வியாழன், 29 ஜூலை, 2010

டாக்டர் வேல்விழி நேர்காணல் மருத்துவக் கட்டுரைகள்: தொகுப்பு தேவராஜன் பாகம்1

1 .வாய் துர்நாற்றம் போக்கும் ஏலக்காய்

ருசிக்கும்., மணத்திற்காக உணவுப் பொருட்களில் சேர்க்ககூடிய பொருட்களில் ஒன்று ஏலக்காய். இது பல மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது.
ஏலம் தாவரம் வகையைச் சேர்ந்தது. இத்தாவரம் தென்னிந்தியா மற்றும் இலங்கை பகுதிகளைச் சேர்ந்ததாகும்.
கடல் மட்டத்திற்கு 800 1500 மீட்டர் உயரமுள்ள காடுகளில் இயல்பாக வளர்கிறது. இது இந்தியா, தென் ஆசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
இச் செடி ஏலக்காயின் பொருட்டு குளிர்ச்சியுள்ள மலை பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
ஏலக்காய் விதை கருப்பு நிறம் உடையது. மணமுள்ளது.
ஏலக்காய்க்கு ஆஞ்சி, கோரங்கம், துடி ஆகிய வேறு பெயர்களும் உண்டு.

மருத்துவ பயன் உடைய பகுதிகள்: கனியும், விதைகளும் மருத்துவப்பயன் கொண்டவை.
சுவை கார்ப்பு; தன்மை வெப்பம்.
செய்கை: வெப்பமுண்டாக்கி, அகட்டுவாயு அகற்றி, பசித்துõண்டி, மணமூட்டி, சிறுநீர்ப் பெருக்கி
செயல்திறன் வேதிப்பொருள்கள்:
ஏலக்காயில் பல எளிதில் ஆவியாகும் எண்ணைகள் உள்ளன. அவை: போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலின், கெரியோபில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின். இவை ஏலக்காயின் மருத்துவக்குணங்களுக்கு அடிப்படையாக உள்ளன.
பொது குணம்:
இது தொண்டை, தாள், வாய், கீழ்வாய் இவைகளில் உண்டாகும் நோய்களை போக்கும்.
இருமல், கோழைகட்டு நீக்கும்
நீர்ச்சுருக்கு போக்கும்
சிலந்தி நஞ்சை நீக்கும்
பித்தத்தை போக்கும்
விந்தைப் பெருக்கும்
குணமாகும் நோய்கள்:
விதைகள் வயிற்று வலியினை சரிசெய்யும்.
சீரணத்தை துõண்டும்
நறுமணத்தை உண்டாக்கும்
உடலின் வெப்பத்தினை கூட்டி ஜீரணத்தினை துரிதப்படுத்தும்
கிரேக்க நாட்டில் கிமு நான்காம் நுõற்றாண்டு முதலே ஏலக்காய் நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும் பயன்பட்டது.
ஏலக்காய் வயிற்று உப்புசம், அசீரணம் ஆகிய கோளாறுகளை தீர்க்க பயன்பட்டது.
இந்திய மருத்துவத்தில் ஆஸ்துமா, மூச்சு குழல் அழற்சி, சிறுநீரகக்கல், நரம்பு தளர்ச்சி மற்றும் பலவீனம் நீக்க பயன்படுத்தப்படுகிறது.
சீன மருத்துவத்தில் சிறுநீர்போக்கு கட்டுப்பாடின்மையினை போக்கவும், வலுவேற்றியாகவும் உதவுகிறது.
வாய் துர்நாற்றம் போக்க ஏலக்காய் பயன்படுகிறது.
பால் உணர்வு துõண்டும் பொருளாக உள்ளது.
பயன்படுத்தும் முறைகள்:
தினமும் காலையில் அருந்தும் தேநீரில் 2 ஏலத்தை தட்டிப்போட மூளை புத்துணர்வு அடைவதுடன் வாய் துர்நாற்றம் நீங்கும்.
தினமும் அருந்தும் நீரில் ஏலம் 3, சீரகம் ஒரு தேக்கரண்டி போட்டு கொதிக்க வைத்து அருந்த அசீரணம், பசியின்மை நீங்கும்.
குழந்தைகளின் பசியின்மை போக்க நவதானியத்தை முளைக்கட்டி வறுத்து, பொடித்து அதனுடன் ஏலம் 50 கிராம், பாதாம் 50 கிராம், அக்ரோட்டு 50 கிராம் பொடித்து சத்துமாவு கஞ்சியாக காபி, டீக்கு பதில் தர குழந்தைகள் புத்துணர்வோடும், மூளைபலம், நினைவாற்றல் பெருகும்.
ஏலப்பொடி: ஏலம், அதிமதுரம், நெல்லி, சந்தனம், வால் மிளகு வற்றின் பொடி வகைக்கு 34 கிராம், சர்க்கரை 85 கிராம் சேர்த்து கலந்து 2 கிராம் முதல் 4 கிராம் வரை தேன் அல்லது பாலில் கலந்து தர இருமல், நாவறட்சி, வயிற்றுவலி முதலியன நீங்கும்.
ஏல வடகம்:
ஏலரிசி, இலவங்கபட்டை, முந்திரி, திப்பிலி வகைக்கு 204 கிராம், அதிமதுரம், சர்க்கரை, பேரீச்சை வகைக்கு 102 கிராம் இவற்றை ஒன்றுபட இடித்து சூட்டுபதத்துடன் இருக்கும் போதே சுண்டைக்காயளவு உருண்டை செய்து ஒன்று முதல் இரண்டு வரை தினமும் உண்ண மாந்தம், வயிற்று வலி, வயிற்று பொருமல், கழிச்சல், பித்தம் தீரும்.
ஏலக்குடிநீர்:
ஏலம், அதிமதுரம், செங்கழுநீர், கோஷ்டம், விலாமிச்ச வேர், வெட்டிவேர், சுக்கு, சந்தனம், நன்னாரி, கோரை கிழங்கு, பற்படாகம் வகைக்கு சம அளவு எடுத்து நீர்விட்டு எட்டில் ஒன்றாய் வற்ற காய்ச்சி அருந்த, உடல் வெப்பு, வியர்வை, சுரம் தீரும்.
சிற்றேலம்:
இந்த சிறிய ஏலம் தென்னிந்தியாவில் மலை நாடுகளில் பயிரிட்டு வருகிறார்கள்.
இது வயிற்று பொருமல், வயிற்று வலி, வாய் நீருறல், நீர் வேட்கை, கழிச்சல், வியர்வையுடன் கூடிய தலைவலி, மிகுந்த வறட்சி, கபம் இவைகளைப் போக்கும்.
பயன்படுத்தும் முறை:
சிற்றேலம் 68 கிராம், பனை வெல்லம் 170 கிராம் எடுத்துக்கொண்டு 350 மில்லி நீர் விட்டு காய்ச்சி தர பித்தத்தால் உண்டான தலைமயக்கம் நீங்கும்.
ஏலரிசி, சுக்கு, இலவங்கம், சீரகம் இவை சம அளவு எடுத்து பொடித்து 17 கிராம் வீதம் கொடுத்து வர, வயிற்றுவலி, குன்மம் நீங்கும்.
ஏலரிசி, ஓமம், சீரகம் இவை சமஅளவு எடுத்து இளவறுப்பாய் வறுத்து பொடித்து ஒரு தேக்கரண்டி எடுத்து உட்கொள்ள செரியாமை நீங்கும்.
தொகுப்பு: தேவராஜன்

2 . உயிருக்கு ஊன்று கோல் கோதுமை!

உலகில் மூன்றில் இரண்டு பேர் உணவுப்பொருளாக பயன்படுத்தும் தானியம் கோதுமை! உலகம் முழுவதும் பயிரிடப்படும் புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது உலகில் சோளத்திற்கு அடுத்ததாக பயிரிடப்படுகிறது. இதன் விதையானது உணவாகவும் மற்ற பாகங்கள் கால் நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. இப்பயிர் தென் மேற்கு ஆசியாவில் தோன்றியது.கோதுமையில் முக்கியமாக பலன் தரும் சத்துப்பொருட்கள் 100க்கு 86.7 சதவீதம் உள்ளது. கோதுமையில் கோதுமை அரிசி, கோதுமை நொய், கோதுமை மாவு இவைகளே முக்கிய உணவாக கொள்ளப்படுகின்றன.
இந்தியாவில் கோதுமை விவசாயம் பஞ்சாப், மத்திய மாகாணம், பம்பாய், ராஜஸ்தான் முதலிய இடங்களில் பரவலாக செய்யப்படுகிறது. வட இந்தியாவிலும், வங்காளத்திலும் கோதுமையே முக்கியமான உணவாகும்.
கோதுமைக்கு கோதும்பை, யவை, பிரட்வீட், காமன் வீட் என்ற பெயர்களும் உண்டு.
பயன்படும் உறுப்பு : அரிசி. சுவை: இனிப்பு, தன்மை: தட்பம்.
செய்கை: உடலுரமாக்கி, உள்ளழலாற்றி, மலமிளக்கி, சிறுநீர்ப்பெருக்கி.
ஊட்டச்சத்து மதிப்பு:
100 கிராம் கோதுமையில் உள்ள சத்துப்பொருட்கள்
சக்தி 360 கலோரி, கார்போஹைட்ரேட் 51.8 கிராம், நார்சத்து 13.2 கிராம், கொழுப்பு 9.72 கிராம், புரதம் 23.15 கிராம், விட்டமின் பி1 1.882 மி.கி., விட்டமின் பி2 0.499 மி.கி., விட்டமின் பி3 6.813 மி.கி., விட்டமின் பி5 0.05 மி.கி., விட்டமின் பி6 1.3 மி.கி., போலேட்(பி9) 281 மி.கி., கால்சியம் 39 மி.கி., இரும்பு 6.26 மி.கி., மெக்னீசியம் 239 மி.கி., பாஸ்பரஸ் 842 மி.கி., பொட்டாசியம் 892 மி.கி., மாங்கனீசு 13.301 மி.கி.
கோதுமையால் குணமாகும் நோய்கள்:
கழிச்சலை குணப்படுத்தும்
சுரத்தைப் போக்கும்
புற்றுநோயை குணமாக்கும்
வெள்ளைப்படுதலை குணப்படுத்தும்
மூக்கில் குருதி வடிதல், ரத்த வாந்தி, சிறுநீரில் குருதி கசிவை போக்கும்
ரத்த வாதம் போக்கும்
நரம்புகளைப் பலப்படுத்தும்
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கும்
அதிக உடற் பருமனை குறைக்கும்
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
மூளையை பலப்படுத்தும்.
கோதுமையின் பொது குணம்:
" கோதுமையின் நற்குணந்தான் கோதிற் பலங்கொடுக்கும்
தாது விருத்தி யாக்குந் தனிவாய்வை சேதிக்கும்
பித்தம் அளிக்கும் பிரமேகத்தை கெடுக்கும்
உத்தமமாம் என்றே உரை' என்ற சித்தர் பாடல் கோதுமையின் பொது குணத்தை கூறுகிறது. அதாவது, கோதுமை உடலைப் பலப்படுத்தும், விந்துவை பெருக்கச் செய்யும், வாதத்தை போக்கும், உடலை உருக்குகின்ற வெள்ளை நோயை போக்கும்.
உணவுப்பொருட்களில் சிறந்ததாக கருதப்படும் கோதுமையை ரொட்டியாக, அடையாக, இன்னும் பல வகைகளில் உலகிலுள்ள மக்களில் 2/3 பாகத்தார் உணவாக எடுத்து கொள்கின்றனர். எனவே கோதுமையை "உயிருக்கு ஊன்றுகோல்' எனலாம்
குன்ம நொயினர்க்கு நாளைந்து நாளாக புளித்த ரொட்டி அல்லது சுட்ட ரொட்டி கொடுப்பது நன்று.
வயிற்றில் புளிப்புள்ளவர்கள் புதிய ரொட்டி அல்லது ரவை கஞ்சி சிறந்தது. கபரோகிகளுக்கு கோதுமை பால் அல்லது கோதுமை காப்பி மிகுந்த குணம் தரும்.
கோதுமை கஞ்சி:
கோதுமையை கஞ்சி வைத்து குடித்து வர, வாத சுரம், மூக்கு நீர் பாய்தல், கபத்தை, உடல் பருமனை போக்கும்.
பயன்படுத்தும் முறை:
கோதுமையை வறுத்து தேன் சேர்த்து மூட்டுவலி, முதுகுவலி உடையவர்கள் உண்ண வலி குறையும்.
அதிக உடல் எடை குறைய கோதுமை ரவை சாதம் பயன்படும்.
நெஞ்சுசளி குறைய கோதுமை தவிடை ஒற்றடமிடலாம்.
மாவை களி செய்து கட்டிகளுக்கு கட்டலாம்.
நீரிழிவு நோயாளி கோதுமை தவிடு ரொட்டி, அடையை உணவாக உட்கொள்ளலாம்.
கோதுமை அடை:
கோதுமை அடை சாப்பிட்டு வர உடல் வன்மை பெருகும். சுக்கிலம் பெருகும்.
வியர்வை குரு நீங்க இம்மாவை காடியில் கலந்து பூசலாம்.
தொகுப்பு: தேவராஜன்

3 . நலம் தரும் கடுகு!
ஒவ்வொரு வீட்டிலும் சமையல் அறையில் அஞ்சறைப்பெட்டியில் அற்புத மருந்துகள் உணவு பொருளாக இடம்பெற்றிருக்கும். அவை உணவோடு சேர்ந்து நம் உடல் நலத்தைக் காக்கும். அவ்வகையில் அஞ்சறை பெட்டியில் இருக்கும் பொருள்களில் ஒன்று கடுகு. "கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்ற பழமொழியே கடுகின் மருத்துவக்குணத்தை சொல்லாமல் சொல்லிவிடுகிறது.
கடுகு சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. கடுகில் இரண்டு வகை உண்டு. கருங்கடுகு மற்றொன்று வெண்கடுகு. இதில் நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என மூன்று வகைஉண்டு.
பயன்படும் உறுப்புகள்: விதை, இலை, மற்றும் எண்ணைய்
செய்கை: கொப்புள மெழுப்பி, வாந்தியுண்டாக்கி, சிறுநீர் பெருக்கி, செரிப்புண்டாக்கி, வெப்பமுண்டாக்கி.
கடுகில் உள்ள சத்துகள்:
100 கிராம் கடுகில் நீர்ச்சத்து 6.2 கிராம், புரதம் 24.6 கிராம், கொழுப்பு 35.5 கிராம், கார்போஹைட்ரேட் 28.4 கிராம், நார்சத்து 8 கிராம், சாம்பல் சத்து 5.3 கிராம்.
பொதுகுணம்:
இது தலைவலியைத் தரக்கூடிய இருமல், மூக்கு நீர் வடிதல் கோழையை போக்கும்.
வெறி, காணா விஷக்கடி, குடைச்சல், முடம், மந்தம், குழம்பிய உமிழ் நீர் இவைகளை போக்கும்
கழிச்சல், வயிற்று வலி, முப்பிணி இவைகளை விலக்கும்
சீதக்கடுப்பு, வாதநோய், செரியாமை, தலைசுற்றல், விக்கல் இவைகளை போக்கும்.
ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் கடுகு, மிளகு, உப்பு சம அளவு சேர்த்து சாப்பிட்டு உடனே வெந்நீர் குடித்தால் வாதம், பித்தம், கபம் இவைகளினால் ஏற்படும் நோய்கள் குணமாகும்.
செரிமானத்தைத் துõண்ட:
செரிமானத்தைத் துõண்டும் சக்தி கடுகுக்கு உண்டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக்கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமானம் ஆகும். அஜீரணக்கோளாறு போகும்.
இருமல் நீங்க:
ஒரு சிலருக்கு இருமும் போது தலைப்பகுதி முழுவதும் வலி உண்டாகும். இந்த இருமல் நாளுக்கு நாள் அதிகரித்து தலைச்சுற்றல் உண்டாக்கும். கடுகுப்பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த இருமல் நீங்குவதுடன் தலைவலியுடன் உண்டாகும் இருமல், மூக்கில் நீர் வடிதல், அதிக உமிழ் நீர் சுரத்தல் போன்றவை குறையும்.
வயிற்று வலி குணமாக:
அஜீரணக் கோளாறால் வாய்வு சீற்றமடைந்து வயிற்றில் வலியை உண்டாக்கும். இந்த வயிற்று வலி நீங்க கடுகை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் வயிற்று வலி நீங்கும்.
நஞ்சு உண்டவர்களுக்கு:
சிலர் தெரிந்தோ, தெரியாமலோ நஞ்சை உண்டிருந்தால் அவர்களுக்கு முதலில் கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுத்தால் வாந்தி உண்டாகும். இந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் நஞ்சானது வெளியேறும். சில வகையான காணாக்கடிகளுக்கு கடிப்பட்ட இடத்தில் கடுகு அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.
கடுகு துõள், அரிசிமாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீரீல் கலந்து களிபோல் கிளறி அதை இருமல், இரைப்பு இருப்பவர்கள் மார்பு, தொண்டைப்பகுதிகளில் தடவி வந்தால் இருமல் இளைப்பு நீங்கும். தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போடலாம்.
சிறுநீர் பெருக்கி: கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.
கடுகு எண்ணைய்:
கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணைய் வட இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கொழுப்பு சத்து அதிகமாக இல்லாத இந்த எண்ணைய் இதய நோயை தடுக்கும்.

விக்கல் நீங்க:
வெந்நீரில் 130 மி.லி. எடுத்து அதில் கடுகுத்துõள் 8 கிராம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்.
வெண் கடுகு:
வெண்கடுகு எண்ணைய் நரம்பை பலப்படுத்தும். வாந்தியுண்டாக்கி, செரிப்புண்டாக்கி, வாயுவை நீக்கும்.
பயன்படுத்தும் முறை:
தலைவலி தீர கடுகு எண்ணையை தலையில் தேய்த்து குளிக்கலாம்.
வலிப்பு நோய், மனநோய், நரம்பு கோளாறு போக்க கடுகு துõளை தேனில் கலந்து உண்ணலாம்.
செங்கடுகு:
பயன்படும் பகுதி விதை, எண்ணைய்
பயன்கள்:
இது கருங்கடுகுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.
உணவு பொருளை பதப்படுத்த பயன்படுகிறது.
கடுகு எண்ணையில் கர்பூரம் சேர்த்து கழுத்து சுளுக்கு, தசைபிடிப்புக்கு வெளிப்பிரயோகமாக பயன்படுத்தலாம்.
டெங்கு சுரத்தை போக்கும் தன்மை இதற்கு உண்டு.
குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமலுக்கு இதன் எண்ணைய் நெஞ்சில் தடவலாம்.
தொகுப்பு: தேவராஜன்

4 . நுரையீரலைப் பலப்படுத்தும்பெருங்காயம்

பெருங்காயம் மணமிக்கப்பொருள். பெருங்காயத்தை இந்தியர்கள் அனேக நுõற்றாண்டுகளாக உண்ணும் உணவுப்பொருட்களிலும், நோய் தீர்க்கும் மருந்துகளிலும் பயன்படுத்தி வருகின்றனர்.
பெருங்காயம் பாரசீகம், ஆப்கானிஸ்தானம், காஷ்மீரம், பஞ்சாப் முதலிய பகுதிகளில் பயரிடப்படும் தாவர வகையைச் சேர்ந்தது. நான்கு ஆண்டுகள் நன்கு வளர்ந்த தாவரத்தின் வேர்ப்பகுதியிலிருந்து பெறப்படும் மணங்கொண்ட பிசின் போன்ற பொருளே பெருங்காயம் எனப்படுகிறது.
பெருங்காயத்திற்கு காயம், அத்தியாகிரகம், இங்கு, இரணம், கந்தி, சந்துநாசம், பூதநாசம், வல்லீகம் என்றும் பெயர்கள் உள்ளது.
பெருங்காய செடியின் தண்டு முதல் வேர்வரை வெட்டி காயப்படுத்தப்படுகிறது. அந்த வெட்டப்பட்ட காயப்பகுதியிலிருந்து பிசின் பொருள் வெளியேறி கெட்டியாகிறது. சிவப்பு வண்ணத்தில் இருக்கும் அந்த பிசினை சுரண்டி எடுக்கப்பட்டு தோல்பைகளில் சேகரிக்கப்படுகிறது.
இந்த பெருங்காய பிசின் எடுப்பதற்கு ஜூன்மாதம் பருவ காலமாக இருக்கிறது. வணிக ரீதியான பெருங்காயம் ஆப்கானிஸ்தானிலிருந்து தான் பெறப்படுகிறது. இவை சந்தைக்கு வருவதற்கு முன் கலப்படம் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.
வேரின் மையத்திலுள்ள இலை மொட்டிலிருந்து உயர்ந்த வகை பெருங்காயம் பெறப்படுகிறது. இதற்கு கந்தகாரி பெருங்காயம் என்று பெயர்.
பெருங்காயத்தின் குணம்:
மஞ்சள் நிறம் கொண்டது. வெள்ளைப்பூண்டின் மணம் வீசக்கூடியது. கரகரப்புடன் மிகவும் கசப்பு சுவையுடையது. சாரயத்தில் கரையும். நீர் விட்டால் பால் நிறமாகும். இன்னொரு வகை பெருங்காயம் வெள்ளை நிறம் உடையது. அதற்கு வெள்ளைப் பெருங்காயம்(சோமகாயம்) என்பது பெயர். இந்த காயத்திலும் காரம் இருக்கும்.
உபயோகப்படும் உறுப்புகள்:
பிசின் உபயோகப்பொருளாக இருக்கிறது. இதன் சுவை கைப்பு, கரகரப்பு.
பெருங்காயத்தின் செயல்பாடு:
வெப்பமுண்டாக்கி, அகட்டுவாயு அகற்றி, இசிவகற்றி, கோழையகற்றி, மலமிளக்கி, புழுக்கொல்லி, சிறுநீர்ப் பெருக்கி, காமம் பெருக்கி, ருது உண்டாக்கி
பொது குணம்:
பல், பல்லடி, பாம்பு நஞ்சுகள், தேள் நஞ்சு, மந்தம், ஏப்பம், சூதக வாயு, குன்மம், பெருவயிறு, சூதகசூலை, குருதியிலுள்ள நுண்புழு, ஐயத்தால் பிறந்த வலிகள், உடல்கடுப்பு முதலிய உபாதைகள் நீங்கும்.
பெருங்காயத்தில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு:
100 கிராம் பெருங்காயத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:
கார்போஹைட்ரேட்67.8%, ஈரப்பதம்16%, புரதச்சத்து4%, கொழுப்புசத்து1.1%, தாது உப்புக்கள்7%, நார்ச்சத்து4.1% உள்ளது. தாது உப்புகள், உயிர் சத்துக்கள் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்தும், மேலும் டைசல்பைட்கள் பெருவிக் அமிலம், பிட்டிடன் ஆகியவற்றுடன் கவுமரின்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இவை பெருங்காயத்தின் மருத்துவப் பயனைத்தருகிறது.
இலைகள்: வயிற்றுப்புழுக்கள் வெளியேற்றவும், வியர்வை மற்றும் ஜீரண துõண்டுவியாக பயன்படுகிறது.
தண்டுப்பகுதி: மூளை மற்றும் கல்லீரலை வலுப்படுத்துகின்றது.
வேர்: காய்ச்சலை போக்கும்.
மத்திய கிழக்கு மற்றும் இந்தியாவில் பெருங்காயம் சாதாரண அஜீரணம், வாயு உப்புசம், மலச்சிக்கல் ஆகியவற்றினை குணப்படுத்த பயன்படுத்தப் பட்டது.
புகழ்பெற்ற பழைய மருத்துவ நுõலான சம்ஹிதாவில் பெருங்காயத்தினை சிறந்த வயிற்று வாயு மற்றும் உப்புசம் போக்குவியாக குறிக்கப்பட்டுள்ளது.
பெருங்காயத்திலுள்ள வேதிப்பொருள்கள் நுரையீரல் சுவாச மண்டலம் வழியாக மார்புசளியை இருமல் மூலம் வெளியேற்றுகிறது.
நரம்பு தளர்ச்சியை தடுக்கிறது.
உயர் குருதி அழுத்தத்தினை குறைத்து, குருதியின் அடர்த்தியினைக் குறைக்கிறது.
நுரையீரலை பலப்படுத்தும். கர்ப்பபையை பலப்படுத்தும் ஒழுங்கற்ற மாதவிடாயை சரிப்படுத்தும்.
பயன்படுத்தும் முறைகள்:
ஆஸ்துமா, கக்குவான் குணமாக:
ஒரு கிராம் பெருங்காயத்தை இரு தேக்கரண்டி தேன், கால் தேக்கரண்டி வெள்ளை வெங்காய சாறு, ஒரு தேக்கரண்டி வெற்றிலைச் சாறு சேர்த்து தினமும் 2 வேளை வீதம் ஒரு மாதம் பருக ஆஸ்துமா, க்ககுவான் இருமல் குணமாகும்.
வாயு தொந்தரவு நீங்க:
ஒரு கிராம் பெருங்காய பொடியை 100 மில்லி வெந்நீரில் கலந்து பருக வயிற்றுப்பிசம், வாயு தொல்லை நீங்கும்.
பல் வலி நீங்க:
பெருங்காய துõளை எலுமிச்ச சாற்றில் கலந்து லேசாக சூடுபடுத்தவும். பஞ்சு துணியை பெருங்காய, எலுமிச்ச சாற்று கலவையில் நனைத்து வலியுள்ள இடத்தில் வைக்க பல் வலி குணமாகும்.
குழந்தைகளுக்கு:
குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பு நோய்களுக்கு பெருங்காயம் மிகச்சிறந்தது.
வாயு தொல்லை நீங்க:
பெருங்காயம், ஏலம், சுக்கு, இந்துப்பு இவற்றை சம அளவு எடுத்து சுத்தி செய்து பொடித்து கொள்ளவும். மேற்கண்ட சூரணம் ஒரு தேக்கரண்டி 100 மில்லி வெந்நீரில் அருந்த வாயு தொல்லை நீங்கும்.
பசியை அதிகரிக்க:
பொரித்த பெருங்காயம், சுக்கு, வால் மிளகு, சீரகம், வெந்தயம், இந்துப்பு இவற்றை சம அளவு எடுத்து பொடித்து ஒ ரு தேக்கரண்டி வீதம் மோரில் கலந்து பருக, பசி அதிகரிக்கும். சீரணத்தையும் துõண்டப்படும்.
பெண்களுக்கு:
குழந்தை பேற்றுக்கு, பெண்களின் மலட்டுத் தன்மை நீங்க, குழந்தைப் பேற்றை தவிர்க்க, வெள்ளைப்படுதலை குணமாக்க 3 கிராம் பெருங்காயத்தை நெய்யில் பொரித்து.100 கிராம் ஆட்டுப்பால், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் 2 வேளை வீதம் ஒரு மாதம் சாப்பிட மேலே சொன்னவை நீங்கும்.
கக்குவான் நீங்க:
பெருங்காயத்தை நீர்விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் குணமாகும்.
பிள்ளை பெற்றபின் அழுக்கை வெளிப்பத்த:
காயத்தை பொரித்து வெள்ளைபூண்டு, பனைவெல்லத்துடன் சேர்த்து காலை தோறும் கொடுக்கலாம்.
காது வலி நீங்க:
காயத்தை எண்ணையிலிட்டு காய்ச்சி காதுகலில் விட காது வலி நீங்கும்.
மாந்தம் தீர:
கால் ஆழாக்கு நீரில் 2 கிராம் எடை காயத்தை கரைத்து ஒரு சங்களவு எடுத்து சிறிது ஓமத்தநீரில் சேர்த்து கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிற்றுப் பொருமல் போகும்.
தேள் கடி நீங்க:
காயத்தை நீர்விட்டு அரைத்து, தேள்கடி, படைகள் முதலியவற்றுக்கு பூசலாம்.

வயிற்றுப்பிசம் நீங்க:
சுக்கு, திப்பிலி, மிளகு, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு சம அளவு எடுத்து கால் பங்கு காயம் சேர்த்து, பொடித்து 325650 மில்லிகிராம் சோறுண்ணும் பொழுது முதற்பிடி அன்னத்துடன் சேர்த்துண்டு வர மந்தத்தை விலக்கி, பசியையும் ,சீரணத்தையும் உண்டாக்குவதுடன் வயிற்றுப் பிசம் முதலியவற்றை போக்கும்.
எனவே இத்தகைய பல அரிய மருத்துவ பயன் உடைய பெருங்காயத்தை நாமும் சமையலில் தவறாது பயன்படுத்தி மேற்கண்ட பலன்களைப் பெறலாம்.
தொகுப்பு: தேவராஜன்

5 . கண்ணைக் காக்கும் பொன்னாங்காணி

இது ஒரு காயகற்ப மூலிகை. இதன் பெயரைப் பிரித்துப் படித்தாலே, இதன் சிறப்பு நன்கு விளங்கும். பொன்னாங்காணி என்பது பொன் + ஆம் + காண் + நீ. இதை நீ உண்டால் உன் உடல் பொன்னாக காண்பாய் என்று பொருள்படும்.
இந்தக்கீரையில் தங்கச் சத்து உண்டென்றும், இதை முறைப்படி உண்டு வருபவர்களது மேனி பொன் போன்று இருக்கும் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர்.
பொன்னாங்காணி கீரை இந்தியாவில் எங்கும் பயிராக்கக்கூடிய ஒரு வகைப்பூண்டு. இது இந்தியாவில் பரவலாகவே காணப்படுகிறது. தென் அந்தமான் மற்றும் இமாலயத்தின் 1200 மீட்டர் உயரத்தில் கூட செழித்து வளரக்கூடியதாக இருக்கிறது. பல தரப்பட்ட சூழல்களில் வளரும் திறனும் பெற்றது பொன்னாங்காணி.
இதன் சுவை: இனிப்பு
தன்மை : தட்பம்
செய்கை:
உடற்றேற்றி, குளிர்ச்சி உண்டாக்கி, துவர்ப்பி, சுரமகற்றி.
உடலில் அதிகரித்து காணும் பித்தத்தையும், கபத்தையும் குறைக்கும்.
பொது குணம்:
பொன்னாங்கன்னியால் கண் புகைச்சல், கருவிழி நோய், வாயு, அனல், ஈரல் நோய், கீழ்வாயில் உண்டாகும் நோய்கள் தீரும். உடல் பொன்னிறம் பெறும்.
பொன்னாங்கன்னியில் உள்ள ஊட்டச்சத்து:
100 கிராம் இலையில் கலோரி 60, நீர்சத்து 80 கிராம், புரதம் 4.7 கிராம், கொழுப்பு 0.8 கிராம், கார்போஹைட்ரேட் 11.8 கிராம், நார்சத்து 2.1 கிராம், கால்சியம் 146 மி.கிராம், பாஸ்பரஸ் 45 மி.கிராம் உள்ளது.
வேதியியல் பொருட்கள்: பி. கரோட்டீன் அதிக அளவில் உள்ளது.
மருத்துவ பயன்கள்:
* இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவில் வயிறு சம்பந்தபட்ட பிரச்னைகள், பசியின்மை, அசீரணம் நீங்க பயன்படுத்தப்படுகிறது.
* நைஜீரிய நாட்டினரால் தலைவலி, தலைசுற்றல் நீங்க பயன்படுத்தப்படுகிறது.
* தைவான் மக்கள் கல்லீரல் நோய்களான மஞ்சள் காமாலை நீங்கவும் மேலும், ஆஸ்துமா நோய்க்கு அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
* பீகார் மக்கள் மாலைக்கண் நீங்க பயன்படுத்துகின்றனர்.
* பாலுõட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது.
*கண் பார்வை அதிகரிக்க பயன்படுகிறது.
* வயிற்று வலி, கழிச்சல் நீங்க பயன்படுகிறது.
* இருமல், சளி, ஆஸ்துமானை குணப்படுத்துகிறது.
* முகப்பரு, தோல் அரிப்பை குணமாக்க பயன்படுகிறது.
பயன்படுத்தும் முறைகள்:
அசீரணம் நீங்க :
பொன்னாங்கன்னியை பருப்பு, சீரகம் சேர்த்து கீரையாக சமைத்து வாரம் 2 முறை உண்ண அசீரணம் நீங்கி பசியை அதிகரிக்கும்.
வாந்தி நீங்க:
இலையுடன் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பின் வடிகட்டி இந்துப்பு கால் டீ ஸ்பூன் சேர்த்து அருந்த வாந்தி நிற்கும். இரத்த வாந்திக்கு சிறந்தது.
ரத்த சோகை நீங்க:
பொன்னாங்கன்னி இலை, கறிவேப்பிலை இலை, புதினா இலை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடித்து இதனுடன் சிறுபருப்பு 50 கிராம், துவரம்பருப்பு, சீரகம் 50 கிராம் வீதம் வறுத்து, பொடித்து சாதத்துடன் சேர்த்து உண்ண ரத்த அணுக்கள் உற்பத்தி அதிகரித்து ரத்த சோகை நீங்கும்.
மாலைக்கண் குணமாக:
பொன்னாங்கன்னி இலை ஒருபிடி, கீழா நெல்லி இலை ஒருபிடி எடுத்து அரைத்து 60 மில்லி மோரில் ஒரு மாதம் காலை மட்டும் பருக கல்லீரல் பலப்படும்.
கண் நோய் தீர:
நெய்விட்டு வதக்கி, கண்களுக்கு கட்ட கண் நோய்கள் தீரும். இதன் தைலத்தை தலைமூழ்கி வர கண் நோய் தீரும். மேலும், இதை அரைத்து அடையாகச் செய்து ஒரு நீர் நிறைந்த பானை மீது அப்பி மறுநாள் காலையில் இதை எடுத்து கண்களின் மீது வைத்து கட்ட கண்நோய்கள் தீரும்.
பொன்னாங்கன்னி இலைசாறு 2800 மில்லி, கரிசாலை சாறு1400 மில்லி, நெல்லிக்காய் சாறு1400 மில்லி, எண்ணைய் 2800 மில்லி, பசும் பால் 2800 மில்லி இத்துடன் அதிமதுரம் 68 கிராம் எடுத்து பால்விட்டு அரைத்து, கலந்து காய்ச்சி மெழுகு பதத்தில் வடிக்கட்டி தலை மூழ்கிவர 96 வகை கண்நோய்களும், அழல் நோய்கள், கண் சிவத்தல், கண் எரிச்சல் நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். மேலும் இது பொடுகு, தலைமுடி உதிரலை போக்கும். கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
பொன்னாங்காணி கற்பம்:
செழிப்பாய் வளர்ந்த பொன்னாங்காணி கீரையை செம்மையாக நெய்யில் வதக்கி, மிளகு, உப்பு கூட்டி புளியை நீக்கி, கற்ப முறைப்படி ஒரு மண்டலம் உண்டு வர உடலுக்கு அழகு, பொன்னிறம், நீண்ட ஆயுள், கண் குளிர்ச்சி இவற்றை தரும்.
பொன்னாங்காணி கீரையை தினந்தோறும் கற்ப முறையாய் புசித்துவரின் எல்லா நோய்களும் நீங்கும்.
உப்பில்லாமல் வேகவைத்து வெண்ணையிட்டு 40 நாள் உண்ண கண்ணில் உண்டாகும் நோய் நீங்கும் எனவே, உணவில் பொன்னாங்கன்னியை பயன்பத்தி மேற்கண்ட பலன்களைப் பெற்று ஆரோக்கியமாக நாம் வாழலாம்!
தொகுப்பு: தேவராஜன்


6 . நஞ்சு முறிக்கும் மிளகு!

"பத்து மிளகு இருந்தால் பகைவர் வீட்டிலும் சாப்பிடலாம்' என்பது பழமொழி. மிளகுக்கு நஞ்சு முறிக்கும் திறன் அதிகம் உண்டு. மிளகு என்பது பூத்து, காய்த்து, படர்ந்து வளரும் கொடிவகையான தாவரமாகும்.
இதில் காய்க்கும் சிறுகனிகள், உலரவைக்கப்பட்டு தாளிப்புப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவை கூட்டும் பொருளாகவும் உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது .
மிளகில் , அதன் பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கருமிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு என பலவகை உண்டு.
மிளகு கொடியின் பிறப்பிடம் தென்னிந்தியா ஆகும். அஸ்ஸாம், கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் கேரள மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இது பொதுவாக வெப்பமண்டலங்களில் பயிரிடப்படுகிறது.
உலக வர்த்தகத்தில் மிக முக்கியமான வியாபாரப் பொருளாக மதிக்கப்படுகிறது. பண்டைய காலந்தொட்டே பயிரிடப்படும் தாவரம் இது. கி.பி. 408 ஆம் ஆண்டில் ரோம் நகரினை முற்றுகையிட்ட ஐரோப்பிய கொள்ளைக்காரனான அட்டிலா என்பவன் 1360 கிலோகிராம் மிளகினை கொள்வரியாக கேட்டுள்ளான் என்பது சுவாரஸ்யமான செய்தி.
பயன்படும் உறுப்பு: விதை, கொடி.
செய்கை:
அகட்டு வாயு அகற்றி, முறை வெப்பமகற்றி, வெப்பமுண்டாக்கி, வீக்கங் கரைச்சி, வாதமடக்கி, நச்சரி.
செயல் திறன் வேதிப்பொருட்கள்:
மிளகில் எளிதில் ஆவியாகும் எண்ணைய், அல்கலாய்டு, புரதம், கனிமங்கள் உள்ளன.
பொதுமை குணம்:
குளிர் சுரம், ரத்தசோகை, கோழை, கழிச்சல், குன்மம், வாயு, சுவையின்மை, வெறி, பைத்தியம், பிரமேகம், இருமல், பக்கவாதம், காதுவலி, காமாலை, செரியாமை ஆகிய நோய்களை குணமாக்கும்.
தீரும் நோய்கள் :
மனித உடலின் ரத்த ஓட்ட மண்டலம் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் மீது செயல்பட்டு சீரணத்தை அதிகரிக்கிறது.
உடலினை மிதவெப்பமாக வைத்து கொள்ள உதவும்.
பசியின்மை, வயிற்று உப்பிசம், மலச்சிக்கல் ஆகியவற்றினை போக்குகிறது.
தென்னிந்திய உணவு வகையில் ரசத்தில் மிளகு முக்கிய பங்கு வகிக்கும் . மிளகு ரசம் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் திறன் கொண்டது.
காய்ச்சல் போக்க கூடியது.
மிளகு கசாயம் சளி, காய்ச்சல், தலைவலி, வாந்தி ஆகியவற்றை குணப்படுத்தும்.
பக்கவாதம், மூட்டுவலி ஆகியவற்றுக்கு மிளகு பொடி மருந்தாகிறது.
தொண்டை கரகரப்பு, மூலநோய் மற்றும் தோல் வியாதிகளுக்கும் பயன்படுகிறது.
கல்லீரலை பலப்படுத்தும்.
பயன்படுத்தும் முறை:
* மிளகு துõள் 260 390 மில்லி கிராம் கொடுக்க பசியை துõண்டும்.
* மிளகு துõள் 50 கிராம் நீர் 700 மில்லி விட்டு அரை மணிநேரம் காய்ச்சி வடிகட்டி அதில் 3060 மில்லி வீதம் தினம் 2 அல்லது 3 முறை தர தொண்டை கம்மல், தொண்டைப்புண் தீரும். வயிற்றை சேர்ந்த நோய்களும் நீங்கும்.
* மிளகு, பெருங்காயம், சீரகம் சமஅளவு எடுத்து வறுத்து பொடித்து எலுமிச்சை சாற்றில் அருந்த வாந்தி பேதி நிற்கும்.
* மிளகு5, துளசி10 இலை 200 மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்த கோழை நீங்கும்.
* மிளகு துõள், வெங்காயம், உப்பு இவைகளை சேர்தரைத்து தலையில் பூசி குளித்து வர புழு வெட்டுகள் மறையும்.தலைமுடி வளரும்.
*மிளகு, சுக்கு, திப்பிலி, பாறை உப்பு, பெருஞ்சீரகம் இவைகள் ஓர் அளவாக சேர்த்து பொடித்து 2 4 கிராம் உணவிற்குபின் வாயிலிட்டு மென்று விழுங்க, செரிப்பை அதிகரித்து, வயிற்று நோயை போக்கும்.
*மிளகு 51 கிராம், பெருஞ்சீரகம் 68 கிராம், தேன் 340 கிராம் சேர்த்து லேகியமாக்கி தினம் இருவேளை 5 கிராம் உண்ண முதியோருக்கும், மெலிந்தோருக்கும் உண்டாகும் மூலநோய் தணியும்.
* ஆஸ்த்துமா தீர வெற்றிலையில் 5 மிளகை வைத்து மென்று தின்ன ஆஸ்த்துமா தீரும்.
*திரிகடுவில் சுக்கு, மிளகு, திப்பிலியை சேர்த்த தர விஷத்தை முறிக்கும்.
* நஞ்சுகளைப் போக்கும் திறன் மிளகுக்கு இருப்பதால், எந்த வகை நஞ்சுக்கும் மிளகு குடிநீர் அருந்தலாம்.
தொகுப்பு: தேவராஜன்


7 . கர்ப்பப்பையை பலப்படுத்தும் சீரகம்!

உணவில் சுவையூட்டுவதற்கும், மணமூட்டவும் சீரகம் பயன்படுத்தப்படுகிறது. சீரகம் பற்றி பைபிளில் பழைய ஏற்பாடு நுõலில் குறிப்புகள் உள்ளது. சீன, இந்திய மற்றும் மையக் கிழக்கு நாடுகளின் சமையல் குறிப்புகளில் முக்கியமான மணப்பொருளாகவும், ஊறுகாய், கறிகளில் சீரகம் பயன்படுத்தியதற்கான குறிப்புகள் உள்ளது. இத்தகைய பழம்பெருமை வாய்ந்த சீரகத்தை பற்றி சித்தர் பாடல் என்ன சொல்கின்றது தெரியுமா?
"பித்தமெனு மந்திரியைப் பின்னப் படுத்தியவன்
சத்துருவை யுந்துறந்து சாதித்து மத்தனெனும்
ராசனையு மீவென்று நண்பை பலப்படுத்தி
போசனகு டாரிசெயும் போர்' தேரன் வெண்பா.

அதாவது, சீரகமானது மந்திரியைப் போல இருக்கும் பித்தத்தை சமன்படுத்தும். உடலில் அதிகப்படியாக உள்ள தீக்குற்றத்தை தன்னிலைப்படுத்தி வயிற்றின் மந்தத்தன்மையை போக்கி சீரணத்தை துõண்டும். அதனால் தான் சீர்+அகம்= சீரகம் என்று அழைக்கப்படுகிறது. அகம் என்றழைக்கப்படும் அகடு(வயிறு) மந்தத்தை போக்கி, வாய்வு பொருமலை அகற்றி பசியைத் துõண்டி போஜனம் உண்ணும் படி செய்வதால் இதற்கு போசனகுடோரி என்றும் பெயருண்டு.
எகிப்து நாட்டினைச் சேர்ந்த சீரகம் ஒரு குறுஞ்செடியாகும். தென் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பரவலாகப் பயிரிடப்படுகிறது. கோடைக்காலத்தில் இதன் விதைகள் சேகரிக்கப்படுகிறது. இந்தியாவில் தென்னிந்தியா மற்றும் பஞ்சாப் பகுதிகளில் சீரகம் பயிரிடப்படுகிறது.
சீரகத்திற்கு ஆங்கிலத்தில் குமின் சீட்ஸ் என்றும், சமஸ்கிருதத்தில் ஜீரகம் என்றும் உபகும்பபீசம், நற்சீரி, துத்தசாம்பலம், பித்தநாசினி, போசனகுடோரி என்றும் அழைக்கப்படுகிறது.
சீரகத்தின் விதை பயன்படு உறுப்பாகும். இது கார்ப்பு, இனிப்பு சுவை உடையது.
செய்கை: அகட்டுவாய்வகற்றி, வெப்பமுண்டாக்கி, பசித்துõண்டி

சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துகள்:
சீரகத்தில் அதிகளவு மணத்திற்கு காரணம் அதிலுள்ள ஆவியாகும் எண்ணை மற்றும் குமினாலெடை ஆகும். சீரகத்தில் அதிகளவு இரும்புசத்து, புரதம், கார்போஹைட்ரேட், உயிர்சத்துக்கள், தாது உப்புக்கள் அதிகம் உள்ளது.
100 கிராம் சீரகத்தில் உள்ள சத்துப்பொருட்கள்:
கலோரி375 கலோரி, கார்போஹைட்ரேட்44.24 கிராம், சர்க்கரை2.25 கிராம், நார்சத்து10.5 கிராம், கொழுப்புச்சத்து22.27 கிராம், புரதசத்து17.81 கிராம், நீர்ச்சத்து8.06 கிராம், விட்டமின்எ64 மில்லிகிராம், விட்டமின்பி20.327மிகி., விட்டமின்பி34.579 மி.கி., விட்டமின்பி60.435 மி.கி., விட்டமின்பி910 மி.கி., விட்டமின்பி12மிகி, விட்டமின்சி7.7மி.கி., விட்டமின்இ3.33மி.கி., விட்டமின்கே5.4மி.கி., பொட்டாஷியம்1.788மி.கி., இரும்புச்சத்து66.36 மி.கி., கால்சியம்66.6 மி.கி., துத்தநாகம்4.8மி.கி., சோடியம்168 மி.கி., மெக்னீசியம்366மி.கி., பாஸ்பரஸ்499 மி.கி. உள்ளன.

பொது குணம்:
வாந்தி, சுவையின்மை, வாய்நோய், ஈரல் நோய், இருமல், கல்லடைப்பு, கழிச்சல் முதலிய உபாதைகளை சீரகம் குணப்படுத்தும். வாயுவால் ஏற்படும் வாய்வு பிடிப்பு, வாதநோய்களைப் போக்கும். பித்தத்தை தணிக்கும். கண்ணுக்கு குளிர்ச்சியை தரும். நாசி நோய்களான மூக்கில் நீர்வடிதல், பீனிச நோய்களை போக்கும். காயம் பட்ட உடலை தேற்றும், பலப்படுத்தும்.
சீரகத்தை சமையலில் சேர்க்காமல் இருக்கக்கூடாது. எந்த ஒரு உணவுப்பொருளிலும் சீரகத்தை பயன்படுத்த வேண்டும். சாம்பார், பொரியல், கூட்டு, ரசம் இப்படி எல்லாவற்றிலும் சீரகத்தை பயன்படுத்தினால் மேலே சொன்ன நோய்களிலிருந்து விடுபடலாம்.

சீரகத்தின் பயன்கள்:
ரத்தத்தில் உள்ள அழுக்கை அகற்றி ரத்தத்தை சுத்திகரிக்கும்
வயிற்று உப்பிசம், வயிற்று பொருமலை அகற்றும்
அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலியை நீக்குவதுடன், வாயுதொல்லையை குணப்படுத்தும்
பெண்களுக்கு கர்ப்பபையில் ஏற்படும் தொற்று நோயை போக்கி, கர்ப்பபையை பலப்படுத்தும்.
குழந்தை பிறந்த பெண்கள் தினமும் உணவில் 15 கிராம் சீரகத்தை எவ்வைகையிலாவது சேர்த்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
உடலில் அதிக அளவு வலியை ஏற்படுத்தும் வாத குற்றத்தை தன்னிலைப்படுத்தி உடலில் உள்ள எல்லாவகையான வலியையும் போக்கும். நுரையீரலில் உள்ள கபத்தை நீக்கும். கல்லீரலை பலப்படுத்தி பசித்தீயை துõண்டும். உடலில் பித்தம் அதிகரிப்பதால் ஏற்படும் கண் எரிச்சல், கண்சிவத்தல், சிறுநீர் எரிச்சல் முதலியவற்றை போக்கும்.

பயன்படுத்தும் முறைகள்:

செரியாமை, வழிற்றுப்பிசம் குணமாக: 100மில்லி நீரில் ஒரு தேக்கரண்டி வறுத்த சீரகத்தை போட்டு 15 நிமிடம் கொதிக்க வைத்து, குளிரச்செய்து தினமும் 3 முறை அருந்த செரியாமை, வயிற்றுப்பிசம் முழுவதும் குணமாகும்.
கழிச்சல் குணமாக: சீரகத்தை உலர்த்தி, வறுத்து, பொடித்து 2 கிராம் வீதம் ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து 3 வேளை உண்ண வயிற்று வலி குறைவதுடன், செரியாமையால் ஏற்படும் கழிச்சல் குணமாகும்.

இருமல்சளி குணமாக: சீரகம், இஞ்சி,ஏலம் சேர்த்து பாலில் கொதிக்க வைத்து வடிகட்டி பனை வெல்லம் சேர்த்து காபி, டீக்கு பதிலாக குளிர்காலத்தில் அருந்த இருமல், சளி பூரணமாக விலகும். இதனுடன் துளசிஇலை சேர்த்தால் நுரையீரல் பலப்படும்.

உடல்வலி நீங்க: சீரகத்தை வறுத்து பொடித்து நீருடன் சேர்த்து பசையாக வலி உள்ள இடத்தில் தடவ, வலி நீங்கும். மேலும், சூட்டினால் ஏற்படும் கட்டி, கொப்புளம் மீது போட வீக்கம், கட்டி கரையும், வலியும் குறையும்.

பாலுõட்டும் தாய்மார்களுக்கு: சீரகத்தை வறுத்து பொடித்து நீரில் கொதிக்க வைத்து தினமும் 200மில்லி முதல் 300மில்லி வரை பாலுõட்டும் தாய்மார்கள் பருகிவர, பால் சுரப்பு அதிகரிக்கும்.
ஈறுகளில் ரத்த கசிவைத் தடுக்க: எண்ணை இல்லாமல் சீரகத்தை பொன்னிறமாக வறுத்து பொடித்து, சமஅளவு இந்துப்பை சேர்த்து பற்களின் ஈறுகளில் தடவிவர ஈறுகளில் ரத்தக்கசிவு நின்றுவிடும்.
மூலம் குணமாக: வறுத்து பொடித்த சீகத்துõள்,இஞ்சி சாறு எடுத்து கொஞ்சம் மோரில் உப்பு சேர்த்து தினமும் பருகி வர மூலம் நீங்கும்.
மயக்கம் தீர: 34 கிராம் சீரகத்தை 1400 மிலி நல்லெண்ணையில் இட்டு காய்ச்சி சீரகம் ஒடியதக்க பதத்தில் வடித்து அதை தேய்த்து தலைமூழ்கி வர மயக்கம்,கண் நோய்,வாந்தி, தலைவலி குணமாகும்.
வயிற்று வலி நீங்க: சீரகத்தை பொடித்து வெண்ணையுடன் சேர்த்து உண்ண நெஞ்செரிச்சல்,வயிற்றுவலி குணமாகும்.
மந்த வாயு குணடைய: சீரகம், ஏலம்,பச்சைகற்பூரம் இந்த மூன்றையும் சமஅளவு எடுத்து, அதே அளவு பனைவெல்லம் சேர்த்து உண்ண மந்த வாயு குணமாகும்.
தொகுப்பு: தேவராஜன்

8 . உதிரப்போக்கை தடுக்கும்
கொத்து மல்லி!


கொத்துமல்லி. இது எல்லாருக்கும் நன்கு அறிமுகமான உணவுப்பொருள். ஆனால், இதன் மருத்துவ குணத்தை நாம் அறியாததால், உணவில் வாசனைக்காக மட்டும் கொஞ்சம் சேர்த்துக் கொள்கிறோம். அதையும் உண்ணும் போது இலையில் ஓரமாக ஒதுக்கிவிடுகிறோம். ஆனால் கொத்துமல்லியால் தீரும் நோய்கள் ஏராளம்.
உருள் அரிசி, தனியா என அழைக்கப்படும் கொத்துமல்லி சிறு செடி வகையைச் சார்ந்தது. இது மேற்கு ஆசியாவினைச் சேர்ந்தது. பண்டைய காலம் தொட்டே வளர்க்கப்பட்டு வரும் முக்கிய மருத்துவ தாவரங்களில் ஒன்று கொத்துமல்லி. ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய இடங்களில் 2 ஆயிரம் ஆண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

100 கி கொத்துமல்லி இலையில் உள்ள சத்து பொருட்கள்:
விட்டமின் சி 160 மி.கி.
விட்டமின் ஏ 12 மி.கி.
விட்டமின் பி12 60 மி.கி.
நார்ச்சத்து 3 மி.கி.
புரத சத்து 2 மி.கி.
கார்போஹைட்ரேட் 1 மி.கி
கொழுப்புச் சத்து 0.5 மி.கி.
கால்சியம் 0.172%
பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம் போன்ற தாது உப்புகள் கொத்து மல்லி இலையிலும், விதையிலும் காணப்படுகிறது. மேலும் மாங்கனிசு மற்றும் கால்சியம், விதை மற்றும் இலையில் உள்ளது.

கொத்துமல்லி செய்கை:
பசித்துõண்டி, அகட்டுவாயகற்றி, வெப்பமுண்டாக்கி, உடல் தேற்றி, சிறுநீர்ப்பெருக்கி.

பசித்துõண்டி: அஜீரணம், வயிற்று உப்புசம் போக்கி, பசியை அதிகப்படுத்தும்.
அகட்டு வாயகற்றி: அகடு என்றழைக்கப்படும் வயிற்றில் உள்ள வாயுவை அகற்றி வயிற்று பொருமலை குணப்படுத்தும்.
சிறுநீர்ப் பெருக்கி: சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள பித்தத்தை தணிக்கும்.
பொது குணம்:
சுவையின்மை தீர்க்கும், பித்தசூட்டை குறைக்கும், உடல் வன்மை, பாலுணர்வை அதிகரிக்கும்.
மருத்துவ பயன்பாடு:
ஜீரண கோளாறுக்கு கொத்துமல்லி சாறை, 12 தேக்கரண்டி மோரில் கலந்து அருந்த அஜீரணம், குமட்டல், கழிச்சல், வயிற்று வலி குணமாகும்.
தலைவலி தீர கொத்து மல்லி சாற்றை நெற்றியில் பற்றிட தலைவலி, தலைபாரம் குணமாகும்.
முகப்பரு, கருவளையம் நீங்க, கொத்து மல்லி சாறுடன் மஞ்சள் சேர்த்து முகத்தில் பூச பரு, தழும்பு மாறும்.
நோய் எதிர்ப்பு சக்திக்கு 100கிராம் கொத்து மல்லி சாற்றை அருந்த உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துகளை பெருக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கொத்து மல்லி விதை:
கொத்து மல்லி விதை உடல் சூட்டை தணிக்கும். குளிர்க்காய்ச்சல் போக்கும். வாந்தியைப் போக்கும். விக்கல், தாகம் தீர்க்கும். சிறுநீரில் விந்து போதலை குணப்படுத்தும்.
மருத்துவ பயன்கள்:
வாயுவை அகற்றும். சுரத்தை தணிக்கும். ஒற்றை தலைவலி குணமாகும். மூளைக்கு புத்துணர்ச்சி தரும். பதட்டம் குறைக்கும். தசை இறுக்கம், வாத வலி குணமாகும். மார்பு சளியை அகற்றும்.

பயன்படுத்தும் முறை:
தனியாவை வறுத்து பொடித்து ஒரு ஸ்பூன் மோரில் கலந்து பருகலாம்.
தனியா பொடி, இந்துப்பு, சீரகத்துõள் சம அளவில் கலந்து 3 நாட்கள் வெந்நீரில் அருந்த வாயுக்கோளாறு, அஜீரணம் நீங்கும்.
தனியா பொடியை, சாதம் வடித்த கஞ்சியில் கலந்து அருந்த மாதவிடாய் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.
125 கிராம் தனியா பொடியை 125 கிராம் சர்க்கரைக் கலந்து 500மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து, பாகாக காய்ச்சி அருந்த டென்ஷன், குழப்பம் நீங்கும்.
ரத்தஅழுத்தம், கொலஸ்டிரால் நீங்க, வறுத்த தனியா பொடியுடன், வறுத்த சீரகம் கலந்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு மாதகாலம் அருந்தி வர மேலே சொன்ன குறைபாட்டை கட்டுபாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

கொத்துமல்லி விதை எண்ணைய்:
இந்த எண்ணை வாத வலியைப் போக்கும். கல்லீரலை பாதுகாக்கும். புற்றுநோய் செல்களை அழிக்கும். கொழுப்பைக் கரைக்கும். ரத்தக்குழாய் அடைப்பை கரைக்கும். குடல் புண், தசைப்பிடிப்பு, வயிற்றுவலியை போக்கும்.
தொகுப்பு: தேவராஜன்

9 . கேன்சர் செல்லை அழிக்கும் இஞ்சி!

"ஒரு துண்டு இஞ்சி இருந்தால் போதும், சாப்பிடுவதற்கு அஞ்சவேண்டியதில்லை!' இஞ்சிக்கு செரிமான சக்தியை ஏற்படுத்தும் திறன் உண்டு என்பதால் அவ்வாறு சொல்லி வைத்தார்கள்!
இஞ்சிக் கிழங்குக் கிருமல் ஐயம் ஒக்காளம்
வஞ்சிக்குஞ் சன்னி சுரம் வன் பேதி விஞ்சுகின்ற
சூலையறும் வாதம்போங் துõண்டாத தீபனமாம்
வேலையுறுங் கண்ணாய் விளிம்பு.
என்ற சித்தர் பாடல் வழி மூலம் இஞ்சியின் மகத்துவத்தை அறியலாம்.
இந்த பாடலில் சொல்லப்பட்டக் கருத்து என்னவெனில், இஞ்சி இருமலை, கபத்தை, வாய்க்குமட்டல், அதிக சுரம், கபத்தினால் ஏற்படும் மூளைப்பாதிப்பு அதாவது சன்னி, பேதி,உடலில் ஏற்படும் வலி, மூட்டு வலி, வீக்கம், அஜீரணம் போன்ற உபாதைகளைப் போக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு.
இஞ்சி கிழங்கு வகை தாவரம். இது ஆசியாவினைச் சேர்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிரிடப்படுகிறது. நீர் செழிப்புள்ள இடங்களில் இது அதிகமாக பயரிடப்படுகிறது. இஞ்சியின் மகசூல்காலம் 10 மாதமாகும். இதன் தண்டு பாகம், கிழங்கு பாகம் மருத்துவத்திற்கு உதவுகிறது.
இஞ்சிக்கு அல்லம், ஆர்த்தரகம், ஜிஞ்சர், சாந்த் என வேறு பெயர்களும் இருக்கிறது.

இஞ்சியின் செய்கை:
அகட்டுவாயகற்றி, பசித்துõண்டி, உமிழ்நீர் பெருக்கி, செரிப்புண்டாக்கி ஆகியன வாகும்.

இருமல்,இரைப்பு:
இஞ்சிச்சாறு, ஈரவெங்காய சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவை மூன்றும் 5 மில்லி வீதம் கலந்து காலை, மாலை 2 வேளை 3 நாட்கள் அருந்திவர, இருமல், இரைப்பு குணமாகும்.
ஈளை:
இஞ்சி சாறு, மாதுளம்பூச்சாறு, தேன் சம அளவு கலந்து 30 மில்லி வீதம் தொடர்ந்து 1 மண்டலம் (48 நாட்கள்) அருந்த ஈளை நோய் நீங்கும்.
வாந்தி,ஒக்காளம்:
இஞ்சி சாறு 5 மில்லி வெறும் வயிற்றில் அருந்த குணமாகும்.
குரல் கம்மலுக்கு:
இஞ்சியை சிறு துண்டாக்கி,தோலை நீக்கி வாயில் மென்று உமிழ்நீரை துப்ப தொண்டைக்கம்மல், தொண்டை வலி, குணமாகும்.
பித்த மயக்கத்திற்கு:
இஞ்சி சாறு 10 மில்லி, பால் 5 மில்லி, மாதுளம் பழசாறு 10 மில்லி இத்துடன் கற்கண்டு சேர்த்து பாகு போல காய்ச்சி படுக்கைக்குப் போகும் போது 28 கிராம் அளவு குளிர்ந்த நீரில் கலந்து அருந்த பித்த மயக்கம், உடல் சூடு, நீர் எரிச்சல், வாந்தி, கண் எரிச்சல் குணமாகும்.
கர்ப்பிணிகளுக்கு:
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாய்க்குமட்டல், வாந்திக்கு இஞ்சி சிறந்தது. தினமும் காலையில் இஞ்சிசாறு 5மில்லி, மாதுளம்பழம்சாறு 10 மில்லி, சீரகத்துõள் ஒரு கரண்டி சேர்த்து தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வர, சூழ்வாந்தி குணமாகும்.
இதய நோய்க்கு:
இதய நோயாளிகள் தினமும் 45 கிராம் இஞ்சியை உணவில் சேர்த்து வர, ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, இதயத்தின் ரத்த ஓட்டம், மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ஸ்டிரோக், ஹார்ட் அட்டாக் ஏற்படுவதை தவிர்க்க உதவுகிறது.
ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடுவர்கள் இஞ்சி பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும்.
வாத நோய்க்கு:
இஞ்சி சாறு 5மில்லி தினமும் அருந்த கழுத்து வலி, இடுப்புவலி, முழங்கால், மூட்டுவலி குணமாகும்.
வயிற்று வலிக்கு:
இஞ்சி சாறு 5மில்லி, சீரகம் ஒரு ஸ்பூன் ஏலக்காய்2 இவைகளை 30 மில்லி நீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி தினமும் 30 மில்லி என ஒரு வாரம் அருந்த வயிற்று வலி குணமாகும்.
சர்க்கரை நோய்க்கு:
இஞ்சி சாறு, கற்கண்டு சேர்த்து பயன்படுத்திவர ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுபடும்.
பசியின்மைக்கு:
இஞ்சியை பாலில் கரைத்து 15 மில்லி வீதம் காலை, மாலை 5கிராம் 5 நாட்கள் அருந்த பசியின்மை, பித்தம் தெளியும்.
காயகற்பம்:
நரை, திரை, மூப்பு இன்றி உடலை இளமையாக வைத்திருக்க உதவும். காயகற்ப மூலிகைகளில் இஞ்சியும் ஒன்று.
இஞ்சியை தோல்நீக்கி, தேனில் ஊறப்போட்டு தினமும் காலையில் 5 கிராம் வீதம் வெறும் வயிற்றில் ஒரு மண்டல் சாப்பிட ஆரோக்கியம் மிகும்.
பத்திய உணவு:
நெற்பொரி மாவுடன், பசுவின் நெய் சம அளவு கலந்து ஆகாரத்திற்கு பதிலாக உண்ண வேண்டும்.
புற்று நோய்க்கு:
இஞ்சிக்கு கேன்சர் செல்லை அழிக்கும் ஆற்றல் இருப்பதால் தினமும் இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை புற்று நோய்யை இஞ்சி குணமாக்கும்.

இஞ்சி வேண்டாம்:
பித்தப்பை கல் உடைய நோயாளிகள், ஆஸ்பிரின் மருந்து சாப்பிடுபவர்கள், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தக்கூடாது.
தொகுப்பு: தேவராஜன்


10 . முத்தான பயன்களைத் தரும்
முருங்கை கீரை!

முருங்கைக் கீரை மர வகையைச் சேர்ந்தது. முருங்கை மரத்தின் இலை, பூ, காய், பிசின், பட்டை என எல்லா பாகமும் மருத்துவ குணம் வாய்ந்தவை.
முருங்கை மரம் வடமேற்கு இந்தியாவினைச் சேர்ந்தது. இமயமலை அடிவாரத்திலுள்ள காடுகளில் தானாகவே வளரும் இந்த மரம், இந்தியா, பர்மா, இலங்கை நாடுகளில் பயிரிடப்பட்டு வருகிறது. முருங்கைக்கு சிக்குரு, கிழவீ, சோபாஞ்சனா, டிரம்ஸ்டிக் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

மருத்துவ செய்கை:

இலை இசிவகற்றி, வெப்பமுண்டாக்கி, கோழையகற்றி, சிறுநீர் பெருக்கி, உரமாக்கி, சூதகமுண்டாக்கி.
முருங்கை இலையானது அதிகமந்தம், உள்சூடு, தலைநோய், வெறிநோய், மூர்ச்சை, கண் நோய் ஆகிய நோய்களைக் குணமாக்கும்.
பூவானது ஆண்மையை அதிகரிக்கும், கண்ணுக்கு குளிர்ச்சியைத் தரும், உடலில் உள்ள பித்தத்தை நீக்கும், சுவையின்மையை போக்கும்.
முருங்கை பிஞ்சு எலும்பை உருக்குகின்ற வெப்பத்தை குணமாக்கும். விதை, ஈர்க்கு ஆனது உடலுக்கு வலுசேர்க்கும், ஈர்க்கு நீரை பெருக்கும்.
முருங்கை பட்டை வாத நோய்களை நீக்கும், கபநோய்களை நீக்கும்.
முருங்கை பிசின் உடலுக்கு பொலிவைக் கூட்டும். வாத நோய்களை நீக்கும். விந்துவை பிசினாக்கும்.
முருங்கையில் ஊட்டசத்து:
25 கிராம் முருங்கை இலை பவுடரில்
புரதம் 42%
கால்சியம் 125%
மக்னீசியம்61%
பொட்டாசியம்41%
இரும்பு சத்து 71%
விட்டமின்.ஏ 272%
விட்டமின்.சி 22%
காய்கள், இலைகளில் விட்டமின்சி மிகுதியாக உள்ளது. அசிட்டிக் அமிலம், கரோட்டின், பேரேனால், மொரிங்கஜின் முதலியனவும் உள்ளன.
மேலும் முருங்கை கீரையை எடைக்கு எடை சாப்பிட்டால்
4 தம்ளர் பாலில் உள்ள கால்சியம்
7 ஆரஞ்சு பழங்களில் உள்ள விட்டமின்சி சத்து
3 வாழைப்பழங்களில் உள்ள பொட்டாசியம் சத்து
கேரட்டில் உள்ளது போன்ற 4 மடங்கு விட்டமின்ஏ சத்து
பாலில் உள்ள புரோட்டீன் போல 2 மடங்கு கிடைப்பதாக அறிவியல் ஆய்வு கூறுகிறது.
மருத்துவ பயன்கள்:
உயர் ரத்த அழுத்தம் குறைய:
முருங்கை இலை 100கிராமுடன் ஒரு ஸ்பூன் தனியா, சீரகம் 100மில்லி நீரில் கொதிக்க வைத்து தினமும் ஒரு மாதம் அருந்த உயர் ரத்த அழுத்தம் குறையும்.
ரத்த சோகை நீங்க:
முருங்கை இலை, கறிவேப்பிலை இலை இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்தி, இதனுடன் சிறுபருப்பு, துவரம் பருப்பு, சீரகம், உப்பு சேர்த்து பவுடராக்கி உண்ணும் முன் ஒரு பிடி சோற்றுடன் ஒரு ஸ்பூன் இந்த பவுடர், நல்லெண்ணை சேர்த்து உண்ண ரத்த சோகை 3 மாதத்தில் முழுவதும் குணமாகும். இது இளநரையையும் குணப்படுத்தும்.
சர்க்கரை நோய் குணமாக:
முருங்கை இலை, வெந்தயம் இரண்டையும் வெயிலில் உலர்த்தி பொடித்து தினமும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வீதம் வெந்நீரில் கலந்து அருந்த ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை குறைத்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.
வாத நோய்மூட்டு வலிக்கு:
முருங்கையில் கந்தக சத்து இருப்பதால் மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம், ரத்த வாதம் குணமாக வாரம் 2 முறை முருங்கை இலையை பொரியல், கூட்டு, சாம்பாராக உண்ண வாதவலி குணமாகும்.
குடல் புழு நீங்க:
குழந்தைகளுக்கு வயிற்றில் உள்ள பூச்சி நீங்க வாரம் ஒரு முறை முருங்கை பூ, இலையுடன் மிளகு, சீரகம், உப்பு சேர்த்து சூப்பாக வைத்து தர வயிற்று புழு நீங்கி அதிக பசி உண்டாகும்.
ரத்த அணுக்கள் அதிகரிக்க:
முருங்கை இலையுடன் முட்டை சேர்த்து குழந்தைகளுக்கு உண்ண கொடுத்தால் ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தி அதிகரித்து உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நரம்பு வலு பெற:
முருங்கை பிசினைப் பொடித்து பாலுடன் உண்ணவும், முருங்கை வேரை இடித்து சாறுபிழிந்து குடிக்க பக்க வாதம், வலிப்பு நோய் குணமாகும்.
தலை வலிக்கு:
முருங்கை இலைசாறை மிளகுடன் சேர்த்து நெற்றியில் பற்றிட தலைவலி குணமாகும்.
கண் பார்வை:
முருங்கை பூவை தேனுடன் கலந்து உண்ண கண் பார்வை பலப்படும்.
எனவே முருங்கையை எவ்வகையிலாவது பயன்படுத்தி நல்ல ஆரோக்கியத்தைப் பெறுங்கள்!
தொகுப்பு: தேவராஜன்

11 . குழந் தையின்மையை போக்கும் மாதுளை!

மாதுளை மரம் இந்தியாவினைச் சார்ந்தது. தென் மேற்கு ஆசியாவின் பெர்சியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களிலும் இயல்பாக வளர்கிறது. ஐரோப்பாவில் இதன் கனிகளுக்காகப் பயிரிடப்படுகிறது.
கி.பி. முதல் நுõற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க அறிஞர் டயாஸ் கொரிடிஸ் மாதுளையின் புழு நீக்கும் பண்பினைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாகவே இந்தியாவின் மாதுளையின் பயன்பாடு தெரிந்துள்ளது.
கி.பி. 1500ல் எகிப்திய மன்னன் துத்மோஸிஸ் மாதுளையினை எகிப்தில் அறிமுகப்படுத்தியுள்ளான் என்ற வரலாற்று குறிப்பும் உண்டு.
இது சிறு மர இனத்தைச் சேர்ந்தது. இதில் இனிப்பு மாதுளை, புளிப்பு மாதுளை, பூ மாதுளை என வகையுண்டு.
மாதுளைக்கு அனார், தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம், மாதுளுங்கம், கழுமுள் என பல பெயர் உண்டு.
மாதுளையில் இரும்பு, சர்க்கரை,சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துகளும் அடங்கியுள்ளன. மாதுளம் பழம் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது.
பயன்படும் உறுப்பு : பூ, பிஞ்சு, விதை, பட்டை
பொது குணம்: பூ, பழத்தோல், பட்டை துவர்ப்பு சுவையுடையது. பழம், விதை இனிப்பு சுவை கொண்டது.
பூ: பழத்தோல் துவர்ப்பி, பசித்துõண்டி, மரப்பட்டை, வேர்ப்பட்டை: புழுக்கொல்லி, பழம்: குளிர்ச்சி உண்டாக்கி, விதை: துவர்ப்பி, புழுக்கொல்லி, ஆண்மைபெருக்கி.
செயல்திறன், வேதிப்பொருடகள்:
கனியின் உறை மற்றும் பட்டையில் அல்கலாய்டுகள், டேனின்கள் உள்ளன. இதில் பெல்லிடிரின் அல்கலாய்டு சிறப்பானது. இதுவே நாடாப்புழுக்களை வெளியேற்ற முக்கிய காரணம் என கருதப்படுகிறது.
எளிகா டேனின்கள் மற்றும் டிரை டெர்பினாய்டுகளும் உள்ளன.
மருத்துவ குணம்:
பூ: மாதுளையின் பூ அனேக மருத்துவ குணம் கொண்டது. இதனால், குருதி வாந்தி, வயிற்றுக்கடுப்பு, வெப்பம், குருதி மூலம் இவை குணமாகும். மேலும். இது குருதியைப் பெருக்கும், வன்மையைத் தரும்.
பிஞ்சு: மாதுளம் பிஞ்சு மலக்கழிச்சல், சீதக்கழிச்சல், சலக்கழிச்சல் குணமாகும்.
பழம்: மாதுளம் பழத்தை தினமும் புசிக்க, ஆண்மை பெருக்கு உண்டாகும். மற்றும், வாய் நீருறல், விக்கல், வாய்கசப்பு, விக்கல், காய்ச்சல், நெஞ்செரிவு, காதடைப்பு, மயக்கம் தீரும், உடல் குளிர்ச்சி அடையும். குழந்தையின்ளையை போக்கும்.
பயன்படுத்தும் முறை:
* இருமலுக்கு: பூ மொக்கை உலர்த்திப் பொடித்து 130 மி.கி. கொடுக்க இருமல் தீரும்.
* கழிச்சல் தீர: பூ மொக்கு உலர்த்தி பொடித்து அதனுடன் ஏலக்காய் துõள், கசகசா துõள் சேர்த்து 65 மி.கி. அளவு தினம் 2 வேளை தர நாட்பட்ட பெருங்கழிச்சல், சீதக்கழிச்சல் தீரும்.
*குருதி வடிதலை நிறுத்த: பூ வின் சாறும், அருகம்புல்லின் சாறும் சம அளவு எடுத்து சேர்த்து தர குருதிவடிவது நிற்கும்.
* ரத்த மூலம் நீங்க: பூவை உலர்த்தி பொடித்து 4 கிராம் எடுத்து வேலம்பிசின் 4 கிராம் சேர்த்து 350 மி.கி. வீதம் தர குருதி கழிச்சல், குருதி நீர், ரத்த மூலம் நீங்கும்.
* தாகம் போக்க: மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து மணப்பாகு செய்து அருந்து பித்தத்தை போக்கும். குளிர்ச்சியை உண்டு பண்ணும். சுரம், அழழ், தாகம் நீக்கும். இதனை இளைப்பு நோயினர்க்கு கொடுக்க மிகுந்த நன்மை தரும்.
* வயிற்று புழு தீர : பட்டை சாறு 20 கிராம் அளவு தர வயிற்று புழுவை கொல்லும்.
* மாதுள் பிஞ்சுக் குடிநீர் : மாதுளம் பிஞ்சு, அதிவிடயம், முத்தகாசு, விளாங்காய்தசை இவை சம அளவு எடுத்து நீர் சேர்த்து கொதிக்க வைத்து 4ல் ஒன்றாக வற்ற காய்ச்சி வடிகட்டி, குடிக்க கழிச்சல், சுரம் பறந்து போகும்.
* இதய நோய்க்கு : மாதுளம்பழ ஓட்டை உலர்த்தி பொடித்து 5 கிராம் வீதம் 2 வேளை தேன் அல்லது பாலில் அருந்த இதயம் பலப்படும்.
* மாதுளம் விதை: மாதுளம் விதையானது நீர்த்துப்போன விந்துவை இறுக்கும். வெள்ளையில் காணும் நீர்கடுப்பை நீக்கும். இவ்விதை உடற்கு ஊட்டத்தையும் ஆண்மையும் தரும்.
* மாதுளை மரத்தின் வேர், பிஞ்சு: இவைகளினால் வாந்தி நீங்கும். பழத்தினால் தாது, ஆண் விருத்தியுண்டாகும். தாகம் போகும். இலை, காய், மலர் இவைகளினால் வாய்கசப்பு, பித்தம் தீரும்.
எனவே, மாதுளம் பழத்தை அதிகம் பயன்படுத்தி மேற்கண்ட பலன்களை பெறலாம்.
தொகுப்பு: தேவராஜன்

வில்வம்
12 . பல பிணி நீக்கும் தெய்வீக மூலிகை!

சிவாலயங்களில் பிரசாதமாக கொடுக்கப்படும் வில்வம் ஒரு தெய்வீக மூலிகை. சிவபூஜையில் பூஜைப்பொருளாகப்பயன்படுத்தப்படும் இந்த புனித இலை சிவ துதியில் "ஏக வில்வம் சிவா அர்ப்பணம்' என்று சொல்லப்பட்டுள்ளது.பிணி தீர்க்கும் தன்மை வில்வத்திற்கு இருப்பததால்தான் முன்னோர்கள் மதிப்பும், முக்கியத்துவமும் தந்துள்ளார்கள். பொதுவாக சிவாலயங்களில் வில்வமரம் இருக்கும். சில சிவாலயங்களில் தலவிருட்சமாக வில்வம் இருப்பதுண்டு.
வில்வத்தின் பூர்வீகம் இந்தியா. தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் காணப்படுகிறது. மேலும் வறண்ட மலைப்பிரதேசங்களில் வளர்கிறது.
வில்வத்திற்கு குசாபி, கூவிளம், கூவிளை, நின்மலி, சிவத்துருமம், ஹோலி பரூவ் டிரீ, பில்வமு, பில்வா என்ற பெயர்களாலும் அழைக்கப்படுவதுண்டு.
பயன்படும் உறுப்பு:
இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வேர், பிசின், பட்டை, ஓடு, வேர்பட்டை
பொது குணம்:
இலை, பூ, பிஞ்சு, காய், வேர் ஆகியன துவர்ப்பு, கைப்பு சுவை உடையது. இவை தன்மை தட்பம்ஆகும்.
பழம் துவர்ப்புடன் சிறு கைப்பு சுவை உடையது. தன்மை தட்பம்.
இலை: வியர்வை பெருக்கி, காமம் பெருக்கி, வெப்பமகற்றி.
பூ, பிஞ்சு, காய்: செரிப்புண்டாக்கி, பசித்துõண்டி
பழம்: மலமிளக்கி, பசித்துõண்டி
வேர், பிசின்: காமம் பெருக்கி
மருத்துவ குணம் :

வில்வத்தளிர்: எல்லா மேகத்தைம் போக்கும்.
பூமந்தத்தையும், பிஞ்சு குன்மத்தையும், பழம் கண்ணிருளையும், பிசின் விந்து குறைவை போக்கும்.
வில்வத்தினது கனி, காய், இலை, வேர் முதலியனவைகளை மணப்பாகு, ஊறுகாய், குடிநீர், தைலம் ஆகிய எவ்வகையிலாவது செய்து உட்கொள்ள அது உடலுக்கு அழகையும், ஆண்மையும் கொடுக்கும். மயக்கம், குழறிப்பேசும் தன்மையை நீக்கும்.
வேர்: குன்மம், சோபை, நீர்வேட்கை, சுரம், முப்பிணி, உடல் கடுப்பு, நீரேற்றம் இவைகளை நீக்கும். வில்வ வேரை உண்ண பசியின்மை, கழிச்சல், விக்கல், பித்த சுரம், இடைவிடா வாந்தி, உடல் இளைத்தல் நீங்கும். மேலும், உடலுக்கு அழகு, வன்மையை தரும்.
செயல் திறன் வேதிப்பொருட்கள்:
மார்பின், மர்மிலோசின், அமினோ அமிலங்கள், டிக்ட அமைன், ஆந்த்தோசையனின், பால்மிடிக், லினோலெயிக், ஒலியிக் அமிலங்கள் உள்ளது.
மருத்துவ பயன்கள்:
* இலைகள் ஆஸ்துமா, காய்ச்சல், சளி போக்கும்.
* பட்டை இதயதுடிப்பு, மன உளைச்சல், விட்டு விட்டு வரும் காய்ச்சலைப் போக்கும்.
*தசமூல எனும் முக்கிய ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் வில்வவேர் ஒன்றாகும். இது பசியின்மை, மகப்பேற்றுக்கு பின் ஏற்படும் நோய்க்கு சிறந்த மருந்தாகும்.
* கனிகள் இது முக்கிய மருந்து உறுப்பாகும். உடல் நலம் தேற்றும். குளிர்ச்சி தரும். விட்டமின் சி நிறைந்தது. ஊட்டம் தரும். மலமிலக்கி. மிலச்சிக்கல், வயிற்று போக்கு நீக்கும்.
* காய் தசை இறுக்கும் தன்மை கொண்டது. வயிற்று வலி போக்கும். அசீரணம் போக்கும்.
* விதை மலமிலக்கி
* மலர் வாந்தியை நிறுத்தும்.
வில்வ பழ சர்பத் வட இந்தியாவில் கோடைக்காலத்தில் குளிர்பானமாக அருந்தப்படுகிறது. வில்வ பழபாகு சிறந்த உணவாகும்.
வில்வ இலை பொடி நீரிழிவை போக்கும். சிறுநீரக கோளாறை குணப்படுத்தும்.
வில்வ பழம், இலை, காய், வேர் உணவில் பயன்படுத்த வயிற்று சம்பந்தமான நோய்கள் நீங்கும். வில்வாதி லேகியம் உடலை தேற்றும் அருமருந்தாகும்.
தொகுப்பு: தேவராஜன்

13 . நீரிழிவுவை கட்டுப்படுத்தும் கோவை

தகிக்கும் வெயில் எல்லாரையும் வாட்டி வதைக்கிறது. சிலருக்கு தண்ணீர் குடித்தாலும் தாகம் தணிவதில்லை. உடலில் இருக்கும் நீரளவு வியர்வையாக வெளியேறும் இந்த கோடையில் சிறுநீர் எரிச்சல், நீர்க்கட்டு, நீர் எரிச்சல், கண் எரிச்சல் போன்ற உபாதைகள் வருவது சகஜம்.
இந்த தொந்தரவுகளுக்கு கண்கண்ட பாட்டி வைத்தியம் கோவை தான்! கோவையின் இலை, கொடி, காய், கனி என எந்தப் பகுதியை வேண்டுமானாலும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கைமேல் பலனை எதிர்பார்க்கலாம்!

கோவை கொடியினத்தைச் சேர்ந்த தாவரம். இதில் இனிப்பு, கசப்பு என வகையுண்டு. கருங்கோவை என மற்றோர் இனமும் உண்டு. கோவையின் உருவத்தையும் நிறத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல்கோவை, நாமக்கோவை என மூன்று விதமாக பிரித்திருக்கிறார்கள்.
கோவை இந்தியாவில் எந்த இடத்திலும் வளரக்கூடியது. வீட்டின் தோட்டத்தில், வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது. இது ஏழைக்கேற்ற காய்கறி. மற்ற காய்கறிகளைவிட இதன் விலை மலிவு தான்!
பயன்படும் உறுப்பு: இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு
இனிப்புக்கோவை: சுவை இனிப்பு, தன்மை குளிர்ச்சி.
கசப்புக்கோவை: சுவை கசப்பு, தன்மை வெப்பம்
பொது குணம்:
கோழையகற்றி, இசிவகற்றி, முறை வெப்பமகற்றி
கோவை இலை : கோவை இலையினால் கண் குளிர்ச்சி உண்டாகும். இருமல் தீரும். வாயு நீங்கும். பெரும்புண், சிறு சிரங்கு நீங்கும். உடல் வெக்கை, நீரடைப்பு நீங்கும்.
காய் வற்றல்: காயினால் சுவையின்மை நீங்கும். கபம் விலகும். வற்றலால் சுவையின்மையும், கரப்பானும் நீங்கும்.
கிழங்கு : முப்பிணிகளை போக்கும். மூட்டுகளில் உண்டாகும் குத்தல், குடைசலை போக்கும். பித்த நோய்களை போக்கும். சர்க்கரை நோயை மட்டுபடுத்தும். தோலில் வரும் சொறி, படை, அரிப்புகளை போக்கும். இரைப்பு ஆஸ்துமாவை குணமாக்கும். கோழையை நீக்கும். நாவில் தோன்றும் புண்ணை ஆற்றும். அம்மை நோயில் தோன்றும் புண்களை ஆற்றும்.
கோவையில் உள்ள வேதிப்பொருட்கள்:
தையமின், நியாசின், அஸ்கார்பிக் அமிலம், கரிட்டோ சாந்தின் லைக்கோப்பீன், பி அமைரின், ரிபோபிளேவின், லினோலியிக் அமிலம், பி சைட்டோஸ்டீரால்.
பயன் படுத்தும் முறை:
* இலையை கொதிக்கின்ற வெந்நீரிலிட்டு சற்று நேரம் சென்றபின் வடிகட்டி, வேளைக்கு 35 கிராம் அல்லது இலையை உலர்த்திப் பொடி செய்து மூவிரல் அளவாவது கொடுக்க நீரடைப்பு, உடல்சூடு, கண் எரிச்சல் நீங்கும்.
* இலை சாற்றுடன் வெண்ணைய் சேர்த்து சிரங்குகளுக்குப் பூசினால் சிரங்குகள் ஆறும்.
* இலையை எண்ணையில் கொதிக்க வைத்து படை, சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் இவைகளுக்கு மேல பூசி வர படிப்படியாக குணமாகும்.
* இளங்காயை வாயிலிட்டு மென்று துப்ப, நாக்கின் புண்கள் நீங்கும்.
*காயை சமைத்து சாப்பிட வெப்பம் நீங்கும். இதை ஊறுகாய் செய்தும் சாப்பிடலாம்.
*காய் சாறு ஒரு தேக்கரண்டி முதல் 3 தேக்கரண்டி வரை கொடுக்க நீரிழிவு, படை முதலியன தீரும்.
* இதன் தண்டை கொடுக்க நீர்க்கட்டை உடைத்து நீரை வெளியேற்றும்.
* இதில் உள்ள குளுக்கேனின் என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்.
* இலைச்சாறு சர்க்கரை அளவை குறைப்பதாக கல்கத்தா மருத்துவ கல்லுõரி ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
* மதுமேக நோய் உள்ளவர்களுக்கு கோவை நல்ல மருந்து உணவுப்பொருள்.
* கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கசாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தபட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.
*கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கசாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் ரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.
* கோவை இலையை அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.
மலிவாகக் கிடைக்கும் கோவையை வாங்கி உணவில் சேர்த்துக்கொண்டால் இந்த கோடையின் வெம்மையால் ஏற்படும் வியர்குரு, படை, நீர்க்குத்தல், கண் எரிச்சல் இவைகளை சுலபமாக தவிர்க்கலாம்!
தொகுப்பு: தேவராஜன்


14 . வாதம் போக்கும் முடக்கற்றான்!

உடலை முடக்க செய்கிற வாத நோயை போக்குவதால் இந்தக் கீரைக்கு முடக்கு+ அற்றான் முடக்கற்றான் என்று பெயர் வந்தது. இதை முடக்கத்தான், முடர்குற்றான், முடக்கறுத்தான் என்று வேறு பெயர்களாலும் அழைப்பதுண்டு.
முடக்கற்றான் தரையிலும் வேலியிலும் கொடிபோல படரக்கூடியது. இவ்வகை தாவரம் இந்தியா முழுவதும் பயிராகின்றதெனினும் தமிழகம், வல்காளம், இலங்கை முதலிய இடங்களில் மிகுதியாய் வளருகின்றது. பொதுவாக உலகெங்கும் வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகிறது.
பயன்படும் உறுப்பு : இலை, வேர்.
முடக்கற்றானில் உள்ள ரசாயன பொருட்கள்:
சையனோஜினிக் குளுகோசைடுகள் உள்ளன.
அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், சயனோலிபிடுகள், ஏபிஜெனின் சபோனிக்கள், புரோ ஆந்த்தோசயானின்கள் உள்ளன.
பொது குணம்:
உடலில் தோன்றும் பல வலிகளைப் போக்கும். தசைபிடிப்பை குணமாக்கும். கீழ் வலியை தீர்க்கும். சொறி சிரங்கு, கரப்பான், கிரந்தி ஆகியவற்றை போக்கும். கால் அடியை பற்றியவலியை நீக்கும். வாய்வை போக்கும். மலச்சிக்களை குணமாக்கும்.
மருத்துவப் பயன்கள்:
* முழுதாவரம் அடி மற்றும் நடு முதுகு வலிக்கும் முடக்கு வாதத்திற்கும் சிறந்த மருந்து. எனவே இது முடக்கத்தான் கீரை எனப்பட்டது.
* இலையின் சாறு தோல் நோய்களுக்கு மேல்பூச்சாக தடவப்படுகிறது.
* காது வலிக்கும் பயன்படுகிறது.
* வேர் வியர்வையை துõண்டும்
* வேர் சிறுநீர் போக்கை ஊக்குவிக்கும், வாந்தியை ஏற்படுத்தும்.
* மலமிலக்கி மேலும் வயிற்றுவலியை போக்கும்
* நரம்பு நோய்கள் மற்றும் உடலை முடக்கச் செய்கின்ற வாத நோய்களை போக்கும்.
*இதன் கசாயம் மூல நோய்க்கும் மருந்தாகிறது.
* அமேசானியர்கள் இதன் விதையை கையில் கட்டினால், பாம்புகள் அருகில் இருக்கும் என நம்பினர்.
* இந்திய மருத்துவத்தில் மாதவிடாயினை தாமதப்படுத்த பயன்பட்டது.
* இலைகள் தடவப்பட்ட இடத்தில் குருதி ஓட்டத்தினை துõண்டுகிறது.
* நச்சு பொருள்கள் வெளியேறுவதிலும் உதவும்.
* முழுத்தாவரம் துõக்கத்தை துõண்டும்.
பயன்படுத்தும் முறைகள்:

மூலத்திற்கு:
இலை, வேர் முதலியவைகளை குடிநீரிட்டு வளி மூலம், மலச்சிக்கலுக்கு பயன்படுத்தலாம்.
மாதவிடாய் ஏற்படுத்த:
இலைப்பொடியுடன் சித்திர மூல வேர்பட்டை பொடி, கரியபோகம் சேர்த்து 3 நாள் கொடுக்க சூதககட்டு நீங்கி மாதவிடாய் ஏற்படும்.
வலி நீங்க:
இலையை எண்ணையிலிட்டு காய்ச்சி அந்த எண்ணையை வலியுள்ள இடங்களில் பூச வலி தீரும்.
காது வலிக்குஊ
இலைச்சாற்றை காதில்விட காது வலி, காதில் சீழ்வடிதல் நீங்கும்.
மலச்சிக்கல்:
இதன் வேரை குடிநீராக்கி அருந்த மூலநோய் நீங்கும். கொடியின் குடிநீருடன் ஆமணக்கெண்ணைய் கூட்டிக் கொடுக்க கழியும்.
தசைப்பிடிப்பு:
இதன் இலையை விளக்கெண்ணைய் விட்டு வதக்கி வாதத்தால் கீல்களில் உண்டான பிடிப்பு, நோய், வீக்கத்திற்கு வைத்துகட்ட குணமாகும்.
ரத்த வாதம் நீங்க:
முடக்கற்றான் பொடியை, திரிபலா பொடியுடன் சேர்த்து உண்ண ரத்த வாதம் நீங்கும்.
வாத நோயை தடுக்க:
முடக்கற்றான் இலையை வாரம் 2 முறை தோசைமாவில் 5 கிராம் சேர்த்து தொடர்ந்து உண்ண வாதநோய் வராமல் தடுக்கலாம்.
தொகுப்பு: தேவராஜன்

15 . குடலை சுத்தப்படுத்தும் வாழைப் பழம்
மனிதனுக்கு எல்லாவகையிலும் பயன்படும் மரவகைகளில் வாழையும் ஒன்று. இது பேச்சு வழக்கில் மரம் என்று அழைக்கப்படுகிறது.மரத்திற்கே உண்டான கடினமான தண்டோ, கிளைகளோ கிடையாது. இது தாவர இனத்தை சேர்ந்தது. தாவரங்களைப்போலவே ஒரு முறை பூத்துக் காய்த்தப்பின் மடிந்துவிடுகின்றது.
வாழை ஆசியாவில் தோன்றியது. வெப்பமண்டலங்களை கொண்டுள்ள ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களுக்கு பரவியது. இந்தியாவில் வாழை சாகுபடி வர்த்தகரீதியாகவே செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 170 லட்சம் டன் வாழை உற்பத்தியாகிறது.
பனை, தென்னை போல் மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக இருப்பதால் இது இந்தியாவில் எல்லா இடத்திலும் பயிர் செய்யப்படுகிறது.
வாழையில் அடுக்கு வாழை, இரசதாளி வாழை, கருவாழை, கொட்டை வாழை, செவ்வாழை, நவரை வாழை, நாட்டு வாழை, பசும் வாழை, பேயன் வாழை, மலை வாழை,மொந்தன் வாழை, வெள் வாழை
என பலவகை உள்ளன. மலையாளம், தெலுங்கு, கன்னட மாநிலங்கள் மற்றும் வட நாடுகளில் வளரும் வாழைகளில் பல வகைகள் உண்டு.
பயன்படும் உறுப்புகள்:
இலை, பூ, பிஞ்சு, காய், பழம், பட்டை,கட்டை, தண்டு, நீர்.
பொது குணம்:
பூ, பிஞ்சு, காய் சுவை துவர்ப்பு, தன்மை குளிர்ச்சி, செய்கை துவர்ப்பி
நீர், கட்டை, தண்டு சுவை துவர்ப்பு, தன்மை வெப்பம். செய்கை குருதிப்போக்கி, பித்தமடக்கி, மூத்திரவர்த்தினி
பழம் சுவை இனிப்பு, தன்மை வெப்பம். செய்கை உள்ளழலாற்றி, மலமிளக்கி, உடலுரமாக்கி
இலை, பட்டை குளிர்ச்சி உண்டாக்கி.
மருத்துவ குணம்:
வாழை கிழங்கு சூட்டை தரும். தண்டு குடலில் சிக்கிய மயிர், தோல், நஞ்சு இவைகளை வெளியேற்றும்.
பூ வெள்ளையைப்போக்கும்
பிஞ்சு மூலக்கடுப்பை தீர்க்கும்
காய் உடல் முழுவதும் வாயுவை உண்டாக்கும்.
எண் வகை வாழைப்பழம்:
செவ்வாழை, இரசதாளி, வெள்வாழை, மொந்தன் வாழை இவை நான்கும் நோயாளிகளுக்கு பயன்படும்.
அடுக்கு வாழை, மலை வாழை, பச்சை வாழை, கருவாழை இந்த நான்கும் பொதுவாக நன்மை தரும். இந்த எட்டு வகை பழங்களும் வாத நோய் உள்ளோர்க்கு உதவாது. ஆனால், வாழைக்கு எதிர் பொருள்களோடு சேர்த்து உண்ண குற்றம் உண்டாகாது.
வாழை:
வாழைக்கனி கெடுதிகளை தரும். மந்தப்பிணிகள் யாவற்றையும் விளைவிக்கும். இருந்தாலும் உடலை பொன்போலக்காத்து உரமாக்கி விந்துவைப் பெருக்கும்.
வாழைப்பழத்தால் உடம்பை வெளுக்கச் செய்கிற நோய், அழற்பிணிகள்,மத நோய், மூர்ச்சை ஆகியவை நீங்கும்.
தொகுப்பு: தேவராஜன்

16 . எரிச்சல், புண் நீக்கும் அகத்தி!
"அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே' என்று ஒரு பழமொழி அகத்திப் பற்றிக் கூறப்படுகிறது. அகத்தை சுத்தப்படுத்துவதால் அகத்தி என பெயர் வந்திருக்கலாம்.
50 ஆண்டுகளுக்கு முன்பு மருந்திடுதல் என்ற ஒரு நம்பிக்கை கிராமப்புற தமிழ் மக்களிடம் இருந்துவந்துள்ளது.
மனைவியின் அன்புத் தொடரக் கணவனுக்கும், கணவனின் அன்பு தொட ர மனைவிக்கும் மருந்திடுதல் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதாவது உள்ளுக்கு ஒரு சில கூட்டு மருந்துகளைச் சேர்த்து கொடுத்துவிட்டால் அதை அருந்தியவர் கொடுத்தவரிடம் தொடர்ந்து அன்புடன் இருப்பாராம். அப்படிப்பட்ட மருந்திடுதல் தோஷத்தை அகத்தி நீக்கிவிடுமாம்!

அகத்தி இந்தியாவில் எங்கும் தோட்டங்களில் பயிராய் வளர்க்கப்படும். மரம் போல் 20 முதல் 30 அடி வரை உயரமாக வளரினும் இது செடி வகையையே சேரும். பெரும்பான்மையாக இச்செடிகள் வெற்றிலை கொடிக்கால்களிலும், நீர் தங்கிய பூமிகளிலும் பயிர் செய்யப்படுகின்றன. தைத்திங்கள் முதல் மாசி மாதம் வரையில் பூ பூக்கும்.
அகத்தியில் இருவகை யுண்டு. 1. அகத்தி 2. செவ்வகத்தி
வெள்ளை பூவுடையது அகத்தி என்றும், செந்நிறப் பூவுடையது செவ்வகத்தி என்று வழங்கப்படும்.
பயன்படும் உறுப்புகள்:
இலை, பூ, பட்டை, வேர்
சுவை: இலை முதலிய யாவும் சிறுகைப்பு
தன்மை: வெப்பம்
இலை: செய்கை:
நச்சரி, குளிர்ச்சியுண்டாக்கி, மலமிளக்கி, புழு அகற்றி
செயல்திறன் வேதிப்பொருள்கள்:
க்ராண்டிஃளோரல், ஆர்ஜினைன், சிஸ்டைன், ஹிஸ்டிடின், ஐசோலியுசின், ஃபினைல் அலனைன், வாலைன், த்ரியோனின் அலனைன், அஸ்பார்ஜீன் உள்ளன.
அஸ்பார்டிக் அமிலம் உள்ளது.
பொது குணம்: இதை அடிக்கடி புசிக்கக்கூடாது. வாரம் ஒரு முறை <உண்ணலாம். அதிகமாக உண்ண குருதி கேட்டை செய்து சொறி, சிரங்குகளை உண்டாக்கும். குருதி குறைந்து உடல் வெளுத்தல் உண்டாகும். அகத்திக்கீரை சாற்றை மூக்கில் பிழிய நான்காம் முறை காய்ச்சல் விலகும்.
அகத்திப்பூவின் குணம்:
அகத்திப் பூச்சாற்றை கண்ணில் பிழிய கண் நோய் போகும். பித்தம், உடல் சூடு தணியும்.
செவ்வகத்தி இலையின் குணம்:
செவ்வகத்திப் பன்னஞ் சிலேத்மமதை உண்டாக்கும் இது கபத்தை உண்டாக்கும்.
செவ்வகத்தி பூவின் குளம்:
மூக்கின் வழியாய் விழுகிற ரத்த போக்கை நிறுத்தும்.
மரப்பட்டை:
மரப்பட்டையை குடிநீரிட்டு குடிக்க அம்மை காய்ச்சல், நஞ்சு சுரங்கள் தீரும்.
வேர்ப்பட்டை:
இதன் செய்கை துவர்ப்பி, உரமாக்கி.
மேகம், நீர்வேட்கை, மெய்யெரிவு, கையெரிவு, ஆண்குறியினுள் எரிவு போக்கும்.
பயன்கள்:
மலர்கள் தலைவலிக்கு நல்ல மருந்து
மலர்சாறு சொட்டு மருந்தாக பயன்படும்
கபம் வெளியேற்றும்
இலைகளின் பற்று காயங்களுக்கு மருந்தாகும்
பட்டை துவர்ப்புடையது. சுரத்தை போக்கும்
இலை, தண்டுச்சாறு பெரியம்மைக்கு நன்மை தரும்
வேர் சாறுடன் தேனு கலந்து சாப்பிட கபம் வெளியேறும்
செவ்வகத்தி வேர்ப்பட்டை, ஊமத்தன்வேர் இவ்விரண்டையும் ஓர் அளவாக எடுத்து அரைத்து வாத வீக்கத்திற்கும், கீழ்வாயுக்களுக்கும் பற்றிட மூட்டு வலி நீங்கும்
வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்க வாரம் ஒரு முறை அகத்திக்கீரையை பருப்பு, சீரகம் சேர்த்து சமைத்துண்ண குடல் கிருமி நீங்கும். வாதம் நீங்கும்.
பீடீ, சிகரெட், சுருட்டு, உக்கா போன்றவற்றை பிடிப்பதால் ஏற்படுகின்ற விஷ சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும் சூட்டையும் நீக்கும். சித்த முறைபடி அகத்திக் கீரையை 30 நாட்களுக்கு ஒரு முறையே உண்ண வேண்டும். அமாவாசை நாளன்று உண்பது மிகவும் உகந்தது. வேறு மருந்துகளை உட்கொள்ளும் காலங்களில் இதனை தவிர்த்தல் மிக நலம். காரணம் உட்கொள்ளப்படும் மருந்தின் ஆற்றலை மிக மிக குறைத்துவிடும்.
தொகுப்பு: தேவராஜன்

17 . தொப்பை குறைக்கும் சுரைக்காய்!

சுரைக்காய் ஏழைகளின் காய் என்றே சொல்லலாம். இது கொடி வகை தாவரம். வீட்டின் தோட்டத்தில், வேலி ஓரத்தில், குப்பே மேட்டில் என எங்கும் வளரக்கூடியது. பராமரிக்கவேண்டிய அவசியமும் இல்லை. கிராமங்களில் எல்லார் வீட்டின் கூரைகளில் சுரை கொடி படர்ந்து, காய் காய்த்திருப்பதை இன்றும் காணலாம்.
பழுத்த சுரையின் கூடு வீணைக்கருவிக்கு முக்கிய பாகமாகவும், வீட்டு உபயோகத்துக்கு குடுவையாகவும் ஆதிகால மனிதர்களின் முக்கிய பாத்திரமாகவே சுரை இருந்துள்ளது.
சுரைக்காய் இந்தியா முழுவதும் பயிராகிறது. இதில் இருவகையுண்டு. ஒன்று இனிப்பு, மற்றொன்று கைப்பு. கைப்புக்கு காட்டுசுரை, பேய்ச்சுரை என்ற பெயர் உண்டு.
பயன்படும் உறுப்பு:
இலை, கொடி, காய், விதை
சுவை கைப்பு, தன்மை குளிர்ச்சி
செய்கை: காய், விதை:
குளிர்ச்சியுண்டாக்கி, சிறுநீர்ப்பெருக்கி, உடலுரமாக்கி, பித்தசமனி
பொது குணம்:
கொழுந்து, இலை: நீரிறக்கும். வீக்கம் போகும். சோவை, முப்பிணிகள் நீங்கும். கழியச் செய்யும்.
காய்:
உட்சூடு நீங்கும். சுவையின்மை, ஈரல்நோய், மார்பு நோய் உண்டாகும். எனவே இந்நோய் உள்ளோர் இதன் காயை தவிர்ப்பது நல்லது.
இலை, கொடி:
இலையால் வீக்கம் தீரும். நீர்க்கட்டு விலகும்.
கொடியால் வெறிநோய்கள் போகும்.
பயன்கள்:
இலையை குடிநீரிட்டு சர்க்கரை கலந்து காமாலை நோய்க்கு குடிக்கலாம்.
கொடியை குடிநீரிட்டு குடிக்க வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு விலகும்.
நீரேற்றம் என்னும் பைசாக தன்மை வாய்ந்த பிணிகளை ஒழிக்க சுரைக் கீரையை உள்ளிப் பூண்டு சேர்த்து சமைத்து ஒரு மண்டலம் புசித்துவரினும் அல்லது கொடியை மட்டும் குடி நீர் செய்து குடிக்கலாம்.
சுரைக்காயின் சதையை, வெப்பத்தினால் உண்டாகும் தலைவலிக்கு நெற்றியில் வைத்து கட்டலாம். கை, கால் எரிச்சல் தீரவும் கட்டலாம்.
இதன் சாற்றுடன் எண்ணைய் சேர்த்து காய்ச்சி கண்டமாலைக்கு போட குணமாகும்.
சுரைகொடி, நெருஞ்சி முள் சேர்த்து குடிநீரிட்டு குடிக்க கல்லடைப்பு நீர் எரிச்சல் நீங்கும்.
அதிக உடற்பருமன் உள்ளோர் வாரம் 3 முறை இதை உணவில் சேர்க்க உடல் மெலியும்.
பெருவயிறு நோய்க்கு சுரைகாயை தினமும் உண்ண நல்ல பலனை பெறலாம்.
உடலில் அதிகஅளவு நீர் ஏறி காணப்படுவர் சுரைகொடி, வெள்ளரிவிதை, நெருஞ்சில் முள், நெல்லிவற்றல் நான்கையும் பொடித்து ஒரு லிட்டர் நீரில் 10 கிராம் போட்டு 15 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு மாதம் அருந்த நீர் இறங்கி, உடல் மெலிந்து நல்ல சுறுசுறுப்புடன் காணப்படுவர்.

பொதுவாக சுரைக்காய் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இதனால் இதுஉடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீரைப் பெருக்குவதுடன், உடலை உரமாக்கும். மேலும் இதுவொரு சிறந்த மலச்சுத்தி காய் ஆகும். இது தண்ணீர் தாகத்தை அடக்க வல்லது.
கருஞ் சுரைக்காய் என்று ஒருவகை இருக்கிறது. அது குளுமை செய்வதுடன் தாகத்தை அடக்கும். அத்துடன் சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கி விடும்.
சுரைக்காய் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை உண்டாக்கும். இதனுடைய விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மையை இழந்தவர்கள் அதை மீண்டும் பெறுவார்கள்.
இயல்பாக சுரைக்காய் பித்த வாயுவை உண்டு பண்ணும் சக்தி உடையது. ஆகையால் அடிக்கடி சாப்பிடகூடாது.
தொகுப்பு: தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக