புதன், 30 அக்டோபர், 2013

பெயரில்லாதவன்! --தேவராஜன்


பெயரில்லாதவன்! --தேவராஜன் சுட்டெரிக்கும் வெயிலுக்குக் கடற்கரைக்காற்று இதமாக, சுகமாகத்தான் இருந்தது. சூரியன் வேறு மேற்கு பக்கம் நகர்ந்து விட்டான். இப்போது காற்று இன்னும் ஜோராக ஜில்லென்று வீசியது. கடற்கரை மணலில் நடந்து கொண்டிருந்தேன். “ஐஸ்... ஐஸ்... ஐஸ்...” ஒரு முப்பது ஐந்து வயதொத்த இளைஞன் தள்ளுவண்டியை மணலில் சிரமப்பட்டு தள்ளிக்கொண்டே கூவி சென்று கொண்டிருந்தான். ‘இது எங்கேயோ கேட்ட குரல் மாதிரி...’ மனசுக்குள் அந்த ஐஸ் வார்த்தை நங்கூரம்போட்டு, பானையில் இருக்கும் மோரை மத்து கடைவதுபோல் கடைந்து கொண்டிருந்தது. அந்தக்குரலுக்கு உரியவனை பின்பக்கம் பார்த்ததால் சட்டென்று அந்த உருவம் கண்ணில் வழுக்கி வழுக்கிப் போனது. கொஞ்சம் நடையை துரிதப்படுத்தி, அந்த ஐஸ்காரனை நெருங்கி விட்டேன். புடைத்த நெற்றியும், பிதுங்கிய உதடும், மரக்கா மண்டையும் யாரையோ நினைவுப்படுத்தியது. “ யப்பா, கொஞ்சம் நில்லேன். ஒரு ஐஸ் கொடுப்பா” என்ற சொல்லி, அவனை பாதம் முதல் தலைவரை ஸ்கேன் செய்து ஆராய்ச்சி செய்தேன். “ சார், என்ன ஐஸ் வேணும்? பால் ஐஸ், சேமியா ஐஸ் எது வேணும்?” என்று கேட்டான். “ஒரு பால் ஐஸ் கொடுப்பா...” “ அஞ்சு ரூபா” ஐஸ் வாங்கிக் கொண்டு, ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டு, அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது- அவன் என்னை மேலும் கீழும் பார்க்க ஆரம்பித்துவிட்டான். என்ன நினைத்தானோ தெரியவில்லை. என்னைப் பார்த்து கொஞ்சமாய் சிரித்துவிட்டு நகர்ந்தான். இருபது அடி துõரம் சென்றிருப்பான் அவன். சட்டென்று உச்சி மண்டையில் யாரோ என்னை ஓங்கி குட்டுவது போல் இருந்தது. என்னை அறியாமலேயே “ ஏஏஏ... அய்யா பொங்க!” என்று கத்தி கூப்பிட்டேன். அவன் சற்று நின்று, நிதானித்து என்னைத் திரும்பி பார்த்தான். நான் அவனை நோக்கி விருவிருன்று நடந்தேன். அவன்- வண்டியை தள்ளிக்கொண்டே ‘ஐஸ்... ஐஸ்...’ என்று கூவியப்படி சென்றான். “ஏஏஏ அய்யா பொங்க!” “........” “ஏ அய்யா பொங்க!” “........” “அய்யா பொங்க” “.....” ‘அவனா இவன்? அவன்தானா? அவன், இவன் இல்லையா...’ எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. என் எதிரே அவன் துõரமாய் வண்டியைத் தள்ளியப்படி சென்று கொண்டிருந்தான். நின்ற இடத்திலேயே அப்படியே அமர்ந்து விட்டேன். அப்படியே அய்யா பொங்கவும் என் மனதில் அமர்ந்துவிட்டான். ** நதிமூலம் ரிஷிமூலம் தெரியாது என்பார்களே! அதுபோலத்தான் அய்யா பொங்கவுக்கும் மூலம் தெரியாது. யார் அவன்? அவர் பெயர் என்ன? ஊர் எது? சொந்தம் பந்தம், சாதி சனம் எதுவும் அவனுக்குத் தெரியாது. அதனால் நமக்கும் அவனைப்பற்றி எதுவும் தெரியாது. கூடையை கவிழ்த்து வைத்ததுபோல தலையில் பிசுபிசுப்பான செம்பட்டை தலைமுடி. கண்ணில் பீழை ஒழுகும். பிதுங்கிய உதடு. கோரைப்பல். திட்டு திட்டாய் அழுக்குத் தேமல். சூம்பிப்போன கை, கால்கள். அண்டிதள்ளிய பானை வயிறு. அழுக்கேறி ஒரு காக்கி டவுசர் போட்டிருப்பான். வயசு எட்டோ ஒன்பதோ இருக்கலாம். ஒரு மாசிமாதத்து தெப்போற்சவத்துக்கு எங்கிருந்தோ கூட்டத்தோடு கூட்டமாய் வந்தான். தெப்பம் பார்க்க வந்த பக்தர்களுக்கு மூன்று மடங்களில் இலவச அன்னதானம் போட்டதால், இவனுக்கும் தினமும் மூன்று வேளை சாப்பாடு கிடைத்தது. காலையில் பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு, மீண்டும் கோயில் வரும் வரை பல்லக்கை தொடர்ந்து வருவது பட்டாச்சாரியாரும் இவனும் தான். இரவு அப்படித்தான் ஒவ்வொரு வாகனத்தில் பெருமாள் உலாவரும்போது இவனும் பெருமாளுக்கு அடிபொடிபோல வருவான். இப்படியே நாட்கள் ஓடியது. பதினைந்தாம் நாள் தெப்பம் உற்சவம் சிறப்பாக முடிந்தது. மறுநாள் கொஞ்ச கொஞ்சமாக வந்த பக்த ஜனங்கள் எல்லாம் ஊர் திரும்பினர். அடுத்தடுத்த நாளில் இலவச உணவுபோடுவதும் நிறுத்தப்பட்டது. மடங்கள் மூடப்பட்டது. பாவம் அவனுக்குப்பசி! யார் சாப்பாடு போடுவார்கள்? உச்சி வெயில் மாங்குட்டையில் அவன் தண்ணீரில் மூழ்கி, மூழ்கி எழுந்து கொண்டிருந்தான். கையில் என்னவோ கறுப்பாக இருந்தது. அதை பல்லால் கடித்து தின்று கொண்டிருந்தான். அப்போது நான் குளக்கரையில் நின்று கொண்டிருந்தேன். “ ம்ம்வா...” என்று என்னைக்கூப்பிட்டான். “எனக்கு நீச்சல் தெரியாது. வரலே... போ... நீ என்ன திங்கற?” தண்ணீரில் இருந்து வெளியே வந்தான். அம்மணமாய் இருந்தான். கையில் இருந்ததைக் கொடுத்து, “இந்தா தின்னு... இது அல்லிக்கிழங்கு. நல்லாருக்கும்.” என்று என் கையில் திணித்தான். கொஞ்சம் கடித்துப் பார்த்தேன். சப்பென்று இருந்தது. மீண்டும் குளத்தில் அவன் இறங்கிவிட்டான். நான் வீடு திரும்பினேன். இதுவரைக்கும் அவனைக் கூப்பிட பெயரில்லை. அவனுக்குப் பெயரே இல்லை. இவனை எப்படி கூப்பிடுவது என்று தீவிர யோசித்தேன். அவனுக்குப் பெயர் வைக்க அந்த சந்தர்ப்பம் வந்தது. அன்னைக்கு சனிக்கிழமை. இரவு ஏழு மணி இருக்கும். பெருமாள் சந்நிதியில் நான் மாமாவோடு நின்று கொண்டிருந்தேன். சாயரட்சை பூஜை நடந்து கொண்டிருந்தது. கருட சேவை வாகனத்தின் பின் அவன் நின்று கொண்டிருந்தான். அரை மணி நேரத்தில் பூஜை முடிந்தது. பிரசாதம் கொடுக்க ஆரம்பித்தார்கள். முதல் சுற்று சுண்டல். இரண்டாம் சுற்று பஞ்சாமிர்தம். மூணாம் சுற்றில் பொங்கல். அவன் பிரசாதம் கொடுப்பவரின் பின்னாலேயே சென்று “ அய்யா பொங்க... அய்யா பொங்க... அய்யா பொங்க” என்று கையேந்தியபடி கெஞ்சி கொண்டிருந்தான். ‘ ஏ... தள்ளிப்போ... எத்தனை முறைதான் கேட்ப... எப்ப பாரு அய்யா பொங்க... அய்யா பொங்கன்னுகிட்டு’ பிரசாதம் கொடுத்தவர் அவனை அடிக்காத குறையாக விரட்டினார். பெருமாள் சந்நிதியில் அவனுக்கு அய்யா பொங்கன்னு அவனுக்குப் பெயர் வைத்தேன். அப்போதே ‘ஏ அய்யா பொங்க’ என்றேன். அவன் திரும்பிப் பார்த்தான். “இந்தா, வாங்கிக்கோ’ என்று என் கை நிறைய வைச்சிருந்த பொங்கலைக் கொடுத்தேன். அவன் வாங்கிக்கொண்டு வாய்நிறை துணித்து சாப்பிட்டான். நான் கூப்பிட்ட அய்யா பொங்க பெயரை, பிறகு எல்லாரும் கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அவனை அய்யா பொங்கன்னு யார் கூப்பிட்டாலும் திரும்பி பார்ப்பான். நாளாக நாளாக அதுவே அவனுக்குப் பெயராகிவிட்டது. கீழத் தெரு ருக்குமணி பாட்டி வீட்டு திண்ணையில் படுத்திருப்பான். பாட்டிக்கு உதவியாக வேலைகள் செய்வான். ருக்குமணி பாட்டி மூணு வேளை சோறு போடும். யார் சொன்னாலும் வேலை செய்வான். எட்டணா கொடுத்தா போதும். அவன் இந்த ஊருக்கு வந்து நாலு வருஷத்துக்கு மேல ஓடிவிட்டது. அவனுக்கு அரும்பு மீசை முளைக்க ஆரம்பித்து விட்டது. அன்னைக்கு பிரதோஷம். சிவன் கோயில் அய்யா பொங்கவுடன் சேர்ந்து விளையாடி விட்டு வீடு திரும்பும்போது மணி எட்டு. கீழத் தெருவில் ஒரே சத்தம். மாட்டு வண்டி ருக்குமணி வீட்டு முன்பாக நின்றுகொண்டிருந்தது. ருக்குமணி பாட்டியை பாம்பு கடிச்சுட்டதாம். கோட்டூர் நாட்டு வைத்தியரிடம் ருக்குமணியை கூட்டிச் சென்றார்கள். வண்டி பின்னாலேயே ‘பாட்டி... பாட்டி... பாட்டி...’ என்று ஓலமிட்டு அய்யா பொங்க ஓட்டமும் நடையுமாய் சென்றான். பொழுது விடிந்தது. ருக்குமணி பாட்டி சடலமாகத்தான் வீடு திரும்பியது. ருக்குமணி பாட்டிக்கு சொந்தம் பந்தம் எல்லாம் அதிகம் கிடையாது. அன்னைக்கு சாயந்தரமே பாட்டியை தகனம் செய்தார்கள். மயானக் கரையில் அழுதுகொண்டே இருந்தான் அய்யா பொங்க. ராத்திரி பூரா அங்கேயே அழுதுகிட்டு இருந்தான். பொழுது விடிந்தபோது அய்யா பொங்க ஊருக்குள் வரவேயில்லை. ஒரு நாளாச்சு... ஒரு வாரமாச்சு... ஒரு மாதமாச்சு... ஒரு வருஷமாச்சு... அய்யா பொங்க வரவேயில்லை. எங்கே போனான்... ஏன் போனான்.. இன்னை வரைக்கும் யாருக்கும் தெரியாது. அது ஆச்சு இருபது வருஷம். இருள் படர்ந்தது. கடற்கரைக்கு ஜனங்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். பிளாஸ் பேக்கில் என் நினைப்பு இருந்ததில்... நிஜ நிகழ்வுகளில் என் மனம் ஒட்டாமல் இருந்துவிட்டது. எப்படியும் இந்தக் கடற்கரையில்தான் இருப்பான் அய்யா பொங்க. அவனைத் தேடினால் கிடைக்காமலா போய்விடுவான். நாலா பக்கமும் தேடினேன். அவன் என் கண்களுக்குத் தென்படவேயில்லை. வீடு திரும்பினேன். இரவு துõக்கத்தில் அய்யா பொங்கதான் வந்தான். அவனுக்குப் பேர் வைத்த என்னையா அடையாளம் தெரியவில்லை? என்னிடம் பேச அவன் ஏன் விரும்பவில்லை? என்னைப் பார்த்து லேசாக சிரித்தானே? எங்கிருந்தோ வந்தான். எங்கேயோ ஓடிப்போனான். இப்போ இருபது வருஷம் கழித்து கண்டுகொண்டேன். நாளைக்கு அவனை நிச்சயம் கடற்கரையில் கண்டுபிடித்து விட வேண்டும். இப்பவும் அவன் பெயர் அய்யா பொங்கதானா? இல்லேன்னா இப்போது அவனுக்கு வேறு பெயரா? அந்தப் பெயர் யார் வைத்தார்கள் என்று கேட்க வேண்டும். ********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக