சனி, 15 மார்ச், 2014

ANGAMPAKKAM -SRI ABALAVANESWARAR TEMPLE - DEVARAJAN SHANMUGAM


அங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில் - தேவராஜன் சண்முகம். அங்கம் பாக்கம் அழகிய கிராமம். அமைதியான ஊர். பாலாற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்த ஊருக்கு எப்போதும் குளிர் காற்றை இலவசமாக தந்து கொண்டிருக்கிறது பாலாறு. முதன் முதலாக இந்த ஊருக்கு 2010ம் ஆண்டில் ஓர் நாள் வந்தேன். அதுவும் எனக்கு பொண்ணு பார்க்க. பொண்ணு வீட்டுக்கு வருவதற்கு முன்னதாகவே எனக்கு காட்சி கொடுத்தது இந்த ஈஸ்வரன் கோயில் கோபுரம் தான்! மூலவரை பார்க்காமலேயே மானசீகமாக வழிபாடு செய்து கொண்டேன்! ஏனோ பார்த்த மாத்திரத்திலேயே இந்தக்கோயில் எனக்கு பிடித்து விட்டது. கோயிலுக்கு முன்பாக உள்ள குறுக்குத் தெருவில் வசிக்கும் ஏ.எஸ். வெங்கடேச முதலியார் பெண்ணை தான் பார்க்க போகிறேன். பெண் பார்க்கும் படலம், திருமணம் என நடந்த சம்பவங்களை விவரித்தால் கட்டுரை நீண்டுவிடும் அல்லது அலுப்பு தட்டிவிடலாம்! அதலால் கோயில் பற்றி தெரிந்து கொள்ளலாமா? கோயிலின் முகப்பில் இருக்கும் நாகலிங்க மரம் பாலாற்று காற்றுக்கு ‘சிவ சிவ’ என்று தலையாட்டியபடியே இருந்தது. நாகலிங்க பூ வாசம் நம்மை பின் தொடர்ந்து அதுவும் அம்பலவாணரைத் தரிசிக்க நம் கைப்பிடித்து வருவது போல இருந்தது. மொட்டை கோபுரம். பெரிய கனமான மரக்கதவு. இதைக்கடந்தால் பலிபீடம். பக்கத்தில் பெரிய கம்பீரமான கொடி மரம். அதை அடுத்து நந்தி. நந்தி முன்பாக சிறிய கல் மண்டபம். வலபக்கம் சித்தி விநாயகர். இடது பக்கம் சித்தி முருகன் நமக்கு முதலில் அருள் பாலிக்கிறார்கள். கல் மண்டபம் கடந்தால் நேரே அம்பலவாணர் சந்நிதி. கம்பீரமான துவார பாலகர்கள். வலது பக்கம் அம்பாள் சந்நிதி.அம்பாள் திருநாமம் ஸ்ரீ சிவகாமி. மூலவர் இருக்கும் சந்நிதியில் நடராஜர், சமயகுரவர்கள் மற்றும் சில தெய்வச் சிலைகள் பாதுகாப்பாக இருக்கின்றன. உள் பிரகாரம். கோஷ்டா தெய்வங்களாக விநாயகர், தெட்சிணாமூர்த்தி இருக்கிறார்கள். காசி விஸ்வநாதர்,வள்ளி தேவசேனா சமேத முருகன், திருமால், துர்க்கை, சண்டீகேஸ்வரர், சூரியன்,நவகிரகம் மற்றும் நால்வர் சன்னதிகள் உள்ளன. இந்த ஸ்தலம் உத்திர சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலம் வாலாஜாபாத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இரண்டு பிரகாரத்துடன் கூடிய இந்த ஆலயத்தில் ஸ்ரீ அம்பலவாநீச்வரர் சதுர வடிவ ஆவுடையாரில் சிறிய பாணமாக காட்சி அளிக்கிறார். தல விருட்சம் வன்னி, நாகலிங்கம். தலவரலாறு ஒரு அந்தணன் தன் தந்தையின் அஸ்தியை காசியில் கரைக்க வேண்டி, யாத்திரை மேற்கொண்டபோது இத்தலத்தில் தங்கி வழிபட்டபின் அஸ்தி கலசத்தை பார்க்கும்போது எல்லாம் மணம் வீசும் மல்லிகை பூக்களாக மலர்ந்தன. இறைவன் அருளால் அங்கம் பூவாக மாறியதால் இத்தலம் அங்கம்பாக்கம் என்ற பெயர் பெற்றது. தல சிறப்பு இத்தலத்தில் மூதாதயார்க்கு செய்யப்படும் தர்ப்பணம், திதி காசியில் செய்வதற்கு சமானமாக கருதப்படுகிறது. சிதம்பரம் போன்று இங்குள்ள ஸ்ரீ நடராஜர் மிகவும் விசேஷம். வருடத்தில் நடராஜருக்கு 6 அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. சிவாலயத்தில் நடக்கும் எல்லா உற்சவங்களும் நடைபெறுகின்றன. தொடர்புக்கு: கிருபாசேகரன்- 9976592940 சந்திராமணி தேவராஜன்- 8883727365 ஆலயத்தை செல்லும் வழி: காஞ்சிபுரம்-&அங்கம்பாக்கம் (69ஏ) பேருந்து காலை மற்றும் மாலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்துச் செல்கிறது. வாலாஜாபாத்திலிருந்து ஆட்டோ வசதி உள்ளது. கட்டணம் ரூ.150 **************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக