சனி, 15 ஜூன், 2013

தாராளமா இருக்கனும் தயாள குணம்!

தாராளமா இருக்கனும் தயாள குணம்!/95/ 30.6.13/ இல்லறத்தில் இருப்பவர்கள் தயாள குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக தினசரி ஆயிரம் ருபாய்க்குக் காசோலை எழுதி அநாதை இல்லங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதல்ல. இக்காலத்தில் வசதிமிக்கவர்கள் கூடச் சற்றுக் கருமிகளாகவும், வசதியற்றவர்களில் சிலரோ தங்கள் வாழ்க்கைக்கே இடையூறு வரும் அளவிற்குத் தானம் செய்கிறார்கள். இந்த இருவேறு நிலையும் இருக்கக்கூடாது. யாருக்கோ எதையோ கொடுத்த பிறகு எதாவது நல்ல விளைவு கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருப்பதும் சரியல்ல. தானத்தை அவ்வப்போது மட்டும் அல்ல; வருடம் ஒருமுறை என்றில்லாமல் தினமும் ஒரு முறை செய்தால் மிகவும் நல்லது. கொடுக்கும் போது சந்தோஷமாக கொடுக்க வேண்டும். கரும விளைவுப்படி வினைப்பயன் நமக்குத் திரும்ப வரும்போது பன்மடங்கு பெரிதாக வரும். ஆனால் வரும் பயன் கொடுக்கும் போது இருந்த அதே மன உணர்ச்சியுடன் வரும். கொடுத்த பிறகு என்றைக்கும் அதற்காக வருத்தப்படக் கூடாது. கொடுத்த தானம் தவறாகப் பயன் படுத்தப் பட்டாலும் சரி, தொலைக்கப் பட்டாலும் சரி, கொடுத்ததற்கு நன்றி உணர்வு தெரிவிக்கப்படாமல் இருந்தாலும் சரி - கொடுத்ததைப் பற்றி வருந்தாதீர்கள். எந்த மனநிலையில் நீங்கள் பொருளை முந்தைய வாழ்விலோ இந்த வாழ்விலோ கொடுத்திருந்தாலும் அது பன்மடங்காகி கொடுத்த அதே மனநிலையில் உங்களிடமே திரும்ப வரும் . கொடுப்பதென்பது பொருள் மட்டுமில்லாமல் நேரத்தையோ உழைப்பையோகூடக் கொடுக்கலாம், அன்பைக்கூடக் கொடுக்கலாம். உள்ளம் சார்ந்த தானமாகவும் இருக்கலாம் - அதாவது ஒருவரிடம் அன்பாக பேசுவதே ஒரு வகைத் தானம் தான். உங்கள் பூஜைஅறையில் ஒரு உண்டியலை வைத்து அதில் ஒவ்வொரு நாளும் ஒரு ரூபாயையோ, ஐந்து ரூபாயையோ போட்டு வாருங்கள். அப்படி ஒரு மாதம் சேமியுங்கள். ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன் இந்தத் தயாளச் செயலைச் செய்யுங்கள். தினசரி காலைக் கடன்களை முடித்துக் குளித்த பின்பு உங்கள் உண்டியலில் சற்று மகிழ்ச்சியான மன நிலையில் ’இந்தப் பணம் ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படட்டும்’ என்று எண்ணிப் பணம் போடுங்கள். மாதக் கடைசியிலோ வருடக் கடைசியிலோ உங்கள் விருப்பமுள்ள கருணை நிறுவனத்திற்கோ, ஒரு கோயிலுக்கு விளக்கெரிக்கவோ, ஓர் ஏழையின் கல்விக்கோ கொடுத்துப்பாருங்கள்.இப்படிக் கொடுப்பதில் ஏற்படும் மகிழ்வு நீடித்து நிலைத்திருக்கும். பிறருக்கு உதவிட தினமும் ஆயிரம் வாய்ப்புகள் வருகின்றன. அதில் ஒன்றையாவது உதவி, தயாள குணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், தயவு அதிகம் இருப்பவரிடம் கடவுள் இருக்கிறார். தயவு இல்லாதவர்களிடம் கடவுள் இருந்தும் இல்லாமையாய் இருக்கிறார். - தேவராஜன். *****************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக