செவ்வாய், 11 மே, 2010

எழுத்தாளர் ராஜேஷ்குமார் பேட்டி:

எழுத்தாளர் ராஜேஷ்குமார் பேட்டி:

என் எழுத்துக்களில் வாழும் அம்மா!


""இன்று இத்தனை புகழும், பாராட்டும் பெற்ற எழுத்தாளனாக நான் இருக்க காரணம் என் அம்மாவின் அன்பும், பரிவும், அவர் தந்த நம்பிக்கையும் தான் முதல் மூலதனம். ஒவ்வொரு நாளும் பேனா எடுத்து எழுதுவதற்கு முன், என் தாயின் படத்தை வணங்காமல் இருந்ததே இல்லை'' என்று அம்மா பற்றிய ஞாபகங்களை நினைவுகூர்ந்து நெகிழ்கிறார், எழுத்தாளர் ராஜேஷ் குமார்.
அம்மா என்றால் தன் பிள்ளைகளுக்கு ஆமை முயல் கதை, நரி கதை, நிலவில்பாட்டி வடை சுட்டக் கதைத்தான் சொல்வார்கள். ஆனால், என் அம்மா எனக்குச் சொன்னதெல்லாம் திகில், திரில் கதைகள்தான். நன்றாக ஞாபகமிருக்கிறது. அப்போது எனக்கு 10 வயசு இருக்கும். கோவையில் இருந்து மருத மலைக்கு மாட்டு வண்டியில் பயணம் செய்வோம். மருத மலை உச்சியில் தனியாக மூன்று கல் இருந்தது. அந்த கல்லைக்காட்டி, ""அம்மா, அந்த மூணு கல்லுமட்டும் தனியாக இருக்கே.ஏன்?'' என்று கேட்டேன்.
அதற்கு, அம்மா சொன்னக் கதை இது. "" ஒரு நாள் நடுநிசி. கும்மிருட்டு. மருதமலை முருகன் கோயில் நிசப்தத்தில் இருந்தது. பலே கில்லாடியான மூன்று திருடர்கள் கோயிலில் புகுந்து உண்டயலை உடைத்து, அதில் இருந்த பணம், காசை எல்லாம் எடுத்து மூட்டைக்கட்டி மலைமேலே ஏறும் போது, முருகன் அந்த மூணு திருடர்களையும் கல்லாகமாற சபித்தார். அப்போதிலிருந்து அந்த திருடர்கள் மூணுபேரும் மலையில் கல்லாகவே இருக்காங்க'' என்றுஒரு குட்டி கிரைம் கதையாகவே சொன்னார்.
இப்படி அம்மா அவங்களோட கற்பனையில் உதித்த கதை எல்லாம் சொல்லக்கேட்டு, கேட்டு பின்னர் நான் ஒரு எழுத்தாளனாக வந்தப்போது, அதுவும் கிரைம் கதைகள் எழுதும் எழுத்தாளனாக உருவாக அம்மாவின் கதைகள் எனக்கு அனுபவமாக இருந்தது.
அது 1968. அப்போது பட்டம் பெற்றும் வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்தேன். அப்போது பொழுதுபோக்க கதைகள் எழுதிவந்தேன். அதை பத்திரிகைக்கு அனுப்பினேன். எதுவுமே பிரசுரமானதில்லை. இந்த நிலையில்தான் அக்கம் பக்கம் பெண்கள் என் அம்மாவிடம்,"" பட்டம் படிச்சவன் இப்படி வேலை வெட்டிக்கு போகாம கதை எழுதுகிட்டு இருந்தா, அவன் எதிர்காலம் என்னாகும்? நீ தான் செல்லம் கொடுத்து உன் பிள்ளையை கெடுக்கற'' என்று காதில் கிசுகிசுத்தார்கள். இதைக்கேட்டதும் அம்மா ஆவேசமாய்,"" என் பிள்ளை ராஜாடி. அவன்பற்றி பேச யாருக்கும் அருகதை கிடையாது. இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள் அவன் பெரிய ஆளாக வருவான். நான் பார்க்க முடியாவிட்டாலும், நீங்க கண்ணார காணுவீங்க'' என்று கோபத்தில் பொரிந்தார்.
அம்மா அன்று சொன்னது அப்படியே எனக்கு பலித்தது. அம்மா 5 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டாங்க. ஆனால், என் எழுத்து ஒவ்வொன்றிலும் வாழ்ந்துகிட்டு இருக்காங்க. என்கிறார் ஆத்மார்த்தமாய் ராஜேஷ்குமார்.
பேட்டி: ச. தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக