வியாழன், 2 ஜனவரி, 2014

வாழத் தகுதியற்ற நகரம்! - தேவராஜன்


தினமும் இலங்கையிலிருந்து நூற்றுக் கணக்கான பேர் வந்து இறங்கிய இடம். சென்னையிலிருந்து இந்தோ-சிலோன் போட் மெயில் மூலமாக வரும் பயணிகள், ரயிலிலிருந்து இறங்கி, கப்பல் மூலம் தலைமன்னார் செல்வதற்காக ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்ட தளம். ராமாயணத்திலும் சங்க இலக்கியத்திலும்பேசப்படும் இடம். வங்க கடலும் இந்துமாக் கடலும் சங்கமம் ஆகும் இடம். இத்தனைச் சிறப்பு பெற்ற அந்த இடம் தான் தனுஷ்கோடி! இப்போது தனுஷ்கோடியில் நகரம் இருந்தது என்பதற்கான சான்றாக மிச்சம் இருப்பது சிதிலமடைந்த தேவாலயமும், சில கட்டடங்களின் இடிபாடுகளும், ஓலமிடும் கடற்கரையும் தான். இந்திய வரைப்படத்தில் இருந்து தனுஷ்கோடி என்ற நிலப்பரப்பை காலம் கை கொண்டு அழித்தது, மூர்க்கத்தனமான கோரபசியோடு மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் அந்த நகரைப் புரட்டி, சுருட்டி கடலுக்குள் எறிந்த தினம் டிசம்பர் 22, 1964. தனுஷ்கோடியில் அன்று தொடக்கமே வழக்கத்தை விட, ஏதோ விபரீத விளைவுகளை உணர்த்தும்படி நகர்ந்தது. அதை உறுதி படுத்தும்விதமாக அதிகமான காற்றும் மழையும் அடித்துக்கொண்டிருந்தது. கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதற்கு யாருக்கும் அனுமதியில்லை. அன்று வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு ,எப்போது,கரையைக் கடக்கப் போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. பாம்பன் பாசன்ஜெர் ரயில் எண் 653, பாம்பனில் இருந்து தனுஷ்கோடிக்கு சென்றுகொண்டிருந்தது. மணி பகல் 11.55. ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன், பேய் காற்று அசுர வேகத்தில் வீசியது. வேகம் தீவிரம் அடைந்து, கடல் கொந்தளித்தது. தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கி இருந்ததால், அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் செயல் இழந்து இருந்தன. ரயில்வே சிக்னல், தந்தி கம்பங்கள் என எதுவும் வேலை செய்யவில்லை. டிரைவர் செய்வதறியாது திகைத்தார். கண் இமைக்கும் நேரத்தில் ஓலமிட்ட பேய்காற்றும் அதன் சவாரி செய்த பேரலையும் ரயிலை வாரி, சுருட்டி கடலின் வாயிக்குள் திணித்தது. ரயிலில் பயணித்த அத்தனை பயணிகளும் கடலுக்கு மதிய உணவானார்கள். தனுஷ்கோடி நகரின் நிலைமை அந்தோ பரிதாபம்! மின்கம்பங்கள் உடைந்தும் மின் கம்பிகள்அறுந்து ஊரே இருளில் மூழ்கியது. கட்டடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத் தொடங்கின. அவசரகால தகவல் தொடர்புச் சாதனமான தந்திக் கம்பங்களும் அறுந்து தொங்கின, இன்ன நடக்கிறது என்று தகவல் சொல்லக் கூட அங்கிருந்தவர்களுக்கு வழி இல்லமால் போனது. அங்கு வசித்த மக்களில் பெரும்பாலனவர்கள் மீனவர்கள். அவர்கள் குடும்பம் குடும்பமாக பாதுகாப்பான இடம் தேடி நகரத் தொடங்கினார்கள். ஊர் முழுவதும் வெள்ளமும் சோகமும் பொங்கி வழிந்தது! அன்றைய தமிழக முதல்வர் பக்தவத்சலம் துரிதமாக செயல்பட்டார். மத்திய அரசின் உதவியை நாடினார். மத்திய அரசும் போர்கால அடிப்படையில் செயல்பட்டது. தனுஷ்கோடி துயரம் தேசியப் பேரிழப்பு என்று அறிவித்தது. ராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கி விரைந்தன. முதல் தேவை நீரும் உணவும். வான்படை மூலம் ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தியக் கப்பல் படையின் மீட்புக் குழுவும் களத்தில் இறங்கியது. காப்பாற்றப்பட்ட மக்களை விட கண்டெடுத்த சடலங்களே அதிகம் என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள். உயிர்ப்பிழைத்தவர்களை ‘சாரதா‘ என்னும் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல விரைந்தது. தனுஷ்கோடியை மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கிய புயல் 1500 அதிகமான மக்களின் உயிரைக் குடித்தது. 1500 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது. டிசம்பர் 21, 1964ம் ஆண்டு முந்தைய தினங்களில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த துறைமுகம், ரயில்வே நிலையம், நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள், போலீஸ் ஸ்டேஷன், சுங்க வரி அலுவலகம், தபால் நிலையம், பள்ளிக்கூடம், இந்துக் கோயில்கள், தேவாலயங்கள், கடைத்தெரு, ஐந்தாயிரம் பேர் வசித்த ஊர், எப்போதும் கடலில் மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் என்று இருந்த தனுஷ்கோடி என்பது எல்லாம் பழைய கதை. இன்று இது வாழத் தகுதியற்ற நகர் என்று கடல் அலைகள் கரைக்கு வந்து, வேடிக்கைப் பார்ப்பவர்களிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறது. பாக்ஸ் செய்தி தனுஷ்கோடி கடற்கரை, வில்லைப் போன்று வளைந்து காணப்படும். இதனால் தான் தனுஷ்கோடி என்று பெயர் வந்தது. தனுஷ் என்றால் வில், கோடி என்றால் முனை என்ற அர்த்தத்தில் தனுஷ் கோடி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆசியாவின் 20 நூற்றாண்டுப் பேரிழப்பாக ஐ.நா சபை இந்த சம்பவத்தை அறிவித்தது. ‘வாழத் தகுதி இல்லாத ஊர்’ என்று தனுஷ்கோடியை அரசு அறிவித்துள்ளது. அரசாங்கம். ***************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக