வெள்ளி, 2 மே, 2014

மரண பள்ளத்தாக்கில் நடக்கும் கற்கள்! - தேவராஜன்


மரண பள்ளத்தாக்கில் நடக்கும் கற்கள்! - தேவராஜன் அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு தேசிய பூங்காவின் பெயர் டெத் வேலி நேஷனல் பார்க். இந்த தேசிய பூங்கா ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட சொஸோன் என்று அறியப்பட்ட ‘டிம்பிஸா’ எனப்படும் ஒரு பழங்குடியினர் வாழ்ந்த பிரதேசமாகும். டிம்பிஸா பழங்குடியினரால் இப்பள்ளத்தாக்கிற்கு டும்பிஸா என பெயரிடப்பட்டிருந்தது. 1849ம் ஆண்டில் தான் ‘கலிபோர்னியா தங்க நெருக்கடி’ காலப்பகுதியில் இதற்கு டெத் வேலி எனும் ஆங்கிலப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கலிபோனியா தங்க நெருக்கடி காலத்தின் போது இந்த பள்ளத்தாக்கு வழியாக அமெரிக்கர்கள் அல்லாத குழுவொன்று கடந்து சென்றிருக்கிறது. அக்குழுவில் பயணித்தவர்களில் ஒருவர் இப்பகுதியில் உயிரிழந்து விட்டார். அதனால், கனிம வள ஆய்வாளர்களால் இது டெத் வேலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. 1850ம் ஆண்டு காலப்பகுதிகளில் மரணப் பள்ளத்தாக்கில் ஆய்வுகள் மூலமாக தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்கள் பல சுரங்க ஆராய்ச்சிகள் மூலமாக பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1933 ம் அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான ஹுவரினால் 2 மில்லியன் ஏக்கர் பிரதேசமும் தேசிய ஞாபக சின்னமாக மாற்றப்பட்டது. 1994ம் ஆண்டில் 1.3 மில்லியன் ஏக்கர் பிரதேசம் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதுவே அமெரிக்காவின் 4ஆவது பெரிய தேசிய பூங்காவாகும். இப்போது போது இப்பிரதேசத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் தாண்டி டிம்பிஸா பழங்குடியினர் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 1940ம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட வாழ்விடங்களில் தண்ணீர் மற்றும் தொலைபேசி வசதிகளுடன் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுவே இப்பிரதேசத்தின் மிகச் சுருக்கமான வரலாறு. இந்த மர்ம பிரதேசத்தில் தான் விஞ்ஞானிகளுக்கும் ஆராய்ச்சியாளருக்கும் இதுவரை பிடிக்கொடுக்காத புதிர்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த டெத் வேலி என்கிற மரண பள்ளத்தாக்கில் மணல் பரப்பில், ஆயிரக்கணக்கான கற்கள் தானாக இடம்பெயர்ந்து செல்கின்றன. இந்த அதிர்ச்சி தகவல் 1948ல் வெளியாகியது. சாதாரணமாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஆள் நடமாட்டமோ பூச்சி புழுவோ தென்பட வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு பாலைவானம் போன்று காட்சி தருகின்றது. ஆனாலும் இந்தப் பகுதியில் ஆங்காங்கே மணல் பரப்பில் ஆயிரக்கணக்கான கற்களின் நடமாட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லை என்கின்றனர் புவியியல் ஆராய்ச்சியாளர்கள். மணல் பரப்பில் இந்த கற்கள் ஏன் நகருகின்றன? எதற்காக நகருகின்றன? எப்படி நகருகின்றன என்ற ஆயிரம் ஆயிரம் கேள்விகளுடன் ஆராய்ச்சியாளர்கள் இங்கு படையெடுக்க ஆரம்பித்தனர். 1972 ம் ஆண்டிலிருந்து 1980ம் ஆண்டு காலப்பகுதியில் இங்கு ஆராய்ச்சிகள் தீவிரம் அடைந்தது. இருப்பினும் இங்கே கல் தனது நகர்வைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறதே தவிர ஆராய்ச்சிகளுக்கான விடைகள் மட்டும் நகர்ந்தபாடில்லையாம்! இங்குள்ள கற்கள் மூன்று ஆண்டுகளில் முழுப் பிரதேசத்தையும் சுற்றி வருகிறதாம்! இதனை அந்தக் கற்கள் பணிக்கும் பாதை சுவடே அடையாளம் காட்டுகிறது. இங்கே கற்களின் பயணம் சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணிக்க ஆரம்பித்து, சமமாக அப்பிரதேசத்தை சுற்றி வருகிறது. இதேபோல சில சமயங்களில் தனியாக ஒவ்வொரு திசையிலும் பயணிக்கும். இதன்போது பின்னோக்கிய நகர்வினையும் சில சந்தர்ப்பங்களில் காணலாம். ஆனால் அதற்கான காரணத்தை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை! ஆனால் அவை நகர்ந்துள்ள விதம், பயணித்த பாதை மட்டும் தெளிவாக இருக்கிறது இந்த பள்ளத்தாக்கிற்கு அருகில் ஒரு மலை இருக்கிறது. அந்தமலையில் இருந்து விழும் கற்களே இந்த மணல் பரப்பில் நடக்கிறது. மலையில் இருந்து விழும் சில கற்கள் 10 ஆயிரம் அடி வரை நகர்கின்றது. சில கற்கள் சில சமயம் ஒரிரு அடிகள் வரை மட்டுமே நகர்கின்றது. கல்லின் நிறைக்கும் அவை நகர்வதற்கும் தொடர்புகள் இல்லை. இங்கு மணல் பரப்பில் கற்கள் மர்மமாக நகர்வதற்கு காரணம் இந்த பாலைவனத்தின் அமைப்பா? அங்குள்ள களி மண் காரணமா? காற்றின் வேகத்தினால் தள்ளப்படுகிறதா? மேலே சொன்ன எந்தக் காரணமும் அதற்கு சாத்தியமில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆக இந்த மர்மத்திற்கான விடை ஒரே குழப்பம்தான்! அது இன்னும் தீரவில்லை! நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியினாலேயே கற்கள் இவ்வாறு நகர்கிறது என மெஸசெட்ஸ் பகுதி ஹெம்ஷயர் பல் கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் சொன்ன விடையிலும் உறுதியில்லை. இந்த மரணப் பள்ளத்தாக்கிலுள்ள மர்மம் என்ன? என்ற கேள்வியுடன் ஆராய்ச்சிகள் நகர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஆராய்சிகளை விட இங்கு கற்கள் அதிவேகத்தில் நகர்கின்றன என்பது ஒரு பெரிய ஆச்சரியம்! *****************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக