சனி, 15 ஜூன், 2013

நல்லது நல்லபடியே நடக்கும்!

நல்லது நல்லபடியே நடக்கும்!/ 93/ 16.6.13/ மனித வாழ்க்கை என்பது அற்புதமானது. மேன்மையானது. இந்த வாழ்க்கை மூலம் ஒருவர் சொர்க்கமோ, மோட்சமோ அடையவும் முடியும். இவ்வளவு புனிதமான மனிதப்பிறவி கிடைத்ததற்கே நாம் இறைவனுக்கு கடமைப்பட்டிருக்கிறறோம். ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்று அவ்வை மூதாட்டி சொன்னதன் மகிமையும் இதனால்தான். வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் அர்த்தத்தோடு வாழவேண்டும். தினமும் மனிதன் கடைபிடிக்கவேண்டிய வாழ்வியல் நெறிமுறைகளை சாஸ்திரங்கள் தெளிவுறுத்துகின்றது. வாழ்வியல் நெறிமுறைகள் முதல்படிகளாக அமைவன ஐந்து வழிகள். அவை துõய்மை, திருப்தி(மனநிறைவு), பிராயாச்சித்தம்(கழுவாய்), தற்சோதனை, இறைவனிடம் சரணடைதல் ஆகியனவாகும். ஒரு பக்தனுக்கு உடலும், உள்ளமும் துõய்மையாக இருத்தல் வேண்டும். துõய்மையான உணவு, நீர் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி நமது உடலைச் சுத்தமாக வைத்திருக்கின்றோம். ஆசனங்கள், பிராணாயாமம் , தியானம்,கிரியைகள் (நற்செயல்கள்) போன்றவற்றைச் செய்து நமது உள்ளத்தைத் துõய்மையாக வைத்திருக்க வேண்டும். ‘புறந்துõய்மை நீரான் அமையும் அகந்துõய்மை வாய்மையாற் காணப் படும்’ -என்கிறார் திருவள்ளுவர். உடம்பு தண்ணீராலும் உள்ளம் உண்மையாலும் துõய்மையாகும் என்பது இதன் பொருள். மனதுள் எந்தவிதமான தீய எண்ணங்களையும் வரவிடாது ஒருவன் நல்லொழுக்கத்தைக் கடைபிடித்து வாழ வேண்டும் என்பதை காலையில் கண்விழித்தவுடன் மனதில் சங்கல்பம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே உளத்துõய்மைக்கு வழிவகுக்கும். ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற’- என்று வள்ளுவர் சுட்டிக்காட்டுவதும் இதைதான். திருப்தி ஒவ்வொருவரும் நிறைவான மனநிலையுடன் வாழ்தல் வேண்டும். ‘போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’. ‘இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்’ மனநிறைவு பெற்றவர்கள் எதற்கும் ஆசைப்படமாட்டார்கள் என்பது வள்ளுவர் கருத்து. பிராயச்சித்தம் எதனைக் கண்டும் கலங்காது பொறுத்துக் கொண்டு அதிலிருந்து மீண்டு வரும் பக்குவம் பெறவேண்டும். துன்பம் வந்துவிட்டது. அதனைக் கண்டு கலங்கக் கூடாது. அத்துன்பத்திலிருந்து மீள்கின்ற (வழியை) தேடி அதிலிருந்து நாம் மீண்டு வரவேண்டும். இப்பிராயச்சித்தம் என்பதற்கு நாம் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி அதற்குப் பரிகாரம் தேடுதல் வேண்டும். அதாவது அதற்குரிய நன்மையினைச் செய்துவிடுதல் வேண்டும். தற்சோதனை நம்மை நாமே விமர்சனம் செய்துகொள்ள வேண்டும். நாமே நீதிபதியாக இருந்து நம்மையே நாம் கூர்ந்து விசாரிக்க வேண்டும். மனசாட்சிபடி நடக்க வேண்டும். சரணடைதல் வாழும்போதும், இவ்வுலக வாழ்க்கைக்குப்பிறகும் நமக்கு இறுதிவரை துணையாக இருப்பது இறைவனே! ஆதலால், அவனையே நம் உறவாக பற்றிக்கொண்டு சரணடைய வேண்டும். மேலே சொன்னபடி வாழ்ந்தால் நல்லது நல்லபடியே நடக்கும்! - தேவராஜன். *******************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக