திங்கள், 27 ஜனவரி, 2014

வானந்தரத்தில் ராட்சச நடுக்கல்கள்! - தேவராஜன்.


வானந்தரத்தில் ராட்சச நடுக்கல்கள்! - தேவராஜன். **************************************************************************** இங்கிலாந்து நாட்டின் வில்ட்ஷயர் பகுதியில் உள்ள ஸ்டோன்ஹென்ஞ் நினைவுச் சின்னம் வரலாற்றுப் புகழ் பெற்றதாகும். உலகின் பாரம்பரிய நினைவுச் சின்னங்களுள் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது பூமியில் புதைக்கப்பட்ட கருங்கல் பலகைகளால் ஆன ஒருவட்டவடிவமான அமைப்பாகும். இங்கிலாந்தில் வில்ட்ஷயர் பகுதியில் அமைந்து இருக்கும் இந்த இடம், நம் ஊர் கிராமங்களில் நுழைவு களில் இருக்கும் சுமைதாங்கிக் கற்களை ஞாபகப்படுத்துகிறது. இந்தக் கற்கள் ஒரு வட்டத்தை உருவாக்குகின்றன. இந்தக் கற்கள் எல்லாம் கி.மு. 3000ல் இருந்து இங்குதான் இருக்கின்றனவாம். ஒவ்வொரு கல்லும் டன் கணக்கில் எடை கொண்டவை. இவ்வளவு எடையுள்ள கற்கள் சக்கரம் பயன்பாடு மற்றும் இயந்திரங்கள் இல்லாத காலத்தில் எப்படி கொண்டுவரப்பட்டன என்பவை நம்பமுடியாத ஆச்சரியமா நீள்கிறது. இவை எதற்காகக் கொண்டுவரப்பட்டது என்பதும் உலகின் தீரா மர்மங்களில் ஒன்றாக இந்த ஸ்டோன் ஹென்ஜ் முக்கியமான ஒன்றாகவே இருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் இந்த ஸ்டோன் ஹென்ஜ் கற்களின் காலம் தோராயமாக 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கணித்திருக்கிறார்கள். இன்றைய இங்கிலாந்து நாட்டின் மிகப்பழமையான புராதனச்சின்னங்களில் இதுதான் முதலிடமாக கருதப்படுகிறது. அதன் மர்மமும் அதன் கூடுதல் சிறப்பாக இருக்கிறது. ஸ்டோன் ஹென்ஜ் பார்ப்பதற்கென்ற உலகளவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் தினமும் வருகிறார்கள். ஒரு சில மலைகளைத் தாண்டிச் செல்லும் பயணத்தில் திடீரென இந்த அமானுஷ்ய இடத்துக்குச் செல்லலாம்! உயர்ந்த மலைப்பரப்பில், பச்சை பசேல் புல்வெளி மத்தியில் உறைந்த மவுனத்தின் உருவாக நிற்கும் கற்களும், இந்த இடத்தில் நிலவும் பேரமைதியும், வீசும் வித்தியாசமான காற்றும், பளீர்ரென பட்டுத் தெரிக்கும் சூரிய வெளிச்சமும் உங்களுக்குள் ஒரு திகில் படப்படப்பையும் மர்மத்தாக்கத்தையும் நிச்சயம் உண்டாக்கும். ஸ்டோன் ஹென்ஜ் உருவாக்கப்பட்ட விதமாக ஆராய்ச்சியாளர்களால் கணிக்கப்பட்ட தகவல்கள் சில இருக்கின்றன. அவை: 1) முதலில் கி.மு.3100ம் ஆண்டில் மதச்சடங்குகளுக்காக தொடர் பள்ளங்கள் தோண்டப்பட்டிருக்கின்றன. 2) அதன் பின்னர் ஆயிரம் ஆண்டுகள் கழித்துதான் இந்த கல் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. வேல்ஸ் மலையிலிருந்து பெரிய பெரிய கருங்கற்கள் கிட்டத்தட்ட 240மைல் தொலைவுக்கு எடுத்துவரப்பட்டிருக்கிறது. சக்கரம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் எதற்காக, யாரால், எப்படி இந்தக் கற்கள் இவ்வளவு தூரம் எடுத்து வரப்பட்டிருக்கும் என்பது மர்மமே. இவ்வாறு எடுத்து வரப்பட்ட கற்கள் முற்றுபெறாத ஒரு இரட்டை வட்ட வடிவில் மிட்சம்மர் சூரிய உதயத்திற்கு அலைன்மெண்ட் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது. 3) இதன் முன்னர் மூன்றாவது நிலையாக கி.மு.2000வது ஆண்டில் மேலும் சில கற்கள் 25மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்திலிருந்து எடுத்துவரப்பட்டிருக்கிறது. 4) இதன் பின்னர் மேலும் 500 ஆண்டுகளுக்குப் பிறகு யாரோ ஒரு சிலரால் இன்றைய குதிரைக் குளம்பு போன்ற வட்ட வடிவத்தில் இந்தக்கற்கள் மறுஒழுங்கு செய்யப்பட்டு அடுக்கப்பட்டிருக்கிறது. இன்று வரையிலும் இந்தக்கற்கள் எதற்காகஅடுக்கப்பட்டிருக்கிறது? யாரால் அடுக்கப்பட்டது? யாருமில்லாத வானந்தரத்தில் வெட்ட வெளியில் நடப்பட்டிருக்கும் இந்தக் கற்களின் உபயோகம் என்ன? யாருக்கு அது உபயோகப்பட்டிருக்கும்? இந்தக் கற்கள் சொல்லும் செய்தி என்ன? ம்ஹூம் இதுவரை எந்தவொரு முடிவையும் பதிலையும் இந்த உலகத்துக்கு யாரும் சொல்லவும் வில்லை! நட்டக்கல்லு பேசுமா? அது பேசினால்தான் உண்மை தெரியுமோ என்னவோ? அது வரைக்கும் இது ஒரு வழிபாட்டுத்தலம், வானவெளி சம்பந்தப்பட்ட காலண்டர், சுடுகாட்டு மயானம் என்று விதவிதமான செவி வழிக்கதைகள் சொல்லப்பட்டாலும் இதன் உண்மையான தத்துவம் அல்லது இதன் பயன்பாடு இன்னமும் ஆராய்ச்சியாளர்களால் தீர்க்கப்படாத ஒரு மர்ம முடிச்சுகளாகத்தான் உள்ளது. பாக்ஸ் செய்தி கச்சிதமாக வரைந்த ஒரு வட்டம் போல் இருக்கும் இந்தக் கற்கள் நிற்கும் இடம். மதி ரீதியிலான சடங்குகளுக்கான எந்திரமாக இருக்குமோ என்ற கருத்தும் நிலவுகிறது. ஸ்டோன் ஹென்ஜ் கற்கள் புதைக்கப்பட்ட பகுதியின் அடியில், நிறைய எலும்புக்கூடுகள் இருப்பதால், இது கல்லறை அல்லது நம்மூர் பழங்காலத்து நடுக்கல் போல இருப்பதாகவும் பலர் கருதுகிறார்கள். ஆனால், எலும்புகளைத் தவிர மனிதர்கள் பயன்படுத்தும் எந்தப் பொருளும் இங்கே இல்லை. இதனால் வேற்றுக் கிரகவாசிகள் பூலோக மனிதர்களைப் பலி கொடுத்து ஏதேனும் செய்தார்களா என்றும் மர்மமும் தொடர்கிறது. *********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக