வியாழன், 9 செப்டம்பர், 2010

"எனக்கு வீடே பள்ளிக்கூடம் தான்!'

"எனக்கு வீடே பள்ளிக்கூடம் தான்!'
எழுத்து சித்தர். பாலகுமாரன்

( செப்டம்பர். 5 ஆசிரியர் தின சிறப்புக்கட்டுரைக்காக எழுத்தாளர் பாலகுமாரனை பேட்டி எடுத்து, தினமலர் பெண்கள் மலர் ( செப்டம்பர் 4, 2010) இதழில் பிரசுரமான என் கட்டுரை. தேவராஜன்

என் அம்மா சுலோச்சனா ஒரு தமிழாசிரியை. தங்கை சிந்தா ரவி ஒரு ஆசிரியை, சித்திகள் கவிதாயினி, அலங்காரம், ஜெயலட்சுமி இவர்களும் ஆசிரியைகள். இப்படி வீட்டில் பெண்கள் எல்லாமே ஆசிரியர்களாக இருந்ததால் எனக்கு வீடு, பள்ளிக்கூடம் என்று தனியாகப் பிரித்து பார்க்க முடியாதப்படி என் வாழ்வில் அமைந்துவிட்டது.
வீட்டில் எல்லோரும் படித்தவர்களாக இருந்ததால் வீடெல்லாம் நிறைய புத்தகங்கள் நிரம்பியிருக்கும்.
நான் எழுத்தாளனாக வர, ஆசிரியராக, குருவாக,தாயாகவும் அமைந்த என் அம்மா சுலோச்சனாவைத்தான் சேரும் என்பதை நன்றியோடு பெரிமிதமாக நினைவுகூருகிறேன்.
குழந்தைப் பருவத்திலிருந்தே எனக்கு என் அம்மா பாரதியார் கவிதைகள், புறநானுறு, குறுந்தொகை, கம்பராமாயணம், தேவாரம், திருவாசகம், நாலாயிரம் திவ்ய பிரபந்தம், நீதிக்கதைகள் போன்ற இலக்கிய, இதிகாச, புராணங்களை படிப்படியாக பொருள் விளங்க சொல்லிக்கொடுத்து, அதை மனப்பாடம் செய்யவும் வலியுறுத்தினார். இதனால் எனக்கு சிறுவயது முதலே அறிவுதிறன் பெருகியது. 15 வயதினில் எனக்கு இலக்கிய, இதிகாச, புராணங்களில் உள்ள பாடல்களை மனப்பாடமாக சொல்லும் திறன் வந்துவிட்டது. இன்று வரை எனக்கு ஞாபகசக்தி இருப்பதற்கு காரணம் சிறுவயதினில் அம்மா சொல்லித்தந்த மனப்பாட முறைதான்!
எனக்கு ஆசிரியராகவும் அம்மாவாகவும் இருந்து அவர் வழிகாட்டிய நெறிகள்தான் என்னை ஞானமார்க்கத்தில் இட்டுச் சென்றது, கடவுளிடத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை, குருவைத்தேடல், வாழ்வில் ஒழுக்கம் எல்லாம் அம்மா போதித்தவைகளே! அம்மா போதனையில் தான் நான் எழுத்தாளன் ஆனேன். கடவுளைத் தீர்க்கமாக நம்பும் பக்தன் ஆனேன். குரு தேடலில் யோகி ராம் சுரத்குமாரை சரணடைந்தேன். எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றிலிருந்து விடுபடும் மனவலிமையை பெற்றேன். ஆசிரியராக, அம்மாவாக, நல்ல சிநேகிதியாக அமைந்த அம்மா சுலோச்சனா எனக்கு தந்த காணிக்கை அறிவுச்சொத்து, கல்விச் செல்வம். இந்த ஆசிரியர் தின திருநாளில் அம்மாவுக்கு உளபூர்வமான என் நன்றியை சொல்வதின் மூலம் நன்றிகடன் செலுத்தியவனாகிறேன்.
பேட்டி: தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக