சனி, 29 ஜூன், 2013


ஹிந்துத்துவத்தின் மேன்மை!/100/ உலகத்தின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. நம் நாட்டுக்கென்று உள்ளது தொன்மையான தன்மை, அது ஹிந்துத் தன்மை. அதாவது ஹிந்துத்துவம். இதன் சிறப்புகள் பல. ஆண் - பெண் உறவில் புனிதம், விருந்தோம்பல், குடும்ப முறை, அன்னை, பிதா, ஆசிரியன் ஆகியோரை இறைவனுக்குச் சமமாகக் கருதல் போன்றவை. “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்” எனப் பாடியவர் நமது தாயுமானவர். ‘சர்வே ஜனா சுகினோ பவந்து’ எனச் சொன்னவர்கள் நம் முன்னோர்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று குரல் கொடுத்தவன் ஒரு தமிழன். ஹிந்து மதத்தில் தினந்தோறும் அனைவரும் சொல்லும் பிரார்த்தனை மந்திரமாக,‘லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து‘ -அனைத்து லோகங்களும் சுகமுடையதாக ஆகட்டும்‘ என்ற மந்திரம் பிரபஞ்சம் அனைத்தின் நலத்தையும் வேண்டுகிறது. ’சர்வே ஜனா: சுகினோ பவந்து’ என்ற மந்திரம் எல்லா மக்களும் சுகமுடன் இருப்பார்களாகுக என்ற பிரார்த்தனையைப் புரிய வைக்கிறது. ’ஆத்மனோ மோக்ஷார்த்தாய; ஜகத் ஹிதாய ச‘ என்ற குறிக்கோளை விவேகானந்தர் ராமகிருஷ்ண மடத்தின் குறிக்கோளாகப் பொறித்தார். அதாவதுஆத்மா மோக்ஷம் அடையட்டும்; உலகம் சுகத்தைப் பெறட்டும் என்ற குறிக்கோள் சகலரின் மோக்ஷத்தையும் சுகத்தையும் தழுவிய குறிக்கோளாக, பிரார்த்தனை மந்திரமாக அமைந்திருக்கிறது. இவைகள் எல்லாம் இந்திய நாட்டின் பண்பின் பிரதிபலிப்பாக உதிர்ந்த வார்த்தைகள். எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்தும் பண்பு இந்த நாட்டின் பண்பு. மனித நேயம் என்பது மனிதனிடத்து அன்பு செலுத்துவது. மாறாக விலங்குகள்,பறவைகள், தாவரங்கள் என அனைத்திடமும் அன்பு செலுத்துவது இந்திய நாட்டின் பண்பாடு. ஹிந்துத்வாவின் மேன்மை என்றால் ‘சர்வதர்ம சம்மான்‘ அதாவது அனைத்து தர்மங்களையும் சமமாக பாவியுங்கள் என்று. இந்த நாட்டில் யாருக்கேனும் இதில் முரண்பாடான கருத்து இருக்கிறதா ? ஹிந்துவம் சொல்கிறது ‘ஏகம்சத் விப்ராஹ, பஹுதா வதந்தி‘ அதாவது சத்தியம் ஒன்றுதான் ஆனால் பலவிதமாக சொல்லப்படுகிறது என்று. ஒவ்வொரு மணிதர்களும் தங்கள் வழிகளில் அதை சொல்கிறார்கள் அவ்வளவுதான். அவர்கள் கீதையை பின்பற்றலாம், குரானை பின்பற்றலாம், இராமாயனத்தையோ, மஹாபாரதத்தையோ பின்பற்றலாம். ஹிந்துத்வா சொல்கிறது ‘சர்வே பவந்து சுகினஹ‘, ‘சர்வே சந்து நிராமயா‘ , ‘சர்வே பத்ரானி பஷ்யந்து‘, ‘மா கஷ்சித் துகபாக் பவேத்‘ !! அதாவது எல்லோரும் நன்றாக இருக்கட்டும், எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கட்டும், எல்லோருக்கும் நல்ல கல்வியும் ஞானமும் கிடைக்கட்டும். இந்த கருத்தில் இந்திய நாட்டில் இருப்போர் யாருக்கேனும் முரண்பாடு இருக்கிறதா என்ன? ஹிந்து மதத்தின் வேண்டுதல் எல்லாம் பிரபஞ்சமளாவிய நன்மையைத் தவிர வேறு என்ன இருக்கிறது. - தேவராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக