வெள்ளி, 19 ஏப்ரல், 2013

எட்டில் இரண்டு/85/


எட்டில் இரண்டு/85/ 21.4.2013/ அஷ்டாங்க யோகங்கள் என்பது எட்டுவகை யோகங்கள். அவை இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம். சமாதி. இந்த யோகங்கள் எல்லாம் காடுகளில் மலைகளில் குகைளில் இருக்கும் சித்தர்களும் யோகிகளும் செய்ய வேண்டியவை; அவை தவம் செய்வோர்மட்டும் கடைபிடிக்க வேண்டியவை என்று நாம் நினைத்து விடுகிறோம். இந்த யோக நெறிகள் சாமனியர்களுக்கும் இல்லறத்தாருக்கும் மிகவும் பயன்படுபவை. பலன் தரக்கூடியவைதான். ஒருவர் வாழும் வாழ்க்கையில் இந்த யோகங்கள் எல்லாவற்றையும் கடைபிடிக்க இயலாவிட்டாலும் கூட, எல்லாரும் இயமம், நியமம் இரண்டையும் கடைபிடிக்க முடியும். கடைபிடிக்க வேண்டும். இயமம் என்ற யோக நெறி வாழ்க்கையின் அடிப்படைத் தகுதியை சோதனை செய்துகொள்ளவும், சுத்தகரித்துக் கொள்ளவும் போதிக்கிறது. இயமம் என்பது வாழ்வியல் சார்ந்த நல்லொழுக்கத்தைக் குறிக்கும். அதாவது நாள்தோறும் இறைவனை வணங்குதல், உயிர்களிடத்தில்அன்பு, உண்மையைக் கடைபிடித்தல், கொல்லாமை, புலன் அடக்கம், ஆசை இல்லாமை ஆகியவற்றைக் கடைபிடித்து வாழ்தலே இயமம் எனும் முதல்படிநிலையாகும். இந்த யோக நெறியை கடைபிடிப்பதின் வழியாக நாம் இறைவனை உணர எடுத்து வைக்க முதல் படியாக அமையும். அடுத்த யோக நெறி நியமம் . இது ஒழுக்கத்தின் மூலம் ஆத்ம சுத்தத்தை அடைய மேற்கொள்ளும் செயல் வடிவங்களைக் குறிக்கும். அதாவது துõய்மை, நிறைவு, நோன்பு, கல்வி,அபயம் அடைதல் ஆகியனவை. இந்த இரு யோக நெறிகளை நாம் கடைபிடிப்பதன் மூலம் நமக்குள் ஒரு கட்டுப்பாடு ஏற்படும். தன்னைக் கட்டுப்படுத்தி ஆளும் ஆற்றளுடையவனால்தான் மற்றவற்றையும் கட்டுப்படுத்த முடியும். இந்த பண்புகள் மூலம் உள்ளத்திற்குத் தீயன செய்கின்ற செயல்களை விலக்குகின்றபோது அகத்துõய்மையைப் பெற முடிகின்றது. அகத்துõய்மை பெற்றவர்களால்தான் புறத்துõய்மையை எளிதில் பெற இயலும். இயமம், நியமம் தரும் அனுபவமாக வருவது அடக்கம். அடக்கம் அனைத்து உயர்வுகளையும் நல்கும் தன்மையுடையது. அதனால் அவ்வடக்கத்தைப் பொருளாகக் கருதிக் காத்தல் வேண்டும். உயிருக்கு அடக்கத்தைப் போன்ற செல்வம் வேறு எதுவும் கிடையாது. ஆமைபோன்று ஐம்பொறிகளையும் அடக்கி வாழ வேண்டும் அது மிகப்பெரிய ஆற்றலாக வெளிப்படும் என வள்ளுவர் எடுத்துரைக்கின்றார். பதஞ்சலி முனிவர் அகிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், ஆசை இன்மை ஆகிய ஐந்து கட்டுப்பாடுகளை இயம நெறியில் பின்பற்றக்கூடியவை என்கிறார். இதனையே வள்ளுவரும் இன்னாசெய்யாமை, வாய்மை, கள்ளாமை, துறவு, அவா அறுத்தல் என்று திருக்குறளில் எடுத்துரைக்கின்றார். எட்டு யோகங்களில் முதல் இரு யோகங்களை பின்பற்றினாலேயே வாழ்க்கை லட்டுப்போல தித்திக்கும். இறையருளும் சித்திக்கும்! -தேவராஜன். ****************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக