செவ்வாய், 12 மார்ச், 2013

வாழ நினைத்தால் வாழலாம்!/80/17.3.2013/

வாழ நினைத்தால் வாழலாம்!/80/17.3.2013/ நம் வாழ்வின் நோக்கம் எது? சரியான நோக்கம் எப்படி அமைய வேண்டும்? வாழ்க்கை என்பது என்ன? வாழும் முறை யாது? அதனால் நமக்கு கிடைக்கும் பலன் என்ன? சரியான வாழ்க்கை என்றால் எப்படி அமைய வேண்டும் என்பதை எல்லாம் நம் சமயம் எடுத்துகூறுகிறது. சமய தத்துவங்களைப் புரிந்து, அவைகளை சரிவர நாம் பின்பற்றினால், நம் வாழ்க்கை முறை மிகச் சிறப்பு பெற்று, வளமுடனும், ஆற்றலுடனும் இருக்கும். தார்மிகமாகவும், நிம்மதியாகவும் அமைந்து நம்மை ஜீவன்முக்தன் நிலைக்கு உயர்த்தும். மனித இனத்தை தவிர பிற உயிரினங்களுக்கு மனம் என ஒன்று இருந்தாலும், தன்னிச்சையான மன இயக்கங்களுடன் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. மனித மனம், அதன் முழு பரிணாம வளர்ச்சியின் மூலம் நாம் வாழும் வாழ்க்கையை அறிவதற்கான, அறிவதன் மூலம் அடையும் ஆனந்தத்தை அனுபவிப்பதற்கான சாத்தியத்தை பெற்றுள்ளது. நாம் முழுமையை அடைய விரும்பினால், முழுமையான வாழ்க்கையை வாழ விரும்பினால், நாம் செய்ய வேண்டியதெல்லாம் சாஸ்திரப்படி வாழ்வதுதான். நம் பண்டைய வழக்கப்படி முதலில் கல்வி கற்கும் காலம் பிரம்மச்சரிய வாழ்க்கையாகும். இந்தக் காலத்தில் இறைவனைப் பற்றி அறிவதற்கு உண்டான எல்லா கட்டுப்பாடுகளும், ஒழுக்கம், நெறிகளுடன் இருந்து பயில வேண்டும். பிறகு மணம் செய்துகொண்டு மனைவி, பிள்ளைகளுடன் வீடு, வாசல் என நல்வாழ்க்கை வாழ்ந்து, சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த ஒரு கிருஹஸ்தாச்ரம வாழ்க்கைமுறை. அடுத்து,தன் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் கடமையுடன் பணியாற்றியபின் அதுவரை தேவையாக இருந்த சுகபோகங்களைக் குறைத்துக்கொண்டு, தான் பிறந்ததன் பயனைப் பற்றிச் சிந்திக்க ஒரு வானப்பிரஸ்தாச்ரம வாழ்க்கைமுறை. இறுதியில் இவ்வுலகச் சுகங்களை முற்றிலும் துறந்துவிட்டு சந்நியாச வாழ்க்கை முறை. ஒருவன் எப்படி வாழவேண்டும் என்பதற்கான படிப்படியாக வாழ்க்கை முறைகளை நம் முன்னோர் வகுத்திருக்கின்றனர். உலகத்தில் உள்ளவைகளை அனுபவித்து சுகபோகமாக இன்பத்தில் திளைக்கவே நாம் பிறந்திருக்கிறோம் என்று எண்ணியே அனைவரும் வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர். ஆனால், இன்பமோ வெகுநாட்கள் நீடிப்பதில்லை, மேலும் இன்பமாய் இருப்பதே சில நாட்களில் துன்பம் கொடுப்பதையும் பலர் பார்க்கின்றனர். அப்போதுதான் சிலர் சிற்றின்பம் ஏக்கத்தை விட்டு, புலன்களைக் கட்டுப்படுத்தி, யோகம் செய்து பேரின்பப் பெருநிலையை அடையும் வழிகளைத் தேடுகின்றனர். இப்படிச் சிறிது சிறிதாக மனத்தைக் கட்டுப்படுத்தி, மனத்தை ஒருமுகப்படுத்தி, இறைவனை இறுதியில் முற்றிலுமாக சரணடைய வாழ முயற்சி செய்வதே துன்பங்கள் நீக்கி ஆனந்த நிலையை அடையும் வழியாகும். - தேவராஜன். *******************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக