வெள்ளி, 19 ஏப்ரல், 2013

அன்பிலார் இறைவனை அறியார்/82/


அன்பிலார் இறைவனை அறியார்/82/31.3.2013/ இன்னும் ஒரு நிமிஷம் வாழணும்னு ஒவ்வொருத்தரும் ஆசைப்படுறதுக்கு எங்கிருந்தோ, யார்கிட்டேருந்தோ கிடைக்கிற அன்புதான் காரணம். ஒருவன் மீது இரக்கம், அன்பு செலுத்த இந்த உலகத்தில் ஒருத்தர் கூட இல்லை என்றால், யாரும் இங்கு வாழ ஆசைப்படமாட்டார்கள்! அன்பு என்பது நெருக்கமான உள்ளப் பிணைப்பு தொடர்பான ஓர் உணர்வும் அனுபவமும் ஆகும். அது வலிமையான பாசத்தையும் நெருக்கமான தொடர்பையும் காட்டுகின்ற ஓர் உணர்ச்சியை குறிக்கிறது. உலக மக்கள் அனைவரிடமும், எல்லா உயிரினங்களிடத்தும்கூட அன்பு செலுத்தவேண்டும் என்று தமிழ் நீதி நுõல்கள் கூறுவதிலிருந்து அன்பு என்பது தொடர்பு கொண்டவர்களிடத்து மட்டுமன்றி எவ்வுயிர்களிடத்தும் கொள்ளக்கூடிய பற்று என்றாகிறது. அன்பு என்ற உணர்வு மனிதர்களிடத்தில் மட்டுமல்ல; விலங்குகள், தாவரங்களுக்குக்கூட உண்டு. என்னதான் விலங்குகளிடம் அன்பு காணப்பட்டாலும் அந்த அன்பு பொதுவாக சுயநலம் சார்ந்த அன்பாகவே இருக்கும். தனக்கும் தன் குட்டிகளுக்கும் போகத்தான் எதுவுமே என்ற நிலையில் வாழும். தன்னை வாழ வைப்பது யார், யாரிடம் தஞ்சமாக உள்ளோம், தனக்கு உணவு கொடுப்பது யார் என்ற எந்த ஒரு உணர்வும் இல்லாமல் இருக்கும். மனித அன்பு என்பது சுயநலமாக வெளிபடுகிறது. ஆளை பார்த்தல் ஒரு அன்பு. ஆளை பார்க்காவிட்டால் ஒரு அன்பு, தனியாக இருக்கும் போது ஒரு அன்பு. கூட்டமாக இருக்கும் போது ஒரு அன்பு, பணம் இருந்தால் ஒருஅன்பு பணம் இல்லாவிட்டால் ஒரு அன்பு என்று இருக்கிறது. இவற்றை எல்லாம்விட மேலானா அன்பு ஒன்று உண்டு அது தான் தெய்வீக அன்பு. தெய்வீக அன்பு என்பது தன்னை பற்றி என்றுமே கவலைப்படாது, பிறர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, தன்னையே கொடுக்கக் கூட தயங்காது. இந்த அன்பு மனிதன் எப்படிப்பட்டவன் என்று பார்க்காது, தனக்கு ஏதாவது கைமாறு கிடைக்குமா என்று பார்க்காது, ஏழை பணக்காரன் வித்தியாசம் பார்க்காது, யாரையும் மனம் நோக பேசாது, இருக்கும் சூழ்நிலையை பார்க்காது ஆனால் பிறருக்கு எவ்விதத்திலாவது உதவ வேண்டும் என்று நினைக்கும். இந்த அன்பை நாம் யோகிகளிடமும், ஞானிகளிடமும் பார்க்கலாம். வாடியப் பயிரை கொண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரிடம் வெளிப்பட்டது தெய்வீக அன்பு. எல்லாரும் இன்புற்றிருக்க அல்லால் வேறொன்று அறியேன் என்று தாயுமானவரிடம் வெளிபட்டது இந்த தெய்வீக அன்பு. ‘கருணையும் இரக்கமும் பொங்கும் உள்ளம் தான் கடவுள் வாழ்கின்ற இல்லமாகும்’ என்றார் கண்ணதாசன். கருணை, இரக்கம், அன்பு மறந்து வாழும் மக்கள் கடவுளை தேடி எங்கு அலைந்தாலும் அவரை கண்டுகொள்ள முடியாது. அன்பில்லாதவர் இறைவனை அறியார். ஏனென்றால், இறைவனே அன்பாகவே இருக்கிறார். - தேவராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக