வெள்ளி, 19 ஏப்ரல், 2013

இறைவன் மீது ஆசைபடலாமா?


இறைவன் மீது ஆசைபடலாமா?/86/ 28.4.2013/ இந்த வாழ்கை நாம் மகிழ்ச்சியாக வாழத்தான். பிறக்கும் எவ்வுயிரும் கஷ்டப்படுவதற்காகப் பிறப்பதில்லை. இது இயற்கை. இந்த இயற்கையை நாம் புரிந்து கொண்டு வாழ்ந்தால் நல்லது. புரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தால், அதை சரி செய்து கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஒரு உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்கிறோம். நிகழ்ச்சி தடபுடலாக நடக்கிறது. அறுசுவை விருந்து. அறுசுவை உணவை கண்டவுடன் அளவுக்கு மீறி சாப்பிட்டு விடுகிறோம். அதிகம் சாப்பிட்டதால், செரிமாணம் ஆகவில்லை. அதனால் வயிறுவலி. அதையடுத்து, வயிற்றுப் போக்கு. அடுத்தடுத்து சோர்வு என சில துன்பங்களை அனுபவிக்கிறோம். இந்தத் துன்பத்திற்கு காரணம் உணவோ, அந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியோ காரணம் ஆகாது. நாம் செய்த தவறு அதிகமாக சாப்பிட்டது. இதுபோல், நாம் ஏதாவது தவறு செய்தால் தண்டனையை அனுபவிக்கிறோம். அதிகமாக சாப்பிடும்போது இறைவா உனக்கு நன்றி என்கிறோம். வயிற்று வலி வந்ததும் ஆண்டவா, ஏன் இப்படி என்னை சோதிக்கிறாய்? என்று கூச்சலிடுகிறோம். இதில் எங்கிருந்து இறைவனின் செயல்பாடுகள் வருகிறது. உணவை படைத்தது இறைவனாக இருக்கலாம். அதை அளவுக்கு மீறி சாப்பிட்டது நம் தவறுதானே? ஒருவனுக்கு பெயர், பணம், புகழ் போன்றவை கிடைத்து, அதனைக் கொண்டாட சுற்றமும், நட்பும் அமைந்து விட்டால் அதுவே பெரிய சந்தோஷம். இந்த சந்தோஷத்திற்காகவே, நமது வாழ்க்கை பயணம் அமைகிறது. சிலருக்கு இத்தகைய சந்தோஷம் கிடைக்கிறது, பலருக்கு அது கிடைக்காமல் போய் விடுகிறது. இப்படி பட்ட சந்தோஷங்கள்தான் வாழ்க்கை முழுவதும் சந்தோஷத்தைத் தருமா? அப்படியே தந்தாலும், அது இவ்வுலக வாழ்க்கையோடு முடிந்துவிடும். ஆனால், இவ்வுலகத்திற்கும், அவ்வுலகத்திற்கும் நிரந்தரமாக சந்தோஷத்தைக்கொடுப்பது இறைவனை நினைப்பதும், வணங்குவதும், இறைவனை உணருவதுமேயாகும். நமக்கு ஆசைகள் ஆயிரம் இருக்கின்றன. ஆனாலும், என்றோ ஒரு நாள் நாம் ஆசைப்படும் பொருட்கள் நம்மை விட்டுப் பிரிவதும், நாம் அவற்றைவிட்டுப் பிரிவதும் நிச்சயம். இப்பிரிவு நம் இறப்பின் மூலம் ஏற்படுவதற்கு முன்பாக, நாமாக ஆசைகளை படிப்படியாக விட்டுவிட்டால், அத்தனைக்கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனை ஆசைகளுக்குரிய துன்பமும் உண்டு. ஆசைகளை குறைக்கக் குறைக்க துன்பமும் குறையும். ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.’என்கிறார் வள்ளுவர். எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான் என்பது குறளின் பொருள். இப் பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் விட்டு, இறைவன் மீது ஆசைப்பட பழகிவிட்டால் அவஸ்தைப்படவே வேண்டாம். அப்படியே இறைவனோடு கரைந்து ஆனந்தமாகி விடலாம். - தேவராஜன். ********************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக