புதன், 30 அக்டோபர், 2013

ஒரு வீடு இறந்துக்கொண்டிருக்கிறது... -தேவராஜன்


ஒரு வீடு இறந்துக்கொண்டிருக்கிறது... -தேவராஜன் அந்த வீடு ஆனந்தம் விளையாடும் வீடு. அது சந்தோஷங்களால் ஆனது. அன்பினால் அமைத்த வாசல். பாசத்தினால் வேய்ந்த ஓடுகளை உடையது. நேசக்காற்று வரும் ஜன்னல்கள். நட்பும் சுற்றமும் மகிழ்ந்து சிரித்த சிரிப்புகள் நிரம்பி கிடக்கும் முற்றம். மிக்க பல தலைமுறை கண்டது. வெங்கடாஜல முதலியார், ராமசாமி முதலியார், சண்முக முதலியார் என மூன்று தலைமுறை கடந்து, இப்போது ஐந்தாவது தலைமுறையில் இருக்கும் வீடு. இது பார்க்காத சுபகாரியங்களும் இல்லை; துக்க காரியங்களுமில்லை. அந்த தெருவில் அதுதான் பெரிய ஓட்டு வீடு. நாற்சார் வீடு என்பார்கள். நடுவில் கூரையிடப்படாத முற்றம், அதைச் சுற்றி தாழ்வாரம், கூடம், அறைகளும், அமைத்துக் கட்டப்பட்டது. வாசற்படிக்கு முன்பே ஒரு பெரிய தாவாரமும் அதன் ஓரத்தில் ஒரு திண்ணையும் இருக்கும். இரவில், அப்பா அந்த திண்ணையில் அமர்ந்து காற்று வாங்கிக்கொண்டிருப்பார். நாங்கள் தெரு தாவாரத்தில் விளையாடுவோம். வெளியில் இருக்கும் நல்ல வேம்பு மரம் தலை அசைத்தாடும் அழகும், அதன் ஊடே கசியும் நிலவொளியும் பார்க்கப் பார்க்க அழகுபெறும். நான் நல்ல ஓவியன் என்றால், அதை இப்போது தத்ரூபமாக வரைந்து காட்டிவிடுவேன். இரண்டு தாவாரங்களைத் தாண்டி சென்றால், பெரிய திறந்த வாசல். அதன் இடது புறம் கொல்லைப்புறம் செல்லும் நடை பாதை. திறந்த வாசலுக்கு முன்பு ஒரு நடை பாதை இருக்கும். திறந்த வாசலுக்கு வலப்புறம் பெரிய கூடம். சுண்ணாம்பு கல் பதித்த தரை. கூடத்தைத் தாண்டி நடை பாதை வழியே சென்றால் சமையலறை வரும். இவ்வளவு பெரிய வீட்டை பராமரிப்பது என்பது லேசுபட்ட காரியமா என்ன? தாத்தாவோடு தாத்தாவுக்கு இரண்டு பிள்ளைகள், தாத்தாவுக்கு ஐந்து பிள்ளைகள். அப்பாவுக்கு ஐந்து பிள்ளைகள் நான்கு பெண்கள். சுபகாரியங்கள் வந்தால் வீடே திருவிழாகொண்ட கோயில் போல இருக்கும். தொடர்ந்து சில ஆண்டுகள் விவசாயத்தில் நஷ்டம். அப்பா ரொம்பவும் அல்லல்பட்டார். கஷ்டம் வீட்டைச்சுற்றி தலைவிரித்தாடியது. திருநள்ளாற்றில் இருந்து வந்த ஒரு ஜோசியர், ‘இந்த வீடு 100 ஆண்டுகடந்து விட்டது. இதோட ஆயுசு முடிஞ்சிட்டது. அதான் இப்படியொரு கஷ்டம்.’ என்றார். அம்மா பரிகாரம் கேட்டாங்க. ‘இந்த வீட்டின் தலைவாசல் நிலையை எடுத்து, வேறு இடத்தில் வைத்து , கணபதி ஹோமம் செய்தால் வீட்டின் ஆயுள் கொஞ்சம் கூடும். உங்கள் கஷ்டங்கள் படிப்படியாக குறையும்’ என்று வாங்கிய பணத்துக்கு வஞ்சம் இல்லாமல் ஆறுதல் சொன்னார். ஊர் கொத்தனார் வந்தார். நிலையை எடுத்தால் பக்க சுவர்கள் சேதமாகும். செலவு கூடும் என்றார். இதற்கிடையில் முத்தப்பா பெரியப்பா, ‘ குடும்பம் இருக்கிற வீட்டில் தலைவாசல் நிலையை எடுத்தால், வீட்டில் எழவு விழும்’ என்று அவர்மாட்டுக்கு ஒரு குண்டு போட்டு, நிலை எடுக்கும் நினைப்புக்கு அப்போதே முற்றுபுள்ளி வைத்தார். நாங்கள் படித்து, வேலை தேடி திரிந்தோம். சென்னையிலும் பெங்களூரிலும் அவரவர் தகுதிக்கு வேலைக்கிடைத்தது. ஆண்டுகள் சில கடந்தது. குடும்ப கஷ்டம் ஓரளவுக்குக் குறைந்தது. சேமிப்பு பணம் லட்ச ரூபாய் இருந்தது. பழுதுபட்ட வீட்டை பராமரிக்க திட்டமிட்டோம். வீட்டுக்குள் குளியல் அறை, டாய்லெட் கட்ட நினைத்தோம். அப்பா ஒன்றும் சொல்ல வில்லை. ஆனால், வீட்டு திண்ணையை எடுத்து போர்ட்டிகோ வைக்கத்தான் மறுத்துவிட்டார். பிடிவாதம் பிடித்தார். “இந்த திண்ணை எவ்வளவு இடத்தை அடைக்குது. திண்ணையை எடுத்தா இங்க இடம் விசாலமாக இருக்கும்ல?” என்றான் அண்ணன் கண்ணன். திண்ணை ஆங்கொன்றும் இங்கொன்றுமாக சிதலமடைந்துதான் இருந்தது. அப்பா திண்ணையைப் பற்றி அன்று பாடமே எடுத்து விட்டார். “ அமர்வதுக்கும் இளைப்பாறுவதற்கும்தான் திண்ணைன்னு நினைக்கிறீங்க போல. வெளியிலிருந்து நடந்து வருபவர்களின் கால்களோடு ஒட்டிக்கொண்டு வரக்கூடிய அழுக்குகள் திண்ணைகளில் சேராது. திண்ணை எப்போதுமே சுத்தமாக இருக்கும். திண்ணையில் குடும்பத்துடன் அதிகம் நெருக்கமில்லாத வெளியாரை உபசரித்தல், தொழில் ரீதியான வெளியார் தொடர்புகள் போன்றவற்றுக்கு இந்த திண்ணை உதவும்பா. ஒரு காலத்தில் சிறுவர்களுக்குக் கல்வி புகட்டும் இடமாகவும் இவை இருந்ததுண்டு.” என்று திண்ணைப் புராணம் வாசித்தார். கடைசியில் திண்ணை இடிக்கப்பட்டு, நாங்கள் திட்டமிட்டபடி போர்டிகோ அமைத்துவிட்டோம். ஏதோ செய்யட்டும் பசங்க என்று அப்பா ஒதுங்கிவிட்டார். அதுக்கு அப்பறம் அந்த வீட்டில் தான் அப்பாவுக்கு சஷ்டியப்த்த பூர்த்தி, தங்கச்சிக்கு கல்யாணம், மூன்று அண்ணன்களுக்கு கல்யாணம் எல்லாம் நடந்தது. காலம் சரசரவென ஓடிவிட்டது. அப்பா ஒருநாள் பக்கவாதம் வந்துபடுத்துவிட்டார். ஆறுமாதம் அவஸ்தைப்பட்டு ஒரு நாள் காலையில் அவர் உயிர் பிரிந்துவிட்டது. அதுக்கப்பறம் வீடு வெறிச்சோடியோய்விட்டது. அப்பாவும் அம்மாவும் மட்டுமே வசித்த வீடு, அப்பாவுக்குப்பிறகு அம்மா சென்னை வந்து விட்டார்கள். பெரியக்காவும் தங்கச்சியும் திருவாரூரிலும் சின்னக்கா திருவையாற்றிலும் வசிக்கிறாங்க. அண்ணன்கள் மூன்று பேரும் தம்பியும் சென்னையில் வசிக்கிறாங்க. நான் காஞ்சிபுரத்தில் வசிக்கிறேன். அவரவர்கள் அங்கங்கே செட்டிலாகிவிட்டோம். ஆதலால் நல்லது கெட்டதுக்கு மட்டுமே திருக்கண்ணபுரம் வந்து செல்கிறோம். ஏதோ கொஞ்ச நேரம் சொந்த வீட்டில் இளைப்பாறிவிட்டு கிளம்பிவிடுவது பழக்கமாகிவிட்டது. ‘வீடு என்பது வெறும் கட்டிடங்கள் மட்டும் இல்லை. அதற்கும் உயிர் உண்டு. நாம் எத்தனை வருடங்கள் அதில் வாழ்கிறோமோ, அத்தனை வருடங்களும் அந்த வீடும் உயிர்ப்புடன் இருக்கும்... வீட்டை விட்டு விலகி செல்ல செல்ல அந்த வீடு இறக்க தொடங்குகிறது...’ என்றோ அப்பா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. வேலை நிமித்தமாக சென்னையிலிருந்து திருவாரூர் வந்த எனக்கு, ஊருக்குப் போகவேண்டும் போல இருந்தது. மாலையே வீட்டுக்கு வந்துவிட்டேன். வீடு அலங்கோலமாக கிடந்தது. குப்பை கூளமாக ஒட்டடை சூழ்ந்து கிடந்தது. வவ்வால்கள் குடும்பம் குடும்பமாக வசிக்கிறது போல. நாற்றம் தாங்கமுடியவில்லை. எலிகள் தொல்லை தாங்க முடியவில்லை. உத்திரத்தில் பாம்பு தோல் உரித்துபோட்டிருந்தது. கொல்லைக்கு வந்து கிணற்றில் நீர் இறைத்து குளித்து விட்டு, பக்கத்தில் இருக்கும் சிவன் கோயிலுக்குப் போய் வந்தேன். அப்படியே பெருமாள் கோவிலுக்கும் போய்வந்தேன். அங்கேயே இரவு முனியோதரன் பொங்கல் வாங்கி சாப்பிட்டுமுடித்து வீடு திரும்பினேன். கரென்ட் இல்லை. புழுக்கமாக இருந்தது. அவ்வப்போது முற்றத்தில் இருந்து காற்று வந்து ஆசுவாசப்படுத்தியது. துõக்கம் வரவேயில்லை. கமலா அக்கா, சாமி பெரியப்பா, அப்பாவின் இறப்புகள் என் கண்ணில் வந்து நிழலாடியது. அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்கா, தங்கைகள் எல்லாம் இந்த கூடத்தில் ஒண்ணா உட்கார்ந்து சிரித்து, பேசி சாப்பிட்டது, நேசித்த ரகசிய சினேகிதிக்காக நான் ஏங்கி அழுத இரவுகள், என்னுடைய இருபத்தியொரு வயது வரையிலான அதிகபட்ச சந்தோசம், துக்கம், கனவு, பரபரப்பு என எல்லாவற்றையும் இந்த வீட்டின் ஒவ்வொரு சுவரும் நன்றாகவே அறியும்... அதையெல்லாம் எனக்கு இப்போது நினைவுகூர்ந்ததுபோல இருந்தது. எப்போதும் என் நண்பர்களிடத்து இந்த வீடு முக்கியத்துவம் பெற்றது. வவ்வாலடி வைரம் தியேட்டரிலோ, திருமருகல் பரணி தியேட்டரிலோ படம் பார்க்க செல்வதென்றாலும் சரி, படிப்பதென்றாலும் சரி, ஊருக்கு செல்வதென்றாலும் சரி எல்லாம் என் வீட்டின் கொல்லைப்புறத்து கிணற்றங்கரையில்தான் முடிவு எடுக்கப்படும். இப்போது அதை சீண்டுவார் யாரும் இல்லை... அப்பா இருந்தபோதாவது அப்பா, அம்மாவுடன் சில நாட்கள் இருந்து போகணும்னு உள்ளுக்கும் ஆசை இருக்கும். பேரப்பிள்ளைகளும் தாத்தா, பாட்டியைப் பார்க்கணும்... தாத்தா வீட்டுக்குப்போகணும்னு கோடை விடுமுறையில் அடம்பிடிப்பார்கள். அண்ணன், அக்காள், தம்பி , தங்கை எல்லாம் குடும்பத்தோடு வருஷத்து இரண்டு முறையாவது வந்து போவோம். இப்ப, நகர நாகரீகத்தில் ஊறிவிட்ட பிள்ளைகள் வீடியோ கேம், கிரிக்கெட் விளையாட்டு என்று இருக்கிறார்கள். தாத்தா வீட்டுக்குப் போகணும்னு அவங்களுக்கு தோணுவதில்லை. அப்பாவோடு இந்த வீட்டுக்கு இருந்த ஒரு பாச பிணைப்பு கொஞ்சம் கொஞ்சமா விலகிவிட்டது. இப்போ ரெண்டு மூணு வருஷமா யாரும் வீட்டுப்பக்கம் தலைக்காட்டறதே இல்லை. தலைமுறை இடைவெளியும், கால மாற்றமும் தன்னை தனிமைப்படுத்தி விட்டதை இந்த வீடு உணர்ந்துவிட்டதோ? இனிமேல் இந்த வீட்டை பராமரித்து அன்பு காட்ட யாரும் இல்லை என்று நினைத்ததோ என்னவோ இந்த வீடு தன்னைத் தானே தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு போய்விட்டதன் அடையாளமாக ஆங்காங்கே சுவர் வெடிப்புகளும், கூடத்து மரத்துõண்களில், உத்திரத்தில் மொய்த்திருக்கும் கரையான்களும் உணர்த்தின. எலிகளும் அணில்களும் ஓடி ஓடி ஓடுகள் உடைந்து ஆங்காங்கே ஓட்டை தெரிந்தது. மழை வந்தால் போச்சு வீடு குளமாகிவிடுவது நிச்சயம். யாரும் இங்கே வசிக்காததால் வீடு ஓர் அனாதையாகிவிட்டது போல, அது ரொம்பவும் துயரப்பட்டிருக்கிறது. தினமும் அது தன் உறவுகளை நினைத்து நினைத்து அழுதுகொண்டிருக்குமோ என்னவோ தெரியவில்லை. ஐந்து தலைமுறையாய் மனுஷர்களை சுமந்து, அவர்களோடு கலந்து இருந்து வீடு, இன்று யாரும் இல்லாமல், வௌக்கு ஏற்றக்கூட ஆள் அரவம் இல்லாமல் இருப்பது எவ்வளவு சோகமாக இருக்கும்? பாவம் இந்த இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளில் இந்த வீடு கொஞ்சம் கொஞ்சமாக இறக்க தொடங்கிவிடும். அதன் அடையாளமாக இப்போதே சிதிலமடையதொடங்கியிருக்கிறது. பொழுது விடிந்தது. சென்னைக்குப்புறப்பட்டேன். சொந்த வீட்டை யார் காப்பாற்றுவது? யார் அங்கே வசித்து? யார் பராமரித்து ,அதன் மீது அன்புகாட்டி இங்கேயே இருப்பது? வீட்டின் இறப்பைத் தடுக்க முடியுமா? என்னால் முடியாது? என்னைப்போலதான அண்ணன், அக்காக்களும் இருப்பார்கள்... அப்போ... இந்த வீடு இறங்கத் தொடங்கிவிட்டதை வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியுமா? *********************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக