வெள்ளி, 19 ஏப்ரல், 2013

அன்பினால் ஒட்டிக்கொள்க!/83/


அன்பினால் ஒட்டிக்கொள்க!/83/7.4.2013/ நாம, வீட்டைப் பழுதுபார்த்து, வீட்டுக்கு பெயின்ட் அடிப்பது, வீடு ரொம்ப நாள் நிலைத்து இருக்கணும் என்பது ஒருபுறம் இருந்தாலும், அந்த வீட்டில் நாம ஆபத்து இல்லாம ஆரோக்கியமா, நிம்மதியா இருக்கணும் என்பதற்குத்தானே? நாம, நல்லவிதமா அந்த வீட்டில் வாழணும்னு ஆசைப்பட்டுதான் இதெல்லாம் செய்றோம். அது மாதிரிதான் வழிபாடும். நாம, இறைவனை வணங்குவதால் இறைவனுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், அழிவில்லாதவரும் இன்ப மயமானவருமான இறைவன், தம்மை வணங்குபவர்களுக்கு, தான் அனுபவிக்கும் அழிவில்லாத இன்பத்தை அடைய பக்தர்களுக்கு அருள் புரிகிறார். நாம் இந்த உடல் எடுத்ததின் பயன் இறை வழிபாடு செய்து அந்தப் பேரின்பத்தை அடைவதே என்ற வாழ்வியல் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது நாம் வாழும் பிறவி இறைவன் நமக்குக் கொடுத்த கொடை. ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்று அவ்வை சொன்னது போல,அரியதாகிய இந்த மனிதப் பிறவியை நாம் இறைவனை வழிபடுவதற்கு பயன்படுத்தவேண்டும். எப்போதும் பேரின்ப மயமாக உள்ள இறைவன், இவை இல்லாமல் துன்புறும் உயிர்களுக்கு இரங்கி, பிறப்பெடுத்த உயிர்கள் எல்லாம் பொன், பொருள், பெண் என சிற்றின்ப பற்றை விட்டு, இன்பமயமான தன்னைப் பற்றுதல் பொருட்டு இந்த உடல், ஐம்பொறிகளைப் படைத்தார். இறைவன் எல்லா வல்லமையும் உடையவர் என்றாலும், அவரால் இன்பத்தை ஊட்ட முடியுமே அன்றி, இன்பத்தை நம்மை நுகர வைக்க முடியாது. அந்த இன்பத்தைப் பருகுதலுக்கு நாம் தான் இறைவனிடம் கை குவித்து யாசகம் கேட்க வேண்டும். இவை எல்லாம் ஒரே நாளில் எல்லாம் நடந்து விடாது. அலையும் மனமும், ஆசைபடும் எண்ணங்களும் உடனே நம்மை விட்டு ஓடிவிடாது. அதை நாம் விலக்கிக்கொள்வதும் சிரமம். நாம் சிறிது சிறிதாகப் பக்குவப்பட வேண்டும். தண்ணீரில் தத்தளிக்கும் எறும்புக்கு நீட்டிய குச்சி போல,இறைஇன்பத்தை பக்தி எனும் குச்சிகாட்டி ஏறிவா என தாயுள்ளத்தோடு இறைவன் அருள்கிறான். இறைவன் இத்தகைய கருணை செய்த போதும், நாம் அதன் பெருமை உணராது, குச்சியில் ஏறிய எறும்பு கரை சேரக் கருதாது ஆடி மீண்டும் நீரில் விழுவது போல், நாம் இறைவனைப் பற்றாமல், பக்தி செய்யாமல், சாதாரண பொன், பொருள், உலக ஆசையில் மயங்கிவிடுகிறோம். ஒரு தாய் தவறு செய்யும் குழந்தையைப் பழி வாங்கும் எண்ணமின்றித் திருத்தும் நோக்கத்தில் மட்டுமே கடிந்து கொள்கின்றாளோ அது போன்றே தாயினும் நல்ல இறைவன் நமக்கு அவ்வப்போது சில துன்பங்கள், கஷ்டங்கள், தடங்கல்கள் கொடுத்து திருத்த ஆசைப்படுகிறார். இந்த உண்மையை உணர்ந்து, சிற்றின்பத்தைக் குறைத்து, நம்மைப் படைத்த இறைவனை, நம் நன்மைக்காக நாளும் பொழுதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நினைந்து நினைந்து பெருகுகின்ற அன்பு என்னும் ஒட்டுப் பொருளினால் அவரைப் பற்றிக்கொண்டால் இன்பமே எந்நாளும்; துன்பமில்லை! - தேவராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக