கொண்டு இறைவனை அடைய சகல வழியிலும் முயற்சி செய்யும் வழியில் இறுதி நாட்களை ஒப்படைத்து விடவேண்டும்.இதுதான் இல்லறத்திலிருந்து கொண்டே இறைவனை அடையும் வழி. இது இன்றைய இல்லறவாசிகளான உங்களுக்கு சாத்தியமா? என்று எண்ணிப்பாருங்கள்! அதை சாத்தியமாக்குவதற்கு முயற்சி செய்யுங்கள்!
இல்லறவாசிகளோடு துறவறவாசிகளை ஒப்பிடும் போது துறவறவாசிகள் சுயநலவாதிகளாகவே இருப்பதாக கருதப்படுகின்றனர். ஏனென்றால் குடும்பம், மனைவி, பிள்ளை என்று எந்த பற்றுதலோ, உறவோ இல்லாமல் இருப்பதால் அவர்களுக்கு பொருள் தேடவேண்டிய அவசியமோ, நிர்பந்தமோ இல்லை. எந்த கஷ்ட, நஷ்டங்கள் இல்லாமல் தவம், தியானம் என இறைமார்க்கத்தில் சென்று இறையருளைப் பெற்று, தான் மட்டுமே நற்கதி அடைந்து விடுவார்கள். சில துறவிகள் ஆசிரமம், மடம் அமைத்து தன்னுடைய சீடர்களை இறைவழியில் கடையேற்றி விடுவர். இன்னும் சில துறவிகள் ரொம்பவும் மேலானவர்கள். அவர்கள் தாம் பெற்ற ஞானத்தை, இறை அனுபவத்தை தம் சீடர்களுக்கும், பொதுமக்களும் போதித்து எல்லாரையும் இறை அருளைப் பெற உதவுவார்கள். இவர்கள் உலகத்தை வீடாகவும், மக்களை தம் குழந்தைகளாகவும் பேணுவர்.
துறவறம் கொள்வது என்பதும் லேசுபட்ட விஷயம் அல்ல. அது இல்லறவாசிகளை விட அநேக கஷ்டங்களைக்கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. ஏனென்றால், துறவிகளுக்கு விதிக்கப்பட்ட அனுஷ்டானங்கள் மிகவும் கடுமையானவை. அவர்களுக்கு மனக்கட்டுபாட்டிலிருந்து உணவு கட்டுபாடுவரை உண்டு. ஒழுக்கம் முதலான பிரம்மச்சாரியங்களை கடைபிடிக்கவேண்டும். மழையோ, குளிரோ, வெயிலோ, புயலோ எல்லாவற்றையும் சமநிலையில் நோக்கும் மனபக்குவம் கொண்டிருக்க வேண்டும். உடல்வருத்திக் கொள்ள வேண்டும். இடைவிடாது வழிபாடு செய்ய வேண்டும். மந்திரங்கள், ஜெபங்கள் அனுதினமும் செய்ய வேண்டும். உலகத்தோர் பாவங்களை ஏற்றுகொண்டு அதை தம் தவ வலிமையால் போக்க வேண்டும்.
தானும், இந்த வையகமும் உய்ய தவம் செய்ய வேண்டும். சுயநலம் அறுத்து பொது நலம் காண வேண்டும்.
ஆக, இல்லறவழி, துறவழி எது சுலபமானது, உயர்வானது என்றால், அது இல்லற வழி தான்! இல்லறவாசி தான் இன்ப துன்பங்களுக்கும், ஆயிரம் பிரச்னைகளுக்கும் இடையே இருந்து கொண்டு மனைவி, பிள்ளைகளை காக்கும் கடமையும் கொண்டு, தானும் இறைவனை நாடி, தம் மனைவி, மக்களையும் இறைவனை நோக்கிச் செல்ல தயார்படுத்தும் இல்லறவாசியே இறைவனுக்குப் பிரியமானவனாக இருப்பான்!
தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக