புதன், 28 ஏப்ரல், 2010

7. பேசா எழுத்து வந்ததெப்படி? தேவராஜன்

7. பேசா எழுத்து வந்ததெப்படி? தேவராஜன்
புதிதாக ஒரு பேனா வாங்கியதும் முதலில் போட்டுப்பார்ப்பது பிள்ளையார் சுழியாக இருக்க வேண்டும் என்பது சம்பிரதாயம். புதிதாக கணக்கு தொடங்கும் நோட்டில் முதலில் பிள்ளையார் சுழி போட்டு விட்டு லாபம் என்று எழுத வேண்டும் என்பது வழிவழியாக வந்த பழக்கம். இப்படி நாம் எதை எழுத வேண்டும் என்றாலும் முதலில் பிள்ளையார் சுழி போடுகிறோமே, அது எதற்காக? அதன் காரணம் என்ன? அந்த தலை எழுத்தின் பெயர் என்ன என்பதை இந்த வார ஆன்மிக சிந்தனையாக சிந்திக்கலாம்!
ஒரு மொழியின் கட்டமைப்பு ஆனது எழுத்து, எழுத்துக்கள் சேர்ந்த சொல், சொல்கள் அடுக்கிய வாக்கியம் என்பதாக இருக்கும். இதில் எழுத்து என்பது மொழியின் அஸ்திவாரம் போன்றது. எழுத்து வரி வடிவம் அதாவது எழுத்து வடிவம் மற்றும் ஒலி வடிவம் அதாவது உச்சரிக்கும் பெயர் வடிவம் எனும் இரு அமைப்புகளை உள்ளடக்கியதாக தான் எந்த ஒரு மொழியின் எழுத்தும் இருக்கும்.
தமிழில் ஒரு எழுத்துக்கு எழுத்து வடிவம் இருக்கிறது. ஆனால், அந்த எழுத்துக்கு ஒலிவடிவம் இல்லை. அதாவது உச்சரிக்கும் முறை எதுவென்று தெரியவில்லை. மேலும் தமிழ் எழுத்துக்கள் 247 களில் இந்த எழுத்து சேர்க்கப்படவில்லை. எந்த மொழியிலும் இந்த எழுத்து மொழிக்குரிய எழுத்தாக கூறப்படவில்லை.
இந்த எழுத்தை பேசா எழுத்து, மவுன எழுத்து, மோன எழுத்து, ஊமை எழுத்து என்று கூறுகின்றனர். மற்ற எழுத்துப்போல இந்த எழுத்துக்கு இன்ன பெயர் என்று எதுவுமில்லை என்பதாலும்,ஒலி வடிவம் இல்லை என்பதாலும் இதை தனி எழுத்து, ஓரெழுத்து என்றும் வடமொழியில் ஏகாட்சரம் என்றும் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
இந்த எழுத்தை தமிழின் தலைஎழுத்து என்றும் சமய சான்றோர் சுட்டுகின்றனர்.
இவ்வளவு படித்து வந்த உங்களுக்கு அது என்ன எழுத்து என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வந்திருக்கும் என்பதால் அந்த எழுத்து எது என்பதை சொல்லி விடுகிறேன்.
அந்த எழுத்தை "உ' என்று வடிவம் கொடுத்து எழுதுகிறோம். இந்த எழுத்தை தெய்வ எழுத்து என்றும் பிள்ளையார் சுழி என்றும் வழக்கில் சொல்லி வருகிறோம். உயிர் எழுத்து 12களில்" உ' போல வடிவம் கொடுத்து எழுதிவந்தாலும் அந்த எழுத்தை "உ' என்று உச்சரிப்பதில்லை. இந்த எழுத்து எதிலுமே சேராததால் அதற்கென்று பெயர் இல்லாமல் ஆதி எழுத்தாக இருக்கிறது. வடிவம் கருதி யாரோ சொல்லி வைத்ததை தான் நாம் பிள்ளையார் சுழி என்கிறோம். அதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது.
சகல வேதமந்திரங்களும் பிரணவத்தால் தான் ஆரம்பிக்கப்படுகின்றன. பிரணவம் என்றால் ஓங்காரம் ஆகும். அதுபோல நம்முடைய எல்லா காரியங்களும் முதலில் பிள்ளையார் வணக்கத்துடன் ஆரம்பிக்கப்படுகின்றன. ஏனென்றால் நாம் செய்யப் போகும் செயல்களில் தாமதம், தடை, தோல்வி வரக்கூடாது என்பதற்காக பிள்ளையாரை பிரார்த்தனை செய்து விட்டு தொடங்குகிறோம். பிள்ளையாருக்கு விக்னகங்களை தீர்ப்பதால் விக்னேஷ்வரன் என்ற நாமமும் உண்டு.
நாம் எழுதப்போகும் நுõல், சாசனம் தொடங்கும் முன் பிள்ளையார் சுழிப்போட்டுதான் எழுத தொடங்குகிறோம். எதற்காக பிள்ளையார் சுழி போட்டு ஏன் எழுத தொடங்குகிறோம் என்றால் பிள்ளையார் சுழி போடுவது என்பது பிள்ளையாரை வணங்குவதற்கு சமம் என்று ஒரு நம்பிக்கையில் தான்.
பிள்ளையார் சுழி என்பது இறைவனின் திருவடி நினைவுக்குறி என்றும் சொல்வோர் உண்டு. பிள்ளையாரின் துதிக்கை வடிவம் என்றும் கருதுவோரும் உண்டு. பிரணவம் போல இதுவும் பேசா பிரணவம் என்ற கருத்தும் இருக்கிறது.
சங்ககாலத்தில் பிள்ளையார் வழிபாடு இல்லை என்றும் பிள்ளையாரே இல்லாத போது பிள்ளையார் சுழி மட்டும் வந்தது எப்படி என்று சிலர் ஆராய்ந்திருக்கின்றனர். கணபதி வழிபாடு பல்லவர் காலத்தில் தான் ஏற்பட்டிருக்கிறது. இப்போது நாகை மாவட்டத்தில் இருக்கும் திருசெங்காட்டாங்குடி என்ற ஊரில் முன்பு வாழ்ந்த பரஞ்சோதி, பல்லவ மன்னரின் படைத்தளபதியாக இருந்தபோது வாதாபியில் போரில் வெற்றிப்பெற்றதன் நினைவாக அங்கிருந்து கணபதி கடவுளை சோழநாட்டுக்கு எடுத்து வந்தார் பரஞ்சோதியார். அந்த கணபதியை அவர் ஊரான திருசெங்காட்டாங்குடியில் பிரதிஷ்ட்டை செய்து கணபதி வழிபாடு செய்து வந்திருக்கின்றனர். அவரை பின்பற்றி மக்களும் கணபதியை வழிபாடு செய்து வந்துள்ளனர். ஆக கணபதி வழிபாடு தமிழ் நாட்டிற்கு வரும் முன்பே பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது. அப்படி பார்த்தால் அது பிள்ளையார் சுழி என்று பின்னர் வந்தவர்கள்தான் பெயரிட்டிருக்க வேண்டும். அது "பேசா எழுத்தாக தான்' இருந்திருக்கிறது.
ஒரு சிலர் முன்பு பனை ஓலையில் எழுத எழுத்தாணி கூராக இருக்கவேண்டும். கூராக இருக்கும் எழுத்தாணியைக் கொண்டு அதிகம் உலராத ஓலையில் எழுத முடியாது. அதனால் எழுதுவதற்கு ஓலை பதமாக இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்கவே சும்மா வட்டமிட்டு சுழித்து பார்த்திருக்கிறார்கள். அந்த கிறுக்கலை தான் பிள்ளையார் சுழி என்று கூறிவந்திருக்கிறோம். என்று சொல்வோரும் உண்டு.
எப்படிவேண்டுமானாலும் இருக்கட்டும் அவரவர் கருத்துகள். நம்முடை நம்பிக்கை மற்றும் பழக்கம் எல்லாம் அர்த்தம் கொண்டதாகவே இருக்கும். ஏனெனில் நம் முன்னோர்கள் பரிசீத்துப்பார்த்து, அவர்கள் காரியங்களில் நன்மைகள் ஏற்பட, ஏற்பட தானே அதை படிப்பினையாக கொண்டு எழுத தொடங்கும் முன் பிள்ளையார் சுழி போடும் பழக்கத்தை நமக்கு தந்து சென்று இருக்கிறார்கள்.
எப்படியோ இறைவனை நினைவுகூறும் ஒரு எழுத்தும் இறைவனை ஒத்து பேசாதிருக்கும் குணம் கொண்டு அது வும்"பேசா எழுத்தாக, மோன எழுத்தாக, ஊமை எழுத்தாக' இருக்கிறது என்பது ஆச்சரியம் தானே!
தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக