சனி, 1 மார்ச், 2014

கிருஷ்ணன் உருவாக்கிய அழகிய நகரம்! - தேவராஜன்


கிருஷ்ணன் உருவாக்கிய அழகிய நகரம்! - தேவராஜன் *********************************************************************************** துவாரகை அல்லது துவாரகா இந்தியாவின் குஜராத்து மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் உள்ள ஒரு நகராகும். துவாரகை இந்திய நாட்டின் ஏழு மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். யதுகுல அரசர்கள் ஆண்ட ஆனர்த்தா நாட்டின் தலைநகராக விளங்கிய துவாரகையை, ஸ்ரீகிருஷ்ணர் புதிதாக அமைத்ததாக நம்பப்படுகின்றது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி செய்தார் என்று சொல்லப்படுகின்ற துவாரகை நகரம் சுமார் 12000 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்நகரம் ஆழிப் பேரலை அழிக்கப்பட்டு, ஒருசிலபகுதிகள் கடலுக்குள் மூழ்கி கிடந்திருக்கிறது. இந்திய தேசிய கடல் நீர் ஆராய்ச்சி கழகம் மிக நீண்ட காலமாக மேற்கொண்டு வந்த ஆய்வில் இந்நகரம் கடலுக்கு அடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நகரின் அமைப்பு துவாரகை நகரின் நிர்மாணம் மிகவும் வியப்புக்கு உரியதாகும். இந்த நகரம் அமைக்க கடலரசனை வேண்டிக் கொண்டு நிலம் பெறப் பட்டதாய் ஐதீகம். சௌராஷ்டிர மேற்குக் கடலில் இருந்து, கடல் விலகிச் சென்ற நிலத்தைப் பெற்றுக் கொண்டு, நகரம் ஒரு அற்புதமான திட்டமிடலுடம் கட்டப் பட்டது. இங்கு ஓடும் முக்கிய புண்ணிய நதி கோமதி ஆகும். இந்த நகரம் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறையப் பெற்றிருந்தது. நீர்வளம் கொண்ட பகுதிகளில் குடி இருப்புகள், வியாபாரத் தலங்கள் இருந்தன. நகரில் அகன்ற சாலைகள், பொதுமக்களின் பயன்பாட்டுக்கான, சாலைகள், பொது நிகழ்ச்சிகள் நடக்கும் பொது அரங்கங்கள் எல்லாம் இருந்தன. மேலும் கடற்கரையில் பெரிய துறைமுகம் ஒன்றும் அங்கே இருந்துள்ளதாய் அகழ்வாராய்ச்சியாளர் எஸ்.ஆர்.ராவ் தெரிவிக்கின்றார். இந்த நகரின் சுவர் கல் 3600 ஆண்டுகள் பழமையானதாக இருக்கின்றன. கடலில் மூழ்கிய இந்நகரம் வடக்கு நோக்கி விரிவடைந்திருக்கிறது.இப்படி விரிவாக்கமான பகுதி ‘பெட் துவாரகை’ என்றழைக்கப்படுகிறது.இந்த தீவுப்பகுதி கிருஷ்ணர் மற்றும் அவர் மனைவியரான சத்யபாமா மற்றும் ஜாம்பவதிக்கான பொழுதுபோக்கு தலமாகவும் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. மஹாபாரத யுத்தம் நடந்து முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர் துவாரகையைக் கடல் கொண்டது. ஸ்ரீவாசுதேவ கிருஷ்ணனின் வேண்டுகோளுக்கிணங்கி விலகிச் சென்று நிலத்தை அளித்த கடலரசன், துர்வாசரின் சாபத்தால் மீண்டும் அந்த நிலத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டான். இதை முன் கூட்டியே அறிந்த ஸ்ரீகிருஷ்ண வாசுதேவன், யாதவர்களைக் காக்க எண்ணி ப்ரபாஸ க்ஷேத்திரத்துக்கு (சோம்நாத்) அழைத்துச் செல்ல நினைத்தான். விதியை வெல்ல முடியாத யாதவர்கள் தங்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டு அடியோடு அழிந்து போக, ஸ்ரீகிருஷ்ணனும், வேடன் ஒருவனின் அம்பால், குதிகாலில் அடிபட்டுத் தன்னுயிரை இழந்தார். விராவல் என்னும் ஊரில் அடிபட்ட கிருஷ்ணனை, அர்ஜுனனும், பலராமனும், மெல்ல, மெல்ல சோம்நாத்துக்குக் கொண்டு வந்ததாகவும், அங்கே பலராமன் தன் சுய உருவை அடைந்து ஆதிசேஷனாய் பாதாளம் வழியே வைகுந்தம் சென்றதாகவும், ஸ்ரீகிருஷ்ணர் அங்கேயே அப்படியே ஆழ்ந்த மயக்கத்தில் ஆழ்ந்து தன் இன்னுயிரைத் தானே போக்கிக் கொண்டதாகவும், அர்ஜுனன் கலங்கிப் போய்த் திரும்பியதாகவும் சொல்கின்றனர். துவாரகை அழிந்த காட்சி துவாரகை எப்படி அழிந்தது என்பதை மஹாபாரதம் அர்ஜுனன் மூலம் வர்ணிக்கிறது. அந்தக்காட்சி: ‘அன்று வரையிலும் ஸ்ரீவாசுதேவ கிருஷ்ணனுக்குப் பணிந்து அடங்கி, ஒடுங்கி இருந்த கடலரசன், தன் அலைக்கரங்களால், அந்தப் பூமியைத் தொட்டுத் தொட்டுச் சென்று கொண்டிருந்தான். ஊறு ஏதும் விளைவிக்காமல் இருந்த கடலரசன், திடீரென வேகம் கொண்டு, பெரும் ஆவேசத்துடனேயே, துவாரகை நகருக்குள்ளே புகுந்தான். அவன் வேகம் தாங்க மாட்டாமல் அந்த அழகிய நகரின் மூலை, முடுக்குகள் எல்லாம் கடல் நீரால் நிறைந்தது. அர்ஜுனன் பார்த்துக் கொண்டு இருந்த போதே, மாட, மாளிகைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. ஸ்ரீகிருஷ்ணரின் அழகிய மாளிகை நீருக்குள் மூழ்கிப் போய், விரைவில் கண்மூடித் திறக்கும் முன்னர் துவாரகை என்பது ஓர் அழகிய முன் ஜன்மத்துக் கனவாகிப் போனது.’- என்று விவரிக்கிறது இக்காட்சியை. ************** பாக்ஸ் செய்தி இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம் 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.ஆராய்ச்சிக்குழுவின் தலைவரான எஸ்.ஆர்.ராவ் தனது ஆராய்ச்சி முடிவுகளை ஒருபுத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். * ஹைதராபாத்தில் உள்ள பிர்லா ம்யூசியத்தில் கடல் அகழ்வாராய்ச்சியினர் மேற்கொண்ட தேடுதலில் கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து ஒரு மாதிரி துவாரகை நகரை உருவாக்கி அங்கே காட்சிப் பொருளாக வைத்திருக்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணரின் காலத்தில் துவாரகை நகர் இப்படித் தான் இருந்திருக்கும் என அதன் மூலம் அனுமானிக்கின்றனர். ********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக