வியாழன், 9 செப்டம்பர், 2010

இந்திய சுதந்திர களத்தில் பெண்கள்! தேவராஜன்

இந்திய சுதந்திர களத்தில் பெண்கள்! தேவராஜன்
( 14.8.10 தினமலர் பெண்கள் மலரில் பிரசுரமான கட்டுரை)

இந்திய விடுதலைக்காக கண்ணீரும், செந்நீரும் சிந்தியவர்களும், இன்னுயிர் தந்தவர்களும் ஏராளம்... ஏராளம்! வரலாற்றில் பெரும்பாலும் ஆண்களின் தியாகத்தைப் பற்றி சிலாகித்துப் பேசப்படுகின்றன. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வீர தீரத்துடன் குதித்த,பெண் தியாகிகள் ஒன்றா, இரண்டா? பட்டியல் போடலாம்! நம்மில் பலரின் கவனத்திற்கு வராத சில பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளை இந்த சுதந்திர திருநாளில் நினைவுகூர்வோமாக.
இந்திய சுதரந்திர போராட்டக்களத்தில் பெண் வீராங்கனைகள் பலர் பங்கு கொண்டனர். 1817 முதல் பீமா பாய் ஹோல்கர், ராணி சன்னமா ஆகியோர் முதல்முதலாக கிழக்கிந்திய கம்பெனிகாரர்களுக்கு எதிராக போர்க்கொடி ஏந்தினார்கள்.
ஜான்சி ராணி, சரோஜினி நாயுடு, கஸ்துõரிபா காந்தி, அருணா ஆசாப் அலி, இந்திரகாந்தி, கமலா நேரு, விஜயலட்சுமி பண்டிட், மாடம் கமா, பேகம் ஆசாத் மகால், பத்மஜா நாயுடு, சுசெதா கிர்பாலனி போன்றவர்கள் சுதந்திரத்திற்கு போராடியவர்கள். இவர்களில் சிலரை தெரிந்து கொள்வோம்.
பத்மஜா நாயுடு:
தாயைப் போல பிள்ளை நுõலைப் போல சேலை என்பதற்கு உதாரணமாக இருந்தவர். பத்மஜா நாயுடு. இவர், கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் மகள். தன் அன்னையின் இந்திய சுதந்திர வேட்கையைக் கண்டு தானும் இந்திய சுந்திர போராட்டத்தில் ஈடுபட விரும்பினார். தன்னுடைய 21 வயதில் ஐதராபாத்தில் இந்திய தேசிய காங்கிரசில் இணை நிறுவனராக தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டவர்.
இந்தியர்களிடம் சுதேசி உணர்வை ஊட்ட நம் பொருட்களை நாம் வாங்க வேண்டும் என்ற லட்சிய வேட்கையை த்துõண்டி கதர் இயக்கத்தை ஆரம்பித்தார். இதன் காரணமாக இந்தியர்கள் வெளிநாட்டுப் பொருட்களை வாங்குவதை புறக்கணித்தனர்.
ஒத்துழையாமை இயக்க போராட்டத்தில் கலந்துகொண்டு 1942ல் சிறை சென்றார். இந்திய சுதந்திரத்திற்குப் பின் மேற்கு பெங்காலில் கவர்னராக நியமிக்கப்பட்டார். தன் வாழ்நாளை இந்திய சுதந்திரத்திற்கும், மக்கள் சேவைக்கும் அர்ப்பணித்துக்கொண்ட பத்மஜா நாயுடு ரெட் கிராஸ் சேவையிலும் ஈடுபட்டார்.
சுசேடா கிர்பாலனி:
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சுசேடா கிர்பாலினியின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு பெற்றவர். காந்தியின் தேச பற்றினை பின்பற்றி நாட்டுக்காக உழைத்தவர். 1946 ல் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1958 முதல் 1960 வரை இந்திய தேசிய காங்கிரசில் பொது செயலாளராகவும், 1963 முதல் 1967 வரை உத்திதரபிரதேச முதல்வராகவும் இருந்தார். 1947 ஆகஸ்ட் 15ல் நாடாளு மன்றத்தில் வந்தே மாதரம் பாடலைப் பாடியவர்.
பேகம் ஹசாத் மகால்:
ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தவர் பேகம் ஹசாத் மகால். இளவரசியாக உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவர். அப்படி ஒரு வாழ்க்கை அமைந்தும், ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார் என்பது ஆச்சரியமல்லவா! இந்தியவின் முதல் சுதந்திரப் போரில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இருந்தார். பிரிட்டிஷ் சட்டங்களுக்கும், கப்பம் கட்டுவதற்கும் எதிராகவே செயல்பட்டு தன் வீர தீரத்தைக்காட்டினார்.
1879 ம் ஆண்டு மறைந்த இவருக்கு 1984 மே 10ம் தேதி இந்திய அரசு அவர் உருவம் பொறித்த தபால்தலை வெளியிட்டு பேகம் ஹசாத்தின் தியாகத்தை கவுரவித்தது.
மடாம் கமா:
இந்தியாவின் சுதந்திர தேசியக்கொடி பிறந்து விட்டது. அடுத்து, இந்தியாவுக்கும் சுதந்திரம் பிறந்து விடும் என்று அறைகூவலிட்டவர் மடாம் கமா. இவரின் எழுச்சிமிகு பேச்சுகளும், செயல்பாடுகளும் இளைஞர்களை சுதந்திரப் போராட்ட களத்தில் பெருமளவும் குதிக்க வைத்தது.
அவர் வடிவமைத்த மூவர்ணக்கொடி பச்சை, காவி மற்றும் சிகப்பு நிற பட்டைகளைக் கொண்டிருந்தது. சிகப்பு நிறம் பலத்தையும், காவி வெற்றியையும், பச்சைகம்பீரத்தையும் அர்த்தப்படுத்தியும், எட்டு தாமரைகள் எட்டு மகாணத்தையும் குறித்தது. வந்தே மாதம் என்ற வாசகம் காவி மத்தியில் எழுதப்பட்டிருந்தது. சூரியனும், நிலவும் இந்து முஸ்லீம் ஒற்றுமையையும் கொண்டிருந்தது. இந்த கொடி வீர் சவர்க்கர் உதவியுடன் வடிவமைத்தார்.
வெளிநாடுகளுக்குச் சென்று பிரிட்டீஷாருக்கு எதிரான ஆதரவினை திரட்டியவர் இவர்.
அருணா ஆசாப் அலி:
ஹரியனாவில் பெங்காலி பிரமொ குடும்பத்தில் பிறந்தவர் அருணா. லாகூர் மற்றும் நைனிடலில் கல்வி பயின்று ஆசிரியர் பணிபுரிந்தவர். காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக இருந்த ஆசாப் அலியை சந்தித்த அவர், பொது சேவையில் ஈடுபட்ட அவர்பால் ஈர்க்கப்பட்டு 1928ல் அவரை மணம்முடித்தார். இருவருக்கும் மதம் வேறு. 20 வயதுக்கு மேல் வித்தியாசம் வேறு.
திருமணத்திற்குப்பிறகு, காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட இவர், உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்குகொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டார்.
திகார் சிறையில் கைதிகளை நடத்தும் முறையில் பாகுபாடு இருப்பதை அறிந்து அதை நீக்க போராடியவர்.
இவருக்கு 1964ல் லெனின் அமைதி விருதும், இந்திய சிறந்த குடிமகள் விருதும், பாரத் ரத்னா விருதும், அவர் உருவ தபால் தலையும் வெளியிட்டு இந்திய அரசு கவுரவப்படுத்தியது.
இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து வெளிநாட்டு பெண்களும் போராடினார்கள். அவர்களில் சிஸ்டர் நிவேதா, மிர்ரா அல்சா, அன்னிபெசன்ட், மீரா பென் மற்றும் சர்ளா பென் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக