சனி, 17 மே, 2014

குழந்தைகளின் சொர்க்கம்! - தேவராஜன்


குழந்தைகளின் சொர்க்கம்! - தேவராஜன் ---------............................................................ 26 .................................................................... ‘ஜாக்ஸன் 5’ இசைக் குழுவில் சுண்டிவிட்ட நாணயம் போல சுழன்று சுழன்று அவன் ஆடிப் பாடியபோது ‘என்ன ஓர்அழகான, திறமை மிக்கச் சிறுவன்!’ என்று அமெரிக்காவே வியந்தது! அவன் ஒன்பது வயதிலேயே நட்சத்திர அந்தஸ்தை பெற்றான். பின்னாளில் உலகமே பாப் இசை மன்னன் என்று அவனைக்கொண்டாடியது. அந்தச் சிறுவன் தான் மைக்கேல் ஜாக்சன்! மைக்கேல் ஜாக்சன் 1958 ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் - கேத்ரின் எஸ்தர் என்ற தம்பதிக்கு ஏழாவது மகனாக பிறந்தார். மைக்கேல் ஜாக்சனின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 பேர். இவர் தந்தை ஒரு இரும்பு ஆலையில் கிரேன் ஆபரேட்டர். ஜோசப் ஒரு இசைக் கலைஞன். ஜோசப் தன் சகோதரர்களுடன் பாண்டு வாத்திய குழுவில் இருந்தார். ஆனால் அவரால் சாதிக்க முடியவில்லை. அதனால் தன் மகன்களுக்கு கடுமையான பயிற்சிகளைக் கொடுத்தார். ஆறு வயதில் ஆரம்பப் பாடசாலையின் பாடல் போட்டியில் மைக்கேல் ஜாக்சன் முதல் பரிசு வாங்கினார் . பின் இசையில் நாட்டம் அதிகமாக மைக்கல் ஜாக்சன் தன் சகோதரர்களுடன் சேர்ந்து ஜாக்சன்-5 என்ற குழுவில் இணைந்தார். ‘ஜாக்ஸன் 5’ இசைக் குழுவின் மூலம் அந்தச் சின்ன வயதிலேயே இசை நிகழ்ச்சிகளை அமெரிக்கா முழுக்க நடத்தி நிறைய பணம் சம்பாதித்தான் மைக்கேல் ஜாக்சன்! அதே சமயம் அந்தச் சிறுவன் ஒரு சராசரி குழந்தைக்கான விளையாட்டு, பொழுது போக்குகள், கதை கேட்டல், அன்புச் சீராட்டல்கள், பெற்றோரின் கதகதப்பில் தூங்குதல், பொம்மைகளோடு விளையாடுதல் போன்ற இன்பங்கள் அவனுக்கு கிடைக்கவேயில்லை. அதுமட்டுமல்ல; வீட்டில் அப்பா, “ஏய் குரூபியே...” என்றுதான் அவனை அழைத்தார். சகோதரர்கள், “நீள மூக்குக்காரா...” என்று சொல்லி கேலி செய்தார்கள். ‘அழகில்லாதவன்’ என்று கேலி செய்யப்பட்டதாலும், தந்தையின் குரூரமான தண்டனைகளாலும் மன ரீதியான அழுத்தத்தில் இருந்த அந்த இளைஞன், தன் பால்ய கால ஏக்கங்களை நிறைவேற்ற நேவர்லேன்ட் என்கிற பண்ணை வீடு ஒன்றை வாங்கினார். லாஸ் ஏன்ஜலஸ்-லிருந்து 50 மைல் தொலைவில் உள்ளது சாண்டா பார்பரா. இயற்கை எழில் மிக்க ரம்மியமான சோலைகள் மற்றும் பசிபிக் கடலின் அலைகளாலும் சூழப்பட்ட அழகு பகுதி அது. உலகப்புகழ்ப்பெற்ற பணக்காரர்களின் ஓய்விடமாகவும் இவ்வூர் திகழ்கிறது. சாண்டா பார்பராவின் 50 மைல் வடமேற்கில் உள்ளது லாஸ் ஆலிவ்ஸ். இங்குதான் சுமார் 2600 ஏக்கர் பரப்பளவில் நெவர்லேண்ட் ரான்ச் ஹோம் எனப்படும் அழகிய பண்ணைவீட்டை முன்னாள் பாப் பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் தனது ஓய்விடமாக வைத்திருந்தார். நெவர்லேண்ட் ஒரு பிரம்மாண்டமான வீடு. மாயாஜாலக் கதைகளில் வருவது போன்ற அமைப்புடையது. இதை தன்னுடைய 33ம் வயதில், மிகப் பெரும் கற்பனா சக்தியில் மைக்கல் ஜாக்சன் அதை வடிவமைத்திருந்தார். அதை உலகின் மிகப் பெரிய சிறுவர் பூங்கா என்றே சொல்லலாம். இந்த மாளிகையில் ஏழு பாடும் குள்ளர்கள், சிம்பன்ஸி, மலைப்பாம்பு, மூன்று ஒட்டக சிவிங்கிகள், மான்கள், வாத்துக்கள், வரிக் குதிரைகள், நெருப்புக் கோழிகைளைக் கொண்ட ‘மினி ஜூ’ இருந்தது. சில்வர் ஓக் மரக்காடுகளில் பறவைகள் பாடின. காமிக்ஸ் பாத்திரங்களின் சிலைகள் நிறுவப்பட்டிருந்தன. வீட்டின் வாசலில் இருந்து அந்த மாளிகை சுற்றி ஒரு சிக்கு புக்கு ரயில் புகை விட்டுக்கொண்டு ஓடியது. நடு நடுவே குட்டி ஸ்டேஷன்கள். அதில் சாக்லேட் மற்றும் ஐஸ்கீரிம் விற்கும் கடைகள். குழந்தைகளுக்கான சினிமா தியேட்டர். அங்கேயிருந்த ஏரியில் பொம்மை வடிவிலான படகுகள். குழந்தைகளுக்குப் புரியும் வகையிலான படங்கள் கொண்ட புத்தகங்கள் நிரம்பிய லைப்ரரி இருந்தது. ஊனமுற்ற குழந்தைகளுக்கான ஸ்பெஷல் படுக்கை வசதிகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் உண்டு. முழுக்க முழுக்க பொம்மைகளால் நிரப்பப்பட்ட பெரிய ஹால் என்று குழந்தைகளின் சொர்க்கமாகவே இருந்தது அந்த மாளிகை. இந்தப் பிரம்மாண்டமான மாளிகையில் நிறைய குழந்தைகளை கூட்டி வந்தார். அவர்களுடன் ரயிலில் அந்த மாளிகையைச் சுற்றிச் சுற்றி வந்தார். தியேட்டரில் அவர்களுடன் அமர்ந்து பல காமிக்ஸ் படங்களைக் கண்டு களித்தார். ரோஸ்வுட் பியானோவில் இசை கற்றுக் கொடுத்தார். தான் மிகவும் ஆசைப்பட்டு கட்டிய ‘நெவர்லேண்ட்’ மாளிகையில் மொத்தம் நான்கு ஆண்டுகளே வாழ்ந்தார் ஜாக்ஸன். கட்டற்ற செலவுகளைச் சமாளிக்க முடியாமல் அந்தக் கனவு மாளிகை மூடப்பட்டது. மிகப் பெரிய கனவு மாளிகை கட்டி, அதில் தானும் ஒரு சிறுவனைப் போல் வாழ நினைத்த அந்த இசை அரசனின் கனவு பாதியிலேயே கலைந்து போனது. ==================================*****************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக