வெள்ளி, 17 ஜனவரி, 2014

மாயமான மாயா இனம்! - தேவராஜன்.


மாயமான மாயா இனம்! - தேவராஜன். மெக்சிகோவின் கிழக்குப் பகுதியில் உள்ள மழைக்காடுகளுக்குள் பிரமிக்க வைக்கும் சிதலமடைந்த கட்டங்கள், பிரமீடுகள், வழிபாட்டு தலங்கள் என அமைந்த ஒரு நகரொன்றை விஞ்ஞானம் மற்றும் கலைக்கான ஸ்லோவேனிய கல்லூரியின் துணைப் பேராசிரியரான ஐவன் ஸ்பிரஜக் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். அந்த நகரில் குறித்த பகுதியில்15 பிரமிட்டுக்கள் (75 அடி உயரமான பிரமிட் ஒன்று அடங்கலாக) , விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கான மைதானங்கள், உயரமான செதுக்கப்பட்ட கற்தூண்கள், போன்றவற்றைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த அடர்ந்த, வழிதெரியாத, வெளிச்சம் புகாத காட்டில் எப்படி இவ்வளவு பெரிய சிற்பக்கலையுடன் கட்டிடங்களை எழுப்ப முடிந்தது? இவர்களது கட்டிடங்கள் ‘டன்’ கணக்கிலான கற்களை கொண்டு அந்த மர்ம நகரத்தினில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவுப்பெரிய கற்களை அடர்ந்த காட்டிற்குள் கொண்டு வந்து அவற்றை சரிவர அடுக்கி கட்டிடங்களையும் பிரமிடுகளையும்அமைத்துள்ளதும் ஆச்சரியமிக்கவையாகும். இந்த அடர் காட்டுக்குள் அவர்கள் கண்டுபிடித்த அந்த புதையல் நகரத்தை மாயன் நகர் என்கிறார் ஆராய்ச்சியாளர்கள். மாயா நகர் பெருமைகள், மாயா மக்களின் திறமைகள், சாதனைகள், அவர்களின் வாழ்க்கை காலம் பற்றி அறிஞர்கள் ஆய்வுகளின் வழியாகத் தெரிந்துகொள்ளலாம்! மாயா நாகரீகம் வரலாறு எனும் பேழையில் புதைந்துபோன ஒரு நாகரீகம் தான்மாயா நாகரீகம். மாயா இனத்தவர்களின் துல்லியமான கணிதமுறை, பிரமிக்கவைக்கும் கட்டிடக்கலை, வியக்கவைக்கும் வானிலை கணிப்புக்கள், இதையெல்லாம் விட வருங்காலத்தை கணித்து கூறும்அவர்களது நாட்காட்டி என பிரமிக்கவைக்கிறார்கள் மாயாக்கள். மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரிகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கியது. எழுத்து மொழி கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரிகத்தைச் சேர்ந்த மக்களே. ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பட எழுத்து முறையை மாயன்கள் பயன்படுத்தினர். கல்வெட்டுக்கள் சிற்பங்கள் போன்றவற்றில் எழுதியது மட்டுமில்லாமல், ஒருவகையான புத்தகம் தயாரிக்கும் முறையையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல புத்தகங்களை அவர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. இதில் இப்போது கண்டெடுக்கப்பட்டவை தப்பியவை நான்கு நூல்கள் தாம். மாயா நாகரீக காலம் வரலாற்றுஅறிஞர்கள் மாயா நாகரிகத்தின் நினைவுச்சின்ன கட்டமைப்புகளை கார்பன் தேதியிட்டல் மூலம் ஆராய்ந்த போது இவர்களின் நாகரிகமானது கி.மு. 2600 ம் ஆண்டு வாக்கில் தொடங்கியது. மாயா நாட்காட்டியானது கி.மு. 3114 ஆகஸ்ட் 11 ல் இருந்து தொடங்குகிறது. மாயாக்களின் வானியல் அறிவு மாயன்கள் வானியலில் வல்லமை பெற்றிருந்தனர். அவர்கள் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை மிக நுணுக்கமாக கணித்துஆவணப்படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கிட்டுத் தீர்மானிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை அடியொட்டியே சடங்குகளை நடத்தினர். ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்படுகின்றன. இவ்வளவு வளமையாக ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம் படிப்படியாக அழிந்து போனதற்கான காரணத்தை அறிஞர்கள் இன்னும் உறுதிப்படக் கூறவில்லை. அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள், காடுகளை அழித்து அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தாக்குப் பிடிக்கவில்லை, ஸ்பானிய குடியேற்றங்களுடன் வந்த அம்மை மற்றும் காலரா போன்ற வியாதிகள் பெருவாரியான மாயன்களை மிகக் குறுகிய காலத்தில் அழித்திருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். மாயாக்களின் மறைவிற்கு இயற்கை சீற்றங்களே முக்கிய காரணம் என சிலர் கூறுகிறார்கள். மாயாக்களின் கலை திறன் மிகவும் நுட்பமானது, சிற்ப கலையும் வரையும் திறனும் இவர்கள் விட்டுச் சென்ற அற்புத பொக்கிஷங்களின் வடிவில் இன்றளவும் நம்மால் காண முடிகிறது. பாக்ஸ் -1 ஆராய்ச்சியாளர்கள் மாயாக்களின் நாகரிகம் கி.மு 2000 ஆண்டில் தொடங்கி சிறுகச் சிறுக வளர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். கி.மு 2000 முதல் 250 வரை வளர்ச்சி காலமாகவும், 250 தொடங்கி 900 வரை மாயாக்களின் பொற்காலமாகவும் கருதப்படுகிறது. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டுகள் மாயாக்களின் உச்சகட்ட பொற்காலம் எனவும் கூறுகிறார்கள். * பாக்ஸ்-2 மாயாக்களால் டிகல், பேலன்கூக், கூபன்,கலாக்முல்,டாஸ்பிளாஸ், உசாக்டூன், அல்டன் ஹ போன்ற நகரங்கள் மிகவும் திறமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுள் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது பிரமிடும் அரண்மனையும் ஆகும். மாயா நகர பகுதியில் காணப்படும் ஸ்டிலே எனப்படும் கல் வகையில் இவர்களின் ஆட்சிமுறை, போர்களில் பெற்ற வெற்றி மற்றும் பல முக்கிய தகவல்கள் ஹெரோக்ளிபிக் எழுத்துவடிவில் செதுக்கப்பட்டுள்ளது. மாயாக்கள் தூர தேச வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்ட உண்மைகள். பாக்ஸ்-3 19ம் நூற்றாண்டில் மாயா நகர பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவையாவும் புரியாத புதிராகவே இருந்தது. 1960 முதல் 1970 வரையில் அனைத்து எழுத்துக்களுக்கும் அர்த்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டு படிக்கப்பட்டன. இந்திய நாகரிகத்தை அடுத்து மாயாக்களும் ‘0’ பூஜியத்தை கணக்கு வழக்குகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் 0 முதல் 20 வரையிலான எண் வகைகளை அமல்படுத்தியிருக்கிறார்கள். கல்வெட்டுகளில் இவர்கள் லட்சம் வரையில் கணக்கு வழக்குகளை எழுதி பார்த்திருக்கிறார்கள். அவை பெரும்பாழும் வான் ஆராய்ச்சிக்கு பாயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிரகங்களின் அசைவுகளும், வான் நிகழ்வுகளும் துள்ளியமாக கணிக்கப்பட்டுள்ளன. **********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக