வெள்ளி, 30 ஜூலை, 2010

நிஜத்தை தொட்ட நிழல்கள் (தினமலர் வாரமலரில் வந்த தொடர்)

நிஜத்தை தொட்ட நிழல்கள் (தினமலர் வாரமலரில் வந்த தொடர்)

டி.ராஜேந்தர் மனித நேயசிக்க மனிதர்!
( ஸ்டில் சித்ரா சுவாமிநாதன் பேட்டி : தேவராஜன்)

ஓவியர் உபால்டு நண்பர் மதிதான் என்னை டி.ராஜேந்தரிடம் அறிமுகப்படுத்தினார். அது 1983ம் ஆண்டு. அப்போது டி.ஆர். தன் முதல்படமான "ஒரு தலை ராகம்' படம் எடுத்துக்கொண்டிருந்த சமயம். டி.ஆரிடம், "இவர் என் நண்பர். நல்ல போட்டோகிராபர்' என்று அறிமுகப்படுத்தியதிலிருந்து இன்று வரை டி.ஆரிடம் அன்புடன் பழகிவருகிறேன்.
டி.ஆரின் வீட்டு விஷேசங்கள், அவர் சம்பந்தமான விழாக்கள், அவர் நடித்த படங்களின் வெற்றிவிழாக்களை எல்லாம் போட்டோ எடுத்திருக்கிறேன். டி.ஆர். பற்றி சொல்ல எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. என் மனதில் இருப்பதை எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
டி.ராஜேந்தர் தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர். மயிலாடுதுறை பக்கம் உள்ள வடகரை அவர் பிறந்த கிராமம்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
அப்போதே கல்லுõரிகளில் நாடகங்கள் போட்டு அசத்துவது அவருக்கு கைவந்த கலையாக இருந்திருக்கிறது. அவருடைய திறமைகளைப்பார்த்த நண்பர் எல்லாம்,"" ராஜேந்தார், நீ சென்னைக்குப் போய் சினிமா படம் எடு. நீ நிச்சயம் ஜெயிப்பே!'' என்று நம்பிக்கைத் தந்தனர். நண்பர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் பார்த்து, சினிமாவுக்குத் தேவையான நுட்பங்களை எல்லாம் படித்து தெரிந்து கொண்டார்.
சென்னைக்கு வந்தப்பிறகு, பல போராட்டங்களுக்குப் பிறகு, இஎம். இப்ராஹிம் தயாரிக்க, டி.ஆரின் கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என சகலமும் முதல் படத்திலேயே துணிச்சலாக செய்தார்.
இந்தப் படத்திற்கு தேவையான அனைத்து பாடல்களும் எழுதிய டி.ஆர்., சில பாடல்களை டி.எம்.எஸ். பாடினால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி, டி.எம்.எஸ். வீட்டிற்குச் சென்றார்.
துரும்பாக இளைத்து, பரட்டை தலை, தாடியுடன் புதுமுக இயக்குனர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட டி.ஆரை ஏற இறங்க பார்த்திருக்கிறார் டி.ஏம்.எஸ்.
"" என்னப்பா நீ புதுமுக இயக்குனரா? உன் படத்துக்கு நான் தான் பாடணுமா? சரி, கதையைச் சொல்லு!'' என்றிருக்கிறார்.
டி.ஆரும் உடனே கதையை நடித்தே காட்டிருக்கிறார். கதைப்பிடித்திருந்ததால், ""சரி, எங்கே ரெக்கார்டிங் வைத்திருக்கேன்னு சொல்லு நான் வந்துடுறேன்.'' என்று டி.எம். எஸ். சொல்லி அனுப்பிவைத்துள்ளார்.
ஓரிரு நாள் கழித்து தேதி கொடுத்த நாளில் ரெக்கார்டிங் தியேட்டருக்குப் போயிருந்தார் டி.எம்.எஸ். "" நான் பாட வேண்டி பாட்டைக் காட்டப்பா!'' என்று கேட்டார்.
டி.ஆர். தான் எழுதி "நான் ஒரு ராசியில்லா ராஜா' என்ற பாடலைக் காட்டினார். அதைப்படித்த டி.எம்.எஸ் அப்படியே ஆடிபோய்விட்டார்.
"" என்னப்பா இது! உனக்கு முதல் படம் என்கிற, முதல் பாட்டுங்கற. இப்படி எழுதி இருக்கீயே? பாட்டு நல்லா இருக்கு ஆனா, முதல் இரண்டு வரியை மாத்தி எழுது பாடறேன்'' என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் டி.எம்.எஸ்.
மீண்டும் டி.ஆர்., டி.எம்.எஸ் வீட்டிற்குச் சென்று, படத்தின் கதைக்குப் பொருத்தமான பாட்டு அது. வரிகளே கதையைச் சொல்லும். அதனால், வரிகளை மாற்ற இயலாது. ஐயா, நீங்க தான் அந்தப் பாட்டை பாடணும்'' என்று டி.ஆர்.கோரிக்கை வைத்தார்.
""ஏம்பா, இப்பதான் பல புது பாடகர்கள் இருக்காங்களே! எஸ்.பி.பி., மலேசியா வாசுதேவன் இவங்களை வைத்துப் பாட வைக்கக்கூடாதா?'' என்று தட்டிக்கழிக்கப் பார்த்தார் டி.எம்.எஸ். இருந்தாலும், மனம் தளராமல் டி.ஆர். "" ஐயா, நீங்கதான் பாடணும்'' என்று அடம்பிடித்திருக்கிறார்.
டி.ஆரின் பிடிவாதத்தையும், விடாமுயற்சியையும் பார்த்த டி.எம்.எஸ். "" சரி, வந்து பாடித் தருகிறேன்'' என்று ஒப்புக்கொண்டார்.
மீண்டும் ரெக்கார்டிங் தியேட்டர் வந்தார் டி.எம்.எஸ்.
டி. ஆரை அழைத்து,"" என்ன இருந்தாலும் நீயும் புதுமுக இயக்குனர். உன் முன்னேற்றம் என்னால் கெட்டுபோய்விடக்கூடாது. சரி, நீ சொன்ன "நான் ஒரு ராசியில்லா ராஜா' பாடலை கடைசியாக பாடறேன். அடுத்தப் பாடலைக்காட்டு, அதைப் பாடறேன்'' என்றார்.
உடனே, டி.ஆர். ஞூடுத்தப்பாடலைக் காட்டி இது தான் சார் நீங்க பாட வேண்டிய பாடல்'' என்று அந்தப்பாடலை டி.எம்.எஸ். கையில் கொடுத்தார் டி.ஆர்.
அந்தப் பாடலைப் படித்ததும் டி.எம்.எஸ். பயங்கர அதிர்ச்சியடைந்து விட்டார். "" என்னப்பா... முதல் உள்ள பாட்டே தேவலாம் போலிருக்கே. இந்த பாட்டில் " என் கதை முடியும் நேரம் இது என்பதை சொல்லும் ராகமிது' எழுதியிருக்கியே. இந்தப் பாட்டை நான் பாடினால் எனக்கு என்ன ஆகும்? உனக்கு என்னாகுமோ! தெரியலையப்பா... பாட்டு வரியை மாற்ற முடியாதா?'' என்று டி.எம்.எஸ் மிரண்டு போய் கேட்க, பழையபடி மீண்டும் டி.ஆர். மாற்ற முடியாது என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார்.
அப்படியே கொஞ்ச நேரம் தீவிர யோசனையில் இருந்த டி.எம்.எஸ். "சரி, நடப்பது நடக்கட்டும். பாவம் இந்த தம்பிக்கு இது முதல் படம் வேறு. நாம் பாட மறுத்துவிட்டால், ஒருவேளை வேறு யாராவது பாடி, அந்தப் பாடல் எடுபடவில்லை என்றால், இந்த தம்பி வாழ்க்கை வீணாகப் போய்விடுமே! நம்மால் ஒருத்தர் வாழ்க்கை கெடக்கூடாது' என்று ஒரு தீர்மானத்துக்கு வந்தவர், "" தம்பி, இங்கே வாப்பா... நானே பாடறேன். சீக்கிரம் வேலையை ஆரம்பி...'' என்று சொன்னதுமே, டி.ஆர். முகத்தில் முதல்முறையாக தாடியை மீறி சந்தோஷம் பளீச்சிட்டது. மிகதுரிதமாக வேலைகள் ஆரம்பிக்க, டி.எம்.எஸ். பாடலை அவரது வெண்கல குரலில் பிரமாதமாக பாடி அசத்திருந்தார்.
ஆனால், ஆடியோ ஏஜென்ட்கள் இந்தப்படத்தில் பெண் குரலே இல்லையே! எல்லாம் ஆண் குரலாகவே இருக்கே. இந்த பட கேசட் விற்குமா? என்று சொல்லி டி.ஆரை மனம்முடைய செய்தனர். டி.ஆர். என்ன செய்தார்?
பேட்டி: தேவராஜன்
தொடரும்.

டி.ராஜேந்தர் பற்றி சித்ரா சுவாமிநாதன் : பேட்டி: தேவராஜன்

ஒருதலை ராகம் படத்திற்காக "நான் ஒரு ராசியில்லா ராஜா' என்ற பாடலும், "என் கதை முடியும் நேரமிது' என்ற பாடலையும் அபசகுனமாக நினைத்த டி.எம்.எஸ். அப்பாடல்களை பாட மறுத்தார். பின்னர், டி.ஆரின் தொடர் முயற்சிகளுக்குப்பின் ஒருவழியாக சம்மதித்து அப்பாடல்களைப் பாடிதந்தார். மற்ற பாடல்களை இளம்பாடகர்கள் பாடி இருந்தனர்.
சூபடத்தின் அனைத்து பாடல்களும் பதிவுசெய்யப்பட்டு, ஆடியோ ரிலீசுக்குத் தயாரானது. படத்தின் பாடல்களைக் கேட்ட ஆடியோ ரைட்ஸ் வாங்கும் உரிமையாளர்கள்" இதென்ன படத்தில் ஒரு டூயட் பாட்டுக்கூட இல்லை. ஒரு பெண் குரல் பாடலும் இல்லை. எல்லாமே ஆண் குரலாகவே இருக்கே. எப்படி விலைபோகும்?' என்று ஆடியோ உரிமை கேட்டவர்கள் முதலில் வாங்க மறுத்து விட்டனர். மீண்டும் டி.ஆரின் தொடர் போராட்டத்தின் காரணமாக ஒருதலை ராகம் பட கேசட் ரிலீஸ் ஆனது. கேசட் ரிலீஸ் ஆன நாள் முதலாய் கேசட் விற்பனை படிப்படியாக உயர்ந்தது. கடைசியில் அமோக விற்பனை சாதனை புரிந்தது. டி.எம்.எஸ் பாடி அந்த இருபாடல்களும் மற்ற பாடகர்கள் பாடிய பாடல்களும் பட்டி,தொட்டி, சிட்டி களில் ஒலித்தது. எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. டி.எம்.எஸ்சுக்கு அந்தப் பாடல்கள் நல்ல பெயரை பெற்று தந்தது.
படப்பாடல்கள் ப்பர் ஹிட் ஆனதால் படம் ரிலீஸ் ஆன நாள் முதல் நல்ல வரவேற்பு கிடைத்தது. திரையிட்ட தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக ஒருதலை ராகம் படம் 100 நாள் கண்டது.
படத்தின் 100 நாளில் வெற்றிவிழா எடுக்கப்பட்டது. படத்தில் நடித்த நடிகர், நடிகைகள்,இதர தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லாம் கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது. ஆனால், ஒரு தலை ராகம் படைத்த பிரம்மாவான டி.ஆருக்கு அந்த விழாவில் அமர ஒரு சீட்கூட கிடைக்கவில்லை. அவரது திறமையை கவுரபடுத்த ஒரு சீல்டும் வழங்கப்படவில்லை. தெரிந்தே, டி.ஆர். புறக்கணிக்கப்பட்டார். அதுமட்டுமல்ல; படத்தின் கதை, வசனம், பாடல், இசை, இயக்கம் எல்லாம் டி.ஆர். தான். இருந்தும் அப்படத்தின் இயக்கம் என்று பட தயாரிப்பாளர் இஎம். இப்ராஹீம் தன் பெயரைப் போட்டுக்கொண்டார்.
இப்படி முதல்படத்திலேயே பல அவமானங்களை,புறக்கணிப்புகளை,ஏமாற்றுகளைக் கண்ட டி.ஆர். சோர்ந்துவிட வில்லை. அவரின் தன்னம்பிக்கை மேலும் ஜெயிக்க வேண்டும் என்று தான் போராட துõண்டியது.
ஒரு தலை ராகம் சூப்பர் ஹிட் ஆனப்பிறகு, துõர்தர்சன் தொலைக்காட்சியில் இருந்து டி.ஆரை பேட்டி டுத்தார்கள். ஆனால், அந்தப் பேட்டியை என்னக் காரணத்தாலோ என்னவோ ஒளிப்பரப்பவே இல்லை. டி.ஆருக்கு மீடியாவிலும் முதல் புறக்கணிப்பு ஏற்பட்டது. இருந்தும் மனம் தளராமல் அடுத்தப் படத்திற்கு வாய்ப்புத் தேட ஆரம்பித்தார்.
நாட்கள் பல கடந்தன. டி.ஆரின் திறமையை அறிந்த ஜே.பி.ஆர். தான் எழுதி வைத்திருந்த கதையை படமாக எடுத்து தருமாறு டி.ஆரிடம் கொடுத்தார். அந்தப் படத்திற்கு ஜே.பி.ஆர் தான் தயாரிப்பாளர். இரண்டாவது வாய்ப்பு கிடைத்ததில் பூரித்துப் போன டி.ஆர். உடனே ஜே.பி.ஆரின் கதைக்கு திரைகதை, வசனம், பாடல்கள் எழுதினார். படத்திற்கு "வசந்த அழைப்புகள்' என்று பெயரிட்டு படம் எடுத்து வந்தார். இரண்டாவது படமான வசந்த அழைப்புகள் டி.ஆருக்கு எந்தப்பிரச்னையையும் கொடுக்கவில்லை. தடைகளும் ஏற்படுத்த வில்லை. திட்டமிட்டப்படி படத்தை குறிப்பிட்ட காலத்திலேயே எடுத்து முடித்தார். படம் ரிலீஸ் ஆனது. வசந்த அழைப்புகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
மூன்றாது படம் பண்ணும வாய்ப்பும் டி.ஆருக்கு வந்தது. மயிலை குருபாதம் என்பவர் தான் ஒரு படம் தாயாரிக்கப் போவதாகவும், அதை நீ தான் கதை எழுதி, இயக்க வேண்டும் என்று டி.ஆரிடம் சொன்னார். டி.ஆர். முழுமூச்சாக மூன்றாவது படவேலையில் ஈடுபட்டார். படத்திற்கு "ரயில் பயணங்களில்' என்று பெயரிட்டார். அந்தப்படத்தின் கதை மிக அருமையான காதல் கதை. டி.ஆர். எழுதிய அத்தனைப்பாடல்களும் மிக அருமையாக இருந்தன. இந்தப்படம் ரிலீஸ் ஆனால் வெற்றி விழா காணும் என்பதில் மிகுந்த நம்பிக்கையில் இருந்தார் டி.ஆர். படம் கிடுகிடுவென எடுக்கப்பட படம் வளர்ந்தது. என்னவோ திடீரென்று தயாரிப்பாளர் குஞ்சிதபாதத்திற்கு பண நெருக்கடி ஏற்பட்டது. படத்திற்கு பைனான்ஸ் பண்ண முடியாமல் தவித்தார். படம் அப்படியே நின்றுபோனது. தயாரிப்பாளர் குஞ்சிதபாதம் இடிந்துபோனார். ஆனால், டி.ஆர். எப்படியும் இந்த படத்தை எடுத்து ரிலீஸ் செய்வேன் என்று தீர்மானமாக இருந்தார். அந்த நேரத்தில் டி.ஆருக்கு தங்குவதற்கு கூட ஒரு இடம் இல்லை. சாப்பாட்டிற்கும் வழியில்லை. இருந்தும் ரயில் பயணங்களில் படம் டிராப் ஆகிவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
அப்போது முருகேச கவுண்டர் என்ற பிரபல பிரமுகர் ரயில் பயணங்களில் படத்தை தொடர்ந்து எடுக்க நிதி உதவி செய்வதாக வாக்குத் தந்தார். இது போதாதா டி.ஆர. வீறுகொண்டு எழ?
நின்று போன அந்தப் படம் மீண்டும் முருகேச கவுண்டர் நிதியுதவியால் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது. ஒருவழியாய் படம் முழுமையாக எடுக்கப்பட்டு முடிவடைந்தது.
படத்தின் கதை, பாடல்கள், இசை எல்லாம் நன்றாக அமைந்ததால் படம் நன்றாக ஓடும் என்று எல்லாருக்கும் நம்பிக்கை ஏற்பட்டது. படம் ரிலீஸ் ஆனது. எதிர்பார்த்ததைவிட படம் மிக அதிக நாட்கள் ஓடி சாதனை செய்தது. இந்த படத்தின் வெற்றியின் மூலம் பல பட வாய்ப்புகள் டி.ஆரைத் தேடி வந்தன.
பேட்டி: தேவராஜன்
தொடரும்.
டி.ஆர். 3
பாலகிருஷ்ணனுக்கு ராகம் தேடும் பல்லவி படமும், கே.ஆர்.ஜிக்கு நெஞ்சில் ஓர் ராகம் படம் செய்து கொடுத்தார். அந்தப் படத்தில் சரிதா, தியாகராஜன், ராஜிவ் இவர்களை அறிமுகப்படுத்தினார்.
"உயிர் உள்ளவரை உஷா' என்ற படத்தின் மூலம் டி.ஆர். தயாரிப்பாளர் ஆனார். சொந்த கம்பெனிக்கு தன் பெயரையோ, அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைகள் பெயரைத்தான் எல்லாரும் வைக்க விரும்புவார்கள். டி.ஆர். தன்னுடை பிறந்த மண்ணின் மாவட்டமான தஞ்சையை பெருமைபடுத்தும் விதமாக"தஞ்சை சினி ஆர்ட்ஸ்' என்று பெயர் வைத்தார். எம்மதமும் தனக்கு சம்மதம் என்பதை விளக்கும் விதமாக இந்து கோயில் கோபுரம், பிறை, சிலுவை சேர்த்து டி.சி.எ. என்ற லோகோவை வடிவமைத்திருந்தார்.
உயிருள்ளவரை உஷாவில் இவர் நடித்தப் பிறகு இவருக்கென்று ரசிகர்கள் வளர ஆரம்பித்தார்கள்.
டி. ஆர். நல்ல படைப்பாளர், நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதர். இரக்க குணமும், உதவும் தன்மையும் கொண்டவர். அதற்கு பல உதாரணங்கள் என் நினைவில் பதிந்திருக்கிறது.
டி.ஆர். தன்னுடை ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஏழை எளிய மக்களுக்கு பல லட்சங்கள் உதவி செய்வார். அன்னதானம் செய்வார். 1987ம் ஆண்டு. வடபழனி விஜயசேஷமகாலில் பிறந்தநாள் கொண்டாடினார். அன்று அவர் ஏழைகளுக்கு செய்த உதவி கொஞ்ச நஞ்சமல்ல. திருவண்ணாமலை, திருச்சி, ராஜபாளையம், குற்றாலம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த நான்கு ஜோடிகளுக்கு முழுக்க முழுக்க தன் சொந்த செலவினில் திருமணம் செய்து வைத்தார். அதை நேரில் பார்த்து நான் பிரமித்துப் போனேன்.
இன்னொரு சம்பவம் இப்போதும் கூட அந்த நிகழ்ச்சி என் கண்ணில் நிழலாடுகிறது. அதுவும் டி.ஆரின் ஒரு பிறந்த நாள் விழா. பிறந்த நாளுக்கு முதல் நாள் இரவு. டி.ஆரின் பிறந்த நாள் போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டு இரவு முழுவதும் சென்னையில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுக்கொண்டிருந்தன.
அந்த இரவில் டி.ஆரின் போஸ்டரை ஒட்டிய ஒருத்தர் தவறி மேலே இருந்து விழுந்து விட்டார். அவருக்கு பலத்த அடி, காயம் ஏற்பட்டது. அவரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்து அட்மிட் செய்தனர்.
இந்த தகவல் எப்படியோ டி.ஆருக்கு காலையில் போய் சேர்ந்து விட்டது. அந்தத் தகவலை கேட்டதும் டி.ஆர் துடித்துப்போனார்; கண்ணீர் விட்டு கலங்கினார். பிறந்த நாளுக்கு பெரிய பெரிய பிரமுகர்கள் எல்லாம் வாழ்த்த வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.
இதை எல்லாம் அப்படியே விட்டு, காரை எடுத்துக்கொண்டு நேராக அரசு பொது மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கே போய் போஸ்டர் ஒட்டும் போது தவறி விழுந்து அடிப்பட்டவரை சந்தித்து, ஆறுதல் கூறிய டி.ஆர். அவருக்கு அந்த மருத்துவமனையில் முதல்உதவி சிகிச்சை மட்டும் செய்து விட்டு, உடனே அங்கிருந்து அவரை டிஸ்சார்ஜ் பண்ணி, தன் காரிலேயே அழைத்துக்கொண்டு தியாகராயர் நகரில் இருக்கும் பிரபலமான ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்து, உயர்ரக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். அதுமட்டுமல்ல, அங்கிருக்கும் டாக்டர்களிடம் ஒரு பிளாங் செக் கொடுத்து விட்டு எவ்வளவு செலவு ஆனாலும் பராவாயில்லை. இவர் பூரண குணமடைய வேண்டும் கோரிக்கை வைத்து விட்டு தான், தன்னுடை பிறந்த நாள் கொண்டாடும் விஜய சேஷமகாலுக்கு வந்தார்.
இவரை வாழ்த்த எத்தனையோ முக்கிய பிரமுகர்கள் வந்து காத்திருந்தும் கூட, தனக்காக ஒருத்தர் வேலை செய்து அடிப்பட்டாரே என்ற கவலைதான் டி.ஆர் நெஞ்சில் நெறுஞ்சியாய் குத்தியது.
அவர் நினைத்திருந்தால் தன் உதவியாளரை அழைத்து, அவரிடம் பணம் கொடுத்து அடிப்பட்டவரை பார்த்துக்கொள் என்று சொல்லி விட்டு, தன் பிறந்த நாளை ரசிகர்கள், பிரமுகர்கள் மத்தியில் கொண்டாடியிருக்கலாம். அப்படி நினைக்காத டி.ஆர். என் மனதில் உயர்ந்து நிற்கும் மாமனிதராக இருக்கிறார்.
தன்னுடை பிறந்த நாளுக்கு வாழ்த்த வரும் ரசிகர்களுக்கு சென்னையில் தங்கும் வசதி செய்து, அவர்களுக்கு உணவு கொடுத்து கவுரவமாக நடத்தி தான் அனுப்பி வைப்பது டி.ஆரின் வழக்கம். தன் ரசிகர் இரவில் பயணம் செய்தால் ஏதாவது அசம்பாவிதனம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே யாரையும் இரவில் ஊர் திரும்ப கூடாது என்று கட்டளையிடுவார்.
ஒரு முறை திருவண்ணாமலையில் இருந்து டி.ஆரின் ரசிகர்கள் டி.ஆருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற வேனில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் வேன் சிறு விபத்துக்குள்ளானது.நல்ல வேளை ரசிகர்களுக்கு எதுவும் ஆகவில்லை. இந்த தகவல் டி.ஆர். காதுக்கு எட்டியதுமே, பதறியவர், உடனே தன் உதவியாளரிடம் ரூபாய் அறுபதாயிரம் கொடுத்து வேனை நல்ல மெக்கானிக்கிடம் கொடுத்து பழுது பார்த்த, சரிசெய்து என் ரசிகர்களிடம் கொடு. என்னைப் பார்க்க வந்தவர்களுக்கு என்னால் சிறு நஷ்டம் கூட ஏற்படக்கூடாது என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
தான் ஒழுக்காமானவர் என்பதை நிஜவாழ்க்கையிலும் சரி, சினிமாவில் நடிப்பதாக இருந்தாலும் சரி ஒருபோதும் டி.ஆர். தன்கொள்கையை விட்டுகொடுக்க மாட்டார். உதாரணம் சொல்வதென்றால் அவர் நடித்த எந்தப் படத்திலும் எந்த நடிகையும் அவர் தொட்டு நடித்ததே இல்லை.
தன் மூத்த மகன் சிம்புவின் பெயரில் "சிம்பு சினி ஆர்ட்ஸ்' என்ற பெயரில் ஒரு தாயின் சபதம் படத்திலிருந்து வீராசாமி முதற்கொண்டு அந்த பேனரில்தான் படம் எடுத்து வருகிறார்.
டி.ஆரின் முதல் படத்திலிருந்து இன்று வரை அவருடைய படத்தின் விழாக்களுக்கு நான் தான் புகைபடம் எடுத்து வருகிறேன். நான் கலைமாமணி விருது வாங்கியதும், முதலில் என்னை கவுரவித்து, பேட்டி எடுத்து அதை குறள் இணையதள டி.வியில் ஒளிபரப்பி என்னை பெருமைபடுத்தியதும் டி.ஆர். தான்!
இப்படி, டி.ஆர். தான் கடந்து வந்த பழைய நினைவுகளை என்னுடன் அடிக்கடி பகிர்ந்து நெகிழ்வதுண்டு.
பேட்டி : தேவராஜன்
நினைவுகள் தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக