வெள்ளி, 30 ஜூலை, 2010

நிஜத்தை தொட்ட நிழல்கள் ( தினமலர் வாரமலரில் வந்த தொடர்)

நிஜத்தை தொட்ட நிழல்கள் ( தினமலர் வாரமலரில் வந்த தொடர்)

ரஜினி காந்த் மிக உயர்ந்த மனிதர்!
( ஸ்டில் சித்ரா சுவாமிநாதன் : பேட்டி : தேவராஜன்)
என்னுடைய 50 ஆண்டுகால திரைப்படதுறையில் நான் சந்தித்து, பழகிய எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், விஜயகாந்த் இப்படி பல நடிகர்களுடன் பழகி இருக்கிறேன். இவர்களில் வித்தியாசமானவர், என் நெஞ்சைத் தொட்டவர் ரஜினிகாந்த். என் அனுபவத்தில் சொல்கிறேன் கிட்டதட்ட எம்.ஜி.ஆர். போல வாழ்பவர் ரஜினி.
எம்.ஜி.ஆர். கண்டியில் பிறந்தாலும், தமிழ்நாடுதான் என்நாடு. என் சொந்தம் தமிழ் மக்கள் என்று வாழ்ந்தவர். ரஜினியும் அப்படித்தான். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், தன்னை ஒரு தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே விரும்புவார். எம்.ஜி.ஆரைப்போலவே சத்தமில்லாமல், விளம்பரமில்லாமல் பலருக்கு உதவிவருபவர்.
ரஜினி ஆரம்ப கால சினிமா வாழ்க்கையை துவக்கிய காலத்தில் இருந்தே எனக்கு நன்றாக அவரைப் பற்றித் தெரியும். அப்போது நான் எலிகண்ட் விளம்பர நிறுவனத்தில் பணியில் இருந்தேன். நானும் ஓவியர் பரணியும் அடிக்கடி கே.பி(கே. பாலசந்தர்) அலுவலகத்திற்கு செல்வது வழக்கம். கே.பி. சார் தான் ரஜினியை "அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகம் செய்தார். ரஜினியை கே.பி. சார் அலுவலகத்தில் பலமுறை பார்ப்பேன். வணக்கம் சொல்வேன். அவரும் சிரித்தப்படியே வணக்கம் சொல்வார். ரஜினியின் முதல் படம் வெளியானது. பிறகு, கே.பி. இயக்கத்தில் "மூன்று முடிச்சு நடித்தார். படிப்படியாக ரஜினி முன்னுக்கு வந்த சமயம் அது. ரஜினி புதுப்பேட்டையில் மேன்சனில் வசித்துவந்தார்.
நான் எழும்பூரிலிருந்து எலிகண்ட அலுவலகத்திற்கு செல்ல மியூசியம் வழியாக வந்து, ஆர்ட்ஸ் காலேஜ் வழியாக மவுண்ட் ரோடு கடந்துதான் அலுவலகம் செல்ல வேண்டும். ஒருமுறை ரஜினி ஒயிட் அண்ட் ஒயிட்டில் ஸ்கூட்டரில் அண்ணாசாலை கலில் மேன்சன் அருகே போய்கொண்டிருந்தார். நான் எதிரே சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன். ரஜினியைப் பார்த்ததும், "வணக்கம்' சொன்னேன். அவரும் ஸ்கூட்டரை நிறுத்தி வணக்கம் சொன்னார். பிறகு, அவரை கே.பி. சார் அலுவலகத்தில் அடிக்கடி பார்த்திருப்பதை சொன்னேன். அவர் நடித்த இரண்டு படங்களைப்பற்றிவிமர்சனம் செய்தேன்.
""சரி, வாங்க பேசிக்கொண்டே போகலாம்'' என்றவர், ""நீங்க என்ன செய்கிறீங்க?'' என்று கேட்டார்.
நான், ""எலிகண்டில் வேலை செய்கிறேன்'' என்றேன்.
இப்படி பேசிக்கொண்டே சென்றோம். இதுபோல சாலை சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்தது. இந்தப் பழக்கத்தின் மூலம் ரஜினி வீட்டிற்கு சென்றேன். எப்போதுமே ரஜினி வீட்டில் ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அப்போதெல்லாம் ரஜினி காலை 7 மணி முதல் 8 மணிவரை ரசிகர்களைப் பார்த்து, அவர்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது பழக்கம். ரசிகர்களை சந்தித்து விட்டுதான் சூட்டிங்கிற்கு போவார்.
தினமும் காலையில் ரஜினி வீட்டிற்குச் சென்று ரசிகர்களை ரஜினியுடன் படம்பிடித்து, அந்தப் போட்டோக்களை ரசிகர்களுக்கு கொடுத்து வந்தேன். ஏற்கெனவே ரஜினி வீட்டிற்கு வரும் ரசிகர்களைப் படம்பிடிக்க ஒரு இளைஞர் இருந்தார். அவரும் ரசிகர்களை ரஜினியுடன் படம்பிடித்து வந்தார்.
நான் போட்டோ எடுப்பதை ரஜினியோ, அவருடைய உதவியாளரோ தடுக்கவில்லை. கண்டிக்கவில்லை. என்னக்காரணமோ அந்த இளைஞர் மறுநாளில் இருந்து படம் பிடிக்க ரஜினி வீட்டிற்கு வரவில்லை. ரஜினி எப்போதுமே தன் ரசிகர்களோடு சிரித்தபடி, அணைத்தபடி தான் அதிகமா போஸ் கொடுப்பார். ரசிகர்கள் மீது ரஜினிக்கு எப்போதுமே பிரியம், மரியாதை எல்லாம் உண்டு. அதனால் தான் தன் ரசிகர்களை "வாழவைக்கும் தெய்வங்களே' என்று சொல்வார். அது தான் அவரது வளர்சிக்கு காரணமாக அமைந்தது.
தினமும் 30 இருந்து 50 பேருக்கு போட்டோ எடுத்து கொடுப்பேன். மற்றவர்களை வீட்டிற்குச் சென்று நாளை வாங்க என்பேன். அதுவும் வெளியூரில் இருந்து வரும் ரசிகர்களுக்கு முதலில் போட்டோ எடுத்துக்கொடுத்துவிடுவேன். சிலருக்கு தபாலில் போட்டோவை அனுப்பி வைப்பேன்.
ஒருசமயம் ரஜினி என்னிடம் வந்து."" எனக்காகவோ. ரசிகர்களுக்காகவோ எப்போதுமே இலவசமாக படம் எடுத்து தரவேண்டாம். அதற்குரிய பணத்தைப் பெற்றுகொள்ளுங்கள்'' என்று அன்பு கட்டளையிட்டார்.
ரசிகர்களின் போட்டோக்களை தபாலில் அனுப்ப அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்துக்கு அடிக்கடி செல்வேன். அப்படி வந்து போகும் போது தபால் அலுவலக வாசலில் செருப்பு தைக்கும் ஒரு தொழிலாளி தொழில் செய்து வந்தார். அவர் அருகில் தான் என் சைக்கிளை விட்டச் செல்வது வழக்கம். அந்த தொழிலாயின் கடையில் நாளிதழில் வெளிவந்த ரஜினியின் படங்களை ஒட்டி வைத்திருந்தார். அதை கவனித்த நான் அவரிடம், "" நான் தினமும் ரஜினி வீட்டில் ரஜினியை பல ஸ்டைல்களில் படம் பிடித்து வருகிறேன். உனக்கு நாளை ரஜினியின் ஒரிஜினல் ஸ்டில்லை தருகிறேன்'' என்றேன். அவரும் ரொம்ப சந்தோஷப்பட்டார். சொன்னபடி மறுநாள் ரஜினியை நான் எடுத்த போட்டோக்களை அவரிடம் கொடுத்தேன். அவரும் அதை அப்படியே பிரேம் செய்து கடையில் மாட்டிவைத்தார்.
ஒருமுறை அந்தத் தொழிலாலிழை ரஜினி வீட்டிற்கு அழைத்துச் சென்று, ரஜினியிடம் அறிமுகப்படுத்தி, அவரை ரஜினியோடு சேர்த்து போட்டோ எடுத்தேன். பின்னர் அந்தத் தொழிலாளிபற்றி ரஜினியிடம் சொன்னேன். அதைக்கேட்டதும், ""அவரை கொஞ்சநேரம் இருக்கச் சொல்லுங்கள்'' என்ற ரஜினி சில நிமிடங்களில் திரும்பி வந்து, அந்த தொழிலாளிக்கு 1000 ரூபாயை கவரில் வைத்து கொடுத்தார். அந்த தொழிலாளி சடாரென்று ரஜினி காலில் விழுந்து விட்டார். இந்தச் செயலைக்கண்டு ரஜினி அவரிடம் மிகவும் கோபித்துக்கொண்டு, "" இப்படி எல்லாம் இனிமேல் நீங்கள் யார் காலிலும் விழக்கூடாது. தாய், தகப்பன் காலில் விழுந்து தான் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.'' என்று அறிவுரை கூறி , அனுப்பி வைத்தார்.
பேட்டி : தேவராஜன்
தொடரும்.

ரஜினி 2

ரஜினிக்கு பந்தா, பகட்டு எல்லாம் பிடிக்காது...
பிறர் தன் காலில் விழுவது, கார் கதவைத் திறந்துவிடுவது, உதவியாளர் என்ற பெயரில் ரசிகர்களை தள்ளிவிடுவது எல்லாம் அவருக்கு சுத்தமாகப் பிடிக்காது.
ரஜினிக்கு பெருந்தன்மை அதிகம். ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது...
அது, ரஜினி நடித்த "மூன்று முடிச்சு' சக்கைபோடு போட்ட வேளை. அந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன் தான் எடுக்கப்போகும் "இறைவன் தந்த வரம்' படத்திற்கு ரஜினியை மிகச் சிறிய சம்பளத்தொகைக்கு புக் செய்தார். அந்தப் படத்தில் சீனியரான ஸ்ரீகாந்த்தும், விஜயகுமாரும் நடிக்க இருந்தனர். படத்தை பீம்சிங் இயக்க இருந்தார்.
படப்பிடிப்பு கொஞ்ச நாள் நடைபெற்றது. பிறகு நிதிநெருக்கடியால் படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டு வந்தது.
இந்நிலையில், ரஜினி மற்ற தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடித்து வந்தார். அப்படி அவர் நடித்த "பைரவி' படம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது.
மீண்டும் " இறைவன் தந்த வரம்' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்தது. ரஜினி நடித்து கொடுத்தார். படமும் ரீலீஸ் ஆனது.
புதுப்பேட்டையில் மேன்சனில் தங்கியிருந்த ரஜினியிடம் "இறைவன் தந்த வரம்' படத்தில் நடித்ததற்கான மீதி சம்பளத்தொகையை கொடுக்கச் சென்றார், பாலகிருஷ்ணன்.
ரஜினியை புக் செய்யும் போது இருந்த அவரின் மார்க்கெட் நிலை, பைரவி பட ஹிட்டிற்குப் பிறகு ஜெட் வேகத்தில் எகிறியிருந்தது...
இதனால், பேசிய சம்பளத்தொகையைவிட கூடுதலாக ஒருதொகை செக்காக ரஜினியிடம் கொடுத்தார், பாலகிருஷ்ணன்.
செக்கை வாங்கிப் பார்த்த ரஜினி, ""இது அதிகமா இருக்கே? முன்னால் நீங்கள் பேசிய சம்பளமே போதும்... அதுக்கு நானும் சம்மதிச்சேனே? பேசின பேச்சை ஏன் மாற்றணும்? எப்பவுமே வாக்குறுதியை நான் மீறிப் பேசறதில்லே... இப்ப திடீர்னு எதுக்கு அதிகத் தொகை? நீங்கள் எனக்கு என்ன தொகை சம்பளமாகத் தருகிறேன் என்றீர்களோ அதை மட்டும் கொடுங்க...'' என்று வற்புறுத்தி பழைய சம்பளத்தைத்தான் ரஜினி பெற்றுக்கொண்டார். இதை பாலகிருஷ்ணன் என்னிடம் பகிர்ந்து கொண்டு ரஜினியின் பெருந்தன்மையை பெரிதாக சிலாகித்தார்!

*
பெரிய நடிகர், சின்ன நடிகர், ஏழை, பணக்காரன் என்றெல்லாம் ரஜினி ஒருபோதும் "அந்தஸ்து' பாரபட்சம் பார்ப்பதில்லை. இதற்கு உதாரணமாக என் நினைவில் நிறைந்துள்ள ஒரு சம்பவம்...
வேணுசெட்டியாரின் ஆனந்தி பிலிம்ஸ் தயாரித்த "முள்ளும் மலரும்' படத்தின் 100 வதுநாள் வெற்றிவிழா சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்தது.
விழா முடிந்ததும் விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். படத்தில் பணிசெய்த அத்தனை பேருக்கும், கல்யாண மண்டபத்தின் முதல் மாடி ஏசி அறையில் விருந்து...
ரஜினி சாப்பிடுவதை படம் எடுக்க, நான் கேமராவுடன் சென்றேன். அவர் சாப்பிடுவதை போக்கஸ் செய்தேன். என்னைக் கூப்பிட்டு, ""நீங்க முதலில் சாப்பிடுங்கள். பிறகு, படம் எடுக்கலாம்!'' என்று அன்புக் கட்டளையிட்டு, அவர் அருகில் காலியாக உள்ள நாற்காலியிலேயே என்னை அமர வைத்து சாப்பிட வைத்தார். இந்த சம்பவம், நான் வாழ்நாளில் மறக்கவே முடியாதது!
*
ஆரம்ப காலத்திலிருந்தே ரஜினியிடம் பழக்கம் இருந்ததால்,1993ம் ஆண்டு என்னுடைய மூத்த மகள் திருமணப்பத்திரிகையை அவர் வீட்டுக்குச் சென்று கொடுத்தேன். திருமணத்திற்கு வந்து வாழ்த்துமாறு கேட்டுக்கொண்டேன்...
அழைப்பிதழை வாங்கிய உடனே வாய்நிறைய வாழ்த்தி, இனிப்புடன் ஒரு பெரிய தொகையை கொடுத்து அனுப்பி வைத்தார்.
என் 2வது மகன் திருமணப் பத்திரிகையை ஒரு விழாவில் ரஜினியைப் பார்த்தபோது கொடுத்தேன். அவர், "நாளை வீட்டிற்கு வாங்க' என்றார்.
மறுநாள் வீட்டிற்குப் போனேன்.
அப்போது ஏதோ அவசரவேலையாக ரஜினி வெளியில் சென்றிருந்தார். வீட்டில் அவர மனைவி லதா மேடம்தான் இருந்தார். அவர் என்னைப் பார்த்ததும் முகம் நிறைந்த புன்னகையுடன் வரவேற்றார்.
நான் வணக்கம் சொல்லி, "அம்மா... என்னை சார் வரச் சொல்லியிருந்தாங்க' என்று தகவல் சொன்னேன். "அவர் அவசரமா வெளியே போய்ருக்காரு... நீங்க வருவீங்கன்னு சொல்லியிருந்தார்'' என்று சொன்ன லதா, எனக்கு காபி கொடுத்து உபசரித்தார். ஒருபெரிய தட்டில் இனிப்பு, பழவகைகளுடன் ஒரு கவரில் பணம் வைத்து கொடுத்து வாழ்த்து சொன்னார். அன்பிலும் பாசத்திலும் பெருந்தன்மையிலும் ரஜினியைப் போலவே அவரது மனைவியும் இருக்கக்கண்டு நெகிழ்ந்து போனேன்.
*
"ரஜினி25' என்ற பிரமாண்ட விழாவை எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் நடத்தினார்கள்...
அந்த நிகழ்ச்சி முழுவதையும் புகைப்படங்கள் எடுக்க எனக்கு வாய்ப்பளித்தார்கள். நானும் அந்த பணியை நேர்த்தியாக செய்து கொடுத்தேன்.
நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை ஆல்பம் தயாரித்து, லதா மேடத்திடம் கொடுத்தேன். ஆர்வமாகப் படங்களைப் பார்த்து பாராட்டியதோடு, அந்த ஆல்பத்திற்கான செலவுத்தொகையைவிட அதிகமாகப் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.
என் கடைசி மகள் சித்ராவின் திருமணம் 2006ம் ஆண்டு நடந்தது. ரஜினி வீட்டிற்குச் சென்று அழைப்பிதழ் தந்து, "" நீங்கள் என் மகள் திருமணத்திற்கு வந்து ஆசீர்வதிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டேன்.
""தப்பா நினைச்சுக்காதீங்க... இப்போது கொஞ்சம் பிஸி... திருமணத்தை நல்லபடியா நடத்துங்க. திருமணம் முடிந்ததும் ஒரு நாளில் மணமக்களை இங்கே அழைத்து வாங்களேன்...'' என்றார்.
நானும் சரி என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.
என் மகளுக்குத் திருமணம் முடிந்து நாட்கள் கடந்தது. மகளும் மருமகனும் ரஜினி சாரை நேரில் பார்க்க ரொம்பவும் ஆசை ஆசையாகக் காத்திருந்தனர்.
அந்த நேரத்தில் ரஜினி படப்பிடிப்பில் ரொம்ப பிஸியாக இருந்தார். "நிச்சயம் இப்போது அவருக்கு நேரமும் கிடையாது. அவரை சந்திக்கும் வாய்ப்பும் கிட்டாது' என்று எண்ணியிருந்தேன்.
ஒரு மாதம் ஓடிவிட்டது. ஒரு நாள், "இனிமேலா ரஜினி மணமக்களை தன் வீட்டிற்கு கூப்பிட்டு ஆசீர்வதிப்பார்?' என்று திடீரென ஒரு நினைப்பு வந்தது...
அந்த வேளையில் ஒரு போன் அழைப்பு. யாராக இருக்கும் என்று நினைத்தபடியே ரிஸீவரைக் காதில் வைத்தேன். பேசியவர்..?
பேட்டி : தேவராஜன்
தொடரும்.

ரஜினி 3

"" ரஜினிசார் உங்க போன் நம்பரைக்கேட்டார். கொடுத்திருக்கேன். ஓரிருநாளில் ரஜினி வீட்டிலிருந்து உங்களுக்கு அழைப்புவரும். எங்கும் சென்றுவிடாதீர்கள். ஆயத்தமாக இருங்கள்'' என்று பி.ஆர்.ஓ. நிகில் போனில் தகவல் சொன்னதும், நான் சந்தோஷமானேன்.
2 நாள் கழித்து, என் மகளையும் மருமகனையும் அழைத்து வருமாறு ரஜினி யிடமிருந்து போன் வந்தது. நானும் உடனே அழைத்துச் சென்றேன்.
மணமக்களை வாழ்த்தி, ஆசீர்வதித்து, விருந்துகொடுத்தார் ரஜினி. முடிவில் இனிப்பு, பழங்களுடன் 10 ஆயிரம் ரூபாய் தந்து அனுப்பிவைத்தார்.
இதற்கு முன்னதாக ஒரு போட்டோவை ரஜினியிடம் காட்டினேன். அதைப்பார்த்து அப்படியே வாயில் கை வைத்து வியந்து,"" இது... இது... எப்போ, எப்டி எடுத்தது?'' ஆர்வமாய் என்னிடம் ரஜினி கேட்டார்.
அந்தப்போட்டோவின் சுவாரஸ்ய பின்னணியை சொல்கிறேன்...
அது 1983ம் ஆண்டு. விஜயகாந்த் நடிக்க, தாணு தயாரிக்கும் "கூலிகாரன்' பட பூஜை விழா பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது. நான் பூஜையை படம்பிடிக்க என்னுடை 3வயது மகள் சித்ராவையும் அழைத்து சென்றிருந்தேன். பட பூஜையை எடுப்பதில் லயத்திருந்த நான், என் மகளை அழைத்து வந்ததையே மறந்துவிட்டேன். திடீரென்று மகள் ஞாபகம் வர மகளைத் தேடினேன்.
அப்போது ரஜினி, "" உங்க மகள் என்கிட்டத்தான் இருக்கிறாள். பயப்படாமல் உங்கள் வேலையைப்பாருங்கள்'' என்றார் சிரித்தபடி. அந்த சமயத்தில் ரஜினி மடியில் என் மகள் சித்ரா அமர்ந்திருந்தாள். ரஜினி பக்கத்தில் ஏவிஎம் முருகன், நாகேஷ் போன்றவர்கள் அமர்ந்திருந்தார்கள். நான் அந்தக் காட்சியை அப்படியே படம்பிடித்தேன். ரஜினி மடியில் 3 வயதில் இருந்த என் மகள் போட்டோவைத்தான் ரஜினியிடம் காட்டி,"" இவள் தான் இப்போது உங்களிடம் ஆசிவாங்க வந்திருக்கிறாள்'' என்றேன். இதைகேட்டு, போட்டோவைப் பார்த்ததும் ரஜினி வியந்து போனார்.
எந்த விழாவுக்கு படம் எடுக்க சென்றாலும், எனக்கு பழக்கமான நடிகர், நடிகைகளுக்கு நெற்றியில் சிலுவை எழுதி ஆசீர்வதிப்பது என் பழக்கம். இன்றும் சினிமா விழாக்களில் நடிகர்கள் விக்ரம், ஸ்ரீகாந்த், ஷாம், பிரசன்னா, கருணாஸ் நடிகைகள் மீனா, திரிஷா, சினேகா, நமீதா என்னிடம் வந்து ஆசீர்வாதம் பெறுவார்கள்.
ஒருபட விழாவில் ரஜினி சிறப்பு விருந்தினராக வந்து அமர்ந்திருந்தார். நான் திரிஷாவின் நெற்றியில் சிலுவை எழுதி ஆசீர்வாதம் செய்தேன். அருகில் இருந்த ரஜினி என்னைப்பார்த்து சிரித்தார். உடனே நான் அவர் நெற்றியிலும் சிலுவை எழுதினேன். அவரும் பவ்யமாக கண்ணைமூடி இருந்தார். பின்னர் ஆசீர்வாதம் செய்தேன்.
ரஜினி ராகவேந்திரர் பக்தர் . நான் சிலுவை எழுதி, ஆசீர்வதிப்பதை ஏற்றுக்கொள்வாரோ மாட்டாரோ என்று சந்தேகத்தினால் அவருக்கு இதற்கு முன்பு செய்யாமல் இருந்தேன். ஆனால், ரஜினி அதை ஏற்றுக்கொண்டதைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன்.
ஒருமுறை ரஜினி அலுவலகத்திற்குச் சென்றபோது அங்கு ஜீசஸ் படமும் இருந்ததை கவனித்தேன். இவ்வளவு காலம் அவரிடம் பழகியும் அவர் மனதில் ஜீசஸ் இருக்கிறார் என்பதை அறியாமல் இருந்தேனே என்று என்னை நானே கடிந்துகொண்டேன்.
ஒருமுறை கோடம்பாக்கத்தில் இருக்கும் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் இருந்து எனக்கு போன் வந்தது.
""ரஜினி சார், உங்களை வரச் சொன்னார். உடனே ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்துடுங்க'' என்ற அந்த தகவல் கேட்டு,அவசரமாக 12 மணியளவில் ராகவேந்திரா கல்யாண மண்டபம் சென்றேன்.
15 நிமிடம் வரவேற்பறையில் காத்திருந்தேன்.
சர்ர்ர் என்று ரஜினியின் கார் மண்டபத்தில் நுழைந்தது. கார்டிரைவர் மண்பத்தின் பின்புறம் காரை நிறுத்தினார்.
சிறிது நேரத்தில் அவரின் உதவியாளர்,"" உங்களுக்குகாகத்தான் சார் வெயிட் பண்றார். உடனே போங்க'' என்றார்.
"" கொஞ்ச நேரம் ஆகட்டுமே. இப்ப தானே சார் வந்திருக்கார். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும்'' என்றேன் நான்.
ரஜினி ரூமில் இருந்து வந்த கார் டிரைவர் காளியப்பா,
"" சார் லன்ஞ்ச் சாப்பிட்டுகிட்டு இருக்கார். பரவாயில்ல. நீங்க போய் பாருங்க. இல்லேன்னா உங்களை காக்க வைத்ததற்கு என் மீது கோபப்படுவார்'' என்றார்.
நான் ரஜினி அறைக்குச் சென்றேன். பளீர் வெள்ளை ஜிப்பா, பேண்டில் இருந்தார். ஒரு கப் அளவு தயிர்சாதம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
"" வாங்க, உட்காருங்க'' என்றார் சிரித்தபடி.
"" இருக்கட்டும். நான் நிற்கிறேன்!'' என்றேன்.
"" இப்ப நீங்க உட்காரீங்களா, இல்ல நான் எழுந்து நின்று சாப்பிடட்டுமா?'' என்று அதட்டினார்.
நான் அவர் எதிரில் அமர்ந்து விட்டேன்!
பிறரை மதிப்பதிலும் மரியாதைக்கொடுப்பதிலும் ரஜினிக்கு ரஜினி தான் நிகர்! என்பதை அறிந்து சிலிர்த்துபோனேன்.
"" கொஞ்சம் சாப்பிடுங்க'' என்று கேட்டார்.
""நான் இப்பதான் சாப்பிட்டு வர்றேன்'' என்று சொல்லிவிட்டு, "" இவ்வளவு கொஞ்சமா சாப்பிடுறீங்களே! சூப்பர் ஸ்டாரின் மதிய உணவு ஒருகப் தயிர் சாதம் மட்டும் தானா?உங்க உணமுறை இவ்வளவு எளிமையானதா?'' என்று வியந்து கேட்டேன்.
அவருக்கே உரித்த ஸ்டைலில் சிரித்துக்கொண்டு, அவர் சொன்னதைக்கேட்டு, சரியான சாப்பாட்டு ராமனான நான் வெட்கி தலைகுனிந்து நின்றேன்; அந்த நொடியில் இருந்து திருந்தினேன். ரஜினி அப்படி என்ன என்னிடம் சொன்னார் தெரியுமா?...
பேட்டி : தேவராஜன்
தொடரும்

ரஜினி 4
"" மனுஷனுக்கு ஆகார கட்டுப்பாடு இருந்தா ஆரோக்கியம் தன்னால வந்துடும். சாப்பாட்டு விஷயத்தில் ரொம்ப கண்டிப்பாக இருந்துக்கணும். எப்போதுமே அளவாகதான் சாப்பிடணும். சாப்பாட நாமதான் சாப்பிடணும். அது நம்மள சாப்பிட்டுவிடக்கூடாது. அதனால தான் நான் எப்போதுமே சாப்பாட்டு விஷயத்தில் கவனம் செலுத்துகிறேன். வயது ஏற ஏற சாப்பாட்டு அளவு குறையணும். இன்னொன்னும் கேட்டுக்க, நாம் வாழ்றதுக்குதான் சாப்பிடணும். சாப்பிடறதுக்காகவே வாழக்கூடாது. வயசு 40 தாண்டிட்டாலேயே வெள்ளையாக இருக்கிற எந்த உணவுப்பொருளையும் சாப்பிடறதை தவிர்க்கணும்.'' என்று அவருக்கே உரித்த ஸ்டைலில் கடகடவென சொல்லிவிட்டு என்னைப்பார்த்து சிரித்தார்.
இதை கேட்டதும் சாப்பாட்டு ராமனாக இருந்த நான் வயிறுபுடைக்க, மூக்குகொட்ட சாப்பிடும் பழக்கத்தை மாற்றிக்கொண்டேன்." கோடிகளின் அதிபதியே ஒருகப் தயிர் சாதம் தான் சாப்பிடறார். நாம் எதுக்கு அதிபதி? நமக்கு எது சட்டிநிறைய சாப்பாடு?' என்று என் உள்மனசு உணர்த்தியது.
ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று நாடே எதிர்பார்த்துக்கொண்டிருந்த சமயம். எனக்கும் ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்று தெரிந்துகொள்ள ஆசை ஏற்பட்டது. அதை ஒருமுறை ரஜினியை பார்த்தப்போது கேட்டுவிட்டேன்.
"" எனக்கு அரசியலில் எல்லாம் நாட்டமில்லை. அரசியலில் இருந்து என்ன செய்ய முடியுமோ அதை இப்பவே செய்துகிட்டேதானே இருக்கேன்? இதை அங்கே போய் செய்தால் என்ன? இங்கேயே செய்தால் என்ன? அரசியலில் இருந்தால் அதுவெல்லாம் விளம்பரமாகும். எனக்கு விளம்பரம் பிடிக்காது.
வாழ்க்கை என்பது இறைவன் கொடுத்த வரம். நாம எல்லாம் 1000 ஆண்டுகாலமா வாழப்போகிறோம்? வாழ்கிற காலத்தில் எங்க இருந்தாலும் நல்லது செய்யணும். நம்மை அனுப்பி வைத்த இறைவன் எப்ப நம்ம அழைச்சுக்குவார்ன்னு யாருக்குத் தெரியும்? மனுஷ வாழ்க்கை நிலையில்லாதது. அது என்னவோ நிலையானது பலர் நினைச்சுக்கிட்டு இருக்காங்க. எது, என்ன, எப்ப நடக்கணும் ஆண்டவன் தீர்மானிச்சு வைச்சுருப்பான். அது அது அப்பப்ப அதுவாகவே நடக்கும். இதான் உண்மை. நான் அரசியலுக்கு வருவேனா என்பது என் கையில் இல்லை. வரணும்னு இருந்தா நான் என்ன செய்ய முடியும்?''' ரொம்ப விரிவாகவே பேசினார்.
இதை கேட்டதும் அவருடைய எண்ணம் எனக்குப் புரிந்தது. அவருடைய வாழ்க்கை நோக்கமும் தெரிந்தது. அதன் பிறகு,ரஜினியிடம் அரசியல் பற்றி நான் பேசியதே இல்லை.
ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சொன்னதுமே எனக்கு ரஜினி நடித்த படம் ஒன்றில் நடந்த சம்பவம்தான் ஞாபகத்துக்கு வருகிறது.
"காசேதான் கடவுளடா' படத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் ஏவி.எம். நிறுவனம் படம் தயாரிக்காமல் இருந்தது. அப்பச்சி அவர்கள் சரவணனை அழைத்து, இப்ப ஒரு படம் பண்ணலாமே என்றார். உடனே ஏவி.எம் சரவணனும் சரி என்று சொல்லிவிட்டு, எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினியை வைத்து "முரட்டுகாளை' ன்ற பெயரில் படஎடுக்க துவங்கினார்.
அந்தப் படத்தில் ரஜினி ஒரு காட்சியில் கிருஷ்ணன் வேடத்தில் நடக்கவேண்டியிருந்தது. ரஜினிக்கு கிருஷ்ணன் வேட ஒப்பனை போட ஆள் தேவைப்பட்டது. கிருஷ்ணன் வேட ஒப்பனையை செய்வதில் ஒப்பனை கலைஞர்களில் மிகப்பெரிய ஜாம்பவான் இந்தியாவில் ஒருத்தர்தான் உண்டு. அவர் பீதாம்பரம். (பீதாம்பரத்தின் மகன் தான் இயக்குனர் பி. வாசு.)
அவரை அணுகி, ரஜினிக்கு கிருஷ்ணன் வேடம் போட வேண்டிய காட்சி இருக்கிறது. நீங்கள் வந்து உதவவேண்டும் என்று கேட்டனர்.
அதற்கு அவர், "" நான் கிருஷ்ணன் மேக்கப்போட்ட என்.டி.ஆரும், எம்.ஜி. ஆரும் அவரவர்கள் இருந்த மாநிலத்தில் முதல்அமைச்சர்களாகிவிட்டனர். அவர்களுக்கு கிருஷ்ணன் மேக்கப் போட்ட இந்த கையால் இனிமேல் அந்த மேக்கப்பை யாருக்கும் என் கையால் போட மாட்டேன்'' என்று மறுத்துவிட்டார் பீதாம்பரம்.
இதைக்கேட்ட ஏவி.எம். சரவணனும், எஸ்.பி. முத்துராமனும் ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் இருந்தனர். பீதாம்பரம் மேக்கப் போட்டால் ரஜினிக்கு பாந்தமாக இருக்கும். ஆனால், இவர் முடியாது என்கிறாரே என்று எண்ணி, என்ன செய்வது என்று எஸ்.பி. முத்துராமனிடம் கிசுகிசுத்தார் ஏவி.எம். சரவணன்.
அந்த நேரத்தில் சட்டென்று எஸ்.பி. முத்துராமன் ஒரு ஐடியா பண்ணினார்.
பீதாம்பரத்துக்கு அப்பச்சி என்றால் ஏக மரியாதை. அவர் சொல்லிவிட்டால் எதையும் தட்டமாட்டார் பீதாம்பரம். இந்த லாஜிக்கை பயன்படுத்தி, "" அப்பச்சிதான் உங்களை ரஜினிக்கு கிருஷ்ணன் மேக்கப் போடச் சொன்னார். வேறு யாரும் இந்த மேக்கப் போடக்கூடாது என்று கண்டிஷனாக சொல்லிவிட்டார். அது மட்டுமல்ல; கிருஷ்ணன் மேக்கப்பை பீதாம்பரம் போடவிட்டால், அந்த வேடமோ, காட்சியோ படத்திற்கே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்'' என்று நிதானமாக எஸ்.பி. முத்துராமன் பீதாம்பரத்திடம் சொன்னார்.
இப்படி எஸ்.பி. முத்துராமன் சொன்னதும்ல சற்று அதிர்ந்த பீதாம்பரம், சிறிது யோசனைக்குப் பிறகு, அப்பச்சி மீது வைத்திருக்கும் மரியாதை காரணமாக ரஜினிக்கு கிருஷ்ணன் மேக்கப் பண்ணித் தருவதாக ஒப்புக்கொண்டார்.
பின்னர், முரட்டுகாளை படத்தில் கிருஷ்ணன் வேடத்தில் ரஜினி நடிக்கவேண்டிய சமயத்தில் ரஜினிக்கு பீதாம்பரம் மிக நேர்த்தியாக, அருமையாக கிருஷ்ணன் மேக்கப் போட்டுவிட்டார். அந்தக் காட்சி நன்றாகவும் படம்பிடிக்கப்பட்டது.
பின்னர், என்ன காரணத்தாலோ அந்த காட்சி முரட்டு காளை படத்தில் இடம் பெறாமல் போய்விட்டது. ஒருவேளை அந்தக் காட்சி இடம் பெற்றிருந்தால் ரஜினி அரசியலுக்கு வந்து முதல்வர் ஆகியிருக்கலாமோ?
பேட்டி : தேவராஜன்
தொடரும்
ரஜினி 5
ரஜினி தன்னுடைய சொந்தக் விருப்பு, வெறுப்புகளை பிறர்மீது திணிக்க மாட்டார். இப்படி ஒரு குணம் அவருக்கு இருப்பதை ஒரு சமயத்தில் அனுபவபூர்வமாக தெரிந்து கொண்டேன். அந்த சம்பவம் இன்றும் என் நெஞ்சில் பசுமையாகவே பதிந்திருக்கிறது.
அதை உங்களுக்காக இங்கே விவரிக்கிறேன்:
அருணாசலம் என்ற படம் ரீலீஸ் சமயம். அந்தப்படத்திற்கான விளம்பர டிசைன்களை உபால்டுவின் உதவியாளர் மேக்ஸ்தான் பொறுப்பேற்று செய்து கொண்டிருந்தார்.
அருணசலம் படத்திற்கான விளம்பர ஸ்டில்களை எடுத்துக்கொண்டு ரஜினியைப் பார்க்கப்போனார். அவருடன் நானும், ரவிராஜாவும் கூடவே சென்றிருந்தோம்.
செய்திதாள்களுக்கு விளம்பரமாக கொடுக்கக்கூடிய ஸ்டில்களை எல்லாம் ரஜினியிடம் காட்டினார் மேக்ஸ்.
மேக்ஸ் கொடுத்த விளம்பர ஸ்டில்களைப் பார்த்து ரசித்த ரஜினி, விளம்பர ஸ்டில்கள் எல்லாம் நல்லா இருக்கு என்றார்.
உடனே மேக்ஸ், "" இன்னைக்கே பேப்பருக்கு எல்லாம் விளம்பரம் கொடுத்திடட்டுமா?'' என்றார்.
"" இன்னைக்கா கொடுக்கணும்? நாளைக்குக் கொடுக்கலாமே. நாளைக்கு கொடுத்தால் நல்லதுன்னு நான் நினைக்கிறேன்'' என்றார் ரஜினி.
இப்படி ரஜினி சொன்னதுமே, கூட இருந்த ரவிராஜா,"" சார் சொல்றது சரி தான்! இன்னைக்கு செவ்வாய்க் கிழமை. நாளைக்கு புதன் கிழமை. பொண்ணு கிடைத்தாலும் புதன் கிடைக்காதுன்னு சொல்வாங்க'' என்றார்.
அப்படி ரவிராஜா சொன்னதும் "ஹாஹாஹா...' என்று சத்தமாக சிரித்தார் ரஜினி.
ரஜினி ஏன் இப்படி சிரிக்கிறார் என்று குழப்பமாக அவரைப் பார்த்தோம் நானும் மேக்ஸ்சும்.
சற்று யோசனைக்குப்பிறகு, "" நான் உழைப்பையும், உண்மையையும் நம்புகிறவன். நல்ல நேரம், கெட்ட நேரம், நாள் கிழமை மூடநம்பிக்கை எல்லாம் எனக்குக்கிடையாது'' என்றவர் தொடர்ந்து பேசினார்.
"" நான் செவ்வாய்க்கிழமை விளம்பரம் கொடுக்க வேண்டாம் என்று சொன்னது நல்ல நாள் கெட்டநாள் என்பதற்காக அல்ல. பொதுவாக பேப்பரை கிராமம், நகரத்தில் இருப்பவர்கள், பேப்பர் வாங்க வசதியில்லாதவர்கள் சலுõன்களில் தான் அதிகம் படிப்பார்கள். எங்குமே செவ்வாய்க்கிழமைகளில் சலுõன் விடுமுறை என்பதால் அன்று விளம்பரம் கொடுத்தால் பலர் பார்க்காமல் போவதற்கும் வாய்ப்புண்டு. அதே புதன் கிழமைவிளம்பரம் கொடுத்தால் பேப்பரை எல்லாரும் படிப்பார்கள். தகவல் எல்லாருக்கும் பரவலாக போய் சேரும். அதனால் தான் அப்படி சொன்னேன்'' என்று சிரித்தார்.
அடுத்து ஸ்டிக்கர் ஸ்டில்களை எடுத்துக்காட்டினார் மேக்ஸ். அதில் ரஜினி கதர்வேட்டி, கதர் சட்டையில் நெற்றியில் விபூதி பட்டையும், கழுத்தில் ருத்ராட்சமும் அணிந்து வணங்கியபடி அந்த ஸ்டில் இருந்தது. அந்த ஸ்டிக்கரை உற்று பார்த்தவர் கொஞ்சம் யோசனையில் இருந்தார்.
பிறகு, "" இந்த ஸ்டில் போஸ் வேண்டாமே'' என்றார் ரஜினி.
"" சார், இந்த போஸ் ரொம்ப பிரமாதமாக இருக்கே. கதர் வேட்டி, சட்டை, துண்டு, விபூதிபட்டை, ருத்ராட்சம் என நல்ல பவ்யமாதானே இருக்கீங்க. இந்த ஸ்டில்லை உங்க ரசிகர் ரொம்ப விரும்புவாங்க சார்'' என்றார் மேக்ஸ்.
"" இல்ல. இல்ல... இந்த போஸ் வேண்டாம். இந்த ஸ்டிலில் நான் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவன்னு சொல்லும்படியாக அமைந்திருக்கு. என்னுடைய ரசிகர்கள் எல்லா மதத்திலேயும் இருக்காங்க. ஒரு மதத்தின் அடையாளத்தை சுமந்திருக்கும் ஸ்டில்லை விளம்பரம் செய்தால் மாற்று மதத்தை சேர்ந்த சிலர் ரசிகர்க ள் வருத்தபடுவாங்க. என் படம் போட்ட ஸ்டிக்கரை சிலர் ஆட்டோவில், வீட்டில் என ஒட்டிவைத்துகொள்வார்கள். அதனால் தான் சொல்றேன் இப்படி வேண்டாம். எல்லாருக்கும் பொதுவானவனாக கோட்டு போட்டிருக்கும் இந்த ஸ்டில்லை ஸ்டிக்கரா செய்து விளம்பரம் செய்யுங்க'' என்றார்.
அந்த ஸ்டில்லில் ரஜினி கோட் அணிந்து கொண்டு ஒரு கை வானத்தை நோக்கி நீண்டபடியும் இன்னொருகை அவர் நெஞ்சை தொட்டப்படியும் இருந்தார்.
அந்த ஸ்டில்லை மேக்ஸிடம் காட்டி, "" இதில் ஒருகை வானத்தை நோக்கி இருக்குதுல அது அந்த ஆண்டவன் சொல்றான் என்பதையும், இன்னொரு கை நெஞ்சை நோக்கி இருக்கிறது அது அருணாசலம் செய்றான். அதாவது அந்த ஆண்டவன் சொல்றான் இந்த அருணாசலம் செய்றான் என்பதன் அ
ர்த்தமாக இருக்கும்'' என்று பட விளக்கமும் கொடுத்தார் ரஜினி.
ரஜினி சாதாரணமானவர்களைக்கூட மதிக்கக்கூடியவர். அன்புபாராட்டக்கூடியவர். அதை உணரும் சந்தர்ப்பமும் எனக்கு கிடைத்தது.
என் பேரன் சிறுவனாக இருந்தபோது, ""தாத்தா,நீ சினிமா நடிகர்களை எல்லாம் போட்டோ எடுப்பீயாமே. உனக்கு ரஜினியைத் தெரியுமா?''' என்று கேட்டான்.
""தெரியும். ரஜினி எனக்கு நண்பர்'' என்றேன். அவன் நம்பவேமாட்டேன் என்றார்.
ரஜினிக்கு போன் செய்து பேரன் கேட்டதை சொன்னேன். அதைக்கேட்டு சிரித்தவர், ""சரி, பேரனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வாங்க'' என்றார்.
நானும் பேரனை அழைத்துக்கொண்டு சென்றேன். ரஜினி அவனைத்துõக்கி கொஞ்சியவர். "" உன்னோட தாத்தா, எனக்கு நண்பர்தான்'' என்று சொல்லி அவனை கேலி செய்தார். பிறகு பூஜையறையிருந்து ஒரு பழத்தை எடுத்து அவனுக்குக்கொடுத்தார்.
ஒருமுறை என்னை அழைத்து குடும்பம் பற்றி விசாரித்தார். இனிமே சம்பாதிப்பதை சிக்கனமா செலவுசெய்து உனக்குன்னு கொஞ்சம் சேர்த்துவை'' என்று அட்வைஸ் செய்தார்.
குபேரன் பட டப்பிங் போது 80 ஆயிரம் மதிப்பு நவீன கேமிராவை எனக்கு அன்பளிப்பாக தந்தார். என் எதிர்காலத்திற்காக ஒரு பெரிய தொகையை கொடுத்து இதை வங்கியில் பிக்ஸட் டெபாசிட்டாக போட்டு வை என்று அக்கறையோடு எனக்கு உதவியதை என்றென்றும் மறக்க மாட்டேன்.
பேட்டி : தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக