புதன், 28 ஏப்ரல், 2010

6. ஏகன் அனேகன் இறைவன்! தேவராஜன்

6. ஏகன் அனேகன் இறைவன்! தேவராஜன்
ஈஸ்வரன், கிருஷ்ணன்,ராமன்,முருகன், விநாயகர்,ஆஞ்சநேயர் என பலவாறாக இறைவனாக வழிபடுகிறோம். அவரவர்களுக்கு இஷ்டமான இறைவனை வழிபட்டு இறைஅனுபூதி பெற்றவர்கள் அனேகம். ஈஸ்வரனை வழிப்பட்டு ஈசனுக்கு பிரியமானவர்கள் நாயன்மார்கள். கிருஷ்ணனை வழிபட்டு கிருஷ்ணனின் அருளைப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இப்படி ஒவ்வொரு தெய்வத்தையும் நம்பி வழிபாடு செய்து அந்ததந்த இறைவனால் அருள்பெற்றிருப்பதால் எந்த தெய்வத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.
ஆக, எந்த தெய்வத்தை நம்பி வழிபாடு செய்தாலும் இறையருள் பெறுவது திண்ணம் என்றால் பக்தர்களுக்கு ஒரு சந்தேகம் எழும். எந்த தெய்வம் உசத்தி? எந்த தெய்வத்தை வழிபட்டால் உடனடி விமோசனம் கிடைக்கும்? என்ற கேள்விகள் எழுவதோடு மேலும்,
இறைவன் ஒருவனா? ஒன்றுமேற்பட்டவனா? என்பதில் சிலருக்கு குழப்பம் இருக்கிறது.உலகம் எங்கும் எத்தனை ஆயிரம் கோயில்கள்.எத்தனை ஆயிரம் தெய்வங்கள்.அதற்கு தான் எத்தனை நாமங்கள், உருவங்கள். இதில் எத்தனை மதங்கள், எத்தனை வழிபாடு முறைகள்? இப்படி ஒரு நாட்டுக்கொரு இறைவன், ஒரு மதத்திற்கொரு இறைவன், ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கு ஒரு இறைவன்,குறிப்பிட்ட சாதிக்கொரு இறைவன், ஒவ்வொரு குடும்பத்திற்கு ஒரு குலதெய்வம் என்றெல்லாம் இறைவனை பல வாறாக வழிபடுகிறோமே அப்படி என்றால் இறைவன் ஒருவன் இல்லையா? என்று சந்தேகம் எழுகிறதல்லவா? ஆனால் ,அவதாரபுருஷர்களும் ஞானிகளும் இறைவன் ஒருவனே! என்கின்றனர். சாமானிய மக்களாகிய நமக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி ஞானிமார்கள் மட்டும் இறைவன் ஒருவனே என்று உறுதியாக கூறுகின்றனர். எவ்வாறு என்பதை இந்த வார ஆன்மிக சிந்தனையாக சிந்திப்போம்!
இறைவனுக்கு இயல்பாகவே வடிவமில்லை; அவனை மனதாலும்,வாக்காலும் எட்டுவதற்கரியவன் என்று வேதம் சொல்லுகிறது. இருந்தாலும், அவனுடைய வடிவை பலவாறு கோயிலிலும்,வீட்டிலும் பூஜிக்கிறோம். அதற்கு காரணமும் இருக்கிறது. நாம் உண்ணும் உணவு வயிற்றுக்குத்தான் போகிறது. வயிறுபசியை தீர்க்கிறது. அப்படி என்றால் எல்லாரும் ஏதேனும் ஒரு உணவு வகையை மட்டுமே சாப்பிட்டால் என்ன? பிறகு ஏன் பல உணவு வகைகளை சாப்பிடுகிறோம்.மானம் காக்கத்தான் ஆடை. அதற்கு தானே ஆடை அணிகிறோம். அப்படி பார்த்தால் எல்லாருமே ஒரு வகை, ஒரே நிற ஆடையை அணிந்துகொண்டால் என்ன? பதில் சொல்ல முடிகிறதா? ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகை உணவு, உடை பிடித்திருக்கிறது. அது போல ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வகையான இறைவடிவம் பிடித்திருக்கிறது. அதற்கேற்றார் போல இறைவனும் பல வடிவங்களில் நுழைகிறான்.
"ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க!' என்று மாணிக்க வாசகர் சிவனின் புராணத்தை சொல்லும் போது ஈஸ்வரனை இப்படி அழைத்து வணங்கு கிறார். ஏகம் என்றால் ஒன்று. அனேகம் என்றால் பல. ஆக இறைவனை ஒருவனாக இருப்பவனும், பலவாக இருப்பனும் ஆன ஈஸ்வரா உன் பாதக்கமலம் வாழ்க என்று வழிபடுகிறார். ஆக மாணிக்கவாசகருக்கும் இறைவன் ஒருவனாக மட்டுமல்ல பலவாகவும் இருக்கிறான் என்று நம்புகிறார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மாணிக்க வாசகர் இறைவனை ஒருவராகத்தான் பாவித்தார்.
எங்கள் ஊர் கோயிலுக்கு வந்த சமய சொற்பொழிவு செய்த ஒருவர் இறைவன் ஒருவனே என்பதற்கு உதாரணமாக சொல்லும் போது "நாகராசன்' இவர் ஒருவர். ஆனால் நாகராசன் தன் தந்தைக்கு மகன். தன் தம்பிக்கு அண்ணன். மனைவிக்கு கணவன். பிள்ளைகளுக்கு தந்தை. பேரனுக்கு தாத்தா. ஆக, நாகராசன் என்கிற ஒருவர் எப்படி உறவுகளுக்கு ஏற்ப மகனாக,அண்ணனாக,கணவனாக, தந்தையாக, தாத்தாவாக பல பெயர் பெறுகிறார். பல பெயர்கள் ஒருவர் பெறுவதால் அவர் பலரா? என்று விளக்கி, இறைவன் என்பவன் பல நாமங்களில், பல ரூபங்களில் இருந்தாலும் ஒருவனே என்று எளிமையாக விளக்கினார். அவர் சொன்ன உதாரணம் என்னவோ புரியும் படிதான் இருந்தது.
இந்த உதாரணத்தில் கூட கொஞ்சம் குழப்பம் வரத்தான் செய்யும். எப்படி எனில், நாகராசன் என்பவர் ஒருவராக இருந்தப்போதும் அவர்காட்டும் அன்பு உறவுக்கு ஏற்ப மாறக்கூடும். அம்மாவிடமும் மனைவியிடமும் காட்டும் அன்பு ஒன்றுபோல இருக்காது. தன் தம்பியிடம் காட்டும் உரிமைக்கும் தன் மகனிடம் காட்டும் உரிமைக்கும் வித்தியாசம் உண்டு. அப்படி பார்த்தால் இறைவனும் உருவம், நாமங்களுக்கு ஏற்ப பக்தர்களுக்கு அருள்பாலிப்பதில் வேறுபடுவதாக கருதக்கூடும்.
அடுத்ததாக மிகச்சிறந்த இரு உதாரணங்கள் இறைவன் பலவாக தெரிந்தாலும் இறைவன் ஒருவனே என்று எடுத்தியம்புகின்றன.
ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை சில்லு சில்லாக உடைத்து தரையில் பரப்பி வைத்து விட்டு அதை உற்று பாருங்கள். ஒவ்வொரு சில்லிலும் உங்கள் முகம் பிரதிபலிக்கும். உங்களுக்கு இருப்பது ஒரு முகம் தானே! ஆனால் ஒவ்வொரு கண்ணாடி சில்லிலும் ஒரு முகம் தெரிகிறதே! அப்படி என்றால் உங்களுக்கு பல முகங்களா இருக்கிறது?
ஆற்று நீரில் நுரை பொங்கி கரையோரம் ஒதுங்கும். அந்த நுரையில் ஒவ்வொரு குமிழிலும் கரையில் உள்ள மரம் காட்சியாகும். இருப்பது ஒரு மரம். ஆனால் அத்தனை நுரை குமிழிழும் தெரிவதால் பல மரங்கள் என்றா சொல்ல முடியும்?
ஒரு முகம், ஒரு மரம் என்பதும் உண்மை. அதே சமயம் கண்ணாடி சில்லில் தெரியும் பல முகங்களும், நுரையில் காட்சியாகும் பல மரங்களும் உண்மை. ஆக, கண்ணாடி சில்லுவில் தெரியும் முகத்திற்கும், நுரையில் விழுந்த மரம் பிம்பத்திற்கும் ஆதாரமாக இருப்பது உண்மையான ஒன்று. அந்த ஒன்று இல்லாமல் பல இல்லை. ஆதலால் ஒன்று தான் பல வாக தெரிகிறது. பலவானதை தொகுத்தால் ஒன்றாகும். எனவே இறைவன் ஒருவன் என்பதே உண்மையாகும். இறைவன் பல என்பது காட்சிப்பிழை அல்லது மாயபிம்பம் ஆகும். இதை தான் நாட்டுப்புறத்தில் "ஹரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயில் மண்ணு' என்பர்.
இதை புரியும் படி சொல்வதென்றால் இறைவன் உருவமில்லாதவன். உருவமில்லாதவனை எந்த உருவத்தில் வழிபட்டாலும் அது எல்லாம்வல்ல ஒருவனைத் தான் சாரும். எந்த நாமங்கள் சொல்லி வழிபட்டாலும் அந்த ஒலியும் ஓசையும் ஒருவனையே சென்றடையும்.
நீங்கள் உலகின் எந்தப் பரப்புகளில் இருந்து தோன்றும் ஆற்றில், நதியில் பயணப்பட்டாலும் முடிவில் கடல் என்கிற பரந்துபட்ட ஒன்றில் தான் சங்கமம் ஆகமுடியும். ஆறும், ஊரும் வேறாக இருந்தால் என்ன? அவை உங்களை கடல் என்கிற ஒன்றில் தானே இணைக்கிறது. அதுபோல தான் நீங்கள் எந்த தெய்வங்களை வழிபட்டாலும் உங்கள் பிரார்த்தனை ஒன்றாகிய இறைவனை தான் சென்றடையும். ஒரு பொருள் குறித்த வார்த்தை மொழிகளுக்கு ஏற்ப ஒலியில் மாறுபடும். ஆனால் அர்த்தத்தில் ஒரு போதும் மாறுபடுவதில்லை. அது போல தான் இறைவனும். ஆதலால் இறைவன் ஒருவனே! என்பதை மனதில் நிறுத்துங்கள். அதே சமயம் நீங்கள் எந்த வடிவில், எந்த பெயரில் இறைவனை வழிபட்டாலும் அது ஒன்றாகி ஈசனை வழிபட்டதாகவே அர்த்தம் ஆகும். நாம் வழிபடுவதுதான் முக்கியம். எந்த தெய்வத்தை என்பதல்ல.
தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக