செவ்வாய், 11 மே, 2010

சுகி. சிவம் பேட்டி

சுகி. சிவம் பேட்டி
என் வெற்றியின் அஸ்திவாரம் அம்மா

காசு பெரிதாகிப் போன கலியுகத்தில் பலருக்கும் வயிறு பெருத்து மனது சுருங்கிப் போய்விட்டது. கருவறையே கொடுத்த அம்மாவுக்கு வீட்டில் சிறு அறை கொடுப்பது கூட பலருக்குக் கஷ்டமாகத் தெரிகிறது. குடும்பம் என்பதே, தான், தன் பெண்டாட்டி பிள்ளைகள் என்கிற குறுகிய வட்டத்தில் முடிவடைந்து போகிறது. நினைவு தெரியாத காலம் முதல் தனக்கு என்ன என்ன காரியங்கள் அம்மா செய்திருப்பாள் என்பதும், என்ன என்ன கஷ்டங்கள் பட்டிருப்பாள் என்பதும் பலருக்கும் மறந்து போய் விடுகிறது.
நான் ஆறாவது படித்த சமயத்தில் கடுமையான டைபாய்டு ஜுரம்... 102... 103 என்று டெம்ப்ரேச்சர். முப்பது நாளைக்கு மேல் படுக்கை... பாத்ரூம் போய்வரக் கூட பலம் இல்லை. அப்படி பலமின்றி ஒருநாள் நான் மயங்கிச் சரியும் தருணத்தில் “யம்மா... என் புள்ளை” என்று குலை நடுங்க அலறிய என் அம்மாவின் சத்தம் எமனுக்கு எதிரான ஒரு போர் முரசாக இன்னும் என் காதுகளில் கேட்கிறது. இரவு 2 மணி, 3 மணி என்று எப்போ நான் கண் விழித்தாலும் ஹார்லிக்ஸ் தரவா, பார்லி குடிக்கிறாயா என்று கேட்டபபடி அம்மா விழித்திருப்பாள். ஜுர வேகத்தில் நான் அம்மா என்று முனகும் போதெல்லாம் ‘என்னப்பா’ என்று பதில் கொடுக்கும் அம்மாவின் குரல் M.கு. சுப்புலட்சுமி சங்கீதம் மாதிரி எனக்குக் கேட்கும்.

அம்மாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். அப்பாதான் கதைகளைப் படி எடுத்துக் கொடுக்கச் சொல்வார். அலுத்துக் கொள்ளாமல் ஆசை ஆசையாக அதைச் செய்வார் கொஞ்ச நாளில் கதைகளைப் படி எடுக்கும் பணியில் கிடைத்த, தன் அனுபவத்தைப் பயன்படுத்தி கதை பின்னும் கலையையும் கற்று, அந்தக் காலத்தில் புகழ் பெற்ற எழுத்தாளராக தன்னை உயர்த்திக் கொண்டவர் என் அம்மா.
பகல் எல்லாம் சமையல், வீட்டு வேலை என்று பம்பரமாகச் சுழன்று விட்டு இரவு பத்து மணிக்கு மேல் கதை எழுத உட்காரும் அசுரத்தனம் அம்மாவின் பலம்.
மெத்தப் படித்த பெரிய வீட்டுப் பெண்மணி போலவே பக்குவமாகப் பண்பாடாகப் பேசும் அம்மா எங்களுக்காக யாரிடமாவது சண்டை போட நேர்ந்தால் அப்போது அவளுக்குள் பதுங்கியிருந்த பாண்டி நாட்டு தமிழச்சியின் முழு வெறியும் வெளிப்பட்டு விடும். பள்ளியில் நாடகத்தில் எனக்குக் கிடைத்த ஒரு பரிசை ஏமாற்றி பறித்துக் கொண்டு போன என் நெருங்கிய நண்பர் வீட்டுக்கு, மதுரை தெருக்களில் நடந்த கண்ணகியை விஞ்சும்படி படையெடுத்துப் போய் சண்டை போட்ட ஆவேச அம்மாவின் போர்க்குணம், தாய்மை வெறி மறக்க முடியாதது.
அம்மாவுக்குக் கடலை மிட்டாய் என்றால் கொள்ளை ஆசை. ஆனால் தனக்காக ஒரு தண்டச் செலவா என்று தன் ஆசையை அடக்கிக் கொள்வாள். ஆனால் கதை எழுத உட்கார்ந்தால் அவள் கற்பனைக் கார் பறக்க கடலை மிட்டாய்தான் பிரிமீயம் பெட்ரோல்ம்தான் .
அப்பாவிடம் நல்ல பெயர் எடுக்க அம்மாவை அடிக்கடி அப்பாவிடம் நான் காட்டிக் கொடுத்துவிடுவேன். அதற்காக என் மீது கோபப்பட்டாலும், அதே அப்பாவுக்குத் தெரியாமல் என் சின்னச் சின்ன ஆசைகளை எப்போதும் நிறைவேற்றிய அம்மாவின் அன்பு எனக்கு ஓர் ஆச்சரிய அனுபவம்தான்.
சிக்கனம், கஞ்சத்தனம் இவையெல்லாம் அவளுக்குத் தெரியாதவை. தன் பிள்ளைகளைப் போலவே, பிள்ளைகளின் நண்பர்கட்கும் பண்டம், பலகாரம், சாப்பாடு, பரிமாறும் பாச வெள்ளம் அவள். பல சந்தர்ப்பங்களில் நாங்கள் எல்லாம் சாப்பிட்டு முடித்த பிற்பாடு அவளுக்கு tச்ண்tஞு பார்க்கக்கூட எதுவுமே மிஞ்சாது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் அவள் கவலைப்பட்டதாக எனக்கு நினைவே இல்லை.

சாப்பிடும் போதெல்லாம் சாதாரணமான பருப்பும், நெய்யும் போட்டுப் பிசைந்து புளிக்குழம்பு தொட்டு பெரிய, பெரிய உருண்டையாக கையில் உருட்டிப் போடுவாள் அம்மா. பிசைந்து சாப்பிட்டால் அந்த tச்ண்tஞு வராது. நிஜமாகவே அந்த tச்ண்tஞு இதுவரை எந்த உணவிலும் எனக்குக் கிடைத்ததே இல்லை.
வீடுன்னா ஒவ்வொரு புள்ளை ஒவ்வொன்னு கேக்கததான் செய்யும்... வீடுகளில் நாயும், மாடும்தான் போட்டதைத் தின்னும்... பிள்ளைகள் கேட்டதைத் தின்னும்... இது என் அம்மா கொள்கை.
தீபாவளியன்று இரண்டு மணிக்கே எழுந்து எண்ணெய் சட்டியில் பலகாரத்துடன் தானும் வெந்தபடி பஜ்ஜி, போண்டா, உளுந்தவடை, மசால்வடை என்று சகலமும் செய்வாள் அம்மா. ஏதாவது ஒண்ணு இரண்டு போதாதா என்று எண்ணெயைவிடச் சூடாகக் கொதிப்பார் அப்பா. “அதெப்படி ஒருத்தனுக்குப் பிடிச்சது மத்தவனுக்குப் பிடிக்காது... ஆளாளுக்குப் புடிச்சதைச் சாப்பிடத் தானே குடும்பம் நடத்தறோம்” என்றபடி ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று என்று பத்து, பன்னிரண்டு பலகாரம் செய்யும் அன்னபூரணி அவள். போதாக்குறைக்கு எழுத்தாளர் அகிலன் வீட்டுக்கும், பிரேமா பிரசுரம் அரு. ராமநாதனுக்கும் அம்மாவின் ஸ்பெஷலான இஞ்சிப் பச்சடி வேறு தயாராகும்.
என் திருமணத்திற்கு முன்பு, இரவு சொற்பொழிவுகள் முடித்து எவ்வளவு லேட்டாக வந்தாலும் கொஞ்சம்கூட அலுத்துக் கொள்ளாமல், தோசை சுட்டு போடும் அந்த அம்மா. நீண்ட நாள் வெளியூர் பயணம் முடித்துத் திரும்பினால், ‘ஏம்ப்பா இப்பிடி இளைச்சிட்டியே’ என்று வருத்தப்படும் அம்மா... அப்பாவுக்கு வேறு tச்ண்tஞு, எனக்கு வேறு tச்ண்tஞு என்று ஒரே குழம்பை இரண்டு தினுசாக வைத்திருக்கும் அம்மா ஓர் அற்புத அதிசயம்.உழைக்க அஞ்சாத உற்சாகம் அவள் இயல்பு.
ஒரு மறக்க முடியாத சம்பவம். அடிக்கடி நான் வெளியூர்ப் பயணம் பல நாட்கள் தொடர்ந்து செய்வதால் என் வீட்டு வரவு, செலவு முழுவதும் என் மனைவி நிர்வாகத்தில் இருக்கும். அம்மாவுக்கும் ஏதும் பணம் வேண்டும் என்றாலும், என் மனைவியிடம்தான் கேட்க வேண்டி இருக்கும். இந்திய மாமியார்க்கே உரிய மருமகள் பகை இல்லாவிடினும் அளவுக்கு மீறி என் மனைவிக்கு உரிமை கொடுத்திருப்பதாகக் கோபம் வெடிக்கும். தன் அபிப்பிராயத்திற்கு மாறாக மருமகள் செய்யும் சகல செலவுகளும் என் சம்பாத்யத்தை அழித்தொழிக்கும் ஆடம்பரமாக அம்மா நினைத்து போராடிக் கொண்டே இருந்தாள். அமைதியாக நான் ஒரு நாள் அவளுக்கு விளக்கினேன்.
“அம்மா நீ ஜெயிப்பது முக்கியமா? உன் கருத்து ஜெயிப்பது முக்கியமா?” என்றேன். சராசரி கோமதிக்குள் இருந்த சமூகப் பிரக்ஞை உடைய எழுத்தாளர் கோமதி விழித்துக் கொண்டாள். “என் கருத்து ஜெயிப்பதுதான் முக்கியம்” என்றாள். “அப்பா உனக்குப் பொருளாதார சுதந்திரம் தரவே இல்லை... ஓர் அடிமை மாதிரி கொடுத்த பணத்திற்குள் குடும்பம் நடத்தச் சொன்னது குறித்து நீ எவ்வளவு குமுறியிருக்கிறாய். மொத்த வரவு, செலவை உன்னிடம் தரவில்லை என்று நீ எத்தனை முறை சண்டை போட்டு அப்பாவிடம் தோற்றுப் போய் இருக்கிறாய்... உன் கருத்தை ஏற்றுக் கொண்ட நான் மனைவியிடம் மொத்த வரவு செலவை ஒப்படைத்திருப்பதை மட்டும் உன்னால் ஏன் ஏற்கமுடியவில்லை? உன் கருத்து ஜெயித்திருப்பதை நீ உணரவேண்டாமா?” என்றதும் மகிழ்ச்சியோடு அதை ஒப்புக் கொண்டாள் அம்மா. உணர்ச்சிவயப்படும் சராசரி சண்டைக்காரி கோமதியும் அவள்... அறிவுபூர்வமாக விளக்கிச் சொன்னால் தன் தோல்வியை விளங்கிக் கொள்ளும் அறிவு ஜீவியும் அவள்.
எனக்கு அப்பா ஓர் அம்மா மாதிரி... பிள்ளைகளைப் பிரிய பயப்படுவார். அம்மா ஓர் அப்பா மாதிரி... துணிச்சலாக கீடிண்டு எடுப்பாள். அம்மாவுக்கு அப்படி ஒரு நெஞ்சுரம், மனத்துணிவு. அந்தக் காலத்துப் பெண்களுக்குரிய ஜாதீயம் கிடையாது. புதுமை விரும்பி. போராட்ட குணம் உள்ளவள். தான் நினைப்பதைப் பளிச்சென்று எந்த இடத்திலும் பொதுமேடை என்றாலும்கூட தெளிவாகச் சொல்ல அவளால் முடியும்.
சின்ன வயதில் அம்மா சாமி கும்பிடுவதே ரொம்ப அழகாக இருக்கும். நிறைய விரதங்கள் இருப்பாள். பட்டினி அவளுக்கு ஒரு பிரச்சனை அல்ல. நாதவிந்து கலாதீ நமோநம என்ற திருப்புகழை வெள்ளி மணி மாதிரி அவள் பாடிக் கேட்ட காலங்களை என் காதுகளில் கைது பண்ணி வைத்திருக்கிறேன். கோவில் கோவிலாக சாமி விஷயங்களில் காசு விரயம் செய்வது அவள் பலவீனம். அதனால்தானோ என்னவோ கோவில் கோவிலாகப் போய் பேசி அவள் செலவழித்த காசை நான் வசூல் செய்திருக்கிறேன்.
எப்போது நான் வெளியூர் அல்லது வெளிநாடு போகும் போதும் தன் கைகளால் விபூதிபூசி அனுப்புவாள். இப்போதும் (83 வயது) என் நெற்றி எங்கிருக்கிறது என்று குத்துமதிப்பாகத் தன் நடுங்கும் கையாலும், நடுங்காத மனசாலும் விபூதி பூசுவது அவள் பழக்கம். அப்படி அனுப்பினால் அவளே எனக்குத் துணையாகக் கூட வருவது மாதிரி ஒரு நினைப்பு அவளுக்கு. என்ன அர்த்தமோ தெரியாது ஓர் எலுமிச்சம்பழம் கையில் கொடுத்து அனுப்புவாள். இப்போது என் மனைவி, மாமியார் வழியில் எலுமிச்சை கொடுக்கும் மகராசியாக இருக்கிறாள். மற்ற வீடு மாதிரி என் வீட்டில் மாமியார் மருமகள் மனக் கசப்பு கிடையாது. காரணம் என்னைவிட என் அம்மாவுக்கு வேண்டியவள் என் மனைவி. அவளது சகல தேவைகளையும் கவனித்துக் கொள்வதால் நான் என் மனைவியிடம் கடிந்து கொண்டால் கூட மருமகள் சார்பாகத்தான் என்னிடம் பேசுவாள் அம்மா.
முதுமையால் இப்போது அம்மாவுக்கு முதுகு வளைந்துவிட்டது. என்றாலும் இப்போதும் வளையாத முரட்டு மனம் அம்மாவுக்கு. இன்னும் தான் போடுகிற பிளான்படியே எல்லோரும் நடக்க வேண்டும் எதிர்பார்ப்பாள் அவள். ஆனால் தான் நினைத்தபடி நிற்கக் கூட முடியாமல் அப்படியும் இப்படியும் கால் தள்ளாடுகிற முதுமையில், தன் இஷ்டப்படி பிறர் எப்படி நடப்பார்கள் என்பதை இப்போது யோசிக்கத் தொடங்கி இருக்கிறாள். அதனால் நடக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அமைதியாகி விடுகிறாள். லேசலான மரணபயம் அவளுக்கு வந்துவிட்டது. ஆனால் பயப்பட வேண்டியவன் எமனே ஒழிய அம்மா இல்லை. தனியாக இருக்க பயப்படுகிறாள். தன் பெட்ரூம் கதவு திறந்தே இருக்க வேண்டும் என்கிறாள். வீட்டில் நடப்பதைப் பார்த்தபடி, சத்தம் கேட்டபடி இருக்கவே விரும்புகிறாள். சத்தமாக கூ.ங. வைத்துக் கொள்கிறாள்.
ஓர் ஏழை சமயச் சொற்பொழிவாளனாக நான் கழிந்து போகாதபடி ஒரு செல்வாக்கு மிக்க சிந்தனையாளனாக உயர்ந்து வாழ்வு வாழ்வதற்கு அம்மா ஓர் அழுத்தமான காரணம். கார், வீடு என்று அப்பா சேர்க்க முடியாமல் போனவற்றை நான் இன்று சேர்த்து ஜெயித்தமைக்கு அம்மாதான் அஸ்திவாரம்.
பேட்டி : தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக