திங்கள், 1 ஏப்ரல், 2013

நான்காம் பாகம்- ஆன்மிகம்

நான்காம் பாகம்- ஆன்மிகம் <நான்காம் பாகம்- ஆன்மிகம் ( 75 முதல் 84 வாரங்கள் வரை) இப்படிதான் வாழணும்!/75/10.01.2013/ எப்படியும் வாழ்வது வாழ்க்கை அல்ல. இப்படிதான் வாழவேண்டும் என்பதற்கு வரையறைகள் உண்டு. அதனால் தான் மனிதன் மனிதனாக வாழ்வது எப்படி என்பதற்கு சாஸ்திரங்கள் பல வழிமுறைகளை கூறுகின்றன. சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறை படுத்தும் போது மனிதனுடைய வாழ்வு சிறக்கும். இறை உணர்வும் மிகும். குடும்பமே ஒரு கோயிலாகும். தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கண் விழித்து எழுந்து விடவேண்டும். பிறகு மங்களகரமான பொருட்களைப் பார்க்கவேண்டும். மனிதன் உறங்குவது இறப்பு என்றும், உறங்கி விழிப்பது பிறப்பு என்கிறார் வள்ளுவர். உறங்கியவன் காலையில் எழுந்துவிடுவான் என்பதற்கு எவ்வித நிச்சயமும் இல்லை. ஆதலால், எழுந்ததற்கு நன்றி கூறும் விதமாக குளிக்கும் போது இறைவன் நாமங்களை சொல்லிக் கொண்டே குளிக்கவேண்டும். இறைவன் நாமத்தை சொல்வதால் உள்ளம் சுத்தமாகும். பெண்கள் அவசியம் மஞ்சள் தேய்த்து குளிக்கவேண்டும். குளித்து முடித்தவுடன் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து நின்று கொண்டு உலகத்தில் அனைத்தும், அனைத்து உயிர்களும் நல்ல படியாக இருக்கட்டும் எனக் கூறி இரண்டு கைகளில் நீர் எடுத்து அர்க்கியம் கொடுக்கவேண்டும். குளித்து முடித்து சுத்தமான ஆடை உடுத்தி, நெற்றியில் அவரவர் பழக்கப்படி திருநீறு, குங்குமம், நாமம், சந்தனம் போன்றவற்றை இட்டுக் கொள்ளலாம். உணவு உண்ணும் போது இறைவன் நாமங்களை நினைத்துக் கொண்டு இறைவன் கொடுத்த பிரசாதமாக நினைத்து உண்ணவேண்டும். தானங்களில் சிறந்தது அன்னதானம். உணவை சிறிது கூட வீணாக்க கூடாது. உணவை இறைவனை நினைத்துக் கொண்டு உட்கொண்டால் உடலும், உள்ளமும் ஆத்மசக்தி பெறும். செய்யும் தொழிலில் நேர்மையும், முழுமையும் வேண்டும். செய்யும் தொழில் தெய்வ ஆராதனை, வழிபாட்டுக்கு சமம் என சாஸ்திரம் கூறுகிறது. மனிதன் துõங்கி எழுந்தது முதல் இறை உணர்வுடன் செயல்படவேண்டும்.< இறைவன் திருநாமம் மனதில் நிறைந்திருந்தால் தீய எண்ணங்கள் வராது. மாலையில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்யவேண்டும். விளக்கு ஏற்றுவதால் மகாலட்சுமியின் அருள் இல்லம் முழுவதும் நிறையும். மாலை இறைவனது திருப்பாடல்களை தனியாகவோ, கூட்டாகவோ பாடினால் இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகும். இரவில் துõங்கச் செல்லும் போது அன்றைய பொழுதினை நல்ல படியாக கழிக்க உதவிய இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்.< தினமும் இறைவனை தியானிப்பதற்கு என்று நேரம் ஒதுக்கவேண்டும். வயிற்றுக்கு உணவு எவ்வளவு அவசியமோ, அதைவிட மனதிற்கு தியானம் அவசியம். இறைவன் பற்றிய நினைப்பு ஒன்றே மனித மனத்திற்கு நிம்மதி அளிக்கும்.அதற்கு நம்மை தயார்படுத்தவே சாஸ்திரங்கள் உதவுகின்றன. -தேவராஜன் ************************************ ************************************************************************************************************************ இறைசக்தி!/76/17.2.2013/**************************************** இந்த உலகத்திற்கு ஒரு ஒழுக்கு முறை இருக்கிறது. உலகில் உள்ள ஒவ்வொரு உயிரையும்,பொருளையும் இயக்குகின்ற ஒரு சக்தி இருக்கிறது. அது எல்லா உயிர்கள் மீதும் ஆட்சி நடத்துகிறது அதுதான் இறைசக்தி. இது வார்த்தையால் விவரிக்க முடியாத ஏதோ ஒரு அதிசய சக்தி. இந்த அதிசய சக்தி உலகில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் நிறைந்து நிற்கிறது. கண்ணால் காண முடியாது. ஆனால் உணரும்படி இருக்கிறது. நமது புலங்களால் அறியக்கூடிய பொருள்கள் போல் எந்த வகையிலும் நிருபிக்கப்பட முடியாதபடி முற்றிலும் புலங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. இந்த தெய்விக சக்தி உயிரினங்களின் நன்மைக்காக உலகமெங்கும் பரவி நிற்கிறது. மனிதனுக்கு அச்சம் இருக்கிறது. சிறிது கண் மூடியதும் ஏதாவது கடித்து விடுமோ, திருடர் வந்து தாக்குவாரோ என்ற அச்சத்தில் அவன் தலை மாட்டில் ஒரு தடியை வைத்துகொள்கிறான். தடி பக்கத்தில் இருப்பது நல்லது.திருடன் வந்தால் அடித்து விரட்டு உதவும் என நினைக்கிறான். திருடன் அந்த தடியை எடுத்து அவன் தலையில் போட்டால் என்னவாகும்? யாருடைய தைரியத்தில் துõங்குகிறாய் ! இச்சமயத்தில் இறைவன் கையில் இருக்கிறாய். நீ விழித்து எழுந்தால் அல்லவா உன்னை பாதுகாத்து கொள்ள முடியும்? உறக்கத்தில் உன்னை பாதுகாப்பவர் யார் ? நாம் ஏதோ ஒரு சக்தியை நம்பி துõங்குகிறோம். எந்த சக்தியின் நம்பிக்கையில் சிங்கம்,பசு முதலிய பிராணிகள் உறங்குகின்றனவோ அதை நம்பியே நாமும் உறங்குகின்றோம். தாயின் மடியில் குழந்தை கவலை இல்லாமல் துõங்குகிறது. நீங்களும் நானும் எங்கும் பரவி உள்ள அந்த இறை சக்தி தாயின் மடியில் உறங்குகிறோம் என்ற நம்பிக்கை பெற வேண்டும். எந்த சக்தியின் அடிபடையில் நம் வாழ்க்கை முழுமையும் நடந்து கொண்டு இருகிறதோ, அதை நாம் மேன்மேலும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அந்த சக்தியில் நமக்கு எவ்வளவு அதிக நம்பிக்கை தோன்றுமோ,அந்தளவுக்கு அதிக பாதுகாப்பும் நமக்கு ஏற்படும். நமக்கு அந்த சக்தியின் அனுபவம் எந்த அளவுக்கு நமக்குஅதிகமாகுமோ அந்த அளவுக்கு நாம் ஆனந்தம் பெறலாம். இந்த இறைசக்தி என்பது ஒரு பொருள் அல்ல. அப்படி இருந்தால் அதை இன்றைய விஞ்ஞானம் விட்டு வைத்து இருக்காது. அது ஒரு பொருளில் மட்டும் இயங்குவது இல்லை. இந்த உலகத்தில் அனைத்திலும் அது முழுமையாக செயல்படுகிறது. அதனால் தான் அதை புரிந்துகொள்ளமுடியவில்லை. இதை விஞ்ஞானத்தால் ஒருக்காலும் பிரிந்து கொள்ளவும் முடியாது.உணரத்தான் முடியும். - தேவராஜன். ************************************************************************************************************************************************************ நடப்பது நடக்கட்டும்/77/24.02.2013/*********************************** ‘நாம ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்குது. என்ன பண்றது?’ இப்படி சிலர் அலுத்துக்கொண்டு சொல்வதுண்டு. நாம் செய்கிற செயல்கள் எதிர்வினையாவது இறைவன் கட்டளைப்படி அல்ல. அது நாம் செய்த முற்பிறவி கர்ம பலன்கள். முற்பிறவியின் கர்ம பலனுக்கு ஏற்ப அனைவருக்கும் பிறவி ஏற்படுகிறது. ஆதலால் நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை அனைவரும் செய்தாக வேண்டும். பலன் எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ‘கடமையை செய் பலனை எதிர்பாராதே’ என்று அர்ஜூனனுக்கு உபதேசம் செய்த கிருஷ்ணர் சொன்ன நுட்பமான கருத்தும் அதுதான். அவரவருக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்து வரவேண்டும். செய்யும் கடமையில் நிறைய பிரச்னைகள் , தடங்கல்கள், தோல்விகள் வரலாம். அதை எல்லாம் கண்டு பயந்து ஓடிவிடக்கூடாது. அப்பாடா! பட்டது போதும்... நான் சாமியாராக போகிறேன் என்று ஏதோ காட்டுக்கோ, மலைக்கோ சென்று தியானம் செய்வதால் யாரும் பிறவியில் இருந்து தப்பிக்க முடியாது. கடமையை செய்யாமல் ஓடினால் பாவம் மேலும் சேரும். யார் ஒருவருக்கு செய்வதற்கு கர்மங்கள் இல்லையோ அவரால் யாரும் பாதிக்கபட வில்லையோ, அவரை நம்பி யாரும் இல்லையோ, அப்படி பட்ட ஒருவர் பக்குவபட்ட மனத்துடன் இறை வழியில் துறவியாகலாம். நாம் எதிர்ப்பார்த்தபடியே எல்லாம் நடப்பதில்லை. அது நம் கர்மவினைபடிதான் நடக்கும். ஒரு குட்டிக்கதை: ஒரு பாம்பாட்டி கையில் ஒருபெரிய பாம்பு ஒன்று சிக்கியது. அதன் வீரியம்,அதன் துடிப்பு அவனுக்கு கட்டுக்கு அடங்கவில்லை. ஆகவே அதன் வீரியத்தை குறைப்பதற்காக ஒரு பெட்டியில் வைத்து பட்டினி போட்டான். சில நாட்களுக்குள் தன் வசப்படும் என நினைத்தான். அதன்பின் அதைவைத்து பிழைப்பு நடத்தலாம் என்று நினைத்திருந்தான். சில நாட்கள் சென்றன. பாம்பு உணவு இன்றி மிகவும் மெலிந்து,வலிமை குறைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இனிபிழைக்கமாட்டோம் என அது வருந்தியது. அச்சமயத்தில் ஒரு எலி பசியுடன் அந்தப்பெட்டியை பார்த்தது. நமக்கு உணவு இதில் இருக்கும் என எண்ணி, பெட்டியை துளையிட்டு உள் புகுந்தது. உள்ளே பாம்பு இருக்க கண்டு பயம் கொண்டு அஞ்சி நின்றது. பாம்பு அந்த எலியை சாப்பிட்டது. எலி வந்த துளையின் வழியாக வெளியே தப்பி விட்டது. ஆக பாம்பாட்டி ஒரு விதமாக நினைத்தது நடக்கவில்லை. உயிர் பிழைக்க மாட்டோம் என நினைத்த பாம்பு எலியை தின்றுவிட்டு பிழைத்து விட்டது. பாம்பு பெட்டிக்குள் உணவு கிட்டும் என எண்ணிய எலி மாய்ந்தது. இந்தக் கதையில் எல்லாஉயிர்களும் தனக்கு உண்டான கருமத்தை செய்தது. இது விதியின் செயலால் வேறுவிதமாக நடந்து விட்டது. ஆதலால் நடப்பது நாராயணன் செயல். முடிந்தது ஈசன் செயல் என்று மனப்பக்குவம் பெற்றால் எந்த வினைக்கும் அஞ்சவேண்டாம். - தேவராஜன். ********************************************************************************************************************************************************** மகா சிவராத்திரி மகிமை!/78/3.3.2013******************************* நாகரீக மோகத்தில் நமது உடை, உணவு, வாழ்க்கை முறை எல்லாம் மாறிவிட்டது. அது வழிபாட்டையும் விட்டு வைக்கவில்லை. உதாரணம் மகா சிவராத்திரி. வருகிற 9ம் தேதி சனிக்கிழமை மகாசிவராத்திரி விரத நாள் வருகிறது. இப்போதெல்லாம் மகாசிவராத்திரி விரத நாள் என்பது வியாபார திருநாளாகிவிட்டது. சில பக்தர்களை மகிழ்விக்க ஊரெல்லாம் திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் என்று விடிய விடிய திரைப்படம் காட்டுகிறார்கள். வீட்டிலோ விடிய விடிய டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள். இவைகளில் ஆர்வம் இல்லாதவர்கள் சிலர் விடிய விடிய சீட்டு விளையாடி இரவை கழிக்கிறார்கள். பெண்கள் தாயம் விளையாடுகிறார்கள். ஆக, சிவராத்திரி என்றால் இரவு முழுவதும் எப்படியாவது கண்விழிக்க வேண்டும். துõங்காமல் அன்றிரவு இருந்துவிட்டால் ஈசனின் அருள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இப்படி எல்லாம் செய்கிறார்கள். துõங்காமல் இருப்பதுதான் சிவராத்திரி விரதம் என்று இவர்களுக்கு யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. சிவராத்திரியில் ஏன் கண்விழித்திருக்க வேண்டும் என்றால், சிவராத்திரியன்று இரவு சிவவழிபாடு இன்றியமையாதது என்பதை உணர்த்துவதற்குத்தான். சிவராத்திரி நாளில் சிவாலயங்களில் நான்கு ஜாமப் பூஜைகளும் சிறப்பாக நடைபெறும். முதலாம் ஜாமத்தில் பஞ்கவ்யம், சந்தனக்குழம்பு போன்றவை சாத்தப்படுகின்றன. பயற்றன்னம் நைவேதிக்கப்படுகின்றது. வில்வம் இலையால் அர்ச்சிக்கப்படும். இரண்டாம் ஜாமத்தில் அமிர்தம், அகிற் குழம்பு என்பன சாத்தப்படும். மூன்றாம் ஜாமம் ஆனதும் லிங்கோற்பவருக்கு தேன், பச்சைக்கற்பூரம், தாமரை போன்றவை சாத்தப்பட்டு எள்ளுச்சாதம் நைவேதிக்கப்பட்டு ஷன்பகம், ஜாதிமுல்லை, வில்வம் இலைகளால் அர்ச்சிக்கப்படும். நான்காம் ஜாமத்தில் கருப்பஞ்சாறு, குங்குமப்பூ என்பவை சாத்தி சுத்த அன்னம் நைவேதிக்கப்படும். இந்த நான்கு கால பூஜைகளை கண்டுகளித்து வழிபாடு செய்ய வேண்டுமானால் இரவு விழித்திருந்தால்தானே முடியும். அதனால் சிவராத்திரியில் இரவு கண்விழிக்கச் சொன்னார்கள். சிவராத்திரி மகிமை மிகுந்த விரத நாள். <மாசியில் பிரம்மதேவரும், பங்குனியில் மகாவிஷ்ணுவும், சித்திரையில் உமாதேவியும், வைகாசியில் சூரியனும், ஆனியில் ஈசானியரும், ஆடியில் குகனும், ஆவணியில் சந்திரனும், புரட்டாசியில் ஆதிசேஷனும், ஐப்பசி யில் இந்திரனும், கார்த்திகையில் சரஸ்வதியும், மார்கழியில் மனோன் மணியும், தை மாதத்தில் நந்திதேவரும் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து பேறு பெற்றிருக்கிறார்கள் என்று சிவபுராணம் சொல்கிறது. எனவே, இனிமேலாவது சிவராத்திரி பொழுதை கேளிக்கையில் கழிக்காமல், ஈசனை மனதில், இரவெல்லாம் ஏதோ ஒரு சிவாலயத்தில் வழிபடுங்கள். இயலாதவர்கள் வீட்டில் கண் விழித்து, சிவபுராணம்,நமச்சிவாய திருப்பதிகம், திருநீற்றுத் திருப்பதிகம், சிவாயநம பாரயணப்பாடல்களைப் படிக்கலாம், பாராயணஞ் செய்யலாம். லிங்கபுராணத்தை சிவராத்திரியன்று படித்தல் நல்லது. <சிவராத்திரியன்று கண்ணுறங்காமல் ஈசனை மனதிலிறுத்தி வணங்குபவர்கள் அவனருளை முழுதுமாகப் பெறுவார்கள் என்பது திண்ணம்!< - தேவராஜன் *************************************************************************************************************************************************************** மன நிறைவு வேண்டும்!/79/10.3.2013/********************************** ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், அது கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுவதுதான் தவறு. உன் விதிபடி கோடி கோடியாய் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் பணத்தைத்தேடு. அதே சமயம், போதும் என்ற மனமே பொன் செய்யும் என்பதையும் நினைவில் கொள். இது ஆறுதலுக்காக சொல்லப்பட்டவை அல்ல. அதிலும் ஆழமான ஆன்மிக தத்துவம் பொதிந்திருக்கிறது. கோடி கோடியாய் சம்பாதிக்க முடிந்தால் நல்லது. சந்தோஷப்படு. அதே சமயம் அது உன்னால் இயலாவிட்டால் அதற்காக வருதப்படாதே என்பதற்க்காகவே இருவேறு கருத்துக்களை நம் சமயம் எடுத்துரைக்கிறது. உனக்கு என்ன கிடைக்கிறதோ, எவ்வளவு கிடைக்கிறதோ அதை திருப்தியோடு, மன நிறைவோடு ஏற்றுக் கொள். மன நிறைவு மிகவும் முக்கியமானது. பக்தி வழியில் இருப்பவர்கள், இறைவனை முழுமையாக நம்புகிறவர்கள் மனநிறைவோடு, உற்சாகத்தோடு காரியம் செய்பவராக இருக்க வேண்டும். இதற்கான வழிகள் வேதத்திலும், உபநிஷத்திலும், கீதையிலும் சொல்லப்பட்டுள்ளன. பல நுõற்றாண்டுகளாக தோன்றி கொண்டிருக்கும் யோகிகளும், ஞானிகளும் மத ஆச்சார்யர்களும் தங்களுடைய தவ வலிமையினாலும், அறிவின் வன்மையினாலும் கடவுளின் தன்மையையும் உலகின் இயல்பையும் நன்றாக அறிந்து, புரிந்து நமக்கு சுலபமாக புரிந்து கொள்ளும் வகைளும் கஷ்டமில்லாமல் இலகுவாக செய்யக்கூடியம் வழிகளை சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்கிறார்களே! எதை பின்பற்றுவது? இறைவன் ஒருவன்தான் என்றால் ஏன் இத்தனை போதனைகள், வழிமுறைகள் என்ற சந்தேகங்கள் எழலாம். ஆனால், அவர்கள் சொல்லியதன் நுட்பத்தைப் புரிந்துகொண்டால் குழப்பம் எழாது. பல வழி முறைகளை ஏற்படுத்தியவர்கள் இதைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. அவரவர்களுக்கு எது உகந்ததாகப் படுகிறதோ அந்த முறையைப் பின்பற்றலாம். இதுதான் நம் இந்து மதத்தின் ஒரு தனிச் சிறப்பு. இந்து மதம் தனிப்பட்ட ஒருவருக்கு எந்த முறை எளிதாகவும் உபயோகமாக படுகிறதோ அதாவது ஒத்து வருகிறதோ அதை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது. இதைப் பின்பற்றித்தான் உருவ வழிபாட்டிலும் அவர் அவர் விருப்பத்திற்கேற்ப வணங்குகிறார்கள். ஆன்மிகத்தில் ஈடுபட யோகம் ஒரு வழி, பக்தி மற்றொரு வழி. மனிதர்கள் இதை பின்பற்றியே எவ்வளவு பிறவி எடுக்க வேண்டுமோ அவைகளை எடுத்து கடவுளைச் சேரலாம். பக்தி செலுத்தி கடவுளின் அருளைப் பெறலாம். விரைவாக யோக முறையில் கடவுளின் அருளை அடையலாம். யோக முறை சிறிது கடினமானது. எல்லாராலும் பின்பற்ற முடியாது. யோகமோ, பக்தியோ எதை பின்பற்றினாலும் வாழ்க்கையில் மனநிறைவு, எதைச் செய்தாலும் மன நிறைவோடு, மகிழ்ச்சியோடு இரு. வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் திருப்தியோடு மன நிறைவோடு இருந்தால் அர்த்தத்தோடு வாழ்ந்து செல்லலாம்! - தேவராஜன் ******************************************************************************************************************************************************* வாழ நினைத்தால் வாழலாம்!/80/17.3.2013/************************ நம் வாழ்வின் நோக்கம் எது? சரியான நோக்கம் எப்படி அமைய வேண்டும்? வாழ்க்கை என்பது என்ன? வாழும் முறை யாது? அதனால் நமக்கு கிடைக்கும் பலன் என்ன? சரியான வாழ்க்கை என்றால் எப்படி அமைய வேண்டும் என்பதை எல்லாம் நம் சமயம் எடுத்துகூறுகிறது. சமய தத்துவங்களைப் புரிந்து, அவைகளை சரிவர நாம் பின்பற்றினால், நம் வாழ்க்கை முறை மிகச் சிறப்பு பெற்று, வளமுடனும், ஆற்றலுடனும் இருக்கும். தார்மிகமாகவும், நிம்மதியாகவும் அமைந்து நம்மை ஜீவன்முக்தன் நிலைக்கு உயர்த்தும். மனித இனத்தை தவிர பிற உயிரினங்களுக்கு மனம் என ஒன்று இருந்தாலும், தன்னிச்சையான மன இயக்கங்களுடன் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. மனித மனம், அதன் முழு பரிணாம வளர்ச்சியின் மூலம் நாம் வாழும் வாழ்க்கையை அறிவதற்கான, அறிவதன் மூலம் அடையும் ஆனந்தத்தை அனுபவிப்பதற்கான சாத்தியத்தை பெற்றுள்ளது. நாம் முழுமையை அடைய விரும்பினால், முழுமையான வாழ்க்கையை வாழ விரும்பினால், நாம் செய்ய வேண்டியதெல்லாம் சாஸ்திரப்படி வாழ்வதுதான். நம் பண்டைய வழக்கப்படி முதலில் கல்வி கற்கும் காலம் பிரம்மச்சரிய வாழ்க்கையாகும். இந்தக் காலத்தில் இறைவனைப் பற்றி அறிவதற்கு உண்டான எல்லா கட்டுப்பாடுகளும், ஒழுக்கம், நெறிகளுடன் இருந்து பயில வேண்டும். பிறகு மணம் செய்துகொண்டு மனைவி, பிள்ளைகளுடன் வீடு, வாசல் என நல்வாழ்க்கை வாழ்ந்து, சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த ஒரு கிருஹஸ்தாச்ரம வாழ்க்கைமுறை. அடுத்து,தன் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் கடமையுடன் பணியாற்றியபின் அதுவரை தேவையாக இருந்த சுகபோகங்களைக் குறைத்துக்கொண்டு, தான் பிறந்ததன் பயனைப் பற்றிச் சிந்திக்க ஒரு வானப்பிரஸ்தாச்ரம வாழ்க்கைமுறை. இறுதியில் இவ்வுலகச் சுகங்களை முற்றிலும் துறந்துவிட்டு சந்நியாச வாழ்க்கை முறை. ஒருவன் எப்படி வாழவேண்டும் என்பதற்கான படிப்படியாக வாழ்க்கை முறைகளை நம் முன்னோர் வகுத்திருக்கின்றனர். உலகத்தில் உள்ளவைகளை அனுபவித்து சுகபோகமாக இன்பத்தில் திளைக்கவே நாம் பிறந்திருக்கிறோம் என்று எண்ணியே அனைவரும் வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர். ஆனால், இன்பமோ வெகுநாட்கள் நீடிப்பதில்லை, மேலும் இன்பமாய் இருப்பதே சில நாட்களில் துன்பம் கொடுப்பதையும் பலர் பார்க்கின்றனர். அப்போதுதான் சிலர் சிற்றின்பம் ஏக்கத்தை விட்டு, புலன்களைக் கட்டுப்படுத்தி, யோகம் செய்து பேரின்பப் பெருநிலையை அடையும் வழிகளைத் தேடுகின்றனர். இப்படிச் சிறிது சிறிதாக மனத்தைக் கட்டுப்படுத்தி, மனத்தை ஒருமுகப்படுத்தி, இறைவனை இறுதியில் முற்றிலுமாக சரணடைய வாழ முயற்சி செய்வதே துன்பங்கள் நீக்கி ஆனந்த நிலையை அடையும் வழியாகும். - தேவராஜன். ******************************************************************************************************************************************************* வேகாத பச்சை மண்சட்டி/81/ 24.3.2013/*********************** வருத்தத்தோடு இருந்த நாம தேவரிடம், “ஏன் வருந்துகின்றாய்? என்ன நடந்தது?” என்றார் விட்டல். “ஒரு பானை செய்பவன் சட்டி தட்டுங்கட்டையால் என் தலை மேல் தட்ட வந்தான்! நான் தடுத்தேன். அவன் என்னை, ‘இது வேகாத பச்சை மண்சட்டி!’ என்று இழித்துரைத்தான்” என்றார். “மற்றவர்கள் தலையிலும் தட்டினாரா?” என்றார் விட்டல். “ஆமாம். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. நான் உமது பக்தன். என் தலையில் எப்படி அவன் தட்டலாம்? ” என்றார் நாமதேவர். “நான் கடவுளின் பக்தன்; எனக்குப் பக்தி அதிகம்; இறைவன் என் பிரியன்’ என்ற அகங்காரம் உன்னிடம் உள்ளது. இந்த அகங்காரத்தை நீ விட்டொழிக்கணும். அதற்காக, பெற்றோர் தம் பிள்ளைகளை மற்றோர் ஆசிரியரிடம் அனுப்பி அறிவு புகட்ட வேண்டியிருப்பது போல, நானும் உன்னை ஒரு குருவிடம் அனுப்புகிறேன். நீ அறிவையும் பணிவையுங் கற்றுக் கொள். அது வரையிலும் நீ வேகாத பச்சை மண்சட்டியே தான்!” என்றார் பண்டரீபுரவிட்டல்! “இறைவா, தங்களைவிட மேலானவரா குரு?” “ஆம். உன் குரு அருகிலுள்ள காட்டில் ஒரு மண்டபத்தில் படுத்திருக்கின்றார். அவரிடம் போ” என்றார். அவர் சொற்படியே காட்டிற் புகுந்தார். மண்டபத்தில் படுத்திருக்கும் வயோதிகர் ஒருவரை கண்டார். அக்கிழவர் அங்கிருந்த ஒரு சிவலிங்கத்தின் மேல் தன் கால்களைப் போட்டு கொண்டுபடுத்திருந்தார்! சிவலிங்கத்தின் மேல் கால் படக்கூடாது என்ற சாதாரண உண்மை கூட இவருக்குத் தெரியவில்லையே” என்று கருதி அருகில் சென்றார். “வா, விட்டல் அனுப்பினாரா?” என்றார் கிழவர்! “குருவே, விட்டல் என்னை அனுப்பிய விஷயம் கூட அறியும் நீங்கள் இப்படிச் சிவலிங்கத்தின் மேல் காலை போட்டுக் கொண்டிருக்கக் கூடாதென்பதை அறியாதது ஏன்?” என்று கேட்டார்! “ அப்படியா? சிவலிங்கத்தின் மேலேயா என் கால் கிடக்கின்றது? எனக்கு வயோதிகத்தால் கால்கள் உணர்வற்றுப் போனதால் அவை எங்கு கிடக்கின்றன என்பதை ஸ்பரிசத்தால் அறிய முடியவில்லை; பார்வை மங்கி விட்டதால் கண்ணால் பார்த்தறியவுங்கூட இயலவில்லை. கால்களை நகர்த்தவும் சக்தியில்லை. நீ தயவு செய்து அக்கால்களைச் சிவலிங்கமில்லாத இடத்தில் எடுத்துப்போட்டு விடு” என்றார். உடனே அக்கிழவரின் இருகால்களையும் பிடித்துத் துõக்கி வேறோரிடத்தில் நகர்த்திப் போட்டார். என்ன ஆச்சரியம்! சிவலிங்கம் அக்கால்களின் அடியில் வந்து நின்றது! எத்தனை முறை எத்தனை வெவ்வேறிடங்களில் அவர் கால்களை மாற்றி மாற்றி இழுத்துப் போட்ட போதும், அத்தனை முறையும் அங்கங்கேயும் சிவலிங்கம் குருவின் காலடியில் வந்தே நின்றது! இப்போது நாமதேவரது உள்ளம் உண்மை விழிப்புற்றது! இறைவன் இல்லாத இடமே இல்லை. தன்னுள்ளும் இறைவன் இருக்கிறார் என்ற ஞானம் நாம தேவருக்குப் பிறந்தது. அவர்,வெந்த மண் சட்டியாகிவிட்டார்! - தேவராஜன். *********************************************************************************************************************************************************** அன்பிலார் இறைவனை அறியார்/82/31.3.2013/*********************** இன்னும் ஒரு நிமிஷம் வாழணும்னு ஒவ்வொருத்தரும் ஆசைப்படுறதுக்கு எங்கிருந்தோ, யார்கிட்டேருந்தோ கிடைக்கிற அன்புதான் காரணம். ஒருவன் மீது இரக்கம், அன்பு செலுத்த இந்த உலகத்தில் ஒருத்தர் கூட இல்லை என்றால், யாரும் இங்கு வாழ ஆசைப்படமாட்டார்கள்! அன்பு என்பது நெருக்கமான உள்ளப் பிணைப்பு தொடர்பான ஓர் உணர்வும் அனுபவமும் ஆகும். அது வலிமையான பாசத்தையும் நெருக்கமான தொடர்பையும் காட்டுகின்ற ஓர் உணர்ச்சியை குறிக்கிறது. உலக மக்கள் அனைவரிடமும், எல்லா உயிரினங்களிடத்தும்கூட அன்பு செலுத்தவேண்டும் என்று தமிழ் நீதி நுõல்கள் கூறுவதிலிருந்து அன்பு என்பது தொடர்பு கொண்டவர்களிடத்து மட்டுமன்றி எவ்வுயிர்களிடத்தும் கொள்ளக்கூடிய பற்று என்றாகிறது. அன்பு என்ற உணர்வு மனிதர்களிடத்தில் மட்டுமல்ல; விலங்குகள், தாவரங்களுக்குக்கூட உண்டு. என்னதான் விலங்குகளிடம் அன்பு காணப்பட்டாலும் அந்த அன்பு பொதுவாக சுயநலம் சார்ந்த அன்பாகவே இருக்கும். தனக்கும் தன் குட்டிகளுக்கும் போகத்தான் எதுவுமே என்ற நிலையில் வாழும். தன்னை வாழ வைப்பது யார், யாரிடம் தஞ்சமாக உள்ளோம், தனக்கு உணவு கொடுப்பது யார் என்ற எந்த ஒரு உணர்வும் இல்லாமல் இருக்கும். மனித அன்பு என்பது சுயநலமாக வெளிபடுகிறது. ஆளை பார்த்தல் ஒரு அன்பு. ஆளை பார்க்காவிட்டால் ஒரு அன்பு, தனியாக இருக்கும் போது ஒரு அன்பு. கூட்டமாக இருக்கும் போது ஒரு அன்பு, பணம் இருந்தால் ஒருஅன்பு பணம் இல்லாவிட்டால் ஒரு அன்பு என்று இருக்கிறது. இவற்றை எல்லாம்விட மேலானா அன்பு ஒன்று உண்டு அது தான் தெய்வீக அன்பு. தெய்வீக அன்பு என்பது தன்னை பற்றி என்றுமே கவலைப்படாது, பிறர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, தன்னையே கொடுக்கக் கூட தயங்காது. இந்த அன்பு மனிதன் எப்படிப்பட்டவன் என்று பார்க்காது, தனக்கு ஏதாவது கைமாறு கிடைக்குமா என்று பார்க்காது, ஏழை பணக்காரன் வித்தியாசம் பார்க்காது, யாரையும் மனம் நோக பேசாது, இருக்கும் சூழ்நிலையை பார்க்காது ஆனால் பிறருக்கு எவ்விதத்திலாவது உதவ வேண்டும் என்று நினைக்கும். இந்த அன்பை நாம் யோகிகளிடமும், ஞானிகளிடமும் பார்க்கலாம். வாடியப் பயிரை கொண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரிடம் வெளிப்பட்டது தெய்வீக அன்பு. எல்லாரும் இன்புற்றிருக்க அல்லால் வேறொன்று அறியேன் என்று தாயுமானவரிடம் வெளிபட்டது இந்த தெய்வீக அன்பு. ‘கருணையும் இரக்கமும் பொங்கும் உள்ளம் தான் கடவுள் வாழ்கின்ற இல்லமாகும்’ என்றார் கண்ணதாசன். கருணை, இரக்கம், அன்பு மறந்து வாழும் மக்கள் கடவுளை தேடி எங்கு அலைந்தாலும் அவரை கண்டுகொள்ள முடியாது. அன்பில்லாதவர் இறைவனை அறியார். ஏனென்றால், இறைவனே அன்பாகவே இருக்கிறார். - தேவராஜன். *************************************************** -********************************************************************************************************* அன்பினால் ஒட்டிக்கொள்க!/83/7.4.2013/***************************** நாம, வீட்டைப் பழுதுபார்த்து, வீட்டுக்கு பெயின்ட் அடிப்பது, வீடு ரொம்ப நாள் நிலைத்து இருக்கணும் என்பது ஒருபுறம் இருந்தாலும், அந்த வீட்டில் நாம ஆபத்து இல்லாம ஆரோக்கியமா, நிம்மதியா இருக்கணும் என்பதற்குத்தானே? நாம, நல்லவிதமா அந்த வீட்டில் வாழணும்னு ஆசைப்பட்டுதான் இதெல்லாம் செய்றோம். அது மாதிரிதான் வழிபாடும். நாம, இறைவனை வணங்குவதால் இறைவனுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், அழிவில்லாதவரும் இன்ப மயமானவருமான இறைவன், தம்மை வணங்குபவர்களுக்கு, தான் அனுபவிக்கும் அழிவில்லாத இன்பத்தை அடைய பக்தர்களுக்கு அருள் புரிகிறார். நாம் இந்த உடல் எடுத்ததின் பயன் இறை வழிபாடு செய்து அந்தப் பேரின்பத்தை அடைவதே என்ற வாழ்வியல் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது நாம் வாழும் பிறவி இறைவன் நமக்குக் கொடுத்த கொடை. ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்று அவ்வை சொன்னது போல,அரியதாகிய இந்த மனிதப் பிறவியை நாம் இறைவனை வழிபடுவதற்கு பயன்படுத்தவேண்டும். எப்போதும் பேரின்ப மயமாக உள்ள இறைவன், இவை இல்லாமல் துன்புறும் உயிர்களுக்கு இரங்கி, பிறப்பெடுத்த உயிர்கள் எல்லாம் பொன், பொருள், பெண் என சிற்றின்ப பற்றை விட்டு, இன்பமயமான தன்னைப் பற்றுதல் பொருட்டு இந்த உடல், ஐம்பொறிகளைப் படைத்தார். இறைவன் எல்லா வல்லமையும் உடையவர் என்றாலும், அவரால் இன்பத்தை ஊட்ட முடியுமே அன்றி, இன்பத்தை நம்மை நுகர வைக்க முடியாது. அந்த இன்பத்தைப் பருகுதலுக்கு நாம் தான் இறைவனிடம் கை குவித்து யாசகம் கேட்க வேண்டும். இவை எல்லாம் ஒரே நாளில் எல்லாம் நடந்து விடாது. அலையும் மனமும், ஆசைபடும் எண்ணங்களும் உடனே நம்மை விட்டு ஓடிவிடாது. அதை நாம் விலக்கிக்கொள்வதும் சிரமம். நாம் சிறிது சிறிதாகப் பக்குவப்பட வேண்டும். தண்ணீரில் தத்தளிக்கும் எறும்புக்கு நீட்டிய குச்சி போல,இறைஇன்பத்தை பக்தி எனும் குச்சிகாட்டி ஏறிவா என தாயுள்ளத்தோடு இறைவன் அருள்கிறான். இறைவன் இத்தகைய கருணை செய்த போதும், நாம் அதன் பெருமை உணராது, குச்சியில் ஏறிய எறும்பு கரை சேரக் கருதாது ஆடி மீண்டும் நீரில் விழுவது போல், நாம் இறைவனைப் பற்றாமல், பக்தி செய்யாமல், சாதாரண பொன், பொருள், உலக ஆசையில் மயங்கிவிடுகிறோம். ஒரு தாய் தவறு செய்யும் குழந்தையைப் பழி வாங்கும் எண்ணமின்றித் திருத்தும் நோக்கத்தில் மட்டுமே கடிந்து கொள்கின்றாளோ அது போன்றே தாயினும் நல்ல இறைவன் நமக்கு அவ்வப்போது சில துன்பங்கள், கஷ்டங்கள், தடங்கல்கள் கொடுத்து திருத்த ஆசைப்படுகிறார். இந்த உண்மையை உணர்ந்து, சிற்றின்பத்தைக் குறைத்து, நம்மைப் படைத்த இறைவனை, நம் நன்மைக்காக நாளும் பொழுதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நினைந்து நினைந்து பெருகுகின்ற அன்பு என்னும் ஒட்டுப் பொருளினால் அவரைப் பற்றிக்கொண்டால் இன்பமே எந்நாளும்; துன்பமில்லை! - தேவராஜன். ************************************************************************************************************************************************* ‘விஜய’ வருஷம் ‘ஜெயம்’ உண்டாகட்டும்!/ 84/ 14.4.2013/************************ இன்று தமிழ்ப்புத்தாண்டு. இந்த விஜய வருடம் எல்லாருக்கும் விஜயத்தையே சேர்க்கட்டும். அதற்கு, நாம் வணங்கும் இறைவன் பூர்ணமாக அருள்புரியட்டும். இந்த இனிய புத்தாண்டின் தொடக்க நாளில், ஓர் அர்த்தமுள்ள ஆன்மிக சிந்தனையை மனதில் பதித்து, அதை பின்பற்றலாமா? கோபுரதரிசனம் கோடி புண்ணியம் என்பர். கோபுரதரிசனம் செய்ய மேல்நோக்கி தலையால் வணங்க வேண்டும். கோயிலில் உள் சென்ற உடன் முதலில் விநாயகருக்கு தோப்புக்கரணம் செய்யணும். கோயிலில் சிலர் பிரதட்ணம் பண்ணுவர். ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்கின்றனர். அஷ்டாங்கம் என்பது தலை, கையிரண்டு, செவியிரண்டு, மோவாய், புஜங்களிரண்டு என்னும் எட்டவயங்களும் நிலத்தில் பொருந்தும் படி வலக்கையை முன்னால் நீட்டியும் இடது கையை பின்னும் நேரே நீட்டிய பின் அம்முறையே மடக்கி வலபுறமும் இடபுறமும் மண்னிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்கி நீட்டிவலக்காதை முன்னும் இடக்காதை பின்னும் மண்னிலே பொருந்தச் செய்வதாகும். பெண்கள் செய்யும் பஞ்சாங்க நமஸ்காரம் என்பது தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு என்னும் ஐந்து அவயவங்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாம். இப்படி உடலுறுப்புகளை வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். திருப்பூந்துருத்தி தேவாரப் பாடலில் அப்பர் அடிகள் சாதாரிப்பண்ணில் அமைந்த திருவங்கமாலையில் உடலுறுப்புகளை விளித்து திருப்பூந்துருத்தித் திருக்கோயில் உறை புட்பவன நாதரைப் போற்றிப் பாடியுள்ளார். தலை, கண்கள், செவிகள், மூக்கு, வாய், கைகள், கால்கள் என விளித்து இறைவனை வழிபட தேவாரப் பண் இசைத்தார் அப்பர் அடிகள். சிவனின் திருவுருவம் கண்டு பரவசம் கொள்வதற்கே கண்கள். சிவன் திருநாமங்களை உளமார உச்சரிப்பதற்கே அதரம். சிவனின் பெருமைகளை கேட்டு இன்புறுவதற்கே செவிகள். இப்படி இந்த உடலில் அமைந்துள்ள ஒவ்வொரு உறுப்பும் இறைவனைப்போற்றுவதற்கு அமைந்தவை. ஆக்கை யாற் பயனென்- அரன் கோயில் வலம் வந்து பூக்கையால் அட்டிப் போற்றியென்னாதவிவ் ஆக்கை யாற்பயனென்? என்று ஆரம்பித்து, வழிபாட்டில் உடல் உறுப்புகளின் பங்கு என்ன என்பதை பாடுகிறார் அப்பர். தலையே நீ வணங்காய்- தலை மாலை தலைக்கணிந்து தலையாலேபலி தேடுந் தலைவனைத் தலையே நீ வணங்காய். கண்காள் காண்மின்களோ – கடல் நஞ்சுண்ட கண்டன் றன்னை எண்டோள் வீசிநின்றாடும்பிரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ. செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள எரிபோன் மேனிப்பிரான்நிறம் எப்போதும் செவிகாள் கேண்மின்களோ. வாயே வாழ்த்து கண்டாய் - மத யானை யுரிபோர்த்துப் பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை வாயே வாழ்த்துக் கண்டாய். கைகாள் கூப்பித் தொழீர் – - கடி மாமலர் தூவி நின்று பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகாள் கூப்பித் தொழீர் என்றோ ஒரு நாள் மண்ணுக்கோ தீக்கோ இரையாகும் இந்த உடலை, இறைவனை வழிபட பயன்படுத்திக்கொண்டால், இந்த வருஷம் மட்டுமல்ல; எந்த வருஷமும் நமக்கு ஜெயமே தரும்! - தேவராஜன். ***********************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக