புதன், 4 ஆகஸ்ட், 2010

கதையை கேளு விடையை யோசி பாகம் 2 (21 32)

கதையை கேளு விடையை யோசி பாகம் 2 (21 32)

(தினமலர் சிறுவர் மலரில் வெளிவந்துக்கொண்டிருக்கும் என்னுடைய தொடர்)

21. " செம்மொழி மாநாடுக்காக ஸ்கூல் லீவுவிட்டாங்க. கோவையில் செம்மொழிமாநாடு எல்லாம் நடந்தது. தமிழ் மொழி தெரியும். அதென்ன செம்மொழி?'' என்று தாத்தாவிடம் சந்தேகம் கேட்டாள் சாயிபவித்ரா.
பேத்தியின் தலைவருடியவர் "" செம்மொழி என்றால் மிக பழமையான மொழின்னு அர்த்தம். நம் தமிழ்மொழி கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. அதனாலதான் முன்தோன்றி மூத்தமொழி தமிழ்ன்னு சொல்வாங்க'' என்றார் தாத்தா.
""ரொம்ப பழமையான மொழி எல்லாம் செம்மொழியா தாத்தா?'' என்றாள் திவ்யா.
"" அப்படியில்ல. பழமையுடன் அந்த மொழியின் இலக்கியம் கருத்து வளம் மிகுந்ததாகவும் அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்.'' என்றதாத்தாவிடம், "" தாத்தா கொஞ்சம் புரியும்படி சொல்றீங்களா?'' என்றாள் அனுஷா.
""ஒரு மொழியின் சிறப்பிற்கு முதல் அடையாளமாக இருப்பது அம்மொழியின் பழமை வாய்ந்தஇலக்கியங்கள்தான். அத்துடன்
அந்த மொழி சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகளான கட்டிடக்கலை, சிற்பக்கலை போன்றவை அந்த மொழியின் பழமையை உணர்த்தும் கலைச்சான்றுகளாக இருக்கவேண்டும். இவை எல்லாம் இருந்தால் மட்டுமே அது செம்மொழி என கருதப்படுகிறது'' என்றார் தாத்தா.
"" தமிழுக்கு செம்மொழி தகுதி தந்த பழமையான இலக்கியங்கள் எனென்ன தாத்தா?'' என்றாள் பிரியா.
"" தமிழின் செம்மொழி தகுதிக்கு சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்கணக்கு நுõல்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் போன்றவை உள்ளன.'' என்றார் தாத்தா.
"" வேறு என்ன மொழிகள் செம்மொழின்னு தகுதி பெற்றிருக்கிறது?'' என்று கேட்டான் மூர்த்தி.
"" உலகில் 8 மொழிகள் செம்மொழி தகுதி பெற்றிருக்கிறது. கிரேக்கம், சமஸ்கிருதம், லத்தீன், அரபு, எபிரேயம், தமிழ், சீன மொழியாகும்'' என்றார் தாத்தா
"" தமிழை செம்மொழின்னு அறிவிக்க ஏன் 100 வருஷமா போராடணும்?'' என்று கேட்டாள் திவ்யா.
"" கிரேக்கம், லத்தீன், சீனம் பாரசீகம் போன்ற மொழிகளைக்காட்டிலும் தமிழ் பழமையானதும் கருத்துவளமும் உடையதுதான். ஆனால் அவற்றிற்கு இருந்த சிறப்பு வாய்ந்த கட்டிடக்கலை சான்றாக உள்ளது. தமிழுக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பு தரையில் புதையுண்ட மொகஞ்சாதரா, ஹரப்பா கட்டிடக்கலைகள் ஆரிய கலையா, திராவிடக்கலையா? என்பதில் குழப்பம் நீடித்ததால் இப்படி ஒரு குழப்பம் வந்தது என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை வாசித்தீங்களா? இப்ப 2 கேள்விக்கு விடை யோசிக்கங்க.
1. செம்மொழி மாநாடு எங்கு நடைபெற்றது?
2. உலக செம் மொழிகள் எண்ணிக்கை எத்தனை?
விடை: 1.கோவை 2. 8



22 . ""தாத்தா வீட்டில் இருக்க போரடிக்குது. எங்கேயாவது கூட்டிட்டு போறீங்களா?'' என்றாள் சாயிபவித்ரா.
"" சரி, கிளம்புங்க நம்ம தோப்புக்குப் போகலாம்.'' தாத்தா சொன்னதும் பேரப்பிள்ளைகள் "ஹை ஜாலி!' என்று சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர்.
தாத்தா வயக்காட்டுப்பக்கம் இருக்கும் தோப்புக்குப் பேரப்பிள்ளைகளை அழைத்துச் சென்றார்.
"" ஆஹா! என்ன ஜில்லுன்னு காற்று! எங்கு பார்த்தாலும் பச்சைபசேள்ன்னு இருக்கே!'' என்று அனுஷா வியக்க.
"" ஏ, திவ்வா! அங்க பாரு அந்த மரத்தில் குயில்!'' ஆச்சரியத்தில் குரல்கொடுத்தான் மூர்த்தி.
""மரம்னா என்ன? அது எப்படி வளருது?'' என்று கேட்டாள் பிரியா.
மரம் என்பது அளவிற் பெரிய பல்லாண்டுத் தாவரம் . இது நிலத்தில் ஒரு விதையிலிருந்து தோன்றி, இடம்விட்டு தானே நகராது, நிலைத்து வளரக்கூடிய ஒரு நிலைத்திணை வகை.
பொதுவாக முதிர்ந்த நிலையில் 4.5 மீட்டர் உயரமிருக்கும். ஒருமரத்தின் கிளைகள்,இலைகள், பூக்கள் நிலத்தோற்றத்திற்கு அழகை தரக்கூடியது. '' என்றார் தாத்தா.
""கல் மரம்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன?'' என்று அருண் கேட்டான்.
"" மரங்கள் நீண்டகாலம் வாழக்கூடியவை. சில வகை மரங்கள் 100 மீட்டர் வரை உயரம் வரை வளரக்கூடியவை. சில ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலும் வாழக்கூடியவை. அபூர்வமாக சில மரங்கள் பல்லாண்டுகள் இருந்து காலபோக்கில் கல்லாகிப்போவதுண்டு. அதைதான் கல் மரம்ன்னு சொல்றாங்க.'' என்றார் தாத்தா.
"" மரத்துக்கு இலைகள், கிளைகள், வேர்கள் எதுக்கு இருக்கு?'' என்றாள் சாயிபவித்ரா.
""சிறுகிளைகள், இலைகள் என்பவை மரத்தின் பகுதி. மரத்தண்டு, தாங்குவதற்கும், நீர் உணவு முதலியவற்றை கடத்துவதற்கும் உதவும். இதில் மரம் வளரும்போது ஆண்டு வளையங்கள் உருவாகுகின்றது. இந்த வளையங்களை எண்ணுவதன் மூலம் மரத்தின் வயதைக்கணிக்க முடியும். மரத்தின் வேர்கள் நிலத்தடியிலேயே காணப்படும். இவை மரம் நிலத்தைப் பற்றி பிடித்துக்கொள்ள உதவுவதுடன் மண்ணிலிருந்து நீர் மற்றும் போஷாக்குகளை உறிஞ்சவும் பயன்படுகிறது.'' என்றார் தாத்தா.
""மரம் பத்தி வேறு எதாவது செய்தியிருக்கா தாத்தா?''
"" பனை, தென்னை, பாக்கு போன்ற மரங்களுக்கு கிளைகள் கிடையாது.
வாழை, மூங்கில் மரம் என்றாலும் அது தாவர இனம். சில மரம் பூப்பதில்லை. சிலமரம் காய்ப்பதில்லை. சில மரம் கிளைகளை வெட்டி ஊன்றினால் வளரக்கூடியது'' என்றார் தாத்தா.
"" தோப்புக்கும் காடுக்கும் என்ன வித்தியாசம்?'' என்றாள் திவ்யா.
ஒன்றாக வளரும் சிறு கூட்டம் மரங்கள் தோப்பு. பெரியதொரு நிலப்பரப்பில் மரங்கள் அடர்ந்திருக்கும் போது அது காடு'' என்று சொல்லி முடித்தார் தாத்தா.
குட்டீஸ் கதை வாசித்தாச்சு. இப்ப கேட்கிற கேள்விக்கு பதில் கண்டுபிடிக்கலாமா?
1. கிளை இல்லாத மரங்கள் எவை?
2. மரம் என்ற தாவரம் எது?
விடை:1. பனை, தென்னை, பாக்கு மரம் 2. வாழை, மூங்கில்


23. கும்பகோணம் சென்றுவந்த தாத்தா, விசிறி வாங்கிவந்தார். அந்த விசிறி கலை நயத்துடன் அழகாக இருந்தது.
"" தாத்தா, இந்த விசிறி ரொம்ப அழகா இருக்கே?'' என்றாள் சாயிபவித்ரா.
"" மதுரைன்னா மல்லி. நெல்லைன்னா அல்வா. திருப்பாச்சின்னா அருவா மாதிரி திருபனந்தாள் என்றால் விசிறிக்கு பிரசித்தி. இதை திருபனந்தாள் விசிறின்னு சொல்வாங்க.'' என்றார் தாத்தா.
"" இதன் விலை என்ன?'' என்று கேட்டாள் அனுஷா.
"" அந்தக்காலத்துல நாலணா, எட்டணாவுக்கு வாங்கலாம். இப்ப இருக்கிற விலைவாசியில ஒரு விசிறி 5 ரூபாய் ஆயிட்டு'' என்றார் தாத்தா.
"" நாலணா, எட்டணாவா அப்படின்னா என்ன?'' புரியாமல் கேட்டான் மூர்த்தி.
"" எங்க காலத்துல அதாவது 1957 க்கு முன்பு 192 காசு ஒரு ரூபாய்ன்னு இருந்தது. அப்ப இருந்த வழக்குபடி அரையணா, 1 அணா. 2 அணா, 4 அணா, 8 அணா, 12 அணா, 16 அணான்னு சொல்வாங்க. 16 அணா ஒரு ரூபாய். ஒரு அணா= 6பைசா. 1 பைசா = 3 காசு. இப்ப 100 பைசா 1 ரூபாய்.'' என்றார் தாத்தா.
"" அணா பழக்கம் ஏன் போச்சு? பைசா பழக்கம் எப்ப வந்தது?'' ஆர்வமாய் கேட்டாய் திவ்யா.
""ஏப்ரல் 1,1957ல் எல்லா அளவீடுகளும் டெசிமலிசேசன் ஆக்கினாங்க. அதன்படி ஒரு ரூபாயை 100 நயா பைசாவா பிரிச்சாங்க. இதில் நயா போய் 1967க்கு பின் பைசா மட்டும் பெயராச்சு.'' என்றார் தாத்தா.
"" ரூபாய் நோட்டு அப்ப இல்லையா?'' என்று கேட்டாள் பிரியா.
""முதல்ல ரூபாய் நோட்டு பேங்க் ஆப் பெங்கால்தான் பிரிண்ட் பண்ணாங்க. ஒருபக்கம் மட்டும் அச்சிடப்பட்ட 100, 250, 500 ரூபாய் நோட்டுகள்வெளிவந்தது.
1867ல் பிரிட்டீஷ் இந்தியாவின் 5,10,20,50, 100, 500, 1000, 10,000 ரூபாய் நோட்டுகள் பிரிண்ட் பண்ணாங்க.அந்த நோட்டுகளில் விக்டோரியா ராணி படம் இருந்தது.
கல்கத்தாவில் 1935 ஏப்ரல்1ல் ரிசர்வ் பேங்க ஆப் இண்டியா ஆரம்பிக்கப்பட்டது. இது முதல்முதலாக 5 ரூபாய் அச்சிட்டது. ஜார்ஜ் 6 படத்துடன் 1938 ல் 10, 100, 1000,1000,10000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 1940களில் செகண்ட் கவர்னர் சர் ஜேம்ஸ் டைலர் கையெழுத்திட்டப்பட்ட நோட்டுகள் வெளிவந்தது.
குடியரசு இந்தியாவில் 1949ல் மகாத்மா காந்தி படமும் அசோக முத்திரையும் கவர்னர் கையெழுத்திடப்பட்டு வெளிவந்தது. 16இந்திய மொழிகள் நோட்டுகளில் அச்சடிக்கப்பட்டிருந்தன.'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை வாசித்தாச்சு. 2 கேள்விக்கு விடை என்ன யோசிக்கிறீங்களா?
1. இப்ப 8அணா மதிப்புஎன்ன?
2. ரூபாய் நோட்டில் எத்தனை இந்திய மொழிகள் இடம் பெற்றுள்ளன?
விடை : 1. 50 பைசா 2. 16

24 . மாலைப்பொழுதில் பேரப்பிள்ளைகளை நஞ்சை, புஞ்சை வயல் வெளிக்கு அழைத்து வந்தார் தாத்தா. பார்க்கும் துõரம் வரை பசுமையாக இருந்தது.
""தாத்தா தமிழரின் பாரம்பரிய தொழில் விவசாயம் தானே! எதுக்கு இந்த தொழிலைவிட்டு எல்லாரும் நகரத்திற்கு போறாங்க?'' என்று ஆரம்பித்தான் மூர்த்தி.
"" பாருக்கெல்லாம் பசிபோக்கும் தொழில் விவசாயம். இந்தக்காலத்து இளைஞர்கள் படிச்சு பட்டமெல்லாம் வாங்கிட்டதாலும், சரியாக காவிரி தண்ணீர் வரத்து இல்லாததாலும், விவசாயத்தை விட்டுட்டு வேற தொழிலுக்கு போயிடறாங்க'' என்றார் வருத்தமுடன் தாத்தா.
""தமிழர் நாகரீகம் பற்றி சொல்லுங்க தாத்தா'' என்றாள் திவ்யா.
""தமிழர் நாகரீகம் மிக பழமையானது. அது லெமூரியா கண்டத்தில் தொடங்கி, பின்னர் வடக்கு நோக்கி கபாடபுரத்தில் இடைச்சங்கத் தொல்காப்பியமாக வளர்ந்தது. கி.மு. 2 ஆயிரத்தில் மீண்டும் கடல்கொண்டதால் வடக்கு நோக்கி மதுரைவரை வளர்ந்தது. இப்படி வழிவழியாக வந்த தமிழர்கள் 7 கோடிக்கும் மேல் தமிழகத்திலும், ஈழத்திலும் என 75 நாடுகளில் வாழ்கிறார்கள்'' என்றார் தாத்தா.
""தமிழரின் பண்பாடு கலாசாரம் எது தாத்தா?'' என்றாள் அனுஷா.
"" 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே "எல்லா ஊரும் எனது ஊரே; எல்லாரும் எனது <உறவினர்' என்பது தமிழன் பண்பாடு என்று பாடிவைத்திருக்கிறார்கள். வீரமும் காதலும் அதாவது அகம் புறம் என்று கொள்கையில் தமிழர்கள் வாழ்ந்திருக்காங்க.'' என்றார் தாத்தா.
""தமிழருக்குன்னு நடனம் , இசை, கலை, சமயம் எல்லாம் இருக்கா தாத்தா?'' என்றாள் சாயிபவித்ரா.
"" சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட கூத்துதான் தமிழரின் பாரம்பரிய நடனம். சிலம்பிலும், தொல்காப்பியத்திலும் கூறப்பட்டுள்ள தமிழ் மரபிசை, இலக்கணங்கள் தான் தமிழிசை. இறைவனை உருவகப்படுத்தும் தமிழ்கலைஞனின் சிவ நடராச வடிவம்தான் கலை. திருக்குறள் காட்டும் உள்ளிருக்கும் இறைமையை, உள்ளொளியை உணர செய்யும் அனைத்து வழிபாடு முறைகளும் தமிழரின் சமயம்'' என்றார் தாத்தா.
""தமிழரின் நுõல் எது?'' என்று கேட்டாள் பிரியா.
"" கி.மு. 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே எழுதப்பட்ட தமிழரது வாழ்வுக்கும் மொழிக்கும் ஒருங்கே இலக்கணம் தந்த தொல்காப்பியமும், திருக்குறளும்தான் நமக்கான நுõல்'' என்றதும், "" நல்ல விஷயங்கள் எல்லாம் எங்களுக்கு சொல்லியிருக்கீங்க. நன்றி தாத்தா'' என்று அருணுடன் சேர்ந்து குரல்கொடுத்த பேரப்பிள்ளைகளை ஆசையாக அனைத்துக்கொண்டார் தாத்தா.
குட்டீஸ் கதை படிச்சாச்சு. 2 கேள்விகளுக்கு விடையை யோசிக்கலாமா?
1. தமிழ் நாகரீகம் தொடங்கிய முதல் இடம் எது?
2. தமிழரின் பழந்தமிழ் நுõல்கள் எது?
விடை: 1. லெமூரியா கண்டம் 2. தொல்காப்பியம், திருக்குறள்.

25 . தன் பேரக்குழந்தைகளிடம் அந்தக்காலத்தில் இருந்த கல்வி முறையை விளக்கிக்கொண்டிருந்தார் தாத்தா.
"" நாங்க எல்லாம் திண்ணை பள்ளிக்கூடத்தில் தான் படிச்சோம். முதல்ல படிக்க சேரும் போது தரையில் நெல் பரப்பி அதில் கையைப் பிடித்து "அ' எழுதவைச்சு சொல்லிக்கொடுக்க ஆரம்பிப்பார் உபாத்தியார்.உங்களை போல நோட்டு, பேனா எல்லாம் பயன்படுத்தியதில்லை.'' என்றார் தாத்தா.
"" அந்தக்காலத்தில் பள்ளிக்கூடம் கிடையாதா தாத்தா?'' என்று கேட்டாள் சாயிபவித்தரா. பக்கத்தில் இருந்த அனுஷா, "" குருகுலக்கல்வின்னா என்ன?'' என்றாள்.
"" அந்தக்காலத்தில் பள்ளிகூடம் அதிகம் கிடையாது. குருகுலகல்வியில் கல்வி போதிக்கும் குருவின் வீட்டிலேயே படிப்பவர் தங்கி சகல கலைகளையும் கற்றுக்கொள்வதாகும்.'' என்றார் தாத்தா.
""தமிழகத்தில் முதல் முதலா எங்கே பள்ளிக்கூடம் ஆரம்பிச்சாங்க தாத்தா?'' என்று கேட்டாள் திவ்யா.
"" நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் தான் 1707ல் முதல் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது.'' என்றபோது முந்திரிக்கொட்டையாய் மூர்த்தி, "" அந்தப் பள்ளிக்கூடத்தில் என்ன சொல்லிக்கொடுத்தாங்க?'' என்றான்.
"" தமிழ், கணிதம், சமயப்பாடங்கள் சொல்லிக்கொடுத்தாங்க. 500க்கு மேல் மாணவர்கள் படித்தாங்க. அப்போதே பெண்களுக்கான தனி பள்ளிக்கூடமும் தொடங்கப்பட்டது. அதில் பாடத்துடன் தையற்கல்வியும் போதிக்கப்பட்டது.'' என்றார் தாத்தா.
"" இந்த பள்ளிக்கூடத்தை யார் தாத்தா ஆரம்பிச்சது?'' என்று கேட்டாள் பிரியா.
"" டென்மார்க் மன்னன் 4ம் பிரடெரிக்கு டேனியலுக்கு சொந்தமான தரங்கம்பாடி மக்களுக்கு சீர்திருத்த கிருஷ்தவ சமயத்தை அறிமுகப்படுத்த ஆசை. அதற்காக ஜெர்மனி ஹலே பல்கலைகழக மாணவர்களான சீசன்பால்க், புளூசோவை 1706ல் ஜெர்மன் செலவில் தரங்கம்பாடிக்கு அனுப்பி வைத்தார். அவர்கள்தான் அந்தப் பள்ளிக்கூடத்தை தொடங்கினார்கள்.'' என்றார் தாத்தா.
"" டேனியல் கோட்டை பற்றி சொல்லேன்?'' என்று கெஞ்சினான் அருண்.
""இந்தியாவுக்கு வணிகம் செய்யவந்த டேனியர்கள் 1620ல் தஞ்சை மன்னன் ரகுநாத நாயக்கரிடம் ஆண்டுக்கு 3111 ரூபாய்க்கு தரங்கம் பாடியை குத்தகைக்கு எடுத்தனர். பொறையார் உட்பட 16 கிராமங்கள் சேர்ந்த தரங்கம்பாடி 1624க்குபின் டேனியலுக்கே சொந்தமானது. அப்போது அவன் கட்டிய கோட்டைதான் டேனியல் கோட்டைன்னு சொல்றோம்'' என்றார்.
டியர் குட்டீஸ் கதை படித்தீர்களா? இப்ப கேட்கிற 2 கேள்விக்கு பதில் சொல்றீங்களா?
1. முதல் பள்ளிக்கூடம் எங்கு தொடங்கப்பட்டது?
2. தரங்கம்பாடியை குத்தகைக்கு எடுத்தவர் யார்?
பதில்: 1. தரங்கம்பாடி 2. டேனியல்


26 . இருள் வந்துவிட்டதால் பேரப்பிள்ளைகளை தோப்பில் இருந்து வீட்டுக்குக்கிளம்பச் சொன்னார் தாத்தா.
தோப்புக்கு வெளியே மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அதை விரட்டுவதற்கு கீழே கிடந்த குச்சியைக்காட்டி, "" மூர்த்தி, அந்த கம்பை எடுத்து வா. மாடு விரட்டலாம்'' என்றார் தாத்தா.
"" தாத்தா, நகரத்தில் இதை கொம்புன்னு சொல்றாங்க. நீங்க கம்புன்னு சொல்றீங்களே. இதுக்கு பெயர் கம்பா, கொம்பா?'' என்றான் மூர்த்தி.
"" இதை கொம்பு என்றால் மாட்டுக்கு இருக்கும் கொம்பை எப்படி சொல்வதாம்? சில பொருள்களுக்கு வட்டார வழக்குபடி வேறு பெயர் இருக்கும். இங்கே இதை கம்புன்னு சொல்றாங்க. அதே போல மாட்டுத்தீவனமான ஒன்றையும் கம்புன்னு தான் சொல்றாங்க'' என்றார் தாத்தா.
"" அப்ப ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்குதா தாத்தா?'' என்றாள் அனுஷா.
"" ஆமாம். இப்ப இருக்கிற பல பொருள்களின் உண்மையான தமிழ் பெயர் வழக்கொழிந்து விட்டது.'' என்றார் தாத்தா.
"" பெயர்கள் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்க தாத்தா'' என்று அடம்பிடித்தாள் சாயிபவித்ரா.
"" இப்ப நாம் தோப்பில் நிறைய மரங்கள், கொடிகள், செடிகள், பயிர்கள் எல்லாம் பார்த்தோம்தானே! பொதுவாக மரம், செடி, கொடி, பூண்டுகளின் இலைகள் எல்லாம் இலைகள் என்றே சொல்லக்கூடாது. அததுக்கு ஒரு பெயர் இருக்கு'' என்றார் தாத்தா.
"" அப்படியா? அது என்னென்ன?'' என்றாள் திவ்யா.
""அத்தி, மா, பலா, வாழை, ஆல், அரசு, வேம்பு, பூவரசு இன்னம்பல மரங்களில் இருக்கும் இலைகளுக்கு மட்டும்தான் இலை என்று பெயர். அதே சமயம் அகத்தி, பசலை, வல்லாரை, முருங்கை போன்றவற்றின் இலைகளை இலை என்று சொல்லக்கூடாது. அதற்கு பெயர் கீரை. மண்ணில் படருகின்ற கொடிவகைகளில் இருக்கும் இலைகளுக்கு பூண்டு என்று பெயர். அருகு, கோரை முதலியவற்றின் இலைகளுக்கு புல் என்று பெயர். மலையில் விளைகின்ற உசிலை, சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்கு பெயர் மடல். கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகளுக்கு தோகை என்று பெயர். தென்னை, பாக்கு, பனை முதலியவற்றின் இலைகள் ஓலைகள் என்று சொல்லப்படுகின்றன.'' என்றார் தாத்தா.
"" ஏன் தாத்தா எல்லாத்தையுமே பொதுவா இலை சொல்லிட வேண்டியதுதானே! மாவிலை, முருங்கையிலை, சப்பாத்தி இலை, தென்னை இலைன்னு இனத்தோட பெயர் சொல்லிட்டா ஈஸியாக இருக்குமே!'' என்றாள் பிரியா.
"" உங்க காலத்தில் அப்படிதான் ஆகப்போகுதோ என்னவோ?'' என்று சிரித்தார் தாத்தா.
"" நம் மூதாதையர்கள் ஒவ்வொன்னும்க்கும் ஒரு பெயர் வைத்திருப்பது ரொம்ப ஆச்சரியமா இருக்கு'' என்றார் அருண்.
"" அது நம் தமிழின் பெருமை!'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை படிச்சாச்சு. இப்ப 2 கேள்விக்கு விடை தேடலாமா?
1. எந்த தாவரத்தின் இலைக்கு தோகை என்று பெயர்?
2. எந்தமரங்களின் இலைக்கு ஓலை என்று பெயர்?
விடை: 1. கரும்பு, நாணல் 2. தென்னை, பனை, பாக்கு


27 . இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பூஜைக்கு வேண்டிய பூ வாங்க, பூ கொண்டு வந்த பெண்மணியிடம் பாட்டி மூணு முழம் பூ கொடு என்று கேட்டார்.
இதை கவனித்த அனுஷா, "" பாட்டி முழம்ன்னா என்ன?'' என்று கேட்டாள்.
பூவை வாங்கிய பாட்டி, "" இது பழைய கணக்கு முறை. இப்ப நீங்க மீட்டர்ல சொல்றதை அப்ப நாங்க அங்குலம், சாண், முழம், அடின்னு சொல்லுவோம்'' என்றார் பாட்டி.
"" மில்லி மீட்டர், சென்டி மீட்டர், மீட்டர், கிலோ மீட்டர்ன்னு இப்ப சொல்றோம். உங்க காலத்துல எப்படி அளவு இருந்தது?'' என்றாள் சாயிபவித்ரா.
"" 12 பெருவிரல் ஒரு சாண். 2 சாண் ஒரு முழம். 3 முழம் ஒரு அடின்னும் கோல், காதம், பர்லாங், மைல்ன்னு நீள அளவு கணக்கீடுவோம்'' என்றார் பாட்டி.
"" முகத்தல் அளவை எப்படி சொல்வீங்க?'' என்று கேட்டாள் திவ்யா.
"" நீர்மப்பொருளுக்கு சேர் கணக்கு. கால் சேர், அரை சேர்ன்னு சொல்லுவோம் ஒரு சேர்ன்னா இப்ப 750 மில்லி. தானியப் பொருளுக்கு சுண்டு,கால் படி, அரைபடி, படி, மரக்கால், கலம், மூட்டைன்னு சொல்றது வழக்கம்'' என்றார் பாட்டி.
"" எடையை எப்படி சொல்வீங்க?'' என்று கேட்டான் மூர்த்தி.
"" தங்கம் போன்ற மதிப்பான பொருள்களுக்கு குன்றிமணி, மஞ்சாடி, பணவெடை, கழஞ்சு, வராகனெடை சொல்றது வழக்கம். பண்டமாக இருந்தா வீசை,துõலம், மணங்கு, பாரம்ன்னு சொல்லுவோம். சிலர் பவுண்டு கணக்கிலும் சொல்லுவாங்க.'' என்றார் பாட்டி.
"" எப்பப்பா தமிழில் இவ்வளவு பழயை முறைகள் எல்லாம் இருக்கா? ஆச்சரியமா இருக்கே?'' என்றாள் பிரியா.
"" தமிழர் கண்டுபிடிக்காத விஷயங்களே இல்லை... நீங்க அதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு இப்ப மாடர்ன் முறைக்கு வந்துட்டீங்க'' என்றார் பாட்டி.
"" பாட்டி இப்ப துõரத்தை கி.மீட்டர்ல சொல்றோம் அப்ப நீங்க எப்படி சொன்னீங்க?'' என்றாள் சாயிபவித்ரா.
"" காதம், கல், பர்லாங், மைல்ன்னு சொல்லுவோம். ஒரு மைல் என்பது முக்கால் கிலோ மீட்டர்'' என்றார் பாட்டி.
"" பாட்டி, 1,2,3... எண்ணில் எழுதுறோமே, தமிழில் அதற்குண்டான எழுத்து இருக்கா?'' என்றாள் திவ்யா.
"" இல்லாமலா, என்ன?'' என்று சொல்லிய பாட்டி, 1,2,3க்குரிய எழுத்துக்களை எழுதிகாட்டினார். அதுமட்டுமல்லாமல் நாள், தேதி, ஆண்டுக்குரிய எழுத்துக்களையும் எழுதி காட்டினார்.
அந்தக்காலத்து பழைய முறைகளை எல்லாம் பாட்டியிடம் கேட்டு தெரிந்துக்கொண்ட பேரப்பிள்ளைகள் வியந்து போனார்கள்.
சரி, கதையை கேட்டீங்க. இதிலிருந்து 2 கேள்விக்கு பதில் சொல்றீங்களா குட்டீஸ்?
1. படி, மரக்கால் அளவை எதை அளவீட பயன்படுகிறது?
2. க, உ, ரு, எ ஆகிய எழுத்துக்கள் குறிக்கும் எண் எவை?
விடை: 1.தானியப் பொருள்களை அளக்க பயன்பட்ட அளவீடு
2. 1, 2, 5, 7.



28 . தாத்தாவுடன் பேரப்பிள்ளைகள் பூம்புகார் சென்றனர். மாலை வேளை கடல்கரையில் அமர்ந்து காற்று வாங்கிக்கொண்டிருந்தனர்.
""தாத்தா, எங்க தமிழாசிரியர் ஐந்திணைகள் பற்றி சொல்லித்தந்தபோது நெய்தல் பற்றி சொன்னார். கடலும் கடல்சார்ந்த இடம் நெய்தல் என்றார். அப்படின்னா நாம் இப்ப இருப்பது நெய்தல் நிலத்தில் தானே!'' என்று சந்தேகம் கேட்க ஆரம்பித்தாள் சாயிபவித்ரா.
"" பழந்தமிழர் அவர்கள் வசித்தப் பகுதியின் இயற்கை வளத்தை வைத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ,பாலை என்று பெயரிட்டனர். அதன்படி பார்த்தா இப்ப நாம இருப்பது நெய்தல் நிலம்தான்'' என்றார் தாத்தா.
"" கடல் என்றால் என்ன தாத்தா?'' என்றான் மூர்த்தி.
""கடல் என்பது உப்பு நீர் நிரம்பிய மிகப்பெரிய அல்லது பரந்த நீர்நிலை. பொதுவாக கடலானது பெருங்கடலுடன் இணைந்தோ அல்லது தனித்த நீர்நிலையாகவோ இருக்கலாம்.'' என்று தாத்தா சொல்லி முடிக்கும் முன்பாக,
"" ஏன் தாத்தா கடல் நிலம் என்று சொல்லாம நெய்தல் நிலம்ன்னு சொல்றாங்க?'' என்றாள் அனுஷா.
"" நெய்தல் என்பதும் கடலைக்குறிக்கிற பெயர்தான். தமிழ்கழக அகராதியில கடலைக்குறிக்கும் நாற்பது பெயர்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் எந்தப் பெயர் சொன்னாலும் கடல் என்றுதான் அர்த்தம்'' என்றார் தாத்தா.
""கடலுக்கு சொல்லப்படும் அந்த நாற்பது பெயர்கள் எனென்ன தாத்தா?'' என்றாள் பிரியா.
"" சொல்றேன் கேட்டுக்குங்க. அவை,அப்பு, அரலை, அழுவம், ஆழி, அளக்கர், ஆர்கழி, ஆழி, சலதி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தென்னீர், தோயம், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணரி, பெருங்குழி, பெருநீர், மழு, முந்நீர், வரி, வாரி, வாரிதி, வலயம், வீரை, வெண்டிரை, வேலை, அளம், கடல், கார்மலி, மாறாநீர், வாலாவலையம்'' என்று நிதானமாக தாத்தா சொல்லி முடித்தார்.
""தாத்தா, இந்த உலகத்தில் எத்தனை கடல்கள் இருக்கு?'' என்றான் அருண்.
"" நிறைய இருக்கு. குறிப்பாக அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், தென்னகப் பெருங்கடல், நிலம் சூழ் கடல்கள் என்று பல இருக்கு.
இந்தியப் பெருங்கடலில் செங்கடல், ஏடென் குடா, பாரசீக வளைகுடா, ஓமான் வளைகுடா,, அரபிக்கடல், வங்காள விரிகுடா, அந்தமான் கடல், தீமோர் கடல் இருப்பது போல ஒவ்வொரு பெருங்கடலில் பல கடல்கள் சங்கமிக்கின்றன.'' என்றார் தாத்தா.
குட்டீஸ் இந்த கதையில் இருந்து 2 கேள்வி. பதில் சொல்ல நீங்க ரெடியா?
1. ஐந்துவகை நிலம் எவை?
2. தாத்தா கடலுக்கு எத்தனை பெயர் இருப்பதாக கூறினார்?
விடை: 1.குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. 2. 40 பெயர்கள்


29. காலையில் வீட்டின் முற்றத்தில் தன் பேரப்பிள்ளைகள் தெளித்த தானியங்களை குருவிகள் கொத்தித் தின்பதை ரசித்தார் தாத்தா.
""தாத்தா குள்ளமா, உயரமா நாம இருப்பது போல பறவைகளிலும் பெரிசு, சின்னதுன்னு இருக்கா?'' என்றாள் சாயிபவித்ரா.
"" 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையுள்ள சிறிய பறவையான ஒருவகை தாரிச்சிட்டு (ஹம்மிங் பறவை)களிலிருந்து 9 அடி உயரமும் 156 கிலோ எடையுள்ள பறக்காத பெரிய தீக்கோழி மற்றும் ஈமியூ வரை பறவைகள் உள்ளன. அதிக எடையுள்ள பறக்கும் பறவையான கானல் மயில் 18 கிலோ வரை பெருக்கும்.'' என்றார் தாத்தா.
"" ரொம்ப உயரத்தில் பறக்கும் பறவை எது தாத்தா?'' கேட்டாள் அனுஷா.
"" வல்லுõறு இனத்தைச் சேர்ந்த பறவைகள் மிக உயரத்தில் பறக்கக்கூடியவை. சில பறவைகள் மணிக்கு 160 கி.மீ வேகத்தில்பறக்கும் . நிலம், நீர், வானம் இவற்றில் விரைந்து நகரக்கூடியது அலையும் வல்லுõறு. சில பறவைகள் நெடுந்தொலைவு 17 ஆயிரம் கி.மீ வரை செல்லவல்லது.'' என்றார் தாத்தா.
""பறக்காத பறவைகள் இருக்கா தாத்தா?'' என்று கேட்டாள் திவ்யா.
"" பறக்க முடியாத பறவைகள் பென்குயின்கள், தீக்கோழிகள், கிவிகள்'' என்றார் தாத்தா.
"" பறவைக்கு சிறகு வளர்ந்து கிட்டே இருக்குமா?'' என்றான் மூர்த்தி.
"" நமது தலைமுடி, விரல் நகம் ஆகியவற்றில் உள்ள அதே கெரோட்டின் பறவை சிறகில் இருக்கு. நமது தலைமுடி, நகங்களைப் போல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகாமல் ஓர் அளவுடன் நின்றுவிடும். வளர்ந்த பறவைகள் வருடம் ஒரு முறையாவது சிறகுகளை உதிர்த்து புதுப்பித்துக்கொள்ளும்.'' என்றார் தாத்தா.
"" பறவைக்கு பார்வை கூர்மையானதாமே?'' என்றாள் பிரியா.
"" ஆமாம். இன்னொரு விஷயம் தெரிஞ்சுக்க. பறவையின் ஒரு கண்ணுக்கு மூன்று இமைகள் இருக்கும். மேல் இமை நம் கண் இமை போன்றது. கீழ் இமை துõங்குபோது மட்டும் மூடிக்கொள்ளும். இது தவிர பக்கவாட்டில் அலகின் அருகிலிருந்து துவங்கும் ஒரு மெலிதான தோல் உண்டு இது ஒளி ஊடுருவக்கூடிய தோல், கண்களை ஈரப்படுத்தவும், காற்று, அதிக வெளிச்சத்திலிருந்து காக்கவும் உதவுகிறது.'' என்றார் தாத்தா.
"" பறவைகள் உணவு பற்றி சொல்லேன் தாத்தா'' என்றாள் திவ்யா.
""பறவைகளில் சைவமும் அசைவமும் உண்டு. காக்கை இரண்டையும் தின்கின்றன.'' என்றதும், அருண் கேட்டான்: "" பறவைகள் ஏன் நாடு விட்டு நாடு இடப்பெயர்ச்சி செய்கிறது?'' என்றான்.
உணவுத் தேவைகளுக்கும் மிக வெப்பம்,குளிர் கால நிலைகளை தவிர்ப்பதற்கும் பறவைகள் வருடாந்திர இடப்பயர்ச்சி செய்கின்றன. இதற்காக கடல் பறவைகள் 32 ஆயிரம் கி.மீ வரை பறக்கின்றன.'' என்றார்.
கதை கேட்ட குட்டீஸ், இப்ப 2 கேள்விக்கு பதில் தேடுறீங்களா?
1. பறவைக்கு எத்தனை இமைகள் உண்டு?
2. சைவம், அசைவம் உண்ணும் பறவை எது?
பதில்: 1. மூன்று 2. காக்கை

30 . வரலாற்று பெருமைகளையும், பழந்தமிழகத்தின் கலை பொக்கிஷத்தை அறிந்து கொள்ள பேரப்பிள்ளைகளை சித்தனவாசல் அழைத்து வந்தார் தாத்தா.
""பெயரே வித்தியாசமாக இருக்கே! சித்தனவாசல்ன்னு பெயர் எப்படி வந்தது தாத்தா?'' என்றாள் அனுஷா.
""உலகப்புகழ் குகை ஓவியங்களை உடையது சித்தனவாசல். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்த ஊர் அன்னவாயிலுக்கு அடுத்த சிற்றுõராக இருந்ததாலும், சித்தர்கள் வாழ்ந்து வந்ததாலும் சித்தர் அன்னவாயில்லானது மறுவி சித்தன்ன வாசல் என தற்போது அழைக்கப்படுகிறது.'' என்று விளக்கினார் தாத்தா.
"" இந்த ஊருக்கு அப்படி என்ன சிறப்பு?'' என்றாள் சாயிபவித்ரா.
""இந்த ஊரில் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறைகள், முதுமக்கள் தாழிகள், கிமு 2ம் நுõற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டு, ஓவியங்கள் தீட்டப்பட்ட குகைக்கோயில் இந்த ஊருக்கு சிறப்பு'' என்றவர் பேரப்பிள்ளைகளை அழைத்துக் கொண்டு குகை கோயிலுக்கு வந்தார். ""அதோ தெரியுதே அதுதான் ஏழடிப்பட்டம் குகை.'' என்று காட்டினார் தாத்தா.
"" ஏழடிப்பட்டம்ன்னா என்ன?'' என்று கேட்டாள் திவ்யா.
"" ஆரவார உலகை வெறுத்து அமைதியை நாடிய சமணர்கள் குகை வாயிலில் உள்ள ஏழு படிக்கட்டுகளை கடந்து குகைக்கு நுழைவதால் இந்த இடம் ஏழடிபட்டம் என்றும், உலக வாழ்வைத் துறந்து 7 விதமான ஆன்மிக உறுதிகளை மேற்கொண்டு உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த சமண முனிவர்கள் வாழ்ந்த இடம் என்றும் சொல்லப்படுவதுண்டு.'' என்ற தாத்தா முகப்பு மண்டபத்தைக்காட்டி, "" நல்ல பாருங்க
இது சமண ஆசிரியரின் சிற்பம், அது 23 சமண தீர்த்தங்கரர், பார்சுவநாதர் சிற்பங்கள் '' என்றார்.
"" இந்த குகை ஓவியங்கள் எப்படி தீட்டினாங்க ?'' என்றாள் ப்ரியா.
""கருங்கல் பரப்பை சமப்படுத்தி, சுண்ணாம்பு சாந்து பூசி, அதன் மீது வெண்சுண்ணாம்பு பூச்சிட்டு வழுவழுப்பாக தேய்த்து அப்பரப்பில் ஓவியங்களும் வண்ணங்களும் தீட்டினார்கள்'' என்றார் தாத்தா.
"" முன் மண்டபத்தை அண்ணாந்து பார்த்து ஆஹா! எத்தனை அழகான ஓவியம்!'' என்றான் அருண்.
முன் மண்டபத்தின் விதானத்தில் சித்திரிக்கப்பட்ட தாமரை தடாகம் அதில் பசுமையான இலைகள், தாமரை, அல்லி பூத்திருக்க, பலவிதமான மீன்கள் விளையாடுகின்றன. யானைகள் நீரை கலக்கி களிக்கின்றன.
அன்னம், வாத்து பறவைகள் குஞ்சுகளுடன் குலாவுகின்றன. எருமை மாடுகள் அசைப்போட்டுக்கொண்டிருக்கின்ற காட்சி அவர்களை ஆச்சரியப்படவைத்தது.
குட்டீஸ் கதை கேட்டீங்க. இப்ப 2 கேள்விக்கு பதில் சொல்ல ரெடியாகுங்க!
1. மண்டபத்தில் தீட்டப்பட்டுள்ள தடாக படத்தில் இருக்கும் பூக்கள் எவை?
2. தடாகம் என்பதை இப்போது நீங்கள் என்ன சொல்லி அழைக்கிறீர்கள்?
விடை : 1. தாமரை பூ, அல்லி பூ 2. குளம்

31 .

""தாத்தா, என் கூட படிக்கிற பிரண்டுக்கு சொந்த ஊரு குஜராத்தாம். அவள் நாங்க சொராஷ்டிரம் இனத்தைச் சேர்ந்தவங்க என்று சொன்னாள். சொராஷ்டிரம்ன்னா என்ன?'' என்று சந்தேகம் கேட்டாள் அனுஷா.
"" பார்ஸி இனத்தைச் சேர்ந்தவங்களை சொராஷ்ரம் என்று சொல்வாங்க'' என்றார் தாத்தா
"" நம்மள மாதிரி அவங்க நிறைய பேரு எங்கெல்லாம் இருக்காங்க?'' என்றாள் சாயிபவித்தரா.
"" இந்தியாவில கிட்டதட்ட ஒன்னரை லட்சம் பேரு இருக்காங்க. மும்பைய சுத்தி மட்டும் பல ஆயிரம் பேருக்கு மேல வசிக்கிறாங்க. குஜராத்தில் பல ஆயிரம் பேரு வசிக்கிறாங்க. தமிழகத்தில் தஞ்சாவூருக்கு சரபோஜி மன்னர் காலத்தில் பல பேரு வந்திருக்காங்க. அவங்களோட பரம்பரை இப்பவும் இங்கே இருக்கு'' என்றார் தாத்தா.
"" அவங்க என்ன மொழியில பேசுவாங்க?'' என்றாள் திவ்யா.
"" அவங்க சொராஷ்டிரம் என்ற பேச்சு மொழியில் பேசுவாங்க. அந்த மொழிக்கு எழுத்து வடிவம் இல்ல. பொதுவாக பலர் குஜராத்தியில பேசறாங்க. அத்துடன் அவங்க வசிக்கும் இடத்தில் உள்ள மொழியும் பேசுவாங்க'' என்றார் தாத்தா.
"" இந்த இன மக்கள் எப்படி இந்தியாவுக்கு வந்தாங்க?'' என்றான் மூர்த்தி

"" புராதான காலத்து பார்ஸியன் மதத்திலிருந்து வந்த இவர்கள் 7 மற்றும் 8ம் நுõற்றாண்டின் இடையில் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தாங்க. அதில் ஒரு குழு மும்பைக்கு வந்தாங்க. அப்போ ஆட்சி செய்த ஜடி ராணா என்ற மன்னர் பார்ஸி இனத்துக்காக ஒரு கோயிலை அமைத்து தந்தார்.'' என்றார் தாத்தா
"" அவங்க எந்த தெய்வத்தை வழிபடுவாங்க?'' என்று கேட்டான் அருண்.
""அக்னியை தெய்வமாக பாவித்து வழிபாடு செய்றாங்க. அவங்களுக்கு அக்னி புனிதமான ஒன்றாகவும், பூஜிக்கத்தக்கதாகவும் அவை நம் பாவங்களை கழுவி, புண்ணியம் சேர்ப்பதாக பார்ஸி மதத்தினர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களின் பிரார்த்தனைக்கு "அவஸ்தா' என்று பெயர்.'' என்றார் தாத்தா.
"" பார்ஸி இனத்தில் முக்கியமான விஐபி இருக்காங்களா, தாத்தா?'' என்று கேட்டாள் ப்ரியா.
"" தாதாபாய் நெரோஜி மற்றும் ஜேம்சேட்ஜி டாடா இவங்க மிகச் சிறந்த தேசபக்தர்கள்! நம்மூர் பாடகர் டி.எம். சவுந்தர்ராஜனும் முக்கியமான விஐபிகள்'' என்றார் தாத்தா.
"" அவங்களுக்கு பிரதான தொழில் என்ன?'' என்றாள் அனுஷா.
"" பட்டு புடவைகளில் பல வகை டிசைன்கள் பாடர்கள், பல வண்ணங்களில் எம்ராய்டிங் செய்வது அவங்க தொழில்.'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை படிச்சாச்சுல. இப்ப 2 கேள்விக்கு பதில் சொல்றீங்களா?
1. பார்ஸி இனத்தவர் வழிபடும் தெய்வம் எது?
2. பார்ஸி இனத்தைச் சேர்ந்த தமிழக வி.ஐ.பி?
விடை: 1.அக்னி 2. டி.எம். சவுந்தர்ராஜன்

32 . "" ஏ, சாயி, திவ்யா ஓடி வாங்க! டவுணுக்குப் போன ராஜா சித்தப்பா நமக்கெல்லாம் பிஸா வாங்கி வந்திருக்காங்க'' என்று ஓங்கிகுரல் கொடுத்தாள் அனுஷா.
தன் பேரப்பிள்ளைகள் பிஸாவை ஆர்வமாய் ருசித்து சாப்பிடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார், தாத்தா.
"" இந்த பிஸா, நல்லா காரமும் மசாலாவுமா ரொம்ப நல்லா இருக்கே! இது எந்த நாட்டு உணவு தாத்தா?'' என்று கேட்டாள் திவ்யா.
""இது இத்தாலி நாட்டு உணவுவகையில் ஒண்ணு. இன்னொரு விசயம் தெரியுமா, உனக்கு?இந்தியாவில சமையலுக்காக பயன்படுத்தற சில காரமான உணவுப்பண்டங்கள் நம்மோடதே இல்லை.'' என்றார் தாத்தா.
""என்ன சொல்றீங்க தாத்தா? காரம்,சாரமா மணக்க மணக்க செய்யறதுதானே நம்மோட சமையல்.'' என்றாள் சாயிபவித்ரா.
""ஆமா ம்! சாம்பார், பொரியல், காரகுழம்பு எல்லாம் செய்ய மிளகாய் இல்லாம இருந்தா எப்படி இருக்கும்?பண்டைய இந்தியர்களுக்கு பச்சை மிளகாய் பத்தியோ சிவப்பு மிளகாய்பத்தியோ தெரியாதாம். நம்ம முன்னோர்கள் எல்லாம் காரம் அதிகம் இல்லாமதான் சாப்பிட்டிருக்காங்க. அவங்க காரத்துக்காக உபயோகப்படுத்தின ஒரு பொருள் கேரளா, அஸ்ஸாம் மாநிலத்துல பயிரிடப்படற "மிளகு"மட்டும் தானாம்.'' என்றார் தாத்தா.
"" அப்படின்னா நாம் இப்ப பயன்படுத்துற மிளகாய் இங்கே எப்படி வந்தது?'' என்றான் மூர்த்தி
""கடல் வழி வியாபாரம் எப்போ இந்தியால ஆரம்பிச்சதோ, அப்பதான் மிளகாய் இந்தியர்களுக்கு அறிமுகம் ஆச்சு. இந்தியர்களும் தங்களிடமிருந்த இருந்த இஞ்சி, மிளகு மற்றும் ஏலக்காய்
போன்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பகிர்ந்துகிட்டாங்க.'' என்றார் தாத்தா.
"" இந்த மிளகாய் எங்கே அதிகமா பயிரிடப்பட்டது தாத்தா?'' என்றாள் ப்ரியா.
""7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அமெரிக்காவின் மத்திய, தெற்குப்பகுதிகளில் அதிகமாக மிளகாய்கள் பயிரிடப்பட்டு வந்ததாம். அதனால, நம்ம சமையலோட முக்கிய பொருளான "மிளகாய்" உலகில் மறு பகுதிலேர்ந்து தான் கிடைச்சிருக்கு.'' என்றார் தாத்தா.
பிஸாவை உண்டு முடித்த அருண், ""மதியானம் ஆத்தா சமைச்ச காரசாரமாக மணக்கும் காரக்குழம்பு நாம எல்லாம் நாக்கு சொட்ட சொட்ட சாப்பிடும்போது, யார் முதன் முதலா மத்திய அமெரிக்காவில மிளகாய பயிர் செஞ்சாங்களோ அவங்கள நன்றியோட நினைச்சுக்கோணும்!'' என்று சொல்லி சிரித்தான் அருண்.
டியர் குட்டீஸ் கதை படித்துவிட்டீர்கள் தானே! இப்ப இந்த கதையில் இருந்து 2 கேள்வி. பதில் சொல்லுங்க பார்க்கலாம்!
1. பண்டைய இந்தியர் காரத்திற்கு எந்தப் பொருளைப் ப யன்படுத்தினாங்க?
2. மிளகாயின் பூர்வீகம் எந்த நாடு?
விடை: 1. மிளகு 2. மத்திய அமெரிக்கா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக