புதன், 30 அக்டோபர், 2013

நெல்லு விளைஞ்ச மண்ணு... -தேவராஜன்


நெல்லு விளைஞ்ச மண்ணு... -தேவராஜன் “என்னை தூக்குல தொங்க விடாம விடமாட்டீங்க போல. ஊருல கவுரவமாக வாழவிடமாட்டீங்க! பெத்த பிள்ளைங்கல ஊர்ல நாலு பேரு காரீ துப்பினாத்தான்... இதை எல்லாம் பார்த்துட்டுத்தான் நீங்க ஓய்வீங்கல...” தையப்பாவின் ஒப்பாரி புலம்பல் வீட்டின் கூடத்தில் இருந்து ஒலித்தது. முற்றத்தில் உட்கார்ந்த சண்முகம் அதைக்கேட்டு, துண்டை உதறிவிட்டு எழுந்து தாழ்வாரத்தில் நின்று தையப்பாவை முறைத்தார். “ஏம்மா... சாப்பிடற நேரத்துல... பசியோடு சிவனேன்னு இருக்கிற அப்பாவை பேசி கொட்டித்தீக்கற” கமலா கேட்டாள். “ உன் அப்பாவுக்கு சொரணை வேண்டாம். அதான் புள்ளைங்க மாசா மாசம் வீட்டுச் செலவுக்கு பணம் டாண் டாண் அனுப்புறாங்கல. அப்புறம் என்ன? வயசான காலத்துல விவசாயம் பார்த்து பொழைக்கணும்னு யாரு அழுதா?” நிலா வெளிச்சம். கொசுவும் கடித்ததும். காலையில் நடந்த இந்த சம்பாஷணையும் கடித்தது. சண்முகம் தூக்கம் வராமல் புரண்டு படுத்தார். சேர்த்த பணம், பிள்ளைகள் அனுப்பிய பணம், நகை நட்டு எல்லாம் அடமானம் வைத்து விவசாயத்தில் விதையா விதைச்சாச்சு. காவிரி தண்ணீர் வராமல் ஏமாற்றி விட்டது. மானங்கெட்ட மானம் ஒண்ணு பெஞ்சு கெடுக்கும். இல்லேன்னா இப்படி பெய்யாம கெடுக்கும். காவிரி தண்ணீரை நம்பி விவசாயம் பண்றதுகூட இப்ப சூதாட்டம் போல ஆயிடுச்சு.... இருந்தாலும் இந்த மண்ணுதானே நம்ம உசுரு. வாழ்க்கை. பொழப்பு. இதைவிட்டு வேற என்ன பண்றது? பிரதமரு ஈஸியா சொல்லிட்டாரு விவசாயிகள் எல்லாம் மாற்று தொழிலுக்கு மாறணனும்னு. அவரு ஒரு விவசாயியா இருந்தா இப்படி சொல்ல மனசு வந்திருக்குமா? என்ன கவருமண்டு? என்ன ஆட்சி? ச்சே... இந்தியாவின் முதுகெலும்பு தொழில் விவசாயம்னு ஒரு காலத்துல பெருமை பேசினோமே! இப்ப... விவசாயம் வேணாமாம்.... கலி இப்பவே முத்திடிச்சா.... என் உசிரு கடைசி மூச்சு இருக்கும் வரை நிலத்தை தரிசா போட மாட்டேன். அந்த மண்ணு தாயி இப்ப ஏமாத்தலாம்... ஆனா எப்போதுமே ஏமாத்தமாட்டாள். நம்பிக்கை இருக்கு. இந்த விவசாயம் எத்தனை நாள் எங்களுக்கு வயித்திற்கு அரை வயிற்குச்சாப்பாடு போட்டது. கால்வயிறு கஞ்சி குடிச்சாலும் குனிஞ்சு நிமிந்து உழைச்சுக்குடிக்கிறது போல வருமா... புள்ளைங்க அனுப்புற காசுல சாப்பிட கூசாதா? பின்ன, அவனவன் உழைச்சுத்தர பணம் காசுல கடைசி காலத்தை ஓட்டணுமாம்... நான் ஒரு விவசாயி. என் நிலத்தில் ஏர் எடுத்து, மாடு பூட்டி, உழுது தான் இந்த குடும்பம் வாழ்ந்தது. அது தான் என்னுடைய முக்கிய தொழில். எனக்கு ஐந்து பிள்ளைகள் மூணு பொண்ணுங்க. எனது உழைப்பு, விளைச்சல் எல்லாம் குடும்பச்செலவிற்கே சென்று விடுகிறது. கஷ்டம்தான். வறுமை தான். இது யாருக்குத்தான் இல்லை ? கஷ்டப்பட்டு வளர்த்து பிள்ளைகளை ஆளாக்கலையா? அப்ப எல்லாம் தாழ்வாய்ப்படாத விவசாயம், இன்று என் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் மதிப்பற்ற ஒன்றாகிவிட்டது. இவை எல்லாம் ஒரு நேரம். இப்ப என்னோட கூட ஏர் புடைச்சவங்க எல்லாம் இப்ப சேறு காணாதனைப் போல எப்படி நடந்து கொள்கிறார்கள்? எனக்கோ வயிறு பத்தியெரியுது. இந்த நிலத்தையும் விவசாயத்தையும் கட்டிக்கிட்டு விடாம அழுதுகிட்டு இருக்கும் நான் பிழைக்கத்தெரியாதவனா? நிலத்தை எல்லாம் கூறுபோட்டு மனை வித்த அவுங்க எல்லாம் புத்திசாலிகளா? கடவுளே புரியலையே! சென்னையில் பிள்ளைகள் எல்லாரும் வீடு வாசல் தொழில் என்று செட்டில் ஆகிவிட்டார்கள். அவர்கள் முன்னேற்றம் கண்டு நானும் தான் மகிழ்ந்தேன். இப்ப இருக்கிற வீடு எப்படி மாறிவிட்டது. சாதாரன மண் சுவர் வீடு இப்ப நல்லா சிமெண்ட் போட்டு... டிவி, பிரிஜ்சுன்னு என்னன்னவோ வந்துட்டு. ஆனால் நாலு காசு பணம் வந்தவுடனேயே விவசாயம் எதற்கு? இனி அதை விட்டு விடச்சொல்லி என் பிள்ளைகள் சொன்ன போது நான் ஆடிப்போய்விட்டேன். அவர்களது அறியாமையை தீர்த்து வைக்க என்னால் முடியவில்லை. விவசாயம் செய்து சாப்பிடிற அளவில அவங்கயில்லையாம். பணம் காசு வந்த உடன் விவசாயம் அவர்களுக்கு கசந்தது எப்படி?விவசாயி என்பவன் தாழ்வானவனா.? என்னைப்போல் விவசாயிகள் சேற்றில் இறங்கி ஏர் பிடிக்காவிட்டால் எந்த செல்வந்தனும் சோற்றில் கை வைக்க முடியுமா? உயிர் வாழமுடியுமா? அதை நினைச்சு பாக்கிற அளவில் பிள்ளைகள் இல்லை. விவசாயம் தவிர, வேறு எந்த தொழில் செய்தாலும் அது கவுரவம். இப்ப எங்கள் ஊரில் இது தற்பொழுது நாகரிகமாகிவிட்டது. என் இளைய மகனிற்குக்கூட நான் விவசாயம் செய்வது கவுரவக்குறைவாய் போய்விட்டது. இதை எடுத்துச்சொல்ல வேண்டிய என் மனைவியோ.. “ நீங்கள் உழைச்சு சாப்பிடிற நிலையில யாரும் இல்லை. வயசு போன நேரத்தில ஏன் கஷ்டப்படுறீங்க.பேசாமல் சாப்பிட்டோமா இருந்தோமான்னு இல்லாம...” இப்ப தரிசாகிப்போனது என் நிலம் மட்டும் அல்ல என் மனசும் தான். அறியாமையில் மூழ்கியிருப்பது எழுதப் படிக்கத்தெரியாதா நானா? இல்லை நாலெழுத்துப்படித்து இன்று நல்ல நிலையில் இருக்கும் என் பிள்ளைச் செல்வங்களா எனக்கு புரியவில்லை. விவசாயம் பற்றி நான் பேச்சு எடுத்தாலே என் நிலை இது தான்! நாலு பேருக்கு சாப்பாடு போடும் ஒரு விவசாயின் வீட்டில் இருந்து அரிசிவாங்க கடையேறும் மனைவியும் பிள்ளைகளையும் பார்க்கும் போது எப்படி ஒரு விவசாயின் மனதில் மகிழ்ச்சி வரும்? தனக்குத்தானே புலம்பி பேசி கொண்டே ஏதோ ஒரு நேரத்தில் தூங்கிபோனார். எதிர்வீட்டு கோழி கூண்டில் இருந்து சேவல் கூவியது. “ என்னப்பா இப்படி பண்ணிட்டான்... மனுஷனை ஜான் வயிறு எப்படி எல்லாம் படுத்துது பார்த்தீயா? பாவம் மாரியப்பன் ரோசக்காரன். ராத்திரி நாண்டுகிட்டு தூக்குப் போட்டுகிட்டு போய் சேர்ந்துட்டான்யா... இன்னும் எத்தனைப்பேரு இந்த ஊர்ல தூக்குப்போட்டு சாவப்போறானுங்களோ... அந்த ஈசனுக்கும் சவுரிராஜப்பெருமாளுக்குத்தான் தெரியும்...” ரோட்டில் சென்றவர்களின் உரையாடல் சண்முகத்தின் தூக்கத்தை கலைத்தது, வாரிசுருட்டி எழ வைத்தது. ராமனாங்குளக்கரையில் ஊர் கூடியது. மாரியப்பன் வீட்டில் ஒப்பாரி ஊருக்கே தண்டோரா போட்டது போல ஒலித்தது. “பாவி... விவசாயம் விவசாயம்னே அதைக்கட்டி அழுதுகிட்டு, சூதாடி போல எல்லாத்தையும் இழந்துபுட்டான்யா... வருஷா வருஷம் விளைச்சல் இல்லாம நஷ்டத்துக்கு மேல நஷ்டம். ஊரை சுத்தி கடன். ஆடு, மாடு, கோழின்னு எல்லாம் வித்துதான் விடாமத்தான் விவசாயம் பண்ணான். கடைசியா இருந்த வீட்டையும் அடமானம் வைச்சு இந்த வருஷம் விதை விதைச்சான். நல்லா விளைஞ்சா... நிலமை சரியாகிடும் கண்ணுல கனவு வைச்சிகிட்டு திரிஞ்சான். இந்த வருஷமும் காவிரி தண்ணீர் இல்லாம... விதைச்சது எல்லாம் போச்சு! இப்ப இருந்த வீடும் போச்சு! ஊரை சுற்றி கடனுக்கு வட்டியும் முதலுமா இருக்கிற நிலத்தையும் புடுங்கிட்டு மாரியப்பனை நடுத்தெருவுல உட்டுறவங்க. இதெல்லாம் தெரிஞ்சுதான்... இனிமே மானத்தோடு வாழ முடியாதுன்னு... நாலுமுழ கயிற்றில் தொங்கிட்டான்!” ஊர் பேசியது. சண்முகத்தின் செவிட்டில் ஓங்கி அறைந்ததுபோல இருந்தது ஊர் பேச்சு. “இன்னைக்கு மாரியப்பன்... நாளைக்கு காளியப்பன்... அப்புறம் நீ, நான்... இப்படி ஒவ்வொருத்தரா நாண்டுகிட்டு சாவணும்னு விதி வந்து விவசாயம் என்கிற பேரில் நம்ம வாழ்க்கையில விளையாடுது போல.... மானத்தோடு, கடன் இல்லாம வாழணும்னா இந்த விவசாயத்தை விட்டுட்டு... ஏதோ தெரிஞ்ச வேலைக்குப் போறதுதான் நல்லது. ஒரு காலத்துல விவசாயம் எல்லாரையும் வாழவச்சது. நம்ம ஜில்லாவ நெல்களஞ்சியம்னு பேச வைச்சது... இப்ப அப்படியா? ஒவ்வொருத்தனும் விதைச்சுட்டு, வானத்தையும், முடிகொண்டான் ஆத்தையும் பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியிருக்கு. ஒவ்வொரு வருஷமும் அரசாங்க விவசாய கடனை ரத்து பண்ணாதா, பஞ்ச நிவாரணம் தராதான்னு கையேந்தி பிச்சை வாங்கிற மாதிரி ஏங்க வேண்டியிருக்கு... இந்த அரசாங்கம் மக்களை ஏமாத்தும் விவசாய தொழிலை... குடி கெடுக்கும் தொழில்... போட்ட முதலை இழக்கும் சூதாட்ட தொழில்னு சொல்லி தடை விதைச்சாதான் என்ன?” ஆதங்கம் பொங்க பேசி தீர்த்தான் மாரியப்பனின் பால்யகால நண்பன் பொன்னுசாமி. நேரம் கரைந்தது. மாரியப்பனின் இறுதி சடங்குகள் நடந்தது. சண்முகம் பேய் அறைந்தவர் போல மூலை மேட்டில் குந்தி இருந்தார். மாரியப்பனுக்கு கடன் கொடுத்தவர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். ஊர் நாட்டாமை எல்லாரையும் பார்த்தார். இடுப்பில் கட்டியிருந்த பட்டை பச்சை பெல்டில் இருந்து கடா மார்க் சுருட்டை எடுத்து வாயில் வைத்து பற்ற வைத்தார். புண் பட்ட மனதை புகைப்போட்டு ஆற்றுவது போல இருந்தது அவரின் செயல். நாட்டாமை நடேசன் பேசினார். “ தோ, பாருப்பா... இனிமே இந்த ஊர்ல யாருக்கும் விவசாய கடனாக ஒத்த பைசாக்கூட யாரும் யாருக்கும் வட்டிக்கு கொடுக்கக்கூடாது. விவசாயத்திற்கு கடன் வாங்கி, அதை கட்ட முடியாம... மானம் காக்க சாவுற கடைசி மனுஷனாக இந்த மாரியப்பனோட இருக்கட்டும். இந்த ஊர்ல தற்கொலை பண்ணிகிட்ட கடைசி விவசாயி இந்த மாரியப்பனோட முடியட்டும். இனிமே, யாரும் விவசாயம் பண்ண வேண்டாம். கடன் வாங்க வேண்டாம். நாலா பக்கம் எந்த ஊருக்காவது போய் கூலி வேலை செய்து பொழைப்பு நடத்தலாம்... மாரியப்பன் காரியம் பத்தாம் நாள் முடிஞ்சதும் அவன் கடன் வாங்கி தொகையை பத்தி ஊர்கூடி பேசி தீர்த்துக்கலாம்” என்றார். சண்முகத்துக்கு மாரியப்பனின் மரணம்தான் போதி மரமானது. கட்டிய மனைவி சொல்லியும் பெற்ற பிள்ளைகள் சொல்லியும் விடாபிடியாக விவசாயம் செய்தே தீருவேன்னு அடம்பிடித்தவர்... இப்போது ஞானம் பிறந்தவராக இருந்தார். அதை அவரின் தெளிந்த முகம் காட்டியது. ------------- ********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக