வியாழன், 9 செப்டம்பர், 2010

வரலாற்றைப் படம்பிடித்து

வரலாற்றைப் படம்பிடித்து
வரலாற்றில் இடம்பிடித்தவர்!

முதல் பெண் புகைப்படக் கலைஞரின் சாதனை
(11.9.10 தினமலர் பெண்கள் மலரில் பிரசுரம் ஆன என் கட்டுரை)

ஒரு நிருபர் ஒரு சம்பவத்தை நாலு பக்கத்திற்கு மாய்ந்து மாய்ந்து எழுதி விவரிப்பதை, திறமையான ஒரு புகைப்படக்காரர் ஓரிரு படங்களில் "நச்' என்று சொல்லி விடுவார். இதுதான் புகைப்படக்காரரின் பலம்!
புகைப்படக் கலைஞர்கள், டில்லியில் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதியில் உலகப் புகைப்பட தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர்.
இதன் சிறப்பம்சமே, ஹோமாய் வைரவாலா என்ற பெண்மணி எடுத்த புகைப்படங்கள்தான்!
யார் இந்த ஹோமாய்? இவர்தான், இந்தியாவில் பத்திரிகைப் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றிய முதல் பெண்மணி!
இப்போது இவருக்கு 97 வயது.
1913 ம் ஆண்டு குஜராத்தில் நவ்சரியில் பிறந்த இவர், பாம்பே கிரானிக்கிள் பத்திரிகையில் புகைப்படக் கலைஞராகப் பணியில் சேர்ந்தார். ஒரு நாடக நடிகரின் மகளான இவரது ஆரம்ப வாழ்க்கையில் வறுமையின் சோகங்கள் அதிகம்.
பல சிரமங்களின் மத்தியில் பம்பாய் பல்கலைக்கழகத்தில் ஹானர்ஸ் டிகிரி முடித்தார். பிறகு ஜேஜே ஸ்கூல் ஆப் ஆர்ட்டில் டிப்ளமோ படித்து முடித்தார்.
புகைப்படம் எடுப்பதில் விருப்பம் கொண்ட ஹோமாய், தன்னைப் போலவே புகைப்படக் கலையில் ஆர்வம் நிறைந்த மானே ஷா என்பவரை நேசித்து திருமணம் செய்து கொண்டார்.
சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான இந்தியாவை தன் கேமரா மூலமாக கருப்பு வெள்ளை படங்களில் அழகான ஓவியமாக பதிவு செய்தவர் இவர். அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள், விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் என 10 ஆயிரத்திற்கும் மேலான கருப்பு வெள்ளை படங்களை எடுத்திருக்கிறார்.
பத்திரிகைப் பணியில் இவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள்?
இதோ ஹோமாயே கூறுகிறார் :
""இல்லஸ்ட்ரேட் வீக்லி பத்திரிகையில் இருந்த போது எனக்கு கொடுக்கப்பட்ட முதல் அசைன்மென்ட் மறக்க முடியாத அனுபவம்...
அது 1938ம் ஆண்டு. பாம்பேயில் இருந்த ஒரு மகளிர் கிளப் அமைப்பு பிக்னிக் செல்ல இருந்தது. அவர்களைப் படம் பிடித்தேன். அந்தப் படம்தான் என் முதல் பிரசுரம்.
இதுபோல் மறக்கவே முடியாத இன்னொரு அனுபவம்... அது, இரண்டாம் உலகப்போர் மூண்ட நேரம். குண்டு வெடிப்பு பகுதிகள், மருத்துவமனைகள் மற்றும் அவசர உதவி சேவை மையங்கள் போன்ற களங்களில் நேரடியாக இருந்து முழுநேரப் பணியில் ஈடுபட்டு போர்க்கால நிகழ்வுகளை உடனுக்குடன் புகைப்படம் எடுத்து கொடுத்து வந்ததை மறக்கவே முடியாது.
ராஷ்டிரபதி பவனில் மவுன்ட்பேட்டன் நமது தேசியக்கொடியை ஏற்றிய நிகழ்ச்சி, ஜவஹர்லால் நேருவுடன் அவர் சகோதரி விஜயலட்சுமி பண்டிட் நிற்கும் காட்சி, காந்திஜியுடன் கான் அப்துல் கபார் கான் மற்றும் சுசிலா நாயர் சேர்ந்து நிற்கும் காட்சி, நேரு தன் பேரப்பிள்ளைகளுடன் இணைந்திருக்கும் காட்சி, இந்திராவுடன் அவர் கணவர் பெரோஸ் காந்தி சேர்ந்து நிற்கும் காட்சி, தலாய்லாமா இளைஞராக இருந்தபோது படம் பிடித்தது போன்றவை எல்லாம் பசுமையான நினைவுகளாக என் மனதில் பதிந்துள்ளன.
இதுபோல் பிரிட்டிஷ் ஆட்சியின் கடைசி நாள் சம்பவங்கள் மற்றும் சுதந்திர இந்தியாவின் ஆரம்பக்கட்ட நிகழ்வுகளைப் படம்பிடித்த அனுபவங்களும் மறக்கவே முடியாதவை'' என்கிறார் ஹோமாய்.
தனது பணிக்காலத்தில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த எண்ணற்ற படங்களை எடுத்திருக்கிறார் இவர். இவர் பதிவு செய்த படங்கள் இந்திய வரலாற்றில் ஒரு அங்கமாக இருப்பவை.
1969ம் ஆண்டில் இவரது கணவர் மானேஷா மறைந்தார். இதன்பின் மும்பையிலிருந்து வதோராவுக்கு இடம் பெயர்ந்தவர், அங்கு தன் வாழ்நாளை தனிமையில் கழித்து வருகிறார்.
இன்றைய சாதனை பெண்களுக்கு ஹோமாய் ஒரு முன்னோடி என்றால் மிகையல்ல!
தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக