செவ்வாய், 11 மே, 2010

எஸ்.வி. சேகர் பேட்டி

எஸ்.வி. சேகர் பேட்டி
ஒழுக்கமும், பக்தியும் அம்மா தந்த பரிசு!

சினிமா, நாடகம், அரசியல் இப்படி எல்லா துறையிலும் நேர்மையாக, ஒழுக்கமாக, உண்மையாக நான் இருக்க காரணம் என் அம்மாவின் வளர்ப்பு. அப்பாவின் கண்டிப்பு என்று தான் சொல்வேன் என்கிறார், எஸ்.வி. சேகர்.
என் அம்மா, அப்பாவுக்கு மூன்று ஆண் பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை. நாங்கள் நால்வருமே அம்மாவின் அன்பில் வளர்ந்தவர்கள்.
நான் சிறுவனாக இருந்தபோது அப்பா பணி விஷயமாக சிலோன் சென்று விட்டார். அங்கேயே 10 ஆண்டுகள் இருந்தார். இந்நிலையில் நான் பாட்டி, சித்தப்பாவுடன்தான் இருந்தேன்; வளர்ந்தேன்; படித்தேன். பின்னர் சென்னைக்கும் சிலோனுக்குமென மாறி மாறி இருந்தேன். அம்மாவுக்கு என்னை விட்டுபோவதென்றால் அவ்வளவு மனகஷ்டம். நானோ சரியான வால் பையன். நான் பண்ணும் எந்த சேட்டைகளையும் அப்பாவிடம் சொல்லி எனக்குத் தண்டனை வாங்கி தந்ததில்லை என் அம்மா.
அப்பா ரொம்ப கண்டிப்பானவர். எதிலும் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடியவர்.
அவர் சிலோனில் இருந்ததால் அங்கு இலங்கை தமிழர்களின் பிள்ளைகள்அம்மா, அப்பா யாராக இருந்தாலும் மரியாதையாக அழைப்பதை பார்த்தவர். அதனால், எங்களை அப்படி நடக்க வற்புறுத்தினார். இனி, அம்மாவை "வா, போ' என் மரியாதையில்லாமல் அழைக்கக்கூடாது. இனி, வாங்க, போங்க என்று தான் கூப்பிட வேண்டும் என்று சொன்னார். நானா சொல்பேச்சு கேட்பேன். இந்த காதில் வாங்கி அந்த காது வழியாக விட்டு விட்டேன். சொல்லி சொல்லி பார்த்த அப்பா, நாளையிலிருந்து காலையில் மரியாதையாக கூப்பிடாவிட்டால் காபி கொடுக்காதே. மதியம் வரை என்றால் சாப்பாடு கொடுக்காதே என்று அம்மாவுக்கு உத்தரவிட்டார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தால் தான் இன்று வரை நான் யாரையுமே மரியாதையாகவே அழைப்பேன்; நடத்துவேன்.
அம்மா மிக்க பக்தியும் கடவுள் நம்பிக்கையும் கொண்டவர். பிறருக்கு உதவும் இரக்க குணம் கொண்டவர். அதை அப்படியே எனக்கும் போதித்து வளர்த்தார். அதனால் நான் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருக்கிறேன்.
மக்கள் சேவையில் ஈடுபட அரசியலில் இருக்கிறேன். இதற்கு காரணம் என் அம்மா தான்!
அம்மாவுக்கு இப்போ 80 வயது. நலமா இருக்காங்க. அதுவே மகனான எனக்கு சந்தோஷம். நான் எந்த செயலை செய்வதற்கு முன் அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்காமல் செய்யமாட்டேன். நாடகமோ, சினிமாவோ நடிப்பது என்றாலும், சட்டசபைக்கு போவதென்றாலும், மானியக்கோரிக்கைகள் பற்றி பேசுவது என்றாலும் எதுவாக இருந்தாலும் அதற்கு என் அம்மாவின் ஆசீர்வாதத்துடன் தான் செய்வேன்.
என் வாழ்க்கையில் இது வரை புகைபிடித்ததில்லை, மருந்து அருந்தியதில்லை. ஒழுக்கமில்லாத எந்த செயலையும் செய்தில்லை. இதற்கெல்லாம் காரணம் என் அம்மாவும் , அன்பும், வளர்ப்பும். அப்பாவிடம் நேர்மை, உண்மை, ஒழுங்கு,மரியாதைகளை கற்றுக்கொண்டேன். அம்மாவிடம் ஒழுக்கம், பக்தி, இரக்கம் இவைகளைப் பெற்றுக்கொண்டேன். என்கிறார், எஸ்.வி.சேகர்.
தேவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக