வெள்ளி, 30 ஜூலை, 2010

நிஜத்தை தொட்ட நிழல்கள் ( தினமலர் வாரமலரில் வந்த தொடர்)

நிஜத்தை தொட்ட நிழல்கள் ( தினமலர் வாரமலரில் வந்த தொடர்)
நடிகர் ராஜேஷ் மனதில் எம்ஜிஆர்
(ஸ்டில் சித்ரா சுவாமி நாதன் பேட்டி : தேவராஜன்)
பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர்தான் உபால்டு. பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தில்கூட ஓவியம், கலை எல்லாமே உபால்டுதான். அந்தப் படத்தை தயாரித்தது எஸ்.ஏ.ராஜ்கண்ணு.
அந்த நேரத்தில் உபால்டுடன் எனக்கு நெருங்கிய பழக்கம் இருந்ததால், அவர் என்னையும் எஸ்.ஏ.ராஜ்கண்ணு ஆபீசுக்கு அழைத்துச் செல்வார். அங்குதான் எனக்கு நடிகர் ராஜேஷ் பழக்கமானார். சென்னையில் நடைபெறும் ராஜேஷின் பட பிடிப்புகளை போய் பார்த்து இருக்கிறேன். அவர் சம்பந்தமான விழாக்கள், அவர் நடித்த படங்களின் வெற்றி விழாக்களை எல்லாம் நான் போட்டோ எடுத்திருக்கிறேன்.
அன்று ஆரம்பித்த ராஜேஷûடனான என் பழக்கம், இன்று நடைப்பயிற்சி வரை தொடர்கிறது. நடிகர் ராஜேஷைப் பற்றி சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது.
பட்டுக்கோட்டை அருகிலுள்ள அணைக்காடுதான் அவருடைய சொந்த ஊர். அவருடைய தந்தை பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன் சினிமாவில் சேரும் ஆசையோடு 1968ம் ஆண்டு சென்னைக்கு வந்தார் ராஜேஷ். வேலை கிடைக்கவில்லை. சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சரி இப்படியே இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று நினைத்து டீச்சர் டிரைனிங்கில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார்.
அப்போதெல்லாம் ஆசிரியப் பணிக்கு அந்தளவிற்கு பெரிய அளவில் ஊதியம் கிடையாது. 1969ம் ஆண்டு மார்ச் மாதம் அண்ணா இறந்ததும், முதல்வராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவிக்கு வந்ததும், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்தார். அவர் அறிவித்த ஊதிய உயர்வின், முதல் ஊதியத்தை முதல் மாத சம்பளமாக செயின்ட் பால் பள்ளியில் ஆசிரியராக பணிக்குச் சேர்ந்ததும் பெற்றார் ராஜேஷ்.
அதற்குப் பிறகு கண்ணப்பனாயினார் பள்ளியிலும், 1979ம் ஆண்டு திருவல்லிகேணி கலட் உயர்நிலைப் பள்ளியிலும் ஆசிரியராக பணி செய்துகொண்டே பச்சையப்பன் கல்லுõரியில் மாலைநேர வகுப்பில் பி.ஏ. படிக்க ஆரம்பித்தார். அந்த கால கட்டத்தில்தான் மறுபடியும் சினிமா வாய்ப்புத் தேடி ராஜேஷ் அலைந்தார். எல்லா பெரிய டைரக்டர்களையும் பார்த்து வாய்ப்பு கேட்டார். அப்போது "16 வயதினிலே' படம் முடியும் தருவாயில் இருந்தது. அந்தப் படத்தை எஸ்.ஏ.ராஜ்கண்ணுதான் தயாரித்தார். அடிக்கடி அவரை சந்தித்து வாய்ப்புக் கேட்டு ராஜேஷ் தொந்தரவு செய்ய, அவரோ "படம் முடிந்து விட்டது. ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள், அடுத்தப் படம் எடுக்கும்போது பார்க்கலாம்' என்று சொல்லி அனுப்பிவிட்டார். ஆனால், அவர் விடவில்லை. தொடர்ந்து வாய்ப்பு கேட்டு அலைந்தார்.
ஆனால், எஸ்.ஏ.ராஜ்கண்ணு சொன்ன வாக்கை காப்பாற்றினார். தான் தயாரிக்கும் அடுத்தப் படத்தில் ராஜேஷிற்கு வாய்ப்புக் கொடுத்தார். அந்தப் படம் "கண்ணிப் பருவத்திலே' ராஜேஷ் கதாநாயகனாக நடித்த முதல் படம்.
அந்தப் படத்தை இயக்கியது பாலகுரு (இவர் எம்.ஆர்.ராதா நாடக குழுவில் நகைச்சுவை நடிகராக இருந்தவர்). படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதற்கு பெரும்பங்கு இயக்குனர் பாலகுருவோடு அவரது உதவி இயக்குனர் கே. பாக்யராஜிற்கும் உண்டு.
"கண்ணி பருவத்திலே' படம் சென்னையில் 25 வாரமும், மதுரையில் 35 வாரங்களும் ஓடி எல்லா வெற்றி விழாக்களையும் கண்டது. அடுத்து அடுத்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார் ராஜேஷ். தொடர்ந்து நிறைய படங்கள் வந்ததால், தொடர்ந்து அவரால் பட்டப்படிப்பை தொடர முடியவில்லை. படிப்பை பாதியில் நிறுத்தினாலும், ராஜேஷிடம் பேசும்போது டபுள் எம்.ஏ. படித்தவர் போல் பல விஷயங்களைப் பேசுவார்.
இவரின் திருமணம் 1983ம் ஆண்டு நடைபெற்றது. எல்லா தலைவர்களுக்கும், கலைத் துறையினருக்கும், முக்கியஸ்தர்களுக்கும் அழைப்பு வைத்திருந்தார். ஆனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முதல் ஆளாக கலந்து கொண்டது, கருணாநிதிதான்.
அது முதல் நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று யார் பத்திரிகை கொடுத்தாலும் முதல் ஆளாய் போய் நிற்பார் ராஜேஷ். இது கருணாநிதியிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது என்று அடிக்கடி என்னிடம் சொல்வார்.
அதேபோல் எம்.ஜி.ஆரையும் ராஜேஷிற்கு ரொம்ப பிடிக்கும். எதனால் எம்.ஜி.ஆரை ராஜேஷிற்கு ரொம்ப பிடிக்கும் என்பது பற்றி, எனக்குத் தெரிந்த சில விஷயங்களை உங்களுக்குச் சொல்கிறேன்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த நேரம். அந்த சமயத்தில் ராஜேஷ் புதிதாக வீடு ஒன்று கட்டியிருந்தார். அதன் கிரஹப்பிரவேச பத்திரிகையை திரைத்துறையினர், முக்கியப் பிரமுகர்கள் எல்லாருக்கும் கொடுத்துவிட்டு, எம்.ஜி.ஆரிடம் நேரில் கொண்டு கொடுப்பதற்காக அவரைப் பார்க்க வந்திருக்கிறார். ராஜேஷ், தான் வந்திருக்கும் விஷயத்தை எம்.ஜி.ஆரின் உதவியாளரிடம் கூறிவிட்டு வெளியில் காத்திருந்திருக்கிறார். சுமார் 2 மணிநேரம் கடந்திருக்கும். ராஜேஷிற்கு பின் வந்தவர்கள் எல்லாரும் எம்.ஜி.ஆரை வந்து பார்த்துவிட்டு செல்லும்போது, ராஜேஷை மட்டும் எம்.ஜி.ஆர். அழைக்கவே இல்லை.
ஒரு பெரிய வி.ஐ.பி. கடைசியாக பேசிவிட்டு ஒரு கட்டட திறப்புவிழாவிற்கு அழைப்பு கொடுத்து விட்டுச் சென்றார். அதற்பிறகு 10.35 மணிக்கு ராஜேஷை உள்ளே அழைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
அவர் அறையில் ராஜேஷ் நுழைவதற்கு முன்பாகவே, எம்.ஜி.ஆர். ராஜேஷைப் பார்த்து கை கூப்பி வணக்கம் செலுத்தி நின்று கொண்டிருந்தார். இதைப் பார்த்ததும் ஒரு கணம் ராஜேஷிற்கு ஆச்சர்யம். அதிசயமாக எம்.ஜி.ஆரை பார்த்திருக்கிறார். இவர் ஆச்சர்யப்பட்டுப்போனதை உணர்ந்துகொண்ட எம்.ஜி.ஆர். ""என்ன... வணக்கம் செய்தபடி நிற்கிறேன் என்றுதானே பார்க்கிறே. வணக்கம் செலுத்துவதிலும், வாழ்த்துவதிலும் முதல்வனாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாமிய கொள்கை. அந்த கொள்கையை நான் கடைபிடித்து வருபவன்'' என்று சொல்லியிருக்கிறார். அதோடு அந்த கிரஹப் பிரவேசத்திற்கு எம்.ஜி.ஆர். வந்து சிறப்பு செய்தாராம்.
ஒரு பத்து நாள் கழிந்த பின்னர்தான், தான் காக்க வைக்கப்பட்டிருந்ததற்கான காரணம் ராஜேஷின் காதிற்கு எட்டியிருக்கிறது. அது என்ன காரணம் தெரியுமா... 9 10.30 ராகு காலமாம். அதனால்தான் ராஜேஷை வெளியே காத்திருக்குமாறு எம்.ஜி.ஆர். சொல்லியிருக்கிறார்.
இது சம்பந்தமாக எம்.ஜி.ஆர். உதவியாளர் அவரிடம், "ஐயா ராகு காலம் என்பதற்காக ராஜேஷை 2 மணி நேரம் காத்திருக்க வச்சீங்க... ஆனா, தன்னுடைய கட்டட திறப்புவிழாவுக்கு ஒரு பெரியவர் வந்திருக்கார்னு சொன்னதும், அவரை முதல்ல வரவழைச்சீங்களே' என்று கேட்டுள்ளார்.
அதற்கு எம்.ஜி.ஆரோ... "பதில், உன் கேள்வியிலேயே இருக்கிறது. அவர் ஒரு பெரியவர் என்று நீயே சொல்கிறாய். பெரியவர் வாழ்ந்து முடித்துவிட்டார். ஆனால், ராஜேஷோ இனிமேல்தான் வாழ ஆரம்பிக்கப் போகிறான் அதனால்தான் அவனிடம் ராகு காலத்தில் பத்திரிகை வாங்கவில்லை' என்று விளக்கம் சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

1984ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலகட்டம். அந்த காலக்கட்டத்தில் அரசியல்வாதிகளை தவராக சித்தரித்து நிறைய படங்கள் வெளியானது. ராஜேஷ் நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படமும் அதே வகையராவைச் சேர்ந்ததுதான். சட்டசபை சபாநாயகராக பி.எச். பாண்டியன் இருந்தபோது ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது, அரசியல்வாதிகளை கொச்சைப்படுத்தி தமிழ்படம் வெளிவந்தால், அந்தப் படத்தை திரையிடும் திரையரங்கத்தின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும், இதுதான் தீர்மானம்.
இந்த தீர்மானத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் பெரிய அளவில் உண்ணாவிரதம் நடந்தது. அதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், டி.ராஜேந்தர், ராஜேஷ் என்று பலர் அரசின் இந்த தீர்மானத்தை எதிர்த்து பகிரங்கமாக பேசினார்கள்.
அதேபோல் இன்னொரு சம்பவம்.. ஊதிய கோரிக்கையை வலியுறுத்தி, அரசை எதிர்த்து ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியை ராஜேஷ்தான் தொடக்கி வைத்தார். அடிப்படையில் ராஜேஷûம் ஒரு ஆசிரியர்தானே. இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் அனைவரையும், காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், சிறைக்குச் சென்று சிறையில் அடைப்பட்டு கிடந்தவர்களுக்கு தேவையான உதவிகளை ராஜேஷ்தான் செய்தார்.

இந்தப் பிரச்னைகளுக்குப் பிறகு சகோதரியின் திருமண நிகழ்ச்சிக்காக எம்.ஜி.ஆரை நேரில் சென்று அழைப்பதற்காக பத்திரிகை கொண்டு சென்றார் ராஜேஷ். ஆனால், எம்.ஜி.ஆருக்கு எதிராக இரண்டு முறை போராட்டத்தில் கலந்து கொண்டபடியால் அவரை நேரடியாக சந்திப்பதில் லேசான தடுமாற்றம் ராஜேஷிற்கு. ஆனால், நடந்ததோ முற்றிலும் தலைகீழ். இவர் வந்திருக்கிறார் என்று தெரிந்ததும், உடனடியாக உள்ளே அழைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். உள்ளே வந்ததும், வழக்கம்போல் தன்னுடைய உற்சாகத்தில் இருந்து கொஞ்சமும் மாறாமல் ராஜேஷிடம் பேசியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
பேச்சில் அவ்வளவு ஒரு கணிவு, அவ்வளவு ஒரு அக்கறை. போராட்டத்தில் தன்னை எதிர்த்துப் பேசியதற்கான வருத்தத்தையோ, கோபத்தையோ எம்ஜிஆர் காட்டிக்கொள்ளவே இல்லையாம். இது ராஜேஷிற்கு பிரமிப்பாக இருந்திருக்கிறது.
பத்திரிகை கொடுக்கப்பட்டாலும், நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். வருவாரோ வரமாட்டாரோ என்று ராஜேஷிற்கு குழப்பம். ஆனால், அந்த திருமணத்தை எம்.ஜி.ஆரே முன்னின்று நடத்திக் கொடுத்ததோடு, அந்த நிகழ்ச்சியில் 58 நிமிஷம் இருந்து விட்டுப் போனாராம். அந்த நினைவலைகளை இப்போதும் கூட என்னிடம் கூறி நெகிழ்ந்திருக்கிறார் ராஜேஷ்.
பேட்டி: தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக