புதன், 28 ஏப்ரல், 2010

12. வாங்க,பர்சனல் பக்தி செய்யலாம்! தேவராஜன்

12. வாங்க,பர்சனல் பக்தி செய்யலாம்! தேவராஜன்
இன்று பாஸ்ட்புட் கலாசாரத்தில் எதையுமே துரித கதியில் செய்துகொண்டிருக்கும் நாம்பொருளற்ற வாழ்க்கையில் பொருள் தேடி அலைந்து கொண்டிக்கிறாம்.வாழ்க்கையில் நம்மை படைத்தவனை நினைப்பதைவிட, பணத்தையே சதாகாலமும் நினைத்துக்கொண்டிருக்கிறோம்! என்ன செய்வது? செயற்கையான விருப்பங்களையும், ஆசைகளையும் கட்டமைத்துக்கொண்டு நினைப்பு கெடுக்கும் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் சூழலில் பொருளில்லார்க்கு வாழ்க்கை பொருளற்றதாகிவிட்டது.
சுற்றிக்கொண்டிருக்கும் பூமியில் ஓடிக்கொண்டேயிருக்கும் காலத்தில் நாமும் ஓடிக்கொண்டேயிருக்கிறோம். இப்படிப்பட்டவர்களிடம் பணம் பண்ணும் வழியைச் சொன்னால் காதுகொடுத்து கேட்பார்கள். ஆனால்,பக்தி பண்ணுவது பற்றி சொன்னால் பயனளிக்காது என்பதையும் அறிவேன். பொன்னுக்காகவும், பொருளுக்காகவும் ,பெண்ணுக்காகவும் ,பெருமைக்காகவும், பதவிக்காகவும் இன்னம் எதை எதையோ தேடி தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் எங்கோ, எப்போதோ இடறி விழுந்து, பலத்த அடிப்பட்டு எழுந்திருக்க முடியாத போது "கடவுளே!' என்று கூக்குரலில் கூப்பாடு போடுவீர்கள்! அப்போதாவது கடவுளை நினைக்கதோன்றும் அப்போதாவது இதை படித்த ஞாபகம் வரும். இனியாவது மனதில் பக்தியை விதைத்து நற்கதியை அறுவடைய செய்ய புத்திவரும் நேரத்தில் இங்கே சொல்லப்படும் வழிமுறை உங்களுக்கு உபயோகப்படும்.
வாழ்வில் கஷ்டம் வரும்போதுதான் கடவுளை நினைப்பேன் என்று கருதாமல் சந்தோஷமாக இருக்கும் போதே நல்ல நிலையில் இருக்கும் போதே கடவுளை நினைத்துக்கொண்டிருக்க பக்தி செய்ய சுலபமான வழி எது? என்பதை இந்த வார ஆன்சிக சிந்தனையாக சிந்திப்போம்!
நமக்காகவோ, பிறருக்காகவோ வெளியிடத்தில் அதாவத கோயில் விக்ரகம் முன்பும், சக்கரம்,யாகம்,ஹோமம் போன்ற வழிபாடுகளை புரியும் புரோகிதர்கள்,சாஸ்திரிகள்,அர்ச்சகர்கள் செய்யும் பூஜையை பரார்த்த பூஜை அதாவது புறவழிபாடு என்கிறோம்.
நம்முடைய பிரார்த்தனையை இன்னொருவர் ஊடகமாக இருந்து இறைவனிடம் சேர்ப்பது ஆகும்.
இது எப்படி என்றால் நமக்கு தேவையான ஒன்றை அரசிடமிருந்து பெற அதிகாரிகள் மூலம் விண்ணப்பித்தது, அதற்கான வழிமுறைகளை பின்பற்றி பெறுவது போன்றது.இதை தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம்.
இன்றைய அவசர வாழ்க்கையில் காலையில் எழுந்து, குளித்து, சூரியநமஸ்காரம் செய்து, அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்று பூஜை,வழிபாடு செய்துவிட்டு, பின்னர் சாப்பிட்டு விட்டு அலுவலகம் செல்வது என்பது நடக்கிற விஷயமா, என்ன? காலையில் எழுந்ததுமே ஆயிரத்தெட்டு வேலை இருக்கும் இதை முடிக்கவே நேரமில்லாதப்போது எப்படி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வதாம்? அப்படி என்றால் வழிபாடு செய்யவேண்டாமா? எப்போது நேரம்,ஓய்வு கிடைக்கிறதோ அப்போது வழிபாடு செய்துகொள்ளலாம் என்றிருபது சரியாகுமா? இப்படி எல்லாம் கேள்விகள் எழும். நீங்கள் காலத்துக்கு ஏற்ப மாறிகொண்டது போல, பக்தி செய்யும் முறையையும் கொஞ்சம் மாற்றிக்கொண்டால் போதும். அதற்கு மிக எளிமையான வழி இருக்கிறது. அது பர்சனல் பக்தி . இதை அகவழிபாடு என்றோ,
ஆன்மார்த்த வழிபாடு என்றோ சொல்லலாம்.இந்த பக்தி முறை அற்புதமானது. சுலபமானது. நமக்குள் நாமே வழிபட்டுகொள்வதாகும். அதாவது இறைவனை நம் மனதில் இருத்திக்கொண்ட தியானம்,மந்திரம் மனதுள் சொல்லிக்கொண்டு வழிபடுவதாகும். இந்த வழியில் நம் தேவைகளை பெற இன்னொருவர் தயவு தேவையில்லை. நம் தாயிடமோ,தந்தையிடமோ, அண்ணன், தம்பியிடமோ தம் குறைகளை, கஷ்டங்களை கூறி பயன் பெறுவது போலாகும். இதற்கு பிறர் கேரண்டியோ,ரெக்கமென்டேஷனோ தேவையில்லை.
கோயில் சென்று வழிபடும் முறையில் உடல் துõய்மை, மனத்துõய்மை, மடி, ஆச்சாரம் எல்லாம் தேவை. எல்லோருமே கருவறைக்குள் சென்று பூஜை செய்ய முடியாது. அதற்கெல்லாம் சாதி,சமய தீட்சை என பல நியமங்கள் உள்ளன.
பர்சனல் பக்தியில் அதெல்லாம் தேவையே இல்லை. நீங்கள் நினைத்த மாத்திரத்தில் மனதில் எந்த கோயில் கருவறையிலும் உங்களுக்குப்பிடித்த கடவுளுக்கு வழிபாடு செய்து சந்தோஷபடலாம்.
புறவழிபாடு செய்பவர்கள் உடல்நலம் இல்லாதபோது வழிபாடு செய்ய முடியாது.
"வாயானை மனத்தானை நின்ற
கருத்தானை கருத்தறிந்து முடிப்பான் தன்னை என்று அப்பர் அடிகள் சொல்வது ஆன்மார்த்த பூஜைபற்றியதே. ஊனக்கண்ணால் காணமுடியாத இறைவனை மனக்கண்ணால் காண இந்த முறை வழிபாடு உதவும்.
"ஓம் நமசிவாய' என்ற மகா மந்திரத்தை மனதுள் நினைப்பதே பர்சனல் பக்தியின் முதல் வழி. இதை செய்தாலே போதும் கோயில் செல்ல முடியலையே, கண்ணார கடவுளை தரிசனம் செய் முடியலையே... இப்படி எல்லாம் ஆதங்கம்பட தேவை இருக்காது. உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் "ஓம் நமசிவாய' மகா மந்திரத்தை மனதுள் நினைத்துக்கொண்டிருங்கள். காலையில் படுக்கையில் எழுந்தவுடன் முதல் வேலையாக ஒரு 5 நிமிடம் மகா மந்திரத்தை நினத்துக்கொண்டு பின் மற்ற வேலையை பாருங்கள். கடைக்கு பால் வாங்க செல்லும் நேரத்தில், குளிக்கும் நேரத்தில், பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து செல்லும் நேரத்தில், ஆட்டோவிலோ, பஸ்சிலோ செல்லும் நேரத்தில், லன்ஞ் நேரத்தில், மாலையில் அலுவலகம் விட்டு வீட்டுக்கு திரும்பும் போது பஸ்சில் வரும் நேரத்தில் என இப்படி கிடைக்கும் எந்த நேரத்திலும் மகா மந்திரத்தை மனதுள் சொல்லிக்கொண்டிருங்கள். இப்படி செய்வது தான் பர்சனல் பக்தி!
அடுத்ததாக கொஞ்சம் கூடுதலாக நேரம் கிடைத்தால் குறைந்த பட்சம் பத்துநிமிடம் கிடைத்தால் பர்சனல் பக்தியின் இரண்டாவது வழியை பழகலாம். அந்த வழிமுறையும் எளிமையானது தான். சுலபமானதுதான். இதோ அதையும் தெரிந்து கொள்ளுங்கள்.இரண்டாவது வழியை எப்படி செய்யவேண்டுமென்றால் மூலாதாரத்தில் "ஓம் 'என்றும் சுவாதிட்டானத்தில் "ந' என்றும் மணிபூரகத்தில் "ம' என்றும் அநாகத்தில் "சி' என்றும், விசுத்தியில் "வா' என்றும், ஆக்ஞையில் "ய' என்றும் நினைத்து கீழேயிருந்து மேல் நோக்கி செல்வது கீழ்முறை அல்லது ஏறுமுறை என்று திருமூல ர் திருமந்திரத்தில் கூறியவழிமுறையாகும்.
உங்களுக்கு புரியும்படி எளிதாக சொல்ல வேண்டும் என்றால் முதுகு தண்டின் கீழ் "ஓம்' என்று நினைத்து, அதற்கு மேலே இருக்கும் குறிக்கு சற்றுமேலே "ந' என்று நினைத்து, தொப்புள்கொடி புள்ளியில் "ம' என்று நினைத்தும், இருமார்புகாம்புகளுக்கு மத்தியில் உள்ள குழியில் "சி' என்று நினைத்தும் தொண்டைக்குழி மத்தியில் "வா' என்று நினைத்தும், இரு புருவமத்தியில் "ய' என்று நினத்துக்கொண்டிருப்பது தான் இரண்டாம் படிநிலை. உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் பக்தி செய்யும் முறை தான் மேற் சொன்ன முறை. இதை பின்பற்ற எல்லோருக்கும் முடியும் தானே?
தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக